Friday, May 11, 2012

கோபாலபுரமும் கொழும்புவும் வேறல்ல !

- புலமைப்பித்தன்-


ம்பி நாட்டுக்குப் புறப்பட்டார் என்ற செய்தியோடு கடந்த இதழ் கட்டுரையை
முடித்திருந்தேன். இன்றைய சூழ்நிலை கருதி சொல்லவேண்டிய செய்திகள் சில இருப்பதனால்… தம்பி நாட்டுக்குப் புறப்பட்ட செய்தியைப் பிறகு சொல்கிறேன்.

தியாகம் செய்பவனுக்கு இருக்கும்   துணிச்சலைக் காட்டிலும்;               துரோகம்
செய்தவனுக்குத்தான் துணிச்சல் அதிகம். தியாகம் செய்பவனது துணிச்சல், அந்த கண நேரம் வருகிற துணிச்சல். ஆனால், துரோகம் செய்கிறவனுக்கு உள்ள துணிச்சல் காலமெல்லாம் இருக்கும் துணிச்சல். மானமுள்ள தமிழ் மக்களுக்கு உயிராயுதம் வழங்கிவிட்டுப் போனானே;

அந்த, மரணத்தை வென்ற மாவீரன் தம்பி      முத்துக்குமார். அவனுக்கு  இருந்த
துணிச்சல் தன் உடல் மீது தீவைத்துக்        கொள்ளும் வரை இருந்த  துணிச்சல்.
ஆனால், கருணாநிதிக்கு இருக்கும் துணிச்சல், காலத்தை வென்று நிற்கும் துணிச்சல். எந்த துரோகத்தையும் அஞ்சாது செய்கின்ற அந்த துணிச்சல் கருணாநிதிக்கு மட்டுமே வாய்த்த தனிப்பெரும் துணிச்சல்.

உலகம் எவ்வளவுதான் ஏசினாலும் பேசினாலும்     துடைத்துப் போட்டுவிட்டுப்
போகிற துணிச்சல், உலகத்தில்                              எத்தனை பேருக்கு வந்துவிடும்?
ஒன்றரை லட்சம் நம் தமிழ் உறவுகளை ஈவிரக்கம்                இல்லாமல் ஈனர்கள்கொன்றொழித்தபோது அந்த கயவாளி மக்களுக்கு துணை நின்று, காட்டிக் கொடுத்து, ஒற்றை நாற்காலியை பாதுகாத்துக்         கொண்ட ஒருவன்;
ஈழதேசமே ரத்தத்தில் குளித்த ஈர தேசமாய்                 போனதைப் பார்த்து ரசித்த;
பிறக்கும்போதே மனசாட்சி இல்லாமல் பிறந்த    இந்த மனிதர், தமிழ் ஈழம்தான்
தீர்வு என்று பேசுவதற்கு எத்தனை தைரியம், எத்தனை துணிச்சல் இருக்கவேண்டும்!

சிவப்பு விளக்குப்          பகுதியில்            உள்ள சிங்காரிகளின்     தலைவி ஒருத்தி சிலப்பதிகார மாநாடு கூட்டியதைப் போல… இந்த மனிதர் எப்படி வெட்கம் இல்லாமல் ஈழம் என்று பேச            வருகிறார்! எப்படி பேச முடிகிறது!
மானமுள்ள மனிதனுக்கு ஒரு நாக்கு, ஒரு வாக்குத்தான் அடையாளம். ஆயிரம்நாக்கு, ஆயிரம் வாக்கு என்று இருக்கிற ஒருவரை மனித சாதியிலே சேர்த்துக்கொள்ள முடியாது. உலகத்தில் இருக்கும் எல்லாவற்றிலும் போலிகள் இருக்கின்றன.

தமிழில் எழுத்துப் போலி கூட இருக்கிறது. அப்படி மனிதர்களிலும் போலிகள் இருக்கிறார்கள்.

தலை, முகம், கண், காது, வாய், மூக்கு, கழுத்து, உடல், கை,  காலென்று எல்லா
மனிதர்களுக்கும் இருப்பதைப் போல மனிதர்களாக இல்லாத சில    பேருக்கும்
இருக்கும். ஆனால் அவர்கள் மனிதர்கள் அல்ல என்கிறார் வள்ளுவர்.‘மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாம் கண்டதில்’    -என்கிறார்   வள்ளுவர்.

இந்த மனிதர்கள் மணிக்கு மணி நொடிக்கு நொடி நாக்கையும்         வாக்கையும்
மாற்றிக் கொள்வார்கள். அஞ்சுவதற்கு அஞ்சும் அச்சம் இவர்களிடம் ஒரு நொடியும் இருக்காது. மானம், வெட்கம் பார்க்கமாட்டார்கள். தங்களுக்காக, தங்கள் நலத்துக்காக ஓர் இனத்தையே அழிப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின் பிணங்களைக் கூட விற்பார்கள். இவர்கள் மனிதர்கள் அல்ல; மனிதப் போலிகள்! அப்படி ஒரு மனிதப் போலிதான் நண்பர் கருணாநிதி. 1987-ம் ஆண்டு! இந்த ஆண்டு தமிழ் ஈழ வரலாற்றில் ஒரு கறுப்பு ஆண்டு! இந்தியா தமிழ் ஈழத்தின் மீது முதல் படையெடுப்பு     நடத்திய ஆண்டு.
‘அமைதிப்படை’ என்ற முகமூடி அணிந்துகொண்டு ஓர் அழிவுப் படை தமிழ் ஈழ
மண்ணுக்குள் காலடி எடுத்து வைத்த ஆண்டு! அந்த 1987-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம். இந்திய- இலங்கை ஒப்பந்தத்தால் தங்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்தை முன்னுணர்ந்துகொண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் அதை எதிர்த்தது.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள்       பலருக்கும் விடுதலைப்
புலிகள் இயக்கத்தின் சார்பில், இந்திய – இலங்கை             ஒப்பந்தத்தில் தங்கள்
நிலைப்பாட்டை விளக்கி, தங்கள் நிலைப்பாட்டுக்கு ஆதரவு   கோரி கடிதங்கள்
கொடுத்தார்கள்.

தம்பி கிட்டு திருவான்மியூரில் இருந்தார். தம்பி (பிரபாகரன்) ஈழத்தில் இருந்தார். ‘கடிதத்தைத் தயார் செய்து அண்ணனிடம் கடிதத்தைப் படித்துக் காட்டிவிட்டு எல்லா அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கொடுங்கள்’ என்று தம்பி கிட்டுவுக்கு சொல்லியிருந்தார் தம்பி. 

ஒரு வெள்ளிக்கிழமை காலை எட்டுமணி அளவில் கிட்டு என்னிடம் கடிதத்தைப் படித்துக் காட்டினார். நான் ஒரு சில திருத்தங்களைச் சொன்னேன். ‘யார் யாருக்கு கடிதம் கொடுக்க இருக்கிறோம்?’ என்றேன். எல்லா தலைவர்களின் பெயர்களையும் தம்பி கிட்டு சொல்லிக் கொண்டே வந்தார். கருணாநிதியின் பெயர் மட்டும் அந்தப் பட்டியலில் இல்லை. ‘ஏன் கலைஞருக்குத் தரவேண்டாமா கிட்டு?’ என்றேன். ‘அண்ணே… தம்பி, அவருக்குக் கடிதம் கொடுக்கச் சொல்லவில்லையே?’ என்றார். ‘அவர் நம்மை ஆதரிக்க மாட்டார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் திராவிட இயக்கத்தின் ஓர் அங்கமாக இருக்கும் ஒரு கட்சியின் தலைவர் அவர். அவர் நம்மை ஆதரிக்காவிட்டாலும் நாம் அவரை அலட்சியப்படுத்திவிட்டோம் என்ற நிலை வரக்கூடாது’ என்றேன்.
 
‘சரி அண்ணே… நான் தம்பியோடு பேசிவிட்டுக் கொடுத்துவிடுகிறேன்’ என்றார் கிட்டு. தம்பியிடம் கிட்டு கேட்டபோது, ‘‘எனக்கு அதில் விருப்பம் இல்லை. அண்ணன் சொல்கிறார், சரி… கருணாநிதிக்கும் ஒரு கடிதத்தைக் கொடுத்துவிடுங்கள்’ என்று தம்பி சொல்ல… கடிதத்தை எடுத்துப் போய் கோபாலபுரத்தில் கருணாநிதியிடம் கொடுத்துவிட்டு வந்தார் கிட்டு. தமிழ் ஈழம் தொடர்பாக ஒரு கடிதம் பெற்றுக் கொள்ளக் கூட தகுதி இல்லாத,அருகதை இல்லாத மனிதர் இந்த மனிதர் என்பதை… தம்பி மிகத் தெளிவாகப் புரிந்துவைத்திருந்தார். 

 ஆம். கருணாநிதி மனிதரல்ல, மனிதப் போலி! இவர் உண்மையில் ஒரு மனிதராக இருந்திருந்தால்… ஒன்றரை லட்சம் பேர் துள்ளத் துடிக்க கொன்றொழிக்கப்பட்டபோது; கொத்துக் கொத்தாக குண்டுமழை பொழிந்து நம் தமிழினம் செத்துச் செத்து விழுந்தபோது; தமிழ் ஈழ தேசத்தில் ரத்த ஆறு பாய்ந்தபோது; நம் தமிழ்க் குலப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொன்றொழிக்கப்பட்டபோது; 62 ஆயிரம் இளம் தமிழச்சிகள் தாலி பறிக்கப்பட்டு தனி மரங்களாய் நிற்க நேர்ந்தபோது, தன் ஒரு மகளை சிறைக்கு அனுப்பிவிட்டு சித்தம் துடித்த கருணாநிதி , சிதையிலே விழுந்து தமிழர்கள் பிணங்களாக வெடித்துச் சிதறியபோது ஏன் கவலைப்படவில்லை? கண்ணீர் விடவில்லை? நான் இப்போதும் சொல்கிறேன், இவர் நினைத்திருந்தால் ஒரு மணி நேரத்தில் போர் நின்று போயிருக்கும். இலங்கையில் நடந்த யுத்தத்தைத் தத்தெடுத்துக்கொண்ட இந்தியாவின் மத்திய அரசை கவிழாமல் தாங்கிப் பிடித்துக் கொண்ட மனிதர் இந்தமனிதர்தானே? இந்த மனிதருக்கு மனசாட்சி இருந்திருந்தால் இப்போது தமிழ் ஈழம் என்று வஞ்சக வசனம் பேசுகிற இவருக்கு கொஞ்சமேனும் தமிழ் இனமானம் இருந்திருந்தால்… மத்திய அரசுக்குத் தந்த ஆதரவைத் திரும்பப் பெற்றிருந்தால் மத்திய அரசும் கவிழ்ந்து போயிருக்கும். யுத்தமும் நின்று போயிருக்கும். அதை ஏன் செய்யவில்லை என்பதை மக்கள் மன்றத்தைக் கூட்டி பகிரங்கமாக இவர் தெரிவிக்கட்டும். அதை விட்டுவிட்டு இப்போது தமிழ் ஈழம் என்று சொல்லி முடிச்சவிழ்க்கிற வேலையிலே எதற்காக ஈடுபடுகிறார்? என்னுடைய பார்வையில்… கோபாலபுரம் வேறல்ல, கொழும்பு வேறல்ல. இரண்டுமே ஒன்றுதான்… தமிழர்களுக்கு இரண்டுமே பலி பீடங்கள்தான். ‘டெசோ’ தோன்றிய கதையை நான் அடுத்த இதழில் சொல்லுவேன்.

நன்றி: புலமைப்பித்தன் (தமிழக அரசியல்)

No comments: