உப்புக்காற்றும் கந்தகப்புகையும்
முல்லை கடற்கரையிலிருந்து
எழுந்து 
ஒப்பாரி ஓலங்களை சுமந்து
ஓஸோனை கிழித்தபோதும்...
உலகம் மனு தர்மத்தை
அடகு வைத்துவிட்டு
ஆற அமர அமைதிகாத்த
மூன்றாம் ஆண்டின் கறுப்பு நினைவுகள்.

மனு தர்மம்
சேடமிழுத்து சாகக்கிடந்தால்,
அதர்மம் மேலெழுந்து
செயற்படு பொருளாகி,

மனிதன்
நரை கண்டு கிழமாகி 
சாகும் விதியை மாற்றி...
பால்குடி குழந்தைகளும்
விடலைகளும் சிதறியது போக,,
விஷ வாயுவை சுவாசப்பையுள் நிரப்பி
நரம்பு மண்டலம் வழியாக
செவ்வணுக்கள் நஞ்சை சுமந்து
மண்டைக்கும் கண்களுக்கும் அனுப்பிய
நரகத்தின் நினைவழியா நாட்கள்.

பிறந்த பூமியில்
இருள் அகலும் என்று
நம்பிக்கையை மட்டும் உரமாக்கி
உணர்வுடன் போராடிய தமிழ் இனம்
வெற்றி பெற்று வாழக்கூடாது என
வஞ்சனையோடு
வல்லரசுகளை துணையாக்கி
முள்ளிவாய்க்காலில்
புத்த நாடும் காந்தி தேசமும்
கை கோர்த்து கூட்டாக செத்துப்போன
நினைவின் மூன்றாம் ஆண்டு அஞ்சலி!

தமிழனின் வாழ்விடங்கள் எல்லாம்
எல்லாளன் வாரிசுகளின்
வீர எச்சங்களை மறைப்பதற்காக
சவக்குழிகளின் மேலே
புத்தனின் உருவச்சிலையை
அங்குரார்ப்பணம் செய்து வைக்க
தெரிவு செய்யப்பட்ட ஆரம்ப கரிநாள்.

முள்ளிவாய்க்காலின் முற்றுகை,
வெற்றியில் அல்லது
சமாதானத்தில் முடிந்திருந்தால்!
ஒருவேளை
அது முடிவாகியிருக்கலாம்!

ஆனால்
இரண்டும் கெட்டான் நிலையில்
கவனிப்பாரற்று
நீறு பூத்த நெருப்பாகி கிடப்பதால்
அந்த மூன்றாம் ஆண்டின் நினைவு
நெருடல்களோடு
"முள்ளிவாய்க்கால்"
அது முடிவல்ல...
முடிவுவரை....
தொடரப்போகும் தீயின் ஆரம்பம்!...

கனகதரன்..