Friday, February 10, 2012

"உங்கள் பிள்ளைகள் இறந்து விட்டார்கள் என்று பதிவு செய்து கொள்ளுங்கள்" இராணுவம்.


தமது கைப்பட படையினரிடம் ஒப்படைத்த உறவுகளின் நிலை குறித்து ராப்பிடம் முல்லை மக்கள் கண்ணீர்
news
இறுதிப் போர் முடிந்து அரச படையினரிடம் சரணடைந்தபோது தாம் தமது கைப்பட வட்டுவாகலில் வைத்து இராணுவத்தினரிடம் ஒப்படைத்த உறவினர்கள் பலர் மூன்று வருடங்களாகிவிட்டபோதும் இதுவரை மீண்டும் வரவில்லை என்றும் அவர்களில் சிலரை இறந்தவர்கள் என்று பதிவு செய்து கொள்ளுமாறு இப்போது இராணுவத்தினர் கூறுகிறார்கள் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோளக் குற்றவியல் நீதி விசாரணைக்கான தூதுவர் ஸ்ரிபன் ராப்பிடம் தெரிவித்தார்கள் முல்லைத்தீவு மக்கள்.

இராணுவத்தினரிடம் தாம் ஒப்படைத்த பிள்ளைகளின் ஒளிப்படங்களையும் ராப்பிடம் கையளித்த பெற்றோர்கள் அவர் முன் கதறியழுதபடி நீதி கிடைக்க வழிசமைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அரசு நியமித்த நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் விசாரணை தமக்குத் திருப்திகரமானதாக இல்லை என்றும் அங்கு தெரிவித்த பெற்றோர்கள், நீதியான சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என்றும் உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ராப்பின் திடீர் பயணம்
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ராப் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். நேற்று அவர் கிளிநொச்சியில் சந்திப்புக்களை நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதையொட்டி கிளிநொச்சியில் சிறிது பரபரப்பும் நிலவியது. ஆனால் திடீரென முல்லைத்தீவுக்கு இரகசியமாக வந்த ராப், பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்துப் பேசினார்.

கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிலுள்ள செல்வபுரம் என்ற இடத்தில் அமைந்திருக்கும் யூதாததேயூ ஆலயத்தில் இந்தத் திடீர்ச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. உடனடியான அழைப்பை ஏற்று சுமார் 25 வரையான பொதுமக்கள் சந்திப்புக்கு வந்திருந்தனர். பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமான சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

இறுதிப் போரின்போது நடந்தவைகள் குறித்து ராப் அந்த மக்களிடம் விசாரித்தார். போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் அவர் கேள்விகளை எழுப்பினார். ஐ.நா. வல்லுநர்கள் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த போர்க் குற்றங்களுக்குக் காரணமானவர்களை அந்த மக்களிடம் இருந்து அறிந்து கொள்வதிலும் அவர் ஈடுபாடு காட்டினார்.

பொதுமக்கள் அவரிடம் தெரிவித்ததாவது:
காணாமற்போனோர் இறுதிப் போரின்போது காணாமற்போனவர்கள் இரு வகைப்பட்டவர்கள். போர் நடந்துகொண்டிருந்தபோது காணாமற்போனவர்கள் ஒரு வகையினர். மற்றொரு தொகுதியினர் சரணடைவதற்காக இலங்கை இராணுவத்தினரிடம் உறவினர்களால்  நேரடியாக ஒப்படைக்கப்பட்டவர்கள்.

வட்டுவாகலில் வைத்து இவர்கள் இராணுவத்தினரிடம் மனைவிமாராலும் தாய்மாராலும் நேரடியாக ஒப்படைக்கப்பட்டவர்கள். இப்படி ஒப்படைக்கப்பட்டவர்கள் அனைவரும் பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள் என்பதைப் பின்னால் வந்தவர்கள் கண்டிருக்கிறார்கள். ஆனால் இப்போது கேட்டால் அப்படித் தாங்கள் யாரையும் பொறுப்பேற்கவில்லை என்று இராணுவத்தினர் கூறுகிறார்கள்.

தமது பிள்ளைகள் எங்கே என்று கேட்டுச் சென்ற தாய்மார்கள் சிலருக்கு, "உங்கள் பிள்ளைகள் இறந்து விட்டார்கள் என்று பதிவு செய்து கொள்ளுங்கள்" என இராணுவத்தினர் பதிலளித்துள்ளனர்.

ஆணைக்குழு விசாரணை நடிப்பு
நல்லிணக்க ஆணைக்குழு எங்களிடம் பகிரங்க இடத்தில் விசாரணை நடத்தியது. புலனாய்வுப் பிரிவினர் அங்கு நின்றிருந்தார்கள். உண்மையைச் சொன்னால் ஏதாவது நடந்துவிடும் என்ற அச்சம் காரணமாக நாங்கள் எல்லாவற்றையும் சொல்லவில்லை. உண்மையில் எம்மால் அங்கு சுதந்திரமாகச் சாட்சியமளிக்க முடிந்திருக்கவில்லை.

அப்படி இருக்கையில் அந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாம் எப்படி ஏற்க முடியும்? அதில் எமக்கு நம்பிக்கை இல்லை. நீதி கிடைக்க சர்வதேச விசாரணை ஒன்றே நடத்தப்படவேண்டும்.

மீள்குடியமர்வு முடியவில்லை
இந்த நாட்டில் விடுதலைப் புலிகள் இருப்பதற்கான அடையாளங்கள் எதுவும் கடந்த மூன்று வருடங்களாகக் கிடையாது. அவர்களால் எந்த அச்சமும் இல்லை. ஆனால் பல இடங்களில் எம்மை மீளக்குடியமர விடுகிறார்கள் இல்லை. படையினர் தமக்குத் தேவை என்று பெரும் தொகையில் காணிகளை ஆக்கிரமிக்கிறார்கள். அவர்கள் ஒரு முகாம் அமைக்க 5 முதல் 10 ஏக்கர் காணி போதாதா? எதற்காக 400 முதல் 500 ஏக்கர் காணியைக் கேட்கிறார்கள்? அவ்வாறு கேட்பதால்தான் எங்களால் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியவில்லை. அவர்கள் ஒரு பக்கத்தில் இருந்துவிட்டு மீதியை மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கலாம்தானே?

இராணுவப் பிரசன்னம்
வன்னியில் இராணுவத்தின் பிரசன்னம் இன்றி எதுவும் நடைபெறுவதில்லை. எந்த ஒரு நிகழ்வாயினும் படையினர் அங்கிருப்பர். சிவில் நிர்வாகம் நடக்கிறது என்று அரசு கூறுகிறது. பின்னர் ஏன் ஒவ்வொரு நிகழ்விலும் இராணுவத்தை நிறுத்துகிறது?

காணி, பொலிஸ் அதிகாரம் வேண்டும்
நாங்கள் சிங்களவர்களுக்கு நிகராக சம உரிமைகளுடன் வாழ்வதற்கே விரும்புகிறோம். அதனையே கேட்கிறோம். பொலிஸ், காணி அதிகாரங்களுடன் கூடிய ஒரு மாகாண சபையையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். அத்தகைய ஒரு தீர்வை அரசு வழங்க அமெரிக்கா இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இந்தியாவில் நம்பிக்கை இல்லை
நீண்ட காலமாக நாம் இந்தியாவை நம்பி இருந்தோம். ஆனால் இப்போது அவர்களை நம்பும்படியாக எதுவும் இல்லை. அவர்கள் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள். இப்போது நாங்கள் அமெரிக்காவைத்தான் நம்பியுள்ளோம். நீங்கள்தான்  அழுத்தத்தைக் கொடுத்து தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

மக்களின் கருத்துக்களைக் கேட்ட ஸ்ரிபன் ராப், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க அமெரிக்க அரசு தன்னாலான அனைத்தையும் செய்யும் என்று தெரிவித்தார்.

No comments: