சனல்-4 தொலைக்காட்சி மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்ட ஈழமனிதப்படுகொலை காணொளி காட்சிகளால், பன்னாட்டு மட்டத்தில் எழுந்துவரும் ஸ்ரீலங்காவுக்கு எதிரான நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. 
 
 
நடப்பு ஐநா மனித உரிமைகள் மாநாடு, பெப்,27,2012 ஜெனீவாவில் கூட இருக்கிறது.
மாநாட்டு அமர்வில் இலங்கைக்கு எதிராக (இந்தியா தவிர்ந்த)  அனேக நாடுகள் எதிர்நிலையெடுக்க இருப்பதாக சர்வதேச மட்டத்தில் கருதப்படுகிறது. அப்படி ஏற்படாமல் தடுப்பதற்கு இலங்கை அரசும் தன்னாலான தந்திரங்கள் அனைத்தையும் பலமாதங்களாக செய்துவருகிறது. அதற்கான அறிவுறுத்தல்களையும் திசை திருப்புதலுக்கான  உத்திகளையும் நண்பன் இந்தியா சிரமேற்கொண்டு பொறுப்புடன் உதவிவருவதாக தெரிகிறது.

இருந்தும் சர்வதேசநாடுகள் பலவும், ராஜபக்க்ஷ மீது பெருத்த ஐயுறவில் இருப்பதாகவே நிலைமை இருந்துவருகிறது.  உலகத்தை ஏமாற்றும் விதமான அனாகரீகமான ராஜதந்திரத்தை பாவித்து ஸ்ரீலங்கா போர்க்குற்றத்தை மூடிமறைப்பதற்காக ராஜபக்க்ஷ ஏமாற்று வேலையில் ஈடுபடுவதாக அனைத்து சர்வதேச தொண்டு நிறுவனங்களும் அதிருப்தி தெரிவித்து வருகின்றன. இவற்றை புறந்தள்ள சர்வதேச நாடுகள் தயாராகவில்லை.

இதனால் பெப் 27, மனித உரிமை மாநாட்டு அமர்வில், ஸ்ரீலங்காவின் போர்க்குற்றத்திற்கு எதிரான தீர்மானம் முன்வைக்கப்படலாம். அந்த நெருக்கடியிலிருந்த தப்பித்து காலத்தை இழுத்தடிக்கும் தந்தர யுத்தியாக அடுத்த "குறளிவித்தையை" அரங்கேற்ற ராஜபக்க்ஷ குழுமம் தயாராகவிருப்பதாக செய்திகள் வரத்தொடங்கிவிட்டன.

சட்ட நியாயத்துடன் எந்தச்சம்பந்தமில்லாத, ஐந்து இராணுவத்தினரை நீதிமான்களாக நியமித்து, இராணுவ நீதிமன்றம் ஒன்றை தமது வசதிக்கேற்ப விரைவில் நிறுவி, போர்க்குற்ற விசாரணையை விசாரித்து நீதியான தீர்ப்பு வழங்க இருப்பதாகவும், அப்படி எவராவது குற்றம் புரிந்திருப்பின்!  குற்றவாளிகளாக காணப்படும் அனைத்து இராணுவத்தினருக்கும் இதயசுத்தியுடன், பாகுபாடற்ற தண்டனை வழங்க திட சங்கற்பம் பூண்டிருப்பதாகவும், ஜெனீவா சிக்கலை மனதில்க்கொண்டு, சிறீலங்கா தரைப்படை தளபதி லெப், ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய மூலம்  அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இது ஒரு விசித்திரமான "குறளிவித்தை" நாடகமாக இருப்பதால், பாதிக்கப்பட்ட தமிழர்கள் கிறுகிறுத்து நிற்கக்கூடும்.இந்த வித்தைமூலம் உலகத்தை இப்போதைக்கு ஏமாற்றிவிடலாம் என்ற பெரும் நம்பிக்கை ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளுக்கு இருப்பதாகவே தெரிகிறது. இந்த குறளிவித்தை நிகழ்ச்சியின் பின்னணியில் ஸ்ரீமான் பான் கீ மூன், மற்றும் ஊழல் நாட்டு பொம்மை பிரதமர் மன்மோகன் சிங்கம் போன்றோரின் வழிகாட்டல் இருக்கும் என்றே தமிழர்கள் மத்தியில் வலுவான சந்தேகம் இருந்து வருகிறது.

தொடர்ந்து ஸ்ரீலங்கா தரப்பினர் அடம்பிடித்து வருவதுபோல, சாதாரணமாக யுத்தகாலத்தில் நடைபெறுவதுபோன்ற இழப்புகள் தவிர, எந்தவிதமான மனித உரிமைமீறலும் போர்க்காலத்தில் இடம்பெறவில்லையென்றால், சர்வதேச விதிமுறைகளை மீறும்வண்ணம் ஆயுதங்கள் பாவிக்கப்படவில்லையென்ற நீதியான நியாயமான காரணங்கள் இருப்பின்,  சுயமாக பொருள் விரையம் காலவிரையம் ஆகியவற்றை தவிர்த்து. மேலாக, சர்வதேசத்தில் எழுந்திருக்கும் அவப்பெயரையும் நீக்கும்வண்ணம் போர்க்குற்றத்தை சர்வதேசமும், அழிக்கப்பட்டவர்களின் உறவுகளான தமிழர்கள் விரும்புவதுபோல விசாரணையை எவர் எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ள அனுமதித்திருக்க முடியும். அப்படி நடக்குமாயின் தொடர்ந்து குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கும் தமிழர் தரப்பையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் சூழலையும் உருவாக்கிவிட முடியும்.

ஆனால் திசை திருப்புவதிலும் இல்லாத நியயங்களை ஒப்புவித்து நியாயப்படுத்துவதிலும் ஈடுபட்டு, ஒரு வில்லங்கமான முறுகல் நிலையில் ஸ்ரீலங்கா சிக்கியிருக்கிறது.

எறும்புக்கும், நத்தைக்கும் மனிதாபிமானத்துடன் அமைதி வழியில் வாழ்வியலை நிறுவவேண்டுமென பெருந்தொகை பொருளை செலவழித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஐநா, உட்பட்ட  இந்த நாகரீக உலகம், கண் முன்னே பகிரங்கமாக நடந்து முடிந்த அதர்மத்துடன் கூடிய கொடூரமான மனிதப்படுகொலை, இன அழிப்பு குற்றத்தை தர்மத்துடன் விசாரணைக்குட்படுத்த இதுவரை ஒப்புக்கேனும் முனைப்புக்காட்டவில்லை.

சென்ற ஆண்டு தமிழர் தேசியக்கூட்டமைப்பினரை கூப்பிட்டழைத்த அமெரிக்க வல்லரசு, இலங்கை அரசாங்கத்தின் யுத்த குற்றச்சாட்டுக்களின் தாக்கத்தை ஆதாரமாக பயன்படுத்தி பேச்சுவார்த்தை மூலம் தமிழர்களுக்கான அதிகார பகிர்வு தீர்வுத்திட்டத்தை முன்னெடுக்கும்படி தேசியக்கூட்டமைப்பினருக்கு அறிவுறுத்தியிருந்தது.

யுத்தக்குற்றம் ஸ்ரீலங்காவில் இடம்பெற்றிருப்பதை மறைமுகமாக ஒப்புக்கொள்ளும் அமெரிக்கா, யுத்தக்குற்றத்தை நேரடியாக குற்றமெனக்கூற விரும்பவில்லை. அமெரிக்கா மட்டுமல்ல அனேக நாடுகள் ஏனோ அதை விரும்பவில்லை. அதற்கான வலுவான தடைக்கல் ஏதோ உலகத்தை தடுப்பது புரிகிறது. அந்தப்பலவீனமே சிங்கள பாசிசவாதிகளின் பலமாகி, ஒவ்வொரு சந்தற்ப்பத்திலும் ஒவ்வொரு விதமான கண்கட்டு வித்தைகளை அரங்கேற்றி காலங்கடத்தப்பட்டு வருகிறது.

நடக்கவிருக்கும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனிவா மாநாடு தொடங்குவதற்கு முன்னர் இலங்கைக்கு ஆதரவாக உலக நாடுகளின் நிலையை பெற்றுக் கொள்ளும் வகையில், இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், ஒழுங்கு செய்திருந்த விசேட ஒன்றுகூடல் நிகழ்வை முக்கியமான பல நாடுகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன என்று தெரிகிறது.

வரும் 27ம் நாள் தொடங்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படலாம்!. இந்தத் தீர்மானத்தைச் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா போன்ற நாடுகளின் செல்வாக்குட்பட்ட ஏதோ ஒரு நாடு தீர்மானத்தை முன்மொழியக்கூடும். அந்த தீர்மானத்தை தாம் ஆதரிக்கப்போவதாக ஏற்கெனவே அமெரிக்கா தெரிவித்துமிருக்கிறது. இந்த தீர்மானத்தை இதற்கு முன்னய கூட்டத்தொடரிலேயே கொண்டுவருவதற்கு முயற்சியெடுத்த கனடா சில தடைகள் காரணமாக அப்போ தீர்மானத்தை கைவிட்டு வெளியேறியிருந்தது.

எனவே நடக்கவிருக்கும் மனித உரிமைகளுக்கான ஜெனீவா கூட்டத்தொடர், ஸ்ரீலங்காவுக்கு மிகுந்த நெருக்கடியை தோற்றுவிக்கும் விதமாக அமையும் சாத்தியம் அதிகம் இருக்கிறது. இந்த நிலையிலிருந்து தப்பிக்க, நண்பன் இந்தியா கைகொடுக்கும் என்ற நம்பிக்கை ஸ்ரீலங்காவுக்கு நிறைய உண்டு.

இந்தியாவையும் மீறி தீர்மானம் ஸ்ரீலங்காவுக்கு எதிரான நிலை தோற்றம் பெறுமானால், எப்பேற்ப்பட்ட தந்திரத்தை பாவித்து தப்பிக்க வேண்டும் என்ற இலங்கை, இந்திய அரசுகளின் யுக்தியே இலங்கை அரசு இதய சுத்தியோடு உள் நாட்டிற்குள்ளே விஷேட இராணுவ நீதிமன்றம் அமைத்து போர்க்குற்றத்தை விசாரித்து தண்டனை வழங்க ஏற்கெனவே திட்டமிட்டிருப்பதாக காட்டி தப்பிக்கும் "குற்றவியல் இராணுவ நீதிமன்றம் என்ற குறளி வித்தை"

இக்காய் நகர்த்தலின் ஆரம்பமாக தமிழர் தேசியக்கூட்டமைப்பினருக்கு, இந்தியா அழுத்தம் கொடுத்து அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க ஸ்ரீலங்காவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கடுமையான நெருக்குவாரம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது. ஒத்துழைப்பு என்று இந்தியா கூறுவதன் அர்த்தம் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணைய மறுக்கும் கூட்டமைப்பினரை இணைந்துகொள்ளவேண்டும் என்ற அழுத்தமேயாகும்.

தீர்வுத் திட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா அதிபருடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும், அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைப்பதில் நிலவிவரும் காலதாமதம் இந்தியாவை அதிருப்தி அடையச் செய்துள்ளது எனவும். தேவையற்ற உள்ளீடாக பௌத்த மதத் (துவேஷ பிக்குகள்) தலைவர்கள் உள்ளிட்ட மதத் தலைவர்கள், வடக்கு அரசியல் தலைவர்கள் (டக்கிளஸ்) போன்றோருடன் பேச்சுவார்த்தை நடத்துமாறும் கூட்டமைப்பை இந்தியா வற்புறுத்தியுள்ளதாக தெரிகிறது.

மேலும், சிக்கலை அதிகரித்து தீர்வு ஒன்றை எட்டிவிடாத விதமாக நாட்டின் ஏனைய சிறுபான்மை கட்சிகளுடனும் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென இந்தியா கட்டளையிட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. இது சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை புது டெல்லிக்கு அழைத்து  இந்தியா மேலும் இறுக்கமான கட்டளையிட இருப்பதாகவும் செய்திகள் பரவியிருக்கின்றன.

இதற்கு கூட்டமைப்பினரின் ரீயாக்ஷன் என்னவென்று தெரியவில்லை. ஆனாலும் இந்தியா இடும் கட்டளையை சிரந்தாழ்த்தி ஆமோதிப்பதுதான் கூட்டமைப்பினரின் வழமையான நடைமுறையாக இருந்துவந்தது. ஆனாலும் அமெரிக்கப்பயணத்தின்பின் கூட்டமைப்பினரின் போக்கு சற்று வித்தியாசப்பட்டிருப்பதாகவும் உணரக்கிடைக்கிறது.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு இந்தியா கொடுத்த அழுத்தமான கட்டளைச் செய்தியின் பின்னர்  கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை ராஜபக்க்ஷ அலரி மாளிகைக்கு அழைத்து பேசியிருக்கிறார். அதில் முக்கியமாக இந்தியா விரும்பியபடி தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணைந்துவிடும்படி கேட்டுக்கொண்டதாகவும் சம்பந்தன் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

ஆனால் பெப் 27, ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் அமர்வில் உண்டாகும் சிக்கலை சுயாதீன இராணுவ நீதிமன்றம், நீதியை நிலைநாட்டும் என்ற குறளிவித்தை, ஒரு குறுகியகால இடைவெளியை ஸ்ரீலங்கா அதிபர் ராஜபக்க்ஷவுக்கு கொடுக்கக்கூடும். அல்லது முடிவு வேறுவிதமாகவும் அமையக்கூடும்.

தீர்வுத்திட்டம் என்ற உள்நாட்டு மேசைப்பேச்சு திட்டம் ஒருபோதும் தமிழ் இனத்துக்கான தீர்வை பெற்றுத்தரப் போவதில்லை. அடுத்து தமிழர்களின் நாசகார சக்தியான இந்திய காங்கிரஸ் அரசின், ஊடுருவல் தீர்வு திட்டத்தில் இருக்கும்வரை சிக்கலும் சீர்கேடும் அதிகரிக்குமே தவிர ஒருக்காலும் தமிழினத்துக்கு விடியல் வரப்போவதுமில்லை.

தமிழனுக்கு எவன் எதிரியாக இருக்கிறானோ அவனை மத்தியஸ்தனாக அமர்த்தவே சிங்கள அரசு விரும்பி நிற்கும் என்பது யதார்த்தம். அதே கொடுமைக்காரனிடம் நீதியைப்பெறலாம் என்று தமிழர்களின் இன்றைய ஒரேசக்தியான கூட்டமைப்பும் விழுந்து கிடப்பதே அரசியல் வீழ்ச்சியாக சாபக்கேடாக இருந்துவருகிறது. இந்தியக்கூட்டால் எதுவுமே கிடைக்காது, தரித்திரமே மிஞ்சும் என்று தெரிந்தும் தொடர்ந்தும் கூட்டமைப்பு சினேகம் பாராட்டுவதிலும்பார்க்க "துட்டன் என்றால் தூரவிலகு" என்ற பழமொழிக்கேற்ப இந்தியாவின் நட்பை நிராகரித்து ஒத்துழைக்காமல் விட்டாலே அரைக்கிணறு தாண்டிய வெற்றி தமிழினத்துக்கு கிடைத்துவிடும்.

இதற்குமேலும் கூட்டமைப்பினர் விதண்டாவாதமாக இந்தியாவின் முந்தானையில் தொங்கித்தான் காரியம் சாதிப்போமென்றால், அது கல்லில் நார் உரிப்பதற்கு சமமானதாகும்.

கூட்டமைப்பினர் தமது குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவே இந்தியாவிடம் வீழ்ந்துகிடக்கின்றனர் என்றும் சந்தேகப்பட இடமிருக்கிறது. அனேக கூட்டமைப்பினரின் குடும்பங்கள்  ஈழத்தின் ஞாபகம் ஈரமாகக்கூட இல்லாமல் இந்தியாவில்  சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் இந்தியாவுடன் முரண்பட சம்பந்தன் ஐயா முதல் பலர் தயாராக இல்லை என்றே படுகிறது. சிவாஜிலிங்கத்திற்கு சென்னை எயர்போர்டில் ஏற்பட்ட கதி தமக்கும் வந்துவிடக்கூடாது என்பதில் பலர் கவனமாக இருப்பதாகவும் தெரிகிறது.

ராஜபக்க்ஷவின் குறளிவித்தை ஒருவேளை சர்வதேச நெருக்குவாரத்துக்கு சிறிய இடைவெளியை கொடுத்தாலும். காலதாமதமில்லாமல் புலம்பெயர் அமைப்புக்களின் உதவியுடன் நடைமுறைக்கொத்த சரியான காய் நகர்த்தலை முன்வைத்து தீர்மானத்துக்கு வரவேண்டிய முக்கிய சக்தியாக கூட்டமைப்பு இருந்து வருகிறது. கிடைக்கும் சந்தற்பங்களை சரியாகப்பயன்படுத்தி முதலாவதாக தேவையற்ற இடைச்செருகலான இந்தியாவின் முகத்திரையை கிழித்து உலகத்துக்கு காட்டி துணிச்சலுடன் வெளிவந்தாலே, தானாகவே மூன்றாவது  சக்தியொன்று கைகொடுக்க துணிச்சலுடன் வந்து சேரும். யதார்த்தமானவற்றிற்காக முயன்றால் முடியாதது என்று ஒன்றும் இல்லை என்பதுதான், தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களது தீர்க்கமான முடிவு.

ஈழதேசம் இணையத்திற்காக,
கனகதரன்.