Monday, September 12, 2011

கருணாநிதியுடன் ஒப்பிடுகையில் ராஜபக்சே பரவாயில்லை என்றார் பிரபாகரன்- சீமான்


Seeman

சென்னை: தமிழர்கள் விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன் ஒப்பிட்டால், ராஜபக்சே பரவாயில்லை. அவருக்கு உள்ள இன உணர்வு கூட கருணாநிதிக்கு இல்லையே என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தன்னிடம் வேதனையுடன் கூறியதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கான மரண தண்டனையை ரத்துச் செய்யும் தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுகையில் இப்படித் தெரிவித்தார் சீமான்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

கடந்த 2008 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பமாவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக பிரபாகரன் மேற்கண்டவாறு கூறினார். கருணாநிதி ஈழப் படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தவறியது மட்டுமல்லாமல் ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட உச்சக்கட்ட கொடுமைகளை வெளி உலகுக்குக் கொண்டு சேர்க்கவும் தவறிவிட்டார்.

மேலும் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகனை ஏன் இன்னும் தூக்கில் போடவில்லை என்று 7 முறை மத்திய அரசுக்கு நினைவூட்டல் கடிதங்களும் எழுதியிருக்கிறார்.

இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் இந்திய அளவில் தெரியவந்து, இலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்கிற விவாதம் எழுந்திருக்கும் வேளையில் ஒட்டு மொத்த ஊடகங்களையும் தமிழர்களையும் திசை திருப்புவதற்காக அவசரவசரமாக கடந்த 9 ஆம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற காலக்கடு விதித்தது ஏன்.?

இந்தியாவின் இறையாண்மை என்பது தமிழர்களுக்கு எதிரானது என்றால் அந்த இந்திய இறையாண்மைக்கு நாம் எதிரிதான். மும்பைக் குண்டு வெடிப்புக்குத் தமிழன் உட்பட கண்டனம் தெரிவிக்கும் நிலையில் தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கொல்லப்படும் போது அதனை எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று ஏன் மற்றவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றார் அவர்.

நன்றி. oneindia.tamil

No comments: