Sunday, February 12, 2012

தெல்லிப்பளையில் மனித எலும்புக்கூடுகள் மீட்பு.


 
தெல்லிப்பளை கொல்லங்கலட்டி பிள்ளையார் கோவிலுக்கு அருகிலிருந்து மனித எச்சங்கள் இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

தெல்லிப்பளை கொல்லங்கலட்டி சிந்துவாம்பிட்டி என்ற இடத்தில் உள்ள வீடொன்றிலிருந்தே இவ் எச்சங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை குறித்த வீட்டின் கிணற்றினைத் துப்புரவு செய்து கொண்டிருந்த பொழுது கிணற்றுக்குள் இருந்து இவ் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து துப்புரவு செய்தவர்களால் தெல்லிப்பளை காவற்துறைக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதனையடுத்து நேற்றைய தினம் மாலை தெல்லிப்பளைக் காவற்துறையினர் இருவர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து முதற் கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டது.
இன்று காலை குறித்த இடத்திற்கு வந்த காவற்துறையினர் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் கிணற்றிலிருந்து இவ் எச்சங்கள் மீட்டெடுக்கப்பட்டன.

இச் சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, 1992ம் ஆண்டு யுத்தத்தினால் குறித்த கிராம மக்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். அவ்வேளையில் குறித்த வீட்டு உரிமையாளர் உட்பட அவரது சகோதரிகள் இருவரும் அங்கேயே தொடர்ந்தும் இருந்துள்ளனர்.  செல்லப்பா இராசரத்தினம்(வயது 75), செல்லப்பா பாலாம்பிகை (வயது80), செல்லத்துரை அன்னலட்சுமி (வயது 70), ஆகிய 3 சகோதரர்களுமே தங்கியிருந்ததாக அயலவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் உறவினர்களால் அறியப்படவில்லை. 6 மாதங்களுக்கு முன்னரே இப் பகுதி மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டு தங்கள் வளவுகளை துப்புரவு செய்து வருகின்றனர். அதன்படி குறித்த வீட்டின் உரிமையாளரின் பெறாமகன் லண்டனில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார்.

அவரினால் குறித்த வீட்டுப்பகுதியும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் போது மனித எச்சங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து 3பேருடைய மனித எச்சங்களும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் ஒருவரது பூரணமான எச்சங்களே மீட்கப்பட்டுள்ளன.

ஏனையவர்களது எலும்புக் கூடுகளும் அப்பகுதியிலேயே இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவை தற்போது யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவின் பின்னர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டதனைத் தொடர்ந்து குடாநாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மனிச்சங்கள் ஆணுடையதா அல்லது பெண்ணுடையதா என்றும் எந்த காலப்பகுத்தியில் குறித்த நபர் மரணமடைந்துள்ளார் என்பதும் மருத்துவபரிசோதனையின் பின்னரே உறுதிப்படித்த முடியுமென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி உதயன்.

No comments: