சொல்லுவதெல்லாம் உண்மை; நிகழ்ச்சியின் உண்மை முகம்
தமிழ்
நாட்டு மக்களை அரசியல் கட்சி தலைவர்களின் தொலைக்காட்சிகள் சிந்திக்க
விடாமல் குளப்பிக்கொண்டிருக்கும் தருணத்தில் சமூக நலன் சார்ந்து ஓரளவு
வக்கிரமற்ற தரமான நிகழ்ச்சிகளை தரவல்லதாக வட இந்திய ஸ்ரார் குழுமத்தின்
விஜய் ரிவி இருந்துவந்தது.
விஜய் ரீவி யில் இடம்பெறும் "நீயா நானா" நிகழ்ச்சி அதிகமாக மேல்த்தட்டு
சமூகம் சார்ந்து கல்வி அறிவுடைய மக்களை உள்ளடக்கியதாக இருந்தாலும்
நிகழ்ச்சியை நடாத்தும் கோபிநாத் விவேகமாக யதார்த்தமாகவும் நிகழ்ச்சியை
கொண்டுசெல்வது பாராட்டக்கூடியதாகவும் பிரமிக்கக்கூடியதாகவும் இருந்து
வருகிறது. கடந்த ஒருவருடமாக இடை நிறுத்தப்பட்டு இருக்கும் " கதையல்ல இது
நிஜம்" நிகழ்ச்சி மூலம் விஜய் ரிவிக்கு சமூக நோக்கம் இருப்பதையும்
காட்டியது விஜய் ரீவி நேரடியாக அரசியல் கட்சி சார்பு இல்லாததால் ஓரளவு
நல்ல நிகழ்ச்சிகளை தரவல்லதாக இருக்கலாம்.அடுத்ததாக zee தமிழ், என்ற ரீவீ, வடக்கத்திய சனலாக இருந்தாலும், விஜய் ரீவியில் முன்பு சினிமா நடிகை லட்சுமி நடத்திவந்து நிறுத்தப்பட்ட "கதையல்ல இது நிஜம்" நிகழ்ச்சியை பின்பற்றி சமீபகாலத்தில் அறிமுகப்படுத்திய "சொல்லுவதெல்லாம் உண்மை" நிறைய மக்களை கவர்ந்திருந்தது. சமூகத்தில் கைவிடப்பட்ட பெருமளவான கல்வியறிவு குறைந்த வறிய அவலப்பட்ட பெண்கள் அந்த நிகழ்ச்சியினூடாக நியாயம் கிடைக்கப்பெற்றது மட்டுமல்லாது, காவல்த்துறை நீதித்துறைக்கு ஒரு இலகு நிலையையும், சம்பந்தப்பட்ட மக்களின் பிரச்சினை சார்பாக வெளிப்படையான தகவல் பரிவர்த்தனை அங்கீகாரத்தையும், கீழ் மட்டச் சமூகத்துக்கு ஒரு நம்பிக்கையான நியாயத்திற்கான களத்தையும் வழங்கியிருந்தது.
தமிழகத்தில் பொலீஸ் நிலையம் சென்று இலஞ்சம் கொடுத்து தமக்கு சாதகமாக காரியத்தை சாதிக்கும் வசதியானவர்களின் முயற்சியையும் 'சொல்லுவதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியால் உடைக்கப்பட்டது என்றே நம்பக்கூடியதாக இருந்தது. நிகழ்ச்சியை நடத்திவந்த முன்நாள் புகழ்பெற்ற சன் ரிவியின் செய்தி வாசிப்பாளர் "நிர்மலா பெரியசாமி" உணர்ச்சி வசப்படாமல் சம்பந்தப்பட்டவர்களிடம் உண்மையை கறந்து கொள்ளும் விதம் பக்கச்சார்பில்லாது நீதியாக தீர்மானத்துக்கு வரும் அசாத்திய அறிவின் முதிர்வு நிர்மலா பெரியசாமி அவர்களுக்கு மிகுந்த மதிப்பையும், 'கை எடுத்து கும்பிடலாம்' என்ற ஒரு மனோநிலையையும் என்போன்று பலருக்கு நிச்சியம் உண்டாகியிருக்கும்.
நான் இணையத்தில் தவறாமல் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் 'சொல்லுவதெல்லாம் உண்மை' மற்றும் வாரம் ஒருமுறை வரும் 'நீயா நானா' ஒருபோதும் தவறிவிடவில்லை. சில தினங்களுக்கு முன் 07 06 2012 அன்று யூ ரியூப் இணையம் மூலம் வெளியாகியிருந்த சொல்லுவதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பார்த்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்துவிட்டேன். அந்த நிகழ்ச்சி என்னை மிகவும் பாதித்து விட்டது என்றே சொல்லலாம். மூன்று நாட்களாக நான் எனது நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் இயல்பாக இல்லை.
07 06 2012 சொல்லுவதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் ஈழத்தை சேர்ந்த ஒரு அகதிப்பெண் பெயர் கிருசாந்தினி, சொல்லுவதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் நிர்மலா பெரியசாமியிடம் நியாயம் கேட்டு போயிருந்தார். ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான அந்தப்பெண்ணின் கடந்தகால வாழ்க்கையை எவரும் நியாயப்படுத்த முடியாது. இருந்தும் அந்த அபலைப்பெண்ணின் சுய நியாயம் அழுகுரல் அனைத்தும் சொல்லுவதெல்லாம் உண்மை "நீதிபதி" திருமதி பெரியசாமியால் தடுக்கப்பட்டிருந்தது. அகதிப்பெண்ணான கிருசாந்தினி தனது தரப்பு நியாயங்களை ஒப்பிக்க இடமளிக்கப்படவில்லை. கட்டாயமாக தடுக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டார்.
நிறைய தப்பும் தவறும் அந்தப்பெண்ணின் வாழ்க்கையில் விதிவசமாக நிகழ்ந்திருக்கிறது. அவற்றை இங்கு நியாயப்படுத்துவது நோக்கமல்ல. இவை அனைத்தையும் தெரிந்துகொண்டு உள் நுழைந்த 'பால்துரை' என்ற பட்டம்பூச்சியை எப்படி நியாயஸ்தன் என்று சொல்லமுடியும். நான்கு வருடங்கள் அந்தப்பெண்ணின் பணத்தில் வயிறு வளர்த்து, உடல் இச்சையையும் தீர்த்துவிட்டு எப்படி உதறித்தள்ளிவிட்டு போகமுடியும். பள்ளிக்கூடம் போகாத படிப்பறிவில்லாத ஒருவனாக இருந்தால் புரியாமல் நடந்துகொள்ளுகிறார் என எடுத்துக்கொண்டாலும் நீதிபதி ஸ்தானத்திலிருக்கும் நிர்மலா அந்த இளைஞனுக்கு கண்டிப்பாக எடுத்துச்சொல்லி மனுதர்ம நியாயத்தை புரிய வைத்திருக்க வேண்டாமா?
பால்துரை என்பவர் கிருசாந்தினியுடன் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் அந்தப்பெண் நடத்தையில் தவறாக நடந்திருந்தால் பரிசீலனை செய்யக்கூடிய ஒன்றுதான்.
அந்தப்பெண் விதிவசமான குற்றவாளியென்றால் அதைவிட பால்துரை மோசடிபேர்வளி என்றே கொள்ளவேண்டும். அந்த இளைஞனை காப்பாற்றுவதிலேயே நிர்மலா குறியாக இருந்தார். நிகழ்ச்சியை பார்க்கும்போது அனைவருக்கும் அது பட்டவர்த்தனமாக புரிகிறது. ஏன் இப்படி? அந்தப்பெண் அகதி என்பதால் எவரும் கேட்கப்போவதில்லை இறுமாப்பு சரியானதா? ஈழத்தமிழர்களை ஆட்டு மந்தைகளைப்போல இந்திய தமிழக அரசுகள் நடத்துகின்றபோது நாம் ஏன் இவர்களை மதிக்கவேண்டும் என்ற இளக்காரமா.
