Wednesday, February 22, 2012

ஜெனீவா மாநாட்டில் சிங்கள தரப்பு மேடையேற்றவிருக்கும் "குறளிவித்தை"

 

சனல்-4 தொலைக்காட்சி மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்ட ஈழமனிதப்படுகொலை காணொளி காட்சிகளால், பன்னாட்டு மட்டத்தில் எழுந்துவரும் ஸ்ரீலங்காவுக்கு எதிரான நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. 
 
 
நடப்பு ஐநா மனித உரிமைகள் மாநாடு, பெப்,27,2012 ஜெனீவாவில் கூட இருக்கிறது.
மாநாட்டு அமர்வில் இலங்கைக்கு எதிராக (இந்தியா தவிர்ந்த)  அனேக நாடுகள் எதிர்நிலையெடுக்க இருப்பதாக சர்வதேச மட்டத்தில் கருதப்படுகிறது. அப்படி ஏற்படாமல் தடுப்பதற்கு இலங்கை அரசும் தன்னாலான தந்திரங்கள் அனைத்தையும் பலமாதங்களாக செய்துவருகிறது. அதற்கான அறிவுறுத்தல்களையும் திசை திருப்புதலுக்கான  உத்திகளையும் நண்பன் இந்தியா சிரமேற்கொண்டு பொறுப்புடன் உதவிவருவதாக தெரிகிறது.

இருந்தும் சர்வதேசநாடுகள் பலவும், ராஜபக்க்ஷ மீது பெருத்த ஐயுறவில் இருப்பதாகவே நிலைமை இருந்துவருகிறது.  உலகத்தை ஏமாற்றும் விதமான அனாகரீகமான ராஜதந்திரத்தை பாவித்து ஸ்ரீலங்கா போர்க்குற்றத்தை மூடிமறைப்பதற்காக ராஜபக்க்ஷ ஏமாற்று வேலையில் ஈடுபடுவதாக அனைத்து சர்வதேச தொண்டு நிறுவனங்களும் அதிருப்தி தெரிவித்து வருகின்றன. இவற்றை புறந்தள்ள சர்வதேச நாடுகள் தயாராகவில்லை.

இதனால் பெப் 27, மனித உரிமை மாநாட்டு அமர்வில், ஸ்ரீலங்காவின் போர்க்குற்றத்திற்கு எதிரான தீர்மானம் முன்வைக்கப்படலாம். அந்த நெருக்கடியிலிருந்த தப்பித்து காலத்தை இழுத்தடிக்கும் தந்தர யுத்தியாக அடுத்த "குறளிவித்தையை" அரங்கேற்ற ராஜபக்க்ஷ குழுமம் தயாராகவிருப்பதாக செய்திகள் வரத்தொடங்கிவிட்டன.

சட்ட நியாயத்துடன் எந்தச்சம்பந்தமில்லாத, ஐந்து இராணுவத்தினரை நீதிமான்களாக நியமித்து, இராணுவ நீதிமன்றம் ஒன்றை தமது வசதிக்கேற்ப விரைவில் நிறுவி, போர்க்குற்ற விசாரணையை விசாரித்து நீதியான தீர்ப்பு வழங்க இருப்பதாகவும், அப்படி எவராவது குற்றம் புரிந்திருப்பின்!  குற்றவாளிகளாக காணப்படும் அனைத்து இராணுவத்தினருக்கும் இதயசுத்தியுடன், பாகுபாடற்ற தண்டனை வழங்க திட சங்கற்பம் பூண்டிருப்பதாகவும், ஜெனீவா சிக்கலை மனதில்க்கொண்டு, சிறீலங்கா தரைப்படை தளபதி லெப், ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய மூலம்  அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இது ஒரு விசித்திரமான "குறளிவித்தை" நாடகமாக இருப்பதால், பாதிக்கப்பட்ட தமிழர்கள் கிறுகிறுத்து நிற்கக்கூடும்.இந்த வித்தைமூலம் உலகத்தை இப்போதைக்கு ஏமாற்றிவிடலாம் என்ற பெரும் நம்பிக்கை ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளுக்கு இருப்பதாகவே தெரிகிறது. இந்த குறளிவித்தை நிகழ்ச்சியின் பின்னணியில் ஸ்ரீமான் பான் கீ மூன், மற்றும் ஊழல் நாட்டு பொம்மை பிரதமர் மன்மோகன் சிங்கம் போன்றோரின் வழிகாட்டல் இருக்கும் என்றே தமிழர்கள் மத்தியில் வலுவான சந்தேகம் இருந்து வருகிறது.

தொடர்ந்து ஸ்ரீலங்கா தரப்பினர் அடம்பிடித்து வருவதுபோல, சாதாரணமாக யுத்தகாலத்தில் நடைபெறுவதுபோன்ற இழப்புகள் தவிர, எந்தவிதமான மனித உரிமைமீறலும் போர்க்காலத்தில் இடம்பெறவில்லையென்றால், சர்வதேச விதிமுறைகளை மீறும்வண்ணம் ஆயுதங்கள் பாவிக்கப்படவில்லையென்ற நீதியான நியாயமான காரணங்கள் இருப்பின்,  சுயமாக பொருள் விரையம் காலவிரையம் ஆகியவற்றை தவிர்த்து. மேலாக, சர்வதேசத்தில் எழுந்திருக்கும் அவப்பெயரையும் நீக்கும்வண்ணம் போர்க்குற்றத்தை சர்வதேசமும், அழிக்கப்பட்டவர்களின் உறவுகளான தமிழர்கள் விரும்புவதுபோல விசாரணையை எவர் எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ள அனுமதித்திருக்க முடியும். அப்படி நடக்குமாயின் தொடர்ந்து குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கும் தமிழர் தரப்பையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் சூழலையும் உருவாக்கிவிட முடியும்.

ஆனால் திசை திருப்புவதிலும் இல்லாத நியயங்களை ஒப்புவித்து நியாயப்படுத்துவதிலும் ஈடுபட்டு, ஒரு வில்லங்கமான முறுகல் நிலையில் ஸ்ரீலங்கா சிக்கியிருக்கிறது.

எறும்புக்கும், நத்தைக்கும் மனிதாபிமானத்துடன் அமைதி வழியில் வாழ்வியலை நிறுவவேண்டுமென பெருந்தொகை பொருளை செலவழித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஐநா, உட்பட்ட  இந்த நாகரீக உலகம், கண் முன்னே பகிரங்கமாக நடந்து முடிந்த அதர்மத்துடன் கூடிய கொடூரமான மனிதப்படுகொலை, இன அழிப்பு குற்றத்தை தர்மத்துடன் விசாரணைக்குட்படுத்த இதுவரை ஒப்புக்கேனும் முனைப்புக்காட்டவில்லை.

சென்ற ஆண்டு தமிழர் தேசியக்கூட்டமைப்பினரை கூப்பிட்டழைத்த அமெரிக்க வல்லரசு, இலங்கை அரசாங்கத்தின் யுத்த குற்றச்சாட்டுக்களின் தாக்கத்தை ஆதாரமாக பயன்படுத்தி பேச்சுவார்த்தை மூலம் தமிழர்களுக்கான அதிகார பகிர்வு தீர்வுத்திட்டத்தை முன்னெடுக்கும்படி தேசியக்கூட்டமைப்பினருக்கு அறிவுறுத்தியிருந்தது.

யுத்தக்குற்றம் ஸ்ரீலங்காவில் இடம்பெற்றிருப்பதை மறைமுகமாக ஒப்புக்கொள்ளும் அமெரிக்கா, யுத்தக்குற்றத்தை நேரடியாக குற்றமெனக்கூற விரும்பவில்லை. அமெரிக்கா மட்டுமல்ல அனேக நாடுகள் ஏனோ அதை விரும்பவில்லை. அதற்கான வலுவான தடைக்கல் ஏதோ உலகத்தை தடுப்பது புரிகிறது. அந்தப்பலவீனமே சிங்கள பாசிசவாதிகளின் பலமாகி, ஒவ்வொரு சந்தற்ப்பத்திலும் ஒவ்வொரு விதமான கண்கட்டு வித்தைகளை அரங்கேற்றி காலங்கடத்தப்பட்டு வருகிறது.

நடக்கவிருக்கும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனிவா மாநாடு தொடங்குவதற்கு முன்னர் இலங்கைக்கு ஆதரவாக உலக நாடுகளின் நிலையை பெற்றுக் கொள்ளும் வகையில், இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், ஒழுங்கு செய்திருந்த விசேட ஒன்றுகூடல் நிகழ்வை முக்கியமான பல நாடுகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன என்று தெரிகிறது.

வரும் 27ம் நாள் தொடங்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படலாம்!. இந்தத் தீர்மானத்தைச் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா போன்ற நாடுகளின் செல்வாக்குட்பட்ட ஏதோ ஒரு நாடு தீர்மானத்தை முன்மொழியக்கூடும். அந்த தீர்மானத்தை தாம் ஆதரிக்கப்போவதாக ஏற்கெனவே அமெரிக்கா தெரிவித்துமிருக்கிறது. இந்த தீர்மானத்தை இதற்கு முன்னய கூட்டத்தொடரிலேயே கொண்டுவருவதற்கு முயற்சியெடுத்த கனடா சில தடைகள் காரணமாக அப்போ தீர்மானத்தை கைவிட்டு வெளியேறியிருந்தது.

எனவே நடக்கவிருக்கும் மனித உரிமைகளுக்கான ஜெனீவா கூட்டத்தொடர், ஸ்ரீலங்காவுக்கு மிகுந்த நெருக்கடியை தோற்றுவிக்கும் விதமாக அமையும் சாத்தியம் அதிகம் இருக்கிறது. இந்த நிலையிலிருந்து தப்பிக்க, நண்பன் இந்தியா கைகொடுக்கும் என்ற நம்பிக்கை ஸ்ரீலங்காவுக்கு நிறைய உண்டு.

இந்தியாவையும் மீறி தீர்மானம் ஸ்ரீலங்காவுக்கு எதிரான நிலை தோற்றம் பெறுமானால், எப்பேற்ப்பட்ட தந்திரத்தை பாவித்து தப்பிக்க வேண்டும் என்ற இலங்கை, இந்திய அரசுகளின் யுக்தியே இலங்கை அரசு இதய சுத்தியோடு உள் நாட்டிற்குள்ளே விஷேட இராணுவ நீதிமன்றம் அமைத்து போர்க்குற்றத்தை விசாரித்து தண்டனை வழங்க ஏற்கெனவே திட்டமிட்டிருப்பதாக காட்டி தப்பிக்கும் "குற்றவியல் இராணுவ நீதிமன்றம் என்ற குறளி வித்தை"

இக்காய் நகர்த்தலின் ஆரம்பமாக தமிழர் தேசியக்கூட்டமைப்பினருக்கு, இந்தியா அழுத்தம் கொடுத்து அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க ஸ்ரீலங்காவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கடுமையான நெருக்குவாரம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது. ஒத்துழைப்பு என்று இந்தியா கூறுவதன் அர்த்தம் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணைய மறுக்கும் கூட்டமைப்பினரை இணைந்துகொள்ளவேண்டும் என்ற அழுத்தமேயாகும்.

தீர்வுத் திட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா அதிபருடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும், அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைப்பதில் நிலவிவரும் காலதாமதம் இந்தியாவை அதிருப்தி அடையச் செய்துள்ளது எனவும். தேவையற்ற உள்ளீடாக பௌத்த மதத் (துவேஷ பிக்குகள்) தலைவர்கள் உள்ளிட்ட மதத் தலைவர்கள், வடக்கு அரசியல் தலைவர்கள் (டக்கிளஸ்) போன்றோருடன் பேச்சுவார்த்தை நடத்துமாறும் கூட்டமைப்பை இந்தியா வற்புறுத்தியுள்ளதாக தெரிகிறது.

மேலும், சிக்கலை அதிகரித்து தீர்வு ஒன்றை எட்டிவிடாத விதமாக நாட்டின் ஏனைய சிறுபான்மை கட்சிகளுடனும் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென இந்தியா கட்டளையிட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. இது சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை புது டெல்லிக்கு அழைத்து  இந்தியா மேலும் இறுக்கமான கட்டளையிட இருப்பதாகவும் செய்திகள் பரவியிருக்கின்றன.

இதற்கு கூட்டமைப்பினரின் ரீயாக்ஷன் என்னவென்று தெரியவில்லை. ஆனாலும் இந்தியா இடும் கட்டளையை சிரந்தாழ்த்தி ஆமோதிப்பதுதான் கூட்டமைப்பினரின் வழமையான நடைமுறையாக இருந்துவந்தது. ஆனாலும் அமெரிக்கப்பயணத்தின்பின் கூட்டமைப்பினரின் போக்கு சற்று வித்தியாசப்பட்டிருப்பதாகவும் உணரக்கிடைக்கிறது.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு இந்தியா கொடுத்த அழுத்தமான கட்டளைச் செய்தியின் பின்னர்  கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை ராஜபக்க்ஷ அலரி மாளிகைக்கு அழைத்து பேசியிருக்கிறார். அதில் முக்கியமாக இந்தியா விரும்பியபடி தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணைந்துவிடும்படி கேட்டுக்கொண்டதாகவும் சம்பந்தன் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

ஆனால் பெப் 27, ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் அமர்வில் உண்டாகும் சிக்கலை சுயாதீன இராணுவ நீதிமன்றம், நீதியை நிலைநாட்டும் என்ற குறளிவித்தை, ஒரு குறுகியகால இடைவெளியை ஸ்ரீலங்கா அதிபர் ராஜபக்க்ஷவுக்கு கொடுக்கக்கூடும். அல்லது முடிவு வேறுவிதமாகவும் அமையக்கூடும்.

தீர்வுத்திட்டம் என்ற உள்நாட்டு மேசைப்பேச்சு திட்டம் ஒருபோதும் தமிழ் இனத்துக்கான தீர்வை பெற்றுத்தரப் போவதில்லை. அடுத்து தமிழர்களின் நாசகார சக்தியான இந்திய காங்கிரஸ் அரசின், ஊடுருவல் தீர்வு திட்டத்தில் இருக்கும்வரை சிக்கலும் சீர்கேடும் அதிகரிக்குமே தவிர ஒருக்காலும் தமிழினத்துக்கு விடியல் வரப்போவதுமில்லை.

தமிழனுக்கு எவன் எதிரியாக இருக்கிறானோ அவனை மத்தியஸ்தனாக அமர்த்தவே சிங்கள அரசு விரும்பி நிற்கும் என்பது யதார்த்தம். அதே கொடுமைக்காரனிடம் நீதியைப்பெறலாம் என்று தமிழர்களின் இன்றைய ஒரேசக்தியான கூட்டமைப்பும் விழுந்து கிடப்பதே அரசியல் வீழ்ச்சியாக சாபக்கேடாக இருந்துவருகிறது. இந்தியக்கூட்டால் எதுவுமே கிடைக்காது, தரித்திரமே மிஞ்சும் என்று தெரிந்தும் தொடர்ந்தும் கூட்டமைப்பு சினேகம் பாராட்டுவதிலும்பார்க்க "துட்டன் என்றால் தூரவிலகு" என்ற பழமொழிக்கேற்ப இந்தியாவின் நட்பை நிராகரித்து ஒத்துழைக்காமல் விட்டாலே அரைக்கிணறு தாண்டிய வெற்றி தமிழினத்துக்கு கிடைத்துவிடும்.

இதற்குமேலும் கூட்டமைப்பினர் விதண்டாவாதமாக இந்தியாவின் முந்தானையில் தொங்கித்தான் காரியம் சாதிப்போமென்றால், அது கல்லில் நார் உரிப்பதற்கு சமமானதாகும்.

கூட்டமைப்பினர் தமது குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவே இந்தியாவிடம் வீழ்ந்துகிடக்கின்றனர் என்றும் சந்தேகப்பட இடமிருக்கிறது. அனேக கூட்டமைப்பினரின் குடும்பங்கள்  ஈழத்தின் ஞாபகம் ஈரமாகக்கூட இல்லாமல் இந்தியாவில்  சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் இந்தியாவுடன் முரண்பட சம்பந்தன் ஐயா முதல் பலர் தயாராக இல்லை என்றே படுகிறது. சிவாஜிலிங்கத்திற்கு சென்னை எயர்போர்டில் ஏற்பட்ட கதி தமக்கும் வந்துவிடக்கூடாது என்பதில் பலர் கவனமாக இருப்பதாகவும் தெரிகிறது.

ராஜபக்க்ஷவின் குறளிவித்தை ஒருவேளை சர்வதேச நெருக்குவாரத்துக்கு சிறிய இடைவெளியை கொடுத்தாலும். காலதாமதமில்லாமல் புலம்பெயர் அமைப்புக்களின் உதவியுடன் நடைமுறைக்கொத்த சரியான காய் நகர்த்தலை முன்வைத்து தீர்மானத்துக்கு வரவேண்டிய முக்கிய சக்தியாக கூட்டமைப்பு இருந்து வருகிறது. கிடைக்கும் சந்தற்பங்களை சரியாகப்பயன்படுத்தி முதலாவதாக தேவையற்ற இடைச்செருகலான இந்தியாவின் முகத்திரையை கிழித்து உலகத்துக்கு காட்டி துணிச்சலுடன் வெளிவந்தாலே, தானாகவே மூன்றாவது  சக்தியொன்று கைகொடுக்க துணிச்சலுடன் வந்து சேரும். யதார்த்தமானவற்றிற்காக முயன்றால் முடியாதது என்று ஒன்றும் இல்லை என்பதுதான், தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களது தீர்க்கமான முடிவு.

ஈழதேசம் இணையத்திற்காக,
கனகதரன்.

Thursday, February 16, 2012

திமுக வின் அடுத்த தலைவர் யார்?.........

கூத்தாடி குசும்பன்.

இந்திய அரசியலைப்பொறுத்தவரை பெரும்பாலான அரசியல்க்கட்சிகள் குடும்பச்சொத்தாகி மிகப்பெரிய வருமானம் ஈட்டும் தொழில் பேட்டையாகவே மாற்றப்பட்டிருக்கிறது.

இந்தியசுதந்திர இயக்கமாக பல்வேறு மானிலத் தலைவர்களின் உதிரத்திலும் தியாகத்திலும் உருவான தேசிய காங்கிரஸ் கவலைக்கிடமாகி நேரு குடும்பத்தின் தனியார் கொம்பனியாக மாற்றப்பட்டிருக்கிறது.
 
அடுத்து லல்லு பிரசாத ஜாதவ் கட்சி, மம்தாவின் கட்சி, மாயாவதியின் கட்சி, சரத் பவார் கட்சி, என்று அனைத்தும் தனிமனித குடும்பச்சொத்தாகவே பெருந்தொகை பணத்தை ஈட்டி நாட்டில் வலம்வருகின்றன.

தமிழ்நாட்டைப்பொறுத்தவரையில் கருணாநிதியின் குடும்பச்சொத்தான திமுக, ராமதாசரின் குடும்பச்சொத்தான பாமக, ஜெயலலிதாவின் சொத்தான அதிமுக, இன்னும் பல முதலாளிகளின் கட்சிக் கொம்பனிகள் இருந்தாலும் மேற்கண்ட மூன்று கட்சிகளுமே மிகப்பெரிய தனியார் சொத்தாக காணப்படுகிறது.

இந்திய அளவில் இவைகளில் மிகப்பெரிய குடும்பக்கூட்டுத்தாபனம் என்றால் நேரு குடும்பத்தின் காங்கிரஸுக்கு அடுத்து, திருக்குவளை முத்துவேல் கருணாநிதியின், திமுக ஒன்றையே காணலாம். தமிழ்நாட்டில் அதிக கட்சிகள் தோன்ற காரணமாக இருந்தவர் என்ற கசப்பான பெருமையும் ஸ்ரீமான் கருணாநிதி அவர்களையே சாரும். அதிமுக, மதிமுக, (ரீஆர் அவர்களின்) இதிமுக, தேமுதிக, அனைத்தின் மூலமும் திமுக தான் என்ற உண்மையும் உண்டு.

தன்னை நிலை நிறுத்துவதற்காக பலபேரை கட்சியிலிருந்து வெளியேற்றிய கருணாநிதிக்கு இப்போ கட்சிக்குள் கலவரத்தை தோற்றுவிப்பவர்களை வெளியேற்ற முடியவில்லை. காரணம் இப்போ வினை வீட்டுக்குள்ளேயே உருவாகியிருக்கிறது. கருணாநிதியின் குடும்ப வாரிசுகளாக மாறன் குடும்பம் இருந்தாலும் அவர்கள் வியாபார பாட்னர்களே தவிர உரிமையில் பங்குதாரர்கள் அல்ல என்பதை தினகரன் கருத்துக்கணிப்பு சம்பவத்தின்போது கருணாநிதியின் ரியாக்ஷன் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது.

கடந்த சட்டசபை தேர்தலின் பிற்பாடல்லாமல் நீண்டகாலமாகவே ஸ்ராலின், அழகிரி கோஸ்டி அணிகள் இயங்கிக்கொண்டேயிருக்கின்றன. இந்தக்கோஸ்டிகளுக்கு வலுச்சேர்க்கும் விதமாக கனிமொழி-ராசாத்தி அணியும், தயாநிதி அணியும் சூடேற்றியும் வந்திருக்கின்றன. இந்த நேரங்களில் எல்லாம் கருணாநிதி குறிப்பிட்ட குடும்ப அணிகளை எச்சரிப்பதோ கடிந்துகொள்ளுவதோ இல்லை. மாறாக கட்சியின் அடுத்த மட்டத்திலிருக்கும் உறுப்பினர்களையும் மாவட்ட வட்ட செயலாளர்களையும் கடிந்து கொள்ளுவதே வழக்கமாக இருந்து வருகிறது. சமீபத்தில் காஞ்சீபுரத்தில் நடந்த ஒரு நிகழ்வின்போதும் கட்சிக்குள் ஒற்றுமையின்மையே 2011 சட்டசபை தேர்தல் தோல்விக்கு காரணம் என்று விரக்தியின் உச்சத்தில் தொண்டர்கள் மீது வீண் பழியைப்போட்டு சாடினார் கருணாநிதி.

சமீபத்தில் பருதி இளம்வழுதி மீது குற்றஞ்சாட்டப்பட்டு சில நிமிடங்களில் ஒழுங்கு நடவடிக்கை மூலம் பருதியை கட்சியிலிருந்து நீக்கினார் கருணாநிதி. என்ன நடந்தது ஏது நடந்தது என்பதுபற்றி தொண்டன் சிந்திக்க கால அவகாசம் எதையும் அவர் கொடுக்கவில்லை. "அதுதான் கருணாநிதியிம் அரசியல்ச்சாணக்கியம்"

உலக அளவில் மிக மிகப்பெரிதான ஸ்பெக்ரம் அலைக்கற்றை ஊழல் வெளிவந்தபோது மிகச்சாதுரியமாக ராசாவை வஞ்சகமாக சிறைக்கு அனுப்பி பிரச்சினையை திசைதிருப்பி மூடி மறைத்தார். தொண்டர்கள் அனைவருக்கும் ஆ ராசா மட்டுமே குற்றம் புரிந்தவராகவும் அதனால் தான் மிகுந்த மன உழைச்சலில் இருப்பதுபோலவும் மாயையை தோற்றுவித்தார். துரதிஷ்ட வசமாக கனிமொழி திஹார் சிறை செல்ல நேர்ந்தது. இந்த நேரத்திலும் ஐயன் கலங்காமல் சாணக்கியமாக காய் நகர்த்தி மகளை வெளிக்கொண்டுவந்தார். சிறையிலிருந்து மகள் வெளிவந்ததும் அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக நாடு காத்த வீரங்கனைக்கு அளிப்பதுபோன்று தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு அளித்து அனைத்தையும் தனது சணக்கியத்தால் சுத்தமாக மூடிவிட்டார்.

இவ்வளவு விவேகமுள்ள கருணாநிதிக்கு தனது மகன் அழகிரியுடன் மோத முடியவில்லை. பிள்ளைப்பாசம் அழகிரியை கட்சியிலிருந்து வெளியேற்றவும் முடியவில்லை. குணாம்ஷத்தில் கருணாநிதி எவ்வளவு பதவி ஆசை கொண்டவரோ அதேயளவு பதவி ஆசை அழகிரிக்கும் இருக்கிறது. கருணாநிதி எவ்வளவு பிடிவாதக்காரரோ அதேயளவு பிடிவாதம் அழகிரியுடமும் இருக்கிறது. ஆனால் தந்தரம், ஞாபகசக்தி, மூளை, காய் நகர்த்தும் சணக்கியம் கருணாநிதியளவுக்கு அழகிரியிடமில்லை.

கருணாநிதிக்கு இப்போ வயது 88 ஆகிறது, அவரது வாழ்க்கைக்காலம் கடைசியை அண்மித்துவிட்டது. இயற்கை விதிகளின்படி நூறு வயதுவரை அவர் வாழ்ந்தாலும், இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் மட்டுமே அவரால் வாழமுடியும். இப்போதும் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி அடுத்த நிலையில் கட்சியில் இருக்கும் எவரிடமும் எழவில்லை, ஏனெனில் அடுத்த தலைமையை அவர் தனது குடும்பத்துக்குள்ளேயே உருவாக்கி வைத்திருப்பதும் கட்சியிலுள்ளோர் அனைவரும் அறிவர். எனவே வெளியிலுள்ளோருக்கு வயிற்றெரிச்சல் இருந்தாலும் எட்டாப்பழமான தலைமை பற்றிய அக்கறை எவருக்குமில்லை.  ஆனால் மறைமுகமாக ஸ்ராலின் அணியாகவும், அழகிரி அணியாகவும், பலர் மறைமுகமாகவும் சிலர் வெளிப்படையாகவும் நடந்து வருகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்புவரை, கருணாநிதியின் தந்தரங்களும், நாடகங்களும், நா நடனங்களும் அவரது கட்சிக்கு நல்ல பலனை தந்துகொண்டுதான் இருந்தன. 2008, 2009, ஈழ இன அழிப்பு நிகழ்வின்போது கருணாநிதி நடந்துகொண்ட மனிதத்துக்கு ஒவ்வாத நடவடிக்கைகள், அவரது சுய ரூபத்தை தமிழகத்தின் குக்கிராமம்வரை கொண்டு சேர்த்தது. மக்கள் மத்தியில் மகாராசாவாக குடியிருந்த அவர் மிகவும் அருவருக்கத்தக்க வெறுப்புக்கு ஆளானார். தொடர்ந்து   காலம் அவரை ஸ்பெக்ரம் வடிவத்தில் கால் வாரியது.  இப்போ கருணாநிதி தமிழக மக்கள் மத்தியில் அவரது பெயருக்கேற்ப கறை படிந்த கரும்புள்ளியாகிவிட்டார் (கரு)ணாநிதி. அவரது தோல்வியும் வீழ்ச்சியும் இனி இருக்கும் சொற்ப காலத்தில் அவரால் நிமிர்த்த முடியாதவை.

நடந்த சம்பவங்கள் கருணாநிதியை மிகவும் பாதித்திருந்தாலும் அவர் வெளிப்படையாக அதிகமானவற்றை காட்டிக்கொள்ளவில்லை. மௌனமாக இருந்தால் ஒப்புக்கொண்டதாகிவிடும் என்பதால் தினம் ஒரு அறிக்கைவிட்டு திசைதிருப்பும் உத்தியில் முனைப்புடன் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். அதற்கான பலனும் சொற்பமேனும் கிடைக்காமலுமில்லை. இருந்தும் வாரிசுப்போட்டி அவரை செய்வதறியாது திகைக்க வைக்கிறது.

இன்று வாரிசுப்போட்டி யுத்த சமிக்ஞையாக மாற்றப்பட்டிருக்கிறது. வீரபாண்டி ஆறுமுகம் மூலம் தெறித்த பொறி பற்றிக்கொண்டுவிட்டதாகவே படுகிறது.

கருணாநிதியின் எண்ணமெல்லாம் கட்சி உடைந்துவிடக்கூடாது, தனக்கு அடுத்த நிலையில் செல்வாக்காக உள்ள ஸ்ராலினை தலைவராக்கி அடுத்த சமமான நிலைக்கு அழகிரியும் வரவேண்டும் என்பதே. அதன்மூலம் கட்சியிலுள்ளவர்களை சமாளித்துவிடலாம் மக்கள் அதைத்தான் விரும்புவார்கள் என்பதையும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார். அதன் பின் கனிமொழியும், உதயநிதி, துரை தயாநிதி, அப்படியே வாரிசுகள் மக்களை ஏமாற்றி கொம்பனியை தொடர்ந்து நடத்தவேண்டும் என்ற பேரவாவுடன்  காய் நகர்த்தி வந்தார். அதுதான் யதார்த்தமான தந்தரமும் கூட என்பதும் அவரது அனுபவ ஞானம். ஆனல் காலத்தின் சூழ்ச்சி கருணாநிதியை அழகிரி வடிவத்தில் தூண்டிக்கொண்டேயிருக்கிறது.

பதவியிலிருந்திருந்தால் இந்த சிக்கல் அனைத்தையும் வேறு விதமாக கையாண்டிருக்கவும் அவரால் முடியும். வரவிருக்கும் சங்கரன் கோயில் இடைத்தேர்தல் தனக்கு சாதகமான சூழலை உருவாக்குமென அவர் நம்பிக்கொண்டிருப்பதும் தெரிகிறது, அம்மையாரின் ஆணவப்போக்கால் தேமுதிக கூட்டணியிலிருந்து வெளியேறி தனி எதிர்க்கட்சியாக இருக்கிறது. வைகோ அவர்களின் மதிமுக தனித்து சங்கரன் கோயில் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறது. அம்மாவை எதிர்ப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாகி அம்மாவுக்கு பாடம் புகட்டவேண்டும் என்ற உணர்வு மக்களுக்கும் பத்திரிகைகளுக்கும் உண்டாகியிருக்கிறது. இந்த சந்தற்பத்தை பயன்படுத்தி மற்றய கட்சிகளின் வெப்பத்தில் தனது கட்சியை முதன்மைப்படுத்தி குளிர்காய்ந்து தனது சரிவை நிமிர்த்திவிட ஐயா நிச்சியம் முயலுவார். அப்படியொரு சந்தற்பம் கிடைத்தால் நாளடைவில் மதிமுக தேமுதிக போன்ற கட்சிகளை தந்திரமாக உடைக்க ஐயா பின்னிற்கமாட்டார் என்பதும் பின்னர் தெரியவரும்.

அம்மாவை எதிர்க்க வேண்டுமென்ற ஒரே நோக்கம் கொண்ட தேமுதிக, மதிமுக, ஐயனை மீண்டும் ஒரு சக்தியாக காட்டிவிடுமோ என்ற ஐயம் பலருக்கும் இருக்கிறது. ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம்.

எது நடந்தாலும் அது ஒரு குறுகிய கால நிகழ்வாகவே சம்பவிக்கும். திமுக தலைமை பதவிக்கான போட்டி நாளடைவில் இன்னும் வலுக்கும். இருந்தும் "திமுக" நேர்த்திக்கு வைத்திருக்கும் தேங்காயின் நிலையில் இருந்துகொண்டிருக்கிறது. சங்கரன் கோயில் தேர்தல் திருவிழா முடிந்ததும் தேங்காயின் நிலை என்னவென்று தெரியவரும். 

மீண்டும் சந்திப்போம்,
கூத்தாடி குசும்பன்.


Sunday, February 12, 2012

தெல்லிப்பளையில் மனித எலும்புக்கூடுகள் மீட்பு.


 
தெல்லிப்பளை கொல்லங்கலட்டி பிள்ளையார் கோவிலுக்கு அருகிலிருந்து மனித எச்சங்கள் இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

தெல்லிப்பளை கொல்லங்கலட்டி சிந்துவாம்பிட்டி என்ற இடத்தில் உள்ள வீடொன்றிலிருந்தே இவ் எச்சங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை குறித்த வீட்டின் கிணற்றினைத் துப்புரவு செய்து கொண்டிருந்த பொழுது கிணற்றுக்குள் இருந்து இவ் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து துப்புரவு செய்தவர்களால் தெல்லிப்பளை காவற்துறைக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதனையடுத்து நேற்றைய தினம் மாலை தெல்லிப்பளைக் காவற்துறையினர் இருவர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து முதற் கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டது.
இன்று காலை குறித்த இடத்திற்கு வந்த காவற்துறையினர் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் கிணற்றிலிருந்து இவ் எச்சங்கள் மீட்டெடுக்கப்பட்டன.

இச் சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, 1992ம் ஆண்டு யுத்தத்தினால் குறித்த கிராம மக்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். அவ்வேளையில் குறித்த வீட்டு உரிமையாளர் உட்பட அவரது சகோதரிகள் இருவரும் அங்கேயே தொடர்ந்தும் இருந்துள்ளனர்.  செல்லப்பா இராசரத்தினம்(வயது 75), செல்லப்பா பாலாம்பிகை (வயது80), செல்லத்துரை அன்னலட்சுமி (வயது 70), ஆகிய 3 சகோதரர்களுமே தங்கியிருந்ததாக அயலவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் உறவினர்களால் அறியப்படவில்லை. 6 மாதங்களுக்கு முன்னரே இப் பகுதி மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டு தங்கள் வளவுகளை துப்புரவு செய்து வருகின்றனர். அதன்படி குறித்த வீட்டின் உரிமையாளரின் பெறாமகன் லண்டனில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார்.

அவரினால் குறித்த வீட்டுப்பகுதியும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் போது மனித எச்சங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து 3பேருடைய மனித எச்சங்களும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் ஒருவரது பூரணமான எச்சங்களே மீட்கப்பட்டுள்ளன.

ஏனையவர்களது எலும்புக் கூடுகளும் அப்பகுதியிலேயே இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவை தற்போது யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவின் பின்னர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டதனைத் தொடர்ந்து குடாநாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மனிச்சங்கள் ஆணுடையதா அல்லது பெண்ணுடையதா என்றும் எந்த காலப்பகுத்தியில் குறித்த நபர் மரணமடைந்துள்ளார் என்பதும் மருத்துவபரிசோதனையின் பின்னரே உறுதிப்படித்த முடியுமென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி உதயன்.

Friday, February 10, 2012

"உங்கள் பிள்ளைகள் இறந்து விட்டார்கள் என்று பதிவு செய்து கொள்ளுங்கள்" இராணுவம்.


தமது கைப்பட படையினரிடம் ஒப்படைத்த உறவுகளின் நிலை குறித்து ராப்பிடம் முல்லை மக்கள் கண்ணீர்
news
இறுதிப் போர் முடிந்து அரச படையினரிடம் சரணடைந்தபோது தாம் தமது கைப்பட வட்டுவாகலில் வைத்து இராணுவத்தினரிடம் ஒப்படைத்த உறவினர்கள் பலர் மூன்று வருடங்களாகிவிட்டபோதும் இதுவரை மீண்டும் வரவில்லை என்றும் அவர்களில் சிலரை இறந்தவர்கள் என்று பதிவு செய்து கொள்ளுமாறு இப்போது இராணுவத்தினர் கூறுகிறார்கள் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோளக் குற்றவியல் நீதி விசாரணைக்கான தூதுவர் ஸ்ரிபன் ராப்பிடம் தெரிவித்தார்கள் முல்லைத்தீவு மக்கள்.

இராணுவத்தினரிடம் தாம் ஒப்படைத்த பிள்ளைகளின் ஒளிப்படங்களையும் ராப்பிடம் கையளித்த பெற்றோர்கள் அவர் முன் கதறியழுதபடி நீதி கிடைக்க வழிசமைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அரசு நியமித்த நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் விசாரணை தமக்குத் திருப்திகரமானதாக இல்லை என்றும் அங்கு தெரிவித்த பெற்றோர்கள், நீதியான சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என்றும் உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ராப்பின் திடீர் பயணம்
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ராப் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். நேற்று அவர் கிளிநொச்சியில் சந்திப்புக்களை நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதையொட்டி கிளிநொச்சியில் சிறிது பரபரப்பும் நிலவியது. ஆனால் திடீரென முல்லைத்தீவுக்கு இரகசியமாக வந்த ராப், பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்துப் பேசினார்.

கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிலுள்ள செல்வபுரம் என்ற இடத்தில் அமைந்திருக்கும் யூதாததேயூ ஆலயத்தில் இந்தத் திடீர்ச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. உடனடியான அழைப்பை ஏற்று சுமார் 25 வரையான பொதுமக்கள் சந்திப்புக்கு வந்திருந்தனர். பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமான சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

இறுதிப் போரின்போது நடந்தவைகள் குறித்து ராப் அந்த மக்களிடம் விசாரித்தார். போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் அவர் கேள்விகளை எழுப்பினார். ஐ.நா. வல்லுநர்கள் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த போர்க் குற்றங்களுக்குக் காரணமானவர்களை அந்த மக்களிடம் இருந்து அறிந்து கொள்வதிலும் அவர் ஈடுபாடு காட்டினார்.

பொதுமக்கள் அவரிடம் தெரிவித்ததாவது:
காணாமற்போனோர் இறுதிப் போரின்போது காணாமற்போனவர்கள் இரு வகைப்பட்டவர்கள். போர் நடந்துகொண்டிருந்தபோது காணாமற்போனவர்கள் ஒரு வகையினர். மற்றொரு தொகுதியினர் சரணடைவதற்காக இலங்கை இராணுவத்தினரிடம் உறவினர்களால்  நேரடியாக ஒப்படைக்கப்பட்டவர்கள்.

வட்டுவாகலில் வைத்து இவர்கள் இராணுவத்தினரிடம் மனைவிமாராலும் தாய்மாராலும் நேரடியாக ஒப்படைக்கப்பட்டவர்கள். இப்படி ஒப்படைக்கப்பட்டவர்கள் அனைவரும் பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள் என்பதைப் பின்னால் வந்தவர்கள் கண்டிருக்கிறார்கள். ஆனால் இப்போது கேட்டால் அப்படித் தாங்கள் யாரையும் பொறுப்பேற்கவில்லை என்று இராணுவத்தினர் கூறுகிறார்கள்.

தமது பிள்ளைகள் எங்கே என்று கேட்டுச் சென்ற தாய்மார்கள் சிலருக்கு, "உங்கள் பிள்ளைகள் இறந்து விட்டார்கள் என்று பதிவு செய்து கொள்ளுங்கள்" என இராணுவத்தினர் பதிலளித்துள்ளனர்.

ஆணைக்குழு விசாரணை நடிப்பு
நல்லிணக்க ஆணைக்குழு எங்களிடம் பகிரங்க இடத்தில் விசாரணை நடத்தியது. புலனாய்வுப் பிரிவினர் அங்கு நின்றிருந்தார்கள். உண்மையைச் சொன்னால் ஏதாவது நடந்துவிடும் என்ற அச்சம் காரணமாக நாங்கள் எல்லாவற்றையும் சொல்லவில்லை. உண்மையில் எம்மால் அங்கு சுதந்திரமாகச் சாட்சியமளிக்க முடிந்திருக்கவில்லை.

அப்படி இருக்கையில் அந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாம் எப்படி ஏற்க முடியும்? அதில் எமக்கு நம்பிக்கை இல்லை. நீதி கிடைக்க சர்வதேச விசாரணை ஒன்றே நடத்தப்படவேண்டும்.

மீள்குடியமர்வு முடியவில்லை
இந்த நாட்டில் விடுதலைப் புலிகள் இருப்பதற்கான அடையாளங்கள் எதுவும் கடந்த மூன்று வருடங்களாகக் கிடையாது. அவர்களால் எந்த அச்சமும் இல்லை. ஆனால் பல இடங்களில் எம்மை மீளக்குடியமர விடுகிறார்கள் இல்லை. படையினர் தமக்குத் தேவை என்று பெரும் தொகையில் காணிகளை ஆக்கிரமிக்கிறார்கள். அவர்கள் ஒரு முகாம் அமைக்க 5 முதல் 10 ஏக்கர் காணி போதாதா? எதற்காக 400 முதல் 500 ஏக்கர் காணியைக் கேட்கிறார்கள்? அவ்வாறு கேட்பதால்தான் எங்களால் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியவில்லை. அவர்கள் ஒரு பக்கத்தில் இருந்துவிட்டு மீதியை மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கலாம்தானே?

இராணுவப் பிரசன்னம்
வன்னியில் இராணுவத்தின் பிரசன்னம் இன்றி எதுவும் நடைபெறுவதில்லை. எந்த ஒரு நிகழ்வாயினும் படையினர் அங்கிருப்பர். சிவில் நிர்வாகம் நடக்கிறது என்று அரசு கூறுகிறது. பின்னர் ஏன் ஒவ்வொரு நிகழ்விலும் இராணுவத்தை நிறுத்துகிறது?

காணி, பொலிஸ் அதிகாரம் வேண்டும்
நாங்கள் சிங்களவர்களுக்கு நிகராக சம உரிமைகளுடன் வாழ்வதற்கே விரும்புகிறோம். அதனையே கேட்கிறோம். பொலிஸ், காணி அதிகாரங்களுடன் கூடிய ஒரு மாகாண சபையையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். அத்தகைய ஒரு தீர்வை அரசு வழங்க அமெரிக்கா இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இந்தியாவில் நம்பிக்கை இல்லை
நீண்ட காலமாக நாம் இந்தியாவை நம்பி இருந்தோம். ஆனால் இப்போது அவர்களை நம்பும்படியாக எதுவும் இல்லை. அவர்கள் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள். இப்போது நாங்கள் அமெரிக்காவைத்தான் நம்பியுள்ளோம். நீங்கள்தான்  அழுத்தத்தைக் கொடுத்து தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

மக்களின் கருத்துக்களைக் கேட்ட ஸ்ரிபன் ராப், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க அமெரிக்க அரசு தன்னாலான அனைத்தையும் செய்யும் என்று தெரிவித்தார்.

Thursday, February 2, 2012

நடந்தவற்றை சகித்துக்கொண்டு உயரப் பறவுங்கள் , என்று பகிடி விட்டு திரும்பினார் அணு விஞ்ஞானி அப்துல்.


உலகத்தில் இராணுவ சீரழிவால் சிதைக்கப்பட்டு அவலப்பட்ட மக்கள் வாழும் நாடுகளாக ருவாண்டா மற்றும் பலஸ்தீனம் போன்றவை சிலகாலங்களுக்கு முன் அறியப்பட்டிருந்தது.

இன்று அதேபோன்ற இராணுவப்படுகொலைகளும்  அராஜக இனவாதிகளின் அவஸ்த்தைக்குள்ளும் சிக்குண்டு மக்கள் சிதைந்து சீரழிந்துபோன நாடாக ஸ்ரீலங்கா இருந்து வருகிறது.

உலக மாற்றங்களும் வரலாற்று நிகழ்வுகளும் எத்தகைய அறிவுரையை இடித்துரைத்தாலும் செக்கு மாட்டின் சுழற்சியிலிருந்து ஸ்ரீலங்காவின் சிங்கள ஆதிக்கவாதிகள் மாறவுமில்லை, ஏதாவது மாற்றம் நிகழ்வதற்கு உவப்பாக அயல் நாடான மேய்ப்பன் இந்தியா விட்டுவிலகவுமில்லை.

மனித அழிவுகளுக்கிடையே தொடங்கப்பட்ட அதிகாரப்பகிர்வு என்ற பஞ்சாயத்து படலம் 30 ஆண்டுகளை தாண்டி வெற்றி நடை போட்டு முடிவுக்கு வராமல், மீண்டும் மீண்டும் தயாரிப்பு தரப்பாலும், பல நாடுகளின் இயக்குனர்கள் தரப்பாலும் காட்சி தணிக்கை மட்டும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இந்திய இயக்குனர் தரப்பான  கிருஷ்ணரின் வருகைக்குப்பின் தமிழர்களுக்கான தீர்வு பேச்சுவார்த்தை முன்னேற்றத்துடன் தொடரும் எனவும் 13வது திருத்தத்திற்கு மேலே சென்று தீர்வு காணப்படும் எனவும் பிரசங்கம் செய்யப்பட்டது. அது காலத்தை இழுத்தடிக்க போடும் திட்டமென பொதுவாக நம்பப்பட்டாலும், யுத்த குற்றத்தை ஞாபகப்படுத்தி மேற்குலகம் கொடுக்கும் அழுத்தம் காரணமாக சிங்கள அரசு ஏதாவது ஒரு முடிவுக்கு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் ஒரு சிலரிடம் இருந்தது.

இந்திய கிருஷ்ணரின் வருகையும், அடுத்து வந்துபோன அப்துல் கலாமின் மும்மொழி கனவுத்திட்டமும், இலங்கை அரசின் கடந்தகால செயற்பாடுகளை வஞ்சகமில்லாமல் அங்கீகரித்து வழிமொழிந்திருக்கிறது. இந்தியா தமிழர்களை ஏமாற்ற உதவிய உற்சாகத்தால் உலக அரசியல் மாற்றங்களை புறந்தள்ளி பழைய பாதையை செப்பனிட்டு ஸ்ரீலங்கா பயணிக்க இருப்பதாக தெரிகிறது.

நல்லிணக்கம் என்ற பெயரில் சிங்கள இனநலன் காக்கும் நல்லிணக்கமும், இனப்படுகொலையிலிருந்து ராஜபக்க்ஷவை பாதுகாக்க புதிய புதிய திட்டங்களும் இந்திய ஆலோசனையுடன் வகுக்கப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக அரசியல் ரீதியான தீர்வுத்திட்டம் எதுவுமே ஸ்ரீலங்காவில் சாத்தியமில்லை என்பதை மீண்டும் மஹிந்த ராஜபக்க்ஷ பகிரங்கமாக தெரியப்படுத்தியிருக்கிறார்.

அரசியல் தீர்வொன்றை வழங்குவதில் நாடாளுமன்றத்தின் சிங்கள பெரும்பான்மையின் விருப்பமே எனது விருப்பம். 13 பிளஸ் என்ற எனது நிலைப்பாடு புதிய தீர்மானமல்ல. இதனை நான் அன்றிலிருந்து கூறிவருகிறேன். தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பினருக்குத் தனிநாடு ஒன்றே தேவையாக இருக்கிறது. தனிநாடு ஒன்றுக்குரிய அதிகாரத்தை நாம் கொடுக்கவே மாட்டோம். அது தான் எமது நிலைப்பாடு. இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழுத்தமாக தெரிவித்திருக்கிறார்.

ஒரே மொழி ஒரே மத மக்கள் வாழும் உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள்கூட மாகாண, மானில, வாரியாக அதிகாரங்களை பிரித்து வழங்கியிருக்கின்றன. அந்த நடைமுறையே அந்த நாடுகளின் வளர்ச்சிக்கும் உதவியிருக்கின்றன. கடைக்கோடியில் இருக்கும் மக்களையும் மனிதர்களாக ஏற்றுக்கொண்டு மாகாண, மானில, ரீதியாக அதிகாரங்களை பகிர்ந்து அளித்துவிட்டாலே பிரச்சினையும் பிரிவினையும் இல்லாமல் போய்விடுவதற்கு நிறைய சந்தற்பங்கள் உண்டு.

ஆனால் சிங்கள அரசு அதிகார பகிர்வு என்ற பதத்தை தேவையற்று பூதாகரமாக்கி தனிநாடு என்று மிகைப்படுத்தி உலகுக்கு காட்டி ஏமாற்றுவதற்கே விழைகிறது.

நியாயமான அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான ஆணையை மக்கள் எனக்கு வழங்கியுள்ளனர் என்றும், மஹிந்த சிந்தனையின் 54ஆம் பிரிவில் நாம் இதனைத் தெளிவாகக் கூறியுள்ளோம் என்று ஒரு கருத்தையும், மறுபுறம், அரசாங்கம் ஒரு திட்டத்தை முடிவு செய்தால் மக்கள் எதிர்ப்பார்கள், என்று முரண்பட்ட விதமாக திசைதிருப்பும்  இன்னொரு கருத்தையும் ராஜபக்க்ஷ  கூறியிருக்கிறார்.

மஹிந்த சிந்தனையில் தெளிவாக வரையறுத்ததாக கூறும் ஜனாதிபதி, மஹிந்த சிந்தனை வரைவுக்கு முன் அனைத்து மக்கள் கருத்துக்களை இவர்கள் பெற்றபின்தான் மஹிந்த சிந்தனை வரையப்பட்டதா என்ற கேள்வி எழும்புகிறது.  நியாயமான அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான ஆணையை மக்கள் எனக்கு வழங்கியுள்ளனர் என்றும்,, ஜனாதிபதி கூறுகிறார். பிறகு மக்கள் எதிர்ப்பார்கள் என்ற பதம் எங்கிருந்து வந்தது.

ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரும் இதே கருத்தைத்தான் கொண்டிருந்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணர், அண்மையில் கொழும்பு வந்து திரும்பியதை அடுத்து, 13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதாக மகிந்த ராஜபக்ச தம்மிடம் வாக்குறுதி அளித்துள்ளதாக கிருஷ்ணர் தரப்பில் கூறப்பட்டிருந்தது. அடுத்து ஏவுகணை விஞ்ஞானி அப்துல், வந்து ராஜபக்க்ஷ, டக்கிளஸ் ஆகியோருக்கு கைலாகு கொடுத்து சிங்கள பரிவர்த்தனைக்கு ஒப்புக்கொடுத்து,  நட்பை பாராட்டி திரும்பியதும் 13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்போவதாக இந்தியாவுக்கு வாக்குறுதி எதையும் கொடுக்கவில்லை என்று ராஜபக்ச கூறியுள்ளார்.

கிருஷ்ணா அரசியல் நோக்கத்தோடு இலங்கை சென்றதாகவும், விஞ்ஞானி அப்துல் சிங்கள மொழி வளத்தை தமிழர்களுக்கு பரப்ப வந்துபோனதாகவும் கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் அரசு மிக நுணுக்கமாக ஒரு விடயத்தை இரண்டு முகங்கள் மூலம் கையாண்டு உலகத்தை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.

சமாதான தூதுவனாக தான் இலங்கைக்கு சென்றதாகவும் இனியும் தான் அந்த முயற்சியுல் தொடர்ந்து ஈடுபடப்போவதாகவும் அப்துல் கூறியிருக்கிறார். விஞ்ஞானி அப்துல் அவர்கள் அடிப்படையில் ஒரு அணு ஆயுத வடிவமைப்பாளர். பேரழிவை உண்டுபண்ணக்கூடிய அணு, இராசாயின ஆயுதங்களை தயாரிப்பவர். அவரால் எப்படி அகிம்சையை கையாள முடியும். அல்லது அகிம்சை பற்றி எப்படி அவரால் பிரசங்கம் செய்ய முடியும்.

ஒரு அஹிம்ஸாவாதி  அணுவாயுத தயாரிப்பாளனாக எப்படி இருக்க முடியும்.?

இந்திய கொள்கைவகுப்பாளர்களை பொறுத்தவரையில் நாட்டின் மூல முன்னேற்ற கூறுகளான கல்வி, மனித மேம்பாடு,உற்பத்தி, திட்டமிடல், இயற்கை வளம் ஆகியவற்றில் எக்கவனமும் செலுத்தப்படுவதில்லை. முற்று முழுதாக ஏவுகணை தொழில் நுட்பத்தில் முன்னேறிவிட்டால் அதுதான் நாட்டின் வளர்ச்சியென்றும் வல்லரசுக்கான தகுதியென நம்பிக்கொண்டிருக்கும் ஒரு விசித்திரமான வர்க்கம்.

இதை நன்கு அறிந்த சோவியத் யூனியன் அமெரிக்காவை எதிர்ப்பதற்காக ஒரு காலத்தில் மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவை தனது அணியில் சேர்த்துக்கொண்டது. நாளடைவில் வாகனம், விமானம் ஆகியவற்றுடன் சேர்ந்து அணு ஆயுத அறிவை, தொழில் நுட்பத்தையும் இந்தியாவுக்கு கொடுத்திருந்தது.

நாளடைவில் ஐந்து வல்லரசு நாடுகள், மற்றும் ஜப்பான் தவிர்ந்து. வடகொரியா, பாகிஸ்தான், ஈரான் நாடுகள் போல இந்தியாவும் அணுவாயுதத்தை தயாரித்துவிட்டது. அதில் அப்துல் அவர்களின் பங்களிப்பும் இருப்பதாக நம்பப்படுகிறது. இதே அப்துல் கலாமின் அணு ஏவுகணை ஆராய்ச்சியின் பின்னர்தான் தென்கிழக்கு ஆசிய பிராந்தியம் அணு ஆயுத களமாக மாறி பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் சரி அரைவாசிக்கு மேற்பட்ட மக்கள் துண்டற படிப்பறிவில்லாத அடித்தட்டு ஆதிகால குடிமக்கள் போல உள்ளனர். நகரங்களிலும் காடு சூழ்ந்த மலைகளிலும் கவனிப்பாரற்று பரதேசிகளாக, இவர்கள் தன்னிச்சையாக வாழ்ந்து வருகின்றனர். கிடைக்கும் தெருவோர இடுக்குக்கள், நீர் வற்றிய பாலங்கள் போன்றவற்றை புகலிடமாக்கி துணி உடமைகளை வைத்துவிட்டு பகலில் பாம்பாட்டி, குரங்காட்டி, பாசிமணி விற்று, ஜோதிடம் பார்த்து, ஏதாவது வயிற்றுப்பாட்டுக்கு பிழைத்துவிட்டு இரவில் கொசு  தெருநாய்  மனித மிருகம்களுடன் போராடி உண்டு உறங்கி வாழும் அவலம் இந்திய முழுவதும் உண்டு.

இவர்களுக்கு எந்த காப்பீடும் இந்த மேதாவிகளால் செய்து கொடுக்க முடியவில்லை, இம்மக்களுக்கு  முகவரியும் கிடயாது. நல் உணவுமில்லை மருந்துமில்லை. அழுக்குதான் இவர்களது பாதுகாப்பு. இதில் குறவர் இனத்தை சேர்ந்த பெண்கள் பாலியல் தற்பாதுகாப்பிற்கு தம் மேனியில் அழுகிய மிருக கொழுப்பினை பூசி கொண்டு இரவில் காமுகர்களின் இருந்து தன்னை பாதுகாத்து கொள்கிறார்கள் . (இந்த தகவல்   பல புள்ளி விபரங்களின் ஆதாரத்தின்படியும் ஊர்ஜிதம் செய்யப்பட்டது.)

இந்தியாவின் அவலநிலை இப்படியிருக்கும்போது அழிவுக்கு வழிவகுக்கும் அணு விஞ்ஞானியான ஸ்ரீமான் அப்துல் அவர்கள் ஈழத்தமிழர்கள் மத்தியில் உயர உயர பறவுங்கள் என உபதேசித்து கவிதை பாடி மகிழ்ந்திருந்தார். அவர் குடியரசு தலைவராக இருந்தகாலத்தில் இந்தியாவின் மக்களின் அவலத்துக்கோ, இலங்கை பற்றிய சங்கடங்களுக்கோ எந்தச்சந்தற்பத்திலும் ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்து உதிர்த்து தலை நிமிர்ந்து வாய் திறந்து பேசியதில்லை.

எதைக்கொண்டு ஈழ மக்கள் உயர பறப்பது என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.

இராணுவ சகதிக்குள் சிக்கியிருக்கும் மக்களை அவர் வெளியில் கொண்டுவருவது பற்றி ஏதாவது பேசினாரா.விதவைகளாக்கப்பட்டு வயிற்றுப்பிழைப்புக்காக பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டிருக்கும் தாய்மாரைப்பற்றி பேசினாரா, மரங்களின் அடியில் பொலித்தீன் கூடாரங்களில் காலம் கடத்தும் ஊனமுற்றவர்கள் பற்றி ஏதாவது பேசினாரா. படுகொலை செய்யப்பட்ட மக்களின் சார்பாக ஒரு கவலையையாவது சிங்களத் தலைவருக்கு அவர் தெரிவித்தாரா.

மொழி மனங்களை, சமுதாயங்களை, மதங்களை, நாட்டை ஒற்றுமைப்படுத்துகிறது. மும்மொழி அனைவரையும் வேறுபாடில்லாமல் செய்யும். பல்வேறு இனம், மொழி, கலாசாரத்தை கொண்ட மக்களின் வாழ்க்கை முறையை "சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு" வாழக்கூடிய ஜனநாயக நாடாக இலங்கை மாற்றப்பட வேண்டும் என்றும்       மும்மொழித் திட்டத்தின் மூலம் சிங்களத்தை முழுமையாக இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் விளைவிக்க  "இந்தியாவின் ஆதரவை தெரிவித்தேன்" என்று கூறியிருந்தார்.

இலங்கையில் நடந்து முடிந்த பல இலட்சம் படுகொலைகளின் முதல்ப்பொறியாக மொழியே இருந்தது என்ற வரலாற்று உண்மையை  அப்துல் அறிந்திருக்கவில்லை என்றே படுகிறது.

இந்தியாவின் ஆதரவை தெரிவித்தேன் என்பதன் மூலம் தான் ஒரு இந்திய அரசின் ஏஜண்ட் என்பதையும் அவர் மறுக்கவில்லை.

ராஜபக்க்ஷவின் கபட இன அழிப்புத் திட்டங்கள் அனைத்துக்கும் பெரும் பணச்செலவுடன் இந்திய அரசு ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கிறது. தமது நாட்டின் வரிப்பணம் ஈழத்தமிழரை அழிக்க பயன்படுவதை முதலில் இந்திய மக்கள் உணரவேண்டும். இந்தியத்தலையீடு இல்லாவிட்டால் உலகநாடுகள் வெகுவிரைவில் ஸ்ரீலங்காவை நல்வழிக்கு கொண்டுவந்து அம்மக்களுக்கான அரசியல்த்தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான சகல தரவுகளையும் கையில் வைத்திருக்கிறது.

ஆனால் கெடுவாய்ப்பாக இந்தியாவின் தலையீடு தேவையற்று தொடர்கிறது. இந்திய மத்திய அரசின் தேவையற்ற தலையீட்டுக்கு தமிழ்நாட்டில் பிறந்த  அப்துல் போன்ற தமிழ் பேசுபவர்களும் சோரம் போவது  ஈழத்தில் வாழும் மக்களுக்கான அரசியல் தீர்வு அடிபட்டுப்போவதற்கு வழிசெய்து, மீண்டும்  மக்களை வேறு திசை நோக்கி திருப்பும் அபாயம் இருக்கிறது.

ஈழதேசம் இணையத்திற்காக
கனகதரன்.