Saturday, October 29, 2011

அரசிடம் இருந்து தீர்வைப் பெற போர்க்குற்றத்தைப் பாவியுங்கள்;கூட்டமைப்புக்கு அமெரிக்கா ஆலோசனை

news

இலங்கை அரச தலைவர்கள் மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் ஒரு பக்கம் இருக்க, கொழும்புடன் பேசித் தமிழர்களுக்கு நீதியான தீர்வு ஒன்றை வென்றெடுப்பதில் கவனம் செலுத்தும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒபாமா நிர்வாகம் எடுத்துக் கூறி இருப்பதாக வோஷிங்ரனில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது போர்க் குற்றச்சாட்டால் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கை அரசின் பலவீனங்களைப் பயன்படுத்தி தமிழர்களின் நலன்களை வென்றெடுக்கப் பாருங்கள் என்பதே அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களின் சாரம் என்று கூறப்படுகிறது.அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்றுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையிலான சந்திப்புக்கள் நேற்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தன என்று கூட்டமைப்பினர் கூறினர்.
இந்தச் சந்திப்புகளில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து அனேகமாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்கத் தமிழ்த் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, வழக்கத்துக்கு மாறாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் தொடர்ச்சியாக மூன்று நாள்கள் சந்திப்புக்களை நடத்தியிருப்பது ஆச்சரியமளிப்பதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். அதேவேளை, கூட்டமைப்பினருடனான சந்திப்புக்கள் அனைத்தையும் ராஜாங்கத் திணைக்களமே ஏற்பாடு செய்தது என்பதால் அங்கேயே அவர்களது சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன; அதற்காக அவை ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன்தான் நடக்கின்றன என்று கருதிக் கொள்ளத் தேவையில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் கூறின.
ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின்போது, இலங்கை அரசுடன் பேசி தீர்வைப் பெறுவதில் அதிக அக்கறை காட்டுமாறு கூட்டமைப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. போர்க் குற்றச்சாட்டு என்ற விடயத்தில் தமிழர் தரப்பு அழுங்குப் பிடியாக இல்லாமல் அதனைப் பயன்படுத்தி தமக்கான நலன்களை வென்றெடுப்பதில் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும் சர்வதேச நாடுகள் அதற்கே ஆதரவாகச் செயற்படும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
தாயகத்தில் உள்ள தமிழர்களின் அசைக்க முடியாத பிரதிநிதிகள் என்ற வகையில், தமிழர்களின் தலைமைத்துவ வகிபாகத்தை ஈழத் தமிழர்கள் மத்தியிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் கூட்டமைப்பு பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அமெரிக்க அதிகாரிகளால் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அறிய வந்தது .

நன்றி, உதயன்.

No comments: