Thursday, February 16, 2012

திமுக வின் அடுத்த தலைவர் யார்?.........

கூத்தாடி குசும்பன்.

இந்திய அரசியலைப்பொறுத்தவரை பெரும்பாலான அரசியல்க்கட்சிகள் குடும்பச்சொத்தாகி மிகப்பெரிய வருமானம் ஈட்டும் தொழில் பேட்டையாகவே மாற்றப்பட்டிருக்கிறது.

இந்தியசுதந்திர இயக்கமாக பல்வேறு மானிலத் தலைவர்களின் உதிரத்திலும் தியாகத்திலும் உருவான தேசிய காங்கிரஸ் கவலைக்கிடமாகி நேரு குடும்பத்தின் தனியார் கொம்பனியாக மாற்றப்பட்டிருக்கிறது.
 
அடுத்து லல்லு பிரசாத ஜாதவ் கட்சி, மம்தாவின் கட்சி, மாயாவதியின் கட்சி, சரத் பவார் கட்சி, என்று அனைத்தும் தனிமனித குடும்பச்சொத்தாகவே பெருந்தொகை பணத்தை ஈட்டி நாட்டில் வலம்வருகின்றன.

தமிழ்நாட்டைப்பொறுத்தவரையில் கருணாநிதியின் குடும்பச்சொத்தான திமுக, ராமதாசரின் குடும்பச்சொத்தான பாமக, ஜெயலலிதாவின் சொத்தான அதிமுக, இன்னும் பல முதலாளிகளின் கட்சிக் கொம்பனிகள் இருந்தாலும் மேற்கண்ட மூன்று கட்சிகளுமே மிகப்பெரிய தனியார் சொத்தாக காணப்படுகிறது.

இந்திய அளவில் இவைகளில் மிகப்பெரிய குடும்பக்கூட்டுத்தாபனம் என்றால் நேரு குடும்பத்தின் காங்கிரஸுக்கு அடுத்து, திருக்குவளை முத்துவேல் கருணாநிதியின், திமுக ஒன்றையே காணலாம். தமிழ்நாட்டில் அதிக கட்சிகள் தோன்ற காரணமாக இருந்தவர் என்ற கசப்பான பெருமையும் ஸ்ரீமான் கருணாநிதி அவர்களையே சாரும். அதிமுக, மதிமுக, (ரீஆர் அவர்களின்) இதிமுக, தேமுதிக, அனைத்தின் மூலமும் திமுக தான் என்ற உண்மையும் உண்டு.

தன்னை நிலை நிறுத்துவதற்காக பலபேரை கட்சியிலிருந்து வெளியேற்றிய கருணாநிதிக்கு இப்போ கட்சிக்குள் கலவரத்தை தோற்றுவிப்பவர்களை வெளியேற்ற முடியவில்லை. காரணம் இப்போ வினை வீட்டுக்குள்ளேயே உருவாகியிருக்கிறது. கருணாநிதியின் குடும்ப வாரிசுகளாக மாறன் குடும்பம் இருந்தாலும் அவர்கள் வியாபார பாட்னர்களே தவிர உரிமையில் பங்குதாரர்கள் அல்ல என்பதை தினகரன் கருத்துக்கணிப்பு சம்பவத்தின்போது கருணாநிதியின் ரியாக்ஷன் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது.

கடந்த சட்டசபை தேர்தலின் பிற்பாடல்லாமல் நீண்டகாலமாகவே ஸ்ராலின், அழகிரி கோஸ்டி அணிகள் இயங்கிக்கொண்டேயிருக்கின்றன. இந்தக்கோஸ்டிகளுக்கு வலுச்சேர்க்கும் விதமாக கனிமொழி-ராசாத்தி அணியும், தயாநிதி அணியும் சூடேற்றியும் வந்திருக்கின்றன. இந்த நேரங்களில் எல்லாம் கருணாநிதி குறிப்பிட்ட குடும்ப அணிகளை எச்சரிப்பதோ கடிந்துகொள்ளுவதோ இல்லை. மாறாக கட்சியின் அடுத்த மட்டத்திலிருக்கும் உறுப்பினர்களையும் மாவட்ட வட்ட செயலாளர்களையும் கடிந்து கொள்ளுவதே வழக்கமாக இருந்து வருகிறது. சமீபத்தில் காஞ்சீபுரத்தில் நடந்த ஒரு நிகழ்வின்போதும் கட்சிக்குள் ஒற்றுமையின்மையே 2011 சட்டசபை தேர்தல் தோல்விக்கு காரணம் என்று விரக்தியின் உச்சத்தில் தொண்டர்கள் மீது வீண் பழியைப்போட்டு சாடினார் கருணாநிதி.

சமீபத்தில் பருதி இளம்வழுதி மீது குற்றஞ்சாட்டப்பட்டு சில நிமிடங்களில் ஒழுங்கு நடவடிக்கை மூலம் பருதியை கட்சியிலிருந்து நீக்கினார் கருணாநிதி. என்ன நடந்தது ஏது நடந்தது என்பதுபற்றி தொண்டன் சிந்திக்க கால அவகாசம் எதையும் அவர் கொடுக்கவில்லை. "அதுதான் கருணாநிதியிம் அரசியல்ச்சாணக்கியம்"

உலக அளவில் மிக மிகப்பெரிதான ஸ்பெக்ரம் அலைக்கற்றை ஊழல் வெளிவந்தபோது மிகச்சாதுரியமாக ராசாவை வஞ்சகமாக சிறைக்கு அனுப்பி பிரச்சினையை திசைதிருப்பி மூடி மறைத்தார். தொண்டர்கள் அனைவருக்கும் ஆ ராசா மட்டுமே குற்றம் புரிந்தவராகவும் அதனால் தான் மிகுந்த மன உழைச்சலில் இருப்பதுபோலவும் மாயையை தோற்றுவித்தார். துரதிஷ்ட வசமாக கனிமொழி திஹார் சிறை செல்ல நேர்ந்தது. இந்த நேரத்திலும் ஐயன் கலங்காமல் சாணக்கியமாக காய் நகர்த்தி மகளை வெளிக்கொண்டுவந்தார். சிறையிலிருந்து மகள் வெளிவந்ததும் அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக நாடு காத்த வீரங்கனைக்கு அளிப்பதுபோன்று தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு அளித்து அனைத்தையும் தனது சணக்கியத்தால் சுத்தமாக மூடிவிட்டார்.

இவ்வளவு விவேகமுள்ள கருணாநிதிக்கு தனது மகன் அழகிரியுடன் மோத முடியவில்லை. பிள்ளைப்பாசம் அழகிரியை கட்சியிலிருந்து வெளியேற்றவும் முடியவில்லை. குணாம்ஷத்தில் கருணாநிதி எவ்வளவு பதவி ஆசை கொண்டவரோ அதேயளவு பதவி ஆசை அழகிரிக்கும் இருக்கிறது. கருணாநிதி எவ்வளவு பிடிவாதக்காரரோ அதேயளவு பிடிவாதம் அழகிரியுடமும் இருக்கிறது. ஆனால் தந்தரம், ஞாபகசக்தி, மூளை, காய் நகர்த்தும் சணக்கியம் கருணாநிதியளவுக்கு அழகிரியிடமில்லை.

கருணாநிதிக்கு இப்போ வயது 88 ஆகிறது, அவரது வாழ்க்கைக்காலம் கடைசியை அண்மித்துவிட்டது. இயற்கை விதிகளின்படி நூறு வயதுவரை அவர் வாழ்ந்தாலும், இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் மட்டுமே அவரால் வாழமுடியும். இப்போதும் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி அடுத்த நிலையில் கட்சியில் இருக்கும் எவரிடமும் எழவில்லை, ஏனெனில் அடுத்த தலைமையை அவர் தனது குடும்பத்துக்குள்ளேயே உருவாக்கி வைத்திருப்பதும் கட்சியிலுள்ளோர் அனைவரும் அறிவர். எனவே வெளியிலுள்ளோருக்கு வயிற்றெரிச்சல் இருந்தாலும் எட்டாப்பழமான தலைமை பற்றிய அக்கறை எவருக்குமில்லை.  ஆனால் மறைமுகமாக ஸ்ராலின் அணியாகவும், அழகிரி அணியாகவும், பலர் மறைமுகமாகவும் சிலர் வெளிப்படையாகவும் நடந்து வருகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்புவரை, கருணாநிதியின் தந்தரங்களும், நாடகங்களும், நா நடனங்களும் அவரது கட்சிக்கு நல்ல பலனை தந்துகொண்டுதான் இருந்தன. 2008, 2009, ஈழ இன அழிப்பு நிகழ்வின்போது கருணாநிதி நடந்துகொண்ட மனிதத்துக்கு ஒவ்வாத நடவடிக்கைகள், அவரது சுய ரூபத்தை தமிழகத்தின் குக்கிராமம்வரை கொண்டு சேர்த்தது. மக்கள் மத்தியில் மகாராசாவாக குடியிருந்த அவர் மிகவும் அருவருக்கத்தக்க வெறுப்புக்கு ஆளானார். தொடர்ந்து   காலம் அவரை ஸ்பெக்ரம் வடிவத்தில் கால் வாரியது.  இப்போ கருணாநிதி தமிழக மக்கள் மத்தியில் அவரது பெயருக்கேற்ப கறை படிந்த கரும்புள்ளியாகிவிட்டார் (கரு)ணாநிதி. அவரது தோல்வியும் வீழ்ச்சியும் இனி இருக்கும் சொற்ப காலத்தில் அவரால் நிமிர்த்த முடியாதவை.

நடந்த சம்பவங்கள் கருணாநிதியை மிகவும் பாதித்திருந்தாலும் அவர் வெளிப்படையாக அதிகமானவற்றை காட்டிக்கொள்ளவில்லை. மௌனமாக இருந்தால் ஒப்புக்கொண்டதாகிவிடும் என்பதால் தினம் ஒரு அறிக்கைவிட்டு திசைதிருப்பும் உத்தியில் முனைப்புடன் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். அதற்கான பலனும் சொற்பமேனும் கிடைக்காமலுமில்லை. இருந்தும் வாரிசுப்போட்டி அவரை செய்வதறியாது திகைக்க வைக்கிறது.

இன்று வாரிசுப்போட்டி யுத்த சமிக்ஞையாக மாற்றப்பட்டிருக்கிறது. வீரபாண்டி ஆறுமுகம் மூலம் தெறித்த பொறி பற்றிக்கொண்டுவிட்டதாகவே படுகிறது.

கருணாநிதியின் எண்ணமெல்லாம் கட்சி உடைந்துவிடக்கூடாது, தனக்கு அடுத்த நிலையில் செல்வாக்காக உள்ள ஸ்ராலினை தலைவராக்கி அடுத்த சமமான நிலைக்கு அழகிரியும் வரவேண்டும் என்பதே. அதன்மூலம் கட்சியிலுள்ளவர்களை சமாளித்துவிடலாம் மக்கள் அதைத்தான் விரும்புவார்கள் என்பதையும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார். அதன் பின் கனிமொழியும், உதயநிதி, துரை தயாநிதி, அப்படியே வாரிசுகள் மக்களை ஏமாற்றி கொம்பனியை தொடர்ந்து நடத்தவேண்டும் என்ற பேரவாவுடன்  காய் நகர்த்தி வந்தார். அதுதான் யதார்த்தமான தந்தரமும் கூட என்பதும் அவரது அனுபவ ஞானம். ஆனல் காலத்தின் சூழ்ச்சி கருணாநிதியை அழகிரி வடிவத்தில் தூண்டிக்கொண்டேயிருக்கிறது.

பதவியிலிருந்திருந்தால் இந்த சிக்கல் அனைத்தையும் வேறு விதமாக கையாண்டிருக்கவும் அவரால் முடியும். வரவிருக்கும் சங்கரன் கோயில் இடைத்தேர்தல் தனக்கு சாதகமான சூழலை உருவாக்குமென அவர் நம்பிக்கொண்டிருப்பதும் தெரிகிறது, அம்மையாரின் ஆணவப்போக்கால் தேமுதிக கூட்டணியிலிருந்து வெளியேறி தனி எதிர்க்கட்சியாக இருக்கிறது. வைகோ அவர்களின் மதிமுக தனித்து சங்கரன் கோயில் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறது. அம்மாவை எதிர்ப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாகி அம்மாவுக்கு பாடம் புகட்டவேண்டும் என்ற உணர்வு மக்களுக்கும் பத்திரிகைகளுக்கும் உண்டாகியிருக்கிறது. இந்த சந்தற்பத்தை பயன்படுத்தி மற்றய கட்சிகளின் வெப்பத்தில் தனது கட்சியை முதன்மைப்படுத்தி குளிர்காய்ந்து தனது சரிவை நிமிர்த்திவிட ஐயா நிச்சியம் முயலுவார். அப்படியொரு சந்தற்பம் கிடைத்தால் நாளடைவில் மதிமுக தேமுதிக போன்ற கட்சிகளை தந்திரமாக உடைக்க ஐயா பின்னிற்கமாட்டார் என்பதும் பின்னர் தெரியவரும்.

அம்மாவை எதிர்க்க வேண்டுமென்ற ஒரே நோக்கம் கொண்ட தேமுதிக, மதிமுக, ஐயனை மீண்டும் ஒரு சக்தியாக காட்டிவிடுமோ என்ற ஐயம் பலருக்கும் இருக்கிறது. ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம்.

எது நடந்தாலும் அது ஒரு குறுகிய கால நிகழ்வாகவே சம்பவிக்கும். திமுக தலைமை பதவிக்கான போட்டி நாளடைவில் இன்னும் வலுக்கும். இருந்தும் "திமுக" நேர்த்திக்கு வைத்திருக்கும் தேங்காயின் நிலையில் இருந்துகொண்டிருக்கிறது. சங்கரன் கோயில் தேர்தல் திருவிழா முடிந்ததும் தேங்காயின் நிலை என்னவென்று தெரியவரும். 

மீண்டும் சந்திப்போம்,
கூத்தாடி குசும்பன்.


No comments: