Saturday, May 26, 2012

ஒரு "Genocide" க்கு பக்கிங்ஹாம் அரண்மனையில் செங்கம்பளம் விரித்து வரவேற்பா?

உலகிலுள்ள ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மொழி- இனம் சார்ந்த ஒதுக்கல், மதவேற்றுமை அல்லது தேசிய வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது என்பதே இனப் படுகொலை (Genicode) Genocide என வரையறுக்கப்பட்டுள்ளது. Genocide ஆக இருக்கும் ஒருவர்          எப்பேர்ப்பட்ட மனநிலை                  கொண்டவராக இருப்பார் என்பதை ஹிட்லர், முசோலினி, ருவாண்டாவின் அகஸ்டின் பிசிமுங், ஆகியோர உதாரணமாக கொள்ள முடியும்.

உலகின் மிகப்பெரிய இனப்படுகொலைகளாக *1905 ல் நமீபியா, *1915 ல் ஆர்மேனியா, *1932 ல் உக்ரைன், *1975 ல் கௌத்தமாலா, *1994  ல் ருவாண்டா, *1995 ல் – போஸ்னியா, என இனப்படுகொலையின் தொடர் பட்டியலை வரலாறு அவமானத்துடன் பதிவு செய்துள்ளது. அந்தகறுப்பு பட்டியலில் உள்ள ருவாண்ட இனப் படுகொலை தொடர்பாக அந்நாட்டு முன்னாள் ராணுவத் தளபதிக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஐநாவின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதேபோன்ற கோரமான இனப்படுகொலை நடத்தப்பட்ட நாடாக, கடைசியாக இனப்படுகொலை பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது அல்லது சட்டபூர்வமாக சேர இருப்பது மகிந்த ராஜபக்க்ஷ முப்படைத்தளபதியாக இருந்து இனப்படுகொலை நடத்தப்பட்ட ஸ்ரீலங்கா நாடு.

2009 ல் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற ஈழ இனப்படுகொலை 21ம் நூற்றாண்டின் பெருத்த அவலம் என உலகின் பல பாகங்களிலிருந்தும் தரவுகள், சாட்சிகள் ஐநாவை நோக்கி நீண்டுகொண்டிருக்கின்றன. ஐநாவுக்குள்ளே அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் பரிந்துரை அறிக்கையும் அதை உறுதிப்படுத்துகிறது. இனப்படுகொலை குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு பல சர்வதேச சட்ட formalities களை தாண்டவேண்டிய தேவையும் இருக்கிறது.

ஸ்ரீலங்காவின் [ராஜபக்க்ஷ] இனப்படுகொலையாளிகள் தண்டனைக்குரிய குற்றவாளிகளாக இருந்தாலும், சட்டப்படி "Genicode" [குற்றவாளி] என பகிரங்கப்படுத்தி உண்மையை வெளிக்கொண்டுவர பல தடைகள் குறுக்கே நிற்கின்றன. விசாரித்து தீர்ப்பு வழங்கவேண்டிய பொறுப்பும் ஐநாவில் அங்கம் வகிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கே உண்டு. அதற்கான முழு முயற்சிகளையும் உலகிலுள்ள நியாயவாத மனிதவள அமைப்புக்கள் இடைவிடாது செய்துவருகின்றன.

இந்தநிலையில் பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் அவர்கள் மூடிசூடி அறுபதாண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இலண்டன்  பக்கிங்ஹாம் அரண்மனையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விழாவுக்கு இலங்கையின் இனப்படுகொலை சூத்திரதாரி மகிந்த ராஜபக்சவுக்கும் அழைப்பு விடுத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

ஐரோப்பியரின் வருகையின் தொடரில் கடசியாக இலங்கையை ஆண்டவர்கள் பிரித்தானியர்கள். இலங்கை சுதந்திரம் அடைந்தபோது  முடிக்குரிய இளவரசியாக இருந்து இலங்கை தமிழரான சுந்தரலிங்கம் அவர்களிடம் கணக்கு பாடம் கற்ற இரண்டாம் எலிசபெத் மகாராணியார். இலங்கை இன விவகாரங்களை அறியாதவரல்ல. பிரித்தானியாவின் ஆளுகையின் கீழ் உலகிலுள்ள ஐம்பத்து ஆறு தேசங்களை பிரித்தானியா தனது ஆளுகைக்குள் வைத்திருந்தது அதில் இலங்கையும் ஒன்று. அந்த பாரம்பரியத்தின் உறவு முறையின் அடிப்படையில்  பிரித்தானிய மகாராணி எலிசபெத் அவர்கள் முடிதரித்த அறுபதாம் ஆண்டு  ஞாபக கொண்டாட்ட விழாவுக்கு சம்பிரதாய முறைப்படி இலங்கைக்கும் அழைப்பு அனுப்பவேண்டிய சம்பிரதாய முறைமையினாலான தேவை பிரித்தானியாவுக்கு இருந்திருக்கலாம் பங்குபற்றுபவர் இனப்படுகொலையாளியாக இருந்தாலும் நமக்கென்ன விழாவே முக்கியம் என்ற நிலையில் ஐக்கிய ராய்ச்சியம் இருப்பதாக படுகிறது.

ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் மதிக்கும் நாடு என காட்டிக்கொள்ளும் பிரித்தானியா, மனித உரிமைகளை குழிதோண்டி புதைத்து படு மோசமான இன அழிப்பை செய்துவிட்டு விட்டேந்தித்தனமாக எவருக்கும் கட்டுப்பட மறுக்கும் ஒரு பாசிச சர்வாதிகாரிக்கு விழாவுக்கான அழைப்பு அனுப்பியிருப்பது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் இது மனுதர்மத்தை- ஜனநாயகத்தை மீறிய ஒரு அரசியலாகவே பார்க்கப்படுகிறது.

இனப்படுகொலை குற்றவாளியான முன்னாள் பொஸ்னிய-சர்பிய இராணுவ கமாண்டர் ரட்ச்கோ மிலாடிச், கைது செய்யப்படுவதற்கு முன்பு ஒருமுறை விமான பயணத்தின்போது லண்டன் விமான நிலையத்தில் தரையிறங்கினால் தான் கைது செய்யப்படலாம் என்பதை எப்படியோ அறிந்து லண்டனில் தரயிறங்காமல் தப்பித்ததாக செய்தி வந்தது. அப்படியான வரலாற்று பின்னணி கொண்ட பிரித்தானிய அரசு இரத்தக்கறை படிந்த ஒரு இனப்படுகொலையாளியை மடல் அனுப்பி வரவேற்க முயற்சிப்பது அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்க்ஷ உரையாற்றுவதற்காகச் சென்றிருந்தபோது, அவருக்கு எதிராக மக்கள் திரண்டு பல நாட்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தியிருந்தனர். அமெரிக்காவிலும் ராஜபக்க்ஷவுக்கு எதிராக அப்படியான போராட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. புலம்பெயர் தமிழர்கள் அரசியல் ரீதியாகவும் இங்கிலாந்தில் ஜனநாயக ரீதியாக போராடும் தகமையை பெற்றிருக்கின்றனர். ஐநா அமைப்பின் நிபுணர்கள் பரிந்துரைத்த பரிந்துரையின்படி இலங்கையில் இனப்படுகொலை நடந்திருக்கிறது என்பதை இங்கிலாந்து அரசும் உணர்ந்தே இருக்கிறது அந்த பின்னணியில் ராஜபக்க்ஷ விசாரணைக்குரிய குற்றவாளி என்பது ஊர்ஜிதமாகிறது. இவை அனைத்தும் தெரிந்தும் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் அவர்களின் கௌரவ விழாவில் பங்குபற்ற குற்றவாளி ராஜபக்க்ஷவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்குமாயின் பிரித்தானியாவை ஜனநாயகத்தை மதிக்கும் நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது.

2010ல் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வந்த ராஜபக்க்ஷ பட்ட சிரமங்களிலும் பார்க்க இம்முறை அவர் அதிக சிரமங்களை சந்திக்கவேண்டியிருக்கும். ஒரு இரத்தக்கறை படிந்த இனப்படுகொலை குற்றவாளிக்கு வரவேற்பளித்த பழிச்சொல்லும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கும் இங்கிலாந்து அரசுக்கும் சென்று சேரும் என்பதை இங்கிலாந்து நிச்சியம் உணர்ந்து கொள்ளும். 

சமீபத்தில் த ஹேக்கில் அமைக்கப்பட்டுள்ள 'முன்னாள் யூகோஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில்' வழக்கு விசாரணை ஆரம்பமானபோது, ஜெனரல் மிலாடிச் முன்பு தான் நாட்டை காக்க போராடியதாகவும் இப்போ தன்னை காக்க போராடவேண்டியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். அதே கருத்துப்படவே ராஜபக்க்ஷவும் கருத்து கூறிவருவதை பல இடங்களில் காணமுடிகிறது.

1948 இல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இனப்படுகொலையை உலக அளவில் தடைசெய்யபட்ட, தண்டணைக்குரிய குற்றச் செயலாக சட்ட விதிகளை அமைத்து அறிவித்தது. இதன்கீழ் ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மேற்கூறிய காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லைப்படுத்துவது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தை பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றச் செயல்களாக, குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டம் நிர்ணயித்துள்ளது.

இன்று இலங்கையில் போர் நிறுத்தப்பட்ட மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் மேலே கூறப்பட்ட அனைத்து அடக்குமுறைகளும்  ஈழத்தில் தொடர்ந்து நடந்துவருகின்றன. குற்றத்தின்மேல் குற்றமாக ராஜபக்க்ஷ அரசு செய்துவருகிறது.

போலந்து நாட்டின் யூதச் சட்ட வல்லுநர் ரபேல் லெம்கின் Raphael Lemkin என்பவர் இனப்படுகொலை என்னும் கருத்துருவுக்கு முதன் முதலில் சொல்வடிவம் கொடுத்தவராவார். தனது கருத்தாக்கத்துக்கு சட்ட வடிவத்தை அமுல்படுத்த பல வழிகளிலும் போராடிய, லெம்கினின் வெற்றிகரமான பிரச்சாரங்கள் 1948 ஆம் ஆண்டில் இனப்படுகொலை அனைத்துலகச் சட்டங்களின் கீழ் குற்றமாக்கப்படுவதற்கு வழிவகுத்தன. தொடர்சியாக இனப்படுகொலை உலக அளவில் மிகப்பெரிய குற்றமாகவும், அதில் ஈடுபவர்களை தண்டிக்க அனைத்துலக குற்றவியல் நீதிமன்றமும் அமைக்கப்பட்டது.

1948 ல் இருந்து அறுபது வருடங்கள் கடந்த நிலையிலும் சட்டங்கள் சட்டங்களாகவே இருக்கின்றனவே தவிர அவற்றை அணுகக்கூடிய வகையில் வழிவிட்டுத்தர வல்லரசு நாடுகளுக்கு உடன்பாடு இல்லை என்பதே நடைமுறை.

ஈழதேசம் இணையத்திற்காக
கனகதரன்.

Wednesday, May 16, 2012

புத்த நாடும், காந்தி தேசமும் செத்துப்போன நினைவின் மூன்றாம் ஆண்டு!










உப்புக்காற்றும் கந்தகப்புகையும்
முல்லை கடற்கரையிலிருந்து
எழுந்து 
ஒப்பாரி ஓலங்களை சுமந்து
ஓஸோனை கிழித்தபோதும்...
உலகம் மனு தர்மத்தை
அடகு வைத்துவிட்டு
ஆற அமர அமைதிகாத்த
மூன்றாம் ஆண்டின் கறுப்பு நினைவுகள்.

மனு தர்மம்
சேடமிழுத்து சாகக்கிடந்தால்,
அதர்மம் மேலெழுந்து
செயற்படு பொருளாகி,

மனிதன்
நரை கண்டு கிழமாகி 
சாகும் விதியை மாற்றி...
பால்குடி குழந்தைகளும்
விடலைகளும் சிதறியது போக,,
விஷ வாயுவை சுவாசப்பையுள் நிரப்பி
நரம்பு மண்டலம் வழியாக
செவ்வணுக்கள் நஞ்சை சுமந்து
மண்டைக்கும் கண்களுக்கும் அனுப்பிய
நரகத்தின் நினைவழியா நாட்கள்.

பிறந்த பூமியில்
இருள் அகலும் என்று
நம்பிக்கையை மட்டும் உரமாக்கி
உணர்வுடன் போராடிய தமிழ் இனம்
வெற்றி பெற்று வாழக்கூடாது என
வஞ்சனையோடு
வல்லரசுகளை துணையாக்கி
முள்ளிவாய்க்காலில்
புத்த நாடும் காந்தி தேசமும்
கை கோர்த்து கூட்டாக செத்துப்போன
நினைவின் மூன்றாம் ஆண்டு அஞ்சலி!

தமிழனின் வாழ்விடங்கள் எல்லாம்
எல்லாளன் வாரிசுகளின்
வீர எச்சங்களை மறைப்பதற்காக
சவக்குழிகளின் மேலே
புத்தனின் உருவச்சிலையை
அங்குரார்ப்பணம் செய்து வைக்க
தெரிவு செய்யப்பட்ட ஆரம்ப கரிநாள்.

முள்ளிவாய்க்காலின் முற்றுகை,
வெற்றியில் அல்லது
சமாதானத்தில் முடிந்திருந்தால்!
ஒருவேளை
அது முடிவாகியிருக்கலாம்!

ஆனால்
இரண்டும் கெட்டான் நிலையில்
கவனிப்பாரற்று
நீறு பூத்த நெருப்பாகி கிடப்பதால்
அந்த மூன்றாம் ஆண்டின் நினைவு
நெருடல்களோடு
"முள்ளிவாய்க்கால்"
அது முடிவல்ல...
முடிவுவரை....
தொடரப்போகும் தீயின் ஆரம்பம்!...

கனகதரன்..

Friday, May 11, 2012

கோபாலபுரமும் கொழும்புவும் வேறல்ல !

- புலமைப்பித்தன்-


ம்பி நாட்டுக்குப் புறப்பட்டார் என்ற செய்தியோடு கடந்த இதழ் கட்டுரையை
முடித்திருந்தேன். இன்றைய சூழ்நிலை கருதி சொல்லவேண்டிய செய்திகள் சில இருப்பதனால்… தம்பி நாட்டுக்குப் புறப்பட்ட செய்தியைப் பிறகு சொல்கிறேன்.

தியாகம் செய்பவனுக்கு இருக்கும்   துணிச்சலைக் காட்டிலும்;               துரோகம்
செய்தவனுக்குத்தான் துணிச்சல் அதிகம். தியாகம் செய்பவனது துணிச்சல், அந்த கண நேரம் வருகிற துணிச்சல். ஆனால், துரோகம் செய்கிறவனுக்கு உள்ள துணிச்சல் காலமெல்லாம் இருக்கும் துணிச்சல். மானமுள்ள தமிழ் மக்களுக்கு உயிராயுதம் வழங்கிவிட்டுப் போனானே;

அந்த, மரணத்தை வென்ற மாவீரன் தம்பி      முத்துக்குமார். அவனுக்கு  இருந்த
துணிச்சல் தன் உடல் மீது தீவைத்துக்        கொள்ளும் வரை இருந்த  துணிச்சல்.
ஆனால், கருணாநிதிக்கு இருக்கும் துணிச்சல், காலத்தை வென்று நிற்கும் துணிச்சல். எந்த துரோகத்தையும் அஞ்சாது செய்கின்ற அந்த துணிச்சல் கருணாநிதிக்கு மட்டுமே வாய்த்த தனிப்பெரும் துணிச்சல்.

உலகம் எவ்வளவுதான் ஏசினாலும் பேசினாலும்     துடைத்துப் போட்டுவிட்டுப்
போகிற துணிச்சல், உலகத்தில்                              எத்தனை பேருக்கு வந்துவிடும்?
ஒன்றரை லட்சம் நம் தமிழ் உறவுகளை ஈவிரக்கம்                இல்லாமல் ஈனர்கள்கொன்றொழித்தபோது அந்த கயவாளி மக்களுக்கு துணை நின்று, காட்டிக் கொடுத்து, ஒற்றை நாற்காலியை பாதுகாத்துக்         கொண்ட ஒருவன்;
ஈழதேசமே ரத்தத்தில் குளித்த ஈர தேசமாய்                 போனதைப் பார்த்து ரசித்த;
பிறக்கும்போதே மனசாட்சி இல்லாமல் பிறந்த    இந்த மனிதர், தமிழ் ஈழம்தான்
தீர்வு என்று பேசுவதற்கு எத்தனை தைரியம், எத்தனை துணிச்சல் இருக்கவேண்டும்!

சிவப்பு விளக்குப்          பகுதியில்            உள்ள சிங்காரிகளின்     தலைவி ஒருத்தி சிலப்பதிகார மாநாடு கூட்டியதைப் போல… இந்த மனிதர் எப்படி வெட்கம் இல்லாமல் ஈழம் என்று பேச            வருகிறார்! எப்படி பேச முடிகிறது!
மானமுள்ள மனிதனுக்கு ஒரு நாக்கு, ஒரு வாக்குத்தான் அடையாளம். ஆயிரம்நாக்கு, ஆயிரம் வாக்கு என்று இருக்கிற ஒருவரை மனித சாதியிலே சேர்த்துக்கொள்ள முடியாது. உலகத்தில் இருக்கும் எல்லாவற்றிலும் போலிகள் இருக்கின்றன.

தமிழில் எழுத்துப் போலி கூட இருக்கிறது. அப்படி மனிதர்களிலும் போலிகள் இருக்கிறார்கள்.

தலை, முகம், கண், காது, வாய், மூக்கு, கழுத்து, உடல், கை,  காலென்று எல்லா
மனிதர்களுக்கும் இருப்பதைப் போல மனிதர்களாக இல்லாத சில    பேருக்கும்
இருக்கும். ஆனால் அவர்கள் மனிதர்கள் அல்ல என்கிறார் வள்ளுவர்.‘மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாம் கண்டதில்’    -என்கிறார்   வள்ளுவர்.

இந்த மனிதர்கள் மணிக்கு மணி நொடிக்கு நொடி நாக்கையும்         வாக்கையும்
மாற்றிக் கொள்வார்கள். அஞ்சுவதற்கு அஞ்சும் அச்சம் இவர்களிடம் ஒரு நொடியும் இருக்காது. மானம், வெட்கம் பார்க்கமாட்டார்கள். தங்களுக்காக, தங்கள் நலத்துக்காக ஓர் இனத்தையே அழிப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின் பிணங்களைக் கூட விற்பார்கள். இவர்கள் மனிதர்கள் அல்ல; மனிதப் போலிகள்! அப்படி ஒரு மனிதப் போலிதான் நண்பர் கருணாநிதி. 1987-ம் ஆண்டு! இந்த ஆண்டு தமிழ் ஈழ வரலாற்றில் ஒரு கறுப்பு ஆண்டு! இந்தியா தமிழ் ஈழத்தின் மீது முதல் படையெடுப்பு     நடத்திய ஆண்டு.
‘அமைதிப்படை’ என்ற முகமூடி அணிந்துகொண்டு ஓர் அழிவுப் படை தமிழ் ஈழ
மண்ணுக்குள் காலடி எடுத்து வைத்த ஆண்டு! அந்த 1987-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம். இந்திய- இலங்கை ஒப்பந்தத்தால் தங்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்தை முன்னுணர்ந்துகொண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் அதை எதிர்த்தது.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள்       பலருக்கும் விடுதலைப்
புலிகள் இயக்கத்தின் சார்பில், இந்திய – இலங்கை             ஒப்பந்தத்தில் தங்கள்
நிலைப்பாட்டை விளக்கி, தங்கள் நிலைப்பாட்டுக்கு ஆதரவு   கோரி கடிதங்கள்
கொடுத்தார்கள்.

தம்பி கிட்டு திருவான்மியூரில் இருந்தார். தம்பி (பிரபாகரன்) ஈழத்தில் இருந்தார். ‘கடிதத்தைத் தயார் செய்து அண்ணனிடம் கடிதத்தைப் படித்துக் காட்டிவிட்டு எல்லா அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கொடுங்கள்’ என்று தம்பி கிட்டுவுக்கு சொல்லியிருந்தார் தம்பி. 

ஒரு வெள்ளிக்கிழமை காலை எட்டுமணி அளவில் கிட்டு என்னிடம் கடிதத்தைப் படித்துக் காட்டினார். நான் ஒரு சில திருத்தங்களைச் சொன்னேன். ‘யார் யாருக்கு கடிதம் கொடுக்க இருக்கிறோம்?’ என்றேன். எல்லா தலைவர்களின் பெயர்களையும் தம்பி கிட்டு சொல்லிக் கொண்டே வந்தார். கருணாநிதியின் பெயர் மட்டும் அந்தப் பட்டியலில் இல்லை. ‘ஏன் கலைஞருக்குத் தரவேண்டாமா கிட்டு?’ என்றேன். ‘அண்ணே… தம்பி, அவருக்குக் கடிதம் கொடுக்கச் சொல்லவில்லையே?’ என்றார். ‘அவர் நம்மை ஆதரிக்க மாட்டார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் திராவிட இயக்கத்தின் ஓர் அங்கமாக இருக்கும் ஒரு கட்சியின் தலைவர் அவர். அவர் நம்மை ஆதரிக்காவிட்டாலும் நாம் அவரை அலட்சியப்படுத்திவிட்டோம் என்ற நிலை வரக்கூடாது’ என்றேன்.
 
‘சரி அண்ணே… நான் தம்பியோடு பேசிவிட்டுக் கொடுத்துவிடுகிறேன்’ என்றார் கிட்டு. தம்பியிடம் கிட்டு கேட்டபோது, ‘‘எனக்கு அதில் விருப்பம் இல்லை. அண்ணன் சொல்கிறார், சரி… கருணாநிதிக்கும் ஒரு கடிதத்தைக் கொடுத்துவிடுங்கள்’ என்று தம்பி சொல்ல… கடிதத்தை எடுத்துப் போய் கோபாலபுரத்தில் கருணாநிதியிடம் கொடுத்துவிட்டு வந்தார் கிட்டு. தமிழ் ஈழம் தொடர்பாக ஒரு கடிதம் பெற்றுக் கொள்ளக் கூட தகுதி இல்லாத,அருகதை இல்லாத மனிதர் இந்த மனிதர் என்பதை… தம்பி மிகத் தெளிவாகப் புரிந்துவைத்திருந்தார். 

 ஆம். கருணாநிதி மனிதரல்ல, மனிதப் போலி! இவர் உண்மையில் ஒரு மனிதராக இருந்திருந்தால்… ஒன்றரை லட்சம் பேர் துள்ளத் துடிக்க கொன்றொழிக்கப்பட்டபோது; கொத்துக் கொத்தாக குண்டுமழை பொழிந்து நம் தமிழினம் செத்துச் செத்து விழுந்தபோது; தமிழ் ஈழ தேசத்தில் ரத்த ஆறு பாய்ந்தபோது; நம் தமிழ்க் குலப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொன்றொழிக்கப்பட்டபோது; 62 ஆயிரம் இளம் தமிழச்சிகள் தாலி பறிக்கப்பட்டு தனி மரங்களாய் நிற்க நேர்ந்தபோது, தன் ஒரு மகளை சிறைக்கு அனுப்பிவிட்டு சித்தம் துடித்த கருணாநிதி , சிதையிலே விழுந்து தமிழர்கள் பிணங்களாக வெடித்துச் சிதறியபோது ஏன் கவலைப்படவில்லை? கண்ணீர் விடவில்லை? நான் இப்போதும் சொல்கிறேன், இவர் நினைத்திருந்தால் ஒரு மணி நேரத்தில் போர் நின்று போயிருக்கும். இலங்கையில் நடந்த யுத்தத்தைத் தத்தெடுத்துக்கொண்ட இந்தியாவின் மத்திய அரசை கவிழாமல் தாங்கிப் பிடித்துக் கொண்ட மனிதர் இந்தமனிதர்தானே? இந்த மனிதருக்கு மனசாட்சி இருந்திருந்தால் இப்போது தமிழ் ஈழம் என்று வஞ்சக வசனம் பேசுகிற இவருக்கு கொஞ்சமேனும் தமிழ் இனமானம் இருந்திருந்தால்… மத்திய அரசுக்குத் தந்த ஆதரவைத் திரும்பப் பெற்றிருந்தால் மத்திய அரசும் கவிழ்ந்து போயிருக்கும். யுத்தமும் நின்று போயிருக்கும். அதை ஏன் செய்யவில்லை என்பதை மக்கள் மன்றத்தைக் கூட்டி பகிரங்கமாக இவர் தெரிவிக்கட்டும். அதை விட்டுவிட்டு இப்போது தமிழ் ஈழம் என்று சொல்லி முடிச்சவிழ்க்கிற வேலையிலே எதற்காக ஈடுபடுகிறார்? என்னுடைய பார்வையில்… கோபாலபுரம் வேறல்ல, கொழும்பு வேறல்ல. இரண்டுமே ஒன்றுதான்… தமிழர்களுக்கு இரண்டுமே பலி பீடங்கள்தான். ‘டெசோ’ தோன்றிய கதையை நான் அடுத்த இதழில் சொல்லுவேன்.

நன்றி: புலமைப்பித்தன் (தமிழக அரசியல்)