இருவரையும் சேர்த்து வைக்கவேண்டுமென்றுகூட தேவையில்லை ஊமைபோல நடித்த பால்துரை என்பவனை கண்டித்திருக்கவேண்டாமா அவன் போன்ற வேஷதாரிகளை மீடியா மூலம் தோலுரித்து உலகுக்கு காட்டவேண்டிய கடமை நீதிபதி ஸ்தானத்தில் இருக்கும் நிர்மலாவுக்கு இல்லையா.
சட்டப்படி விவாகரத்து பெற்ற ஒருபெண் எவரையும் திருமணம் செய்ய எவரும் குறுக்கே நிற்க முடியாது திருமணம் செய்யபோகும் இருவர் சம்பந்தப்பட்ட விடயம் அது. திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்து தனது இச்சைகளை தீர்த்தபின் ஏமாற்றிவிட்டு போவதற்கு சட்டம் மற்றும் சமூகம் ஒருபோதும் இடங்கொடுக்க முடியாது. இப்படி ஏமாற்றுப்பேர்வழிகளால்த்தான் சமுதாயம் கெட்டுப்போவதற்கு வழி பிறக்கிறது. நீதி ஸ்தானத்தில் உட்கார்ந்திருந்த நிர்மலா பெரியசாமி ஒரு பயங்கர ஏமாற்றுப்பெர்வழிக்கு உதவியிருக்கிறார். அவர் புரியாமல் நடந்துகொண்டாரா இல்லை தெரிந்துதான் தப்புச்செய்தாரா என்பது நிர்மலா அம்மையாருக்கே வெளிச்சம்.
""ஒரே வார்த்தை,, நை நை என்று பேசக்கூடாது"" என்று அந்த பெண்ணை நோக்கி கட்டளை போட்ட நிர்மலா. இளைஞனை நோக்கி எந்த ஒரு கேள்வியையும் கேட்கவில்லை. முற்கூட்டியே தயாரிப்பு செய்து அந்த இளைஞனுக்கு சார்பாக நடந்து கொண்டதாகவே படுகிறது "அவர் தள்ளி விட்டுட்டாரு தன்னுடைய எதிர்காலத்தை பாக்க ஆரம்பிச்சுட்டாரு" என்று எந்த குற்ற உணர்வுமில்லாமல் நிர்மலா அவர்கள் கூறியது மிகுந்த வேதனையாக இருந்தது, கருணை காட்டுங்கள் என்று கிருசாந்தி கேட்டபோது நிர்மலா பாவித்த வார்த்தை பிரயோகங்கள் மனிதத்தன்மையற்றவை.
குறிப்பிட்ட அந்த விசாரணை தனது ஆளுமைக்கு அப்பாற்பட்டது சட்டத்தை நாடுங்கள் என்ற அறிவுரையுடன் விட்டிருந்தால் அந்தப்பெண்ணுக்கு வேறு ஒரு தளத்தில் நியாயம் கிடைத்திருக்கக்கூடும்
1, அந்தப்பெண் திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாய் என்பது மறைக்கப்படவில்லை பால்துரை என்பவருக்கு தெரிந்திருக்கிறது.
2, கிருசாந்தினியை பால்துரை திருமணம் செய்ய கேட்டிருக்கிறார். விவாகரத்து கிடைத்த பின் தான் சட்டப்படி திருமணம் செய்ய முடியும் என்பதை சட்டப்படி கிருசாந்தினி தெரிவித்திருக்கிறார். இது கிருசாந்தினியின் குடும்பத்தாருக்கும் தெரிந்தே நடந்திருக்கிறது.
3, கிருசாந்தினியின் உதவியில் படித்ததாக பால்துரை ஒப்புக்கொள்ளுகிறார். கிருசாந்தினியின் நடத்தையிலும் பிழையில்லை என்பதையும் பால்துரை ஒப்புக்கொள்ளுகிறார். அந்தப்பெண்மீது சாட்டப்படும் ஒரே குற்றச்சாட்டு வாய் திறந்து பேசுவது ஒன்றே சொல்லப்படுகிறது. அகதியாகி ஏற்கெனவே ஏமாற்றப்பட்ட ஒரு பெண் எச்சரிக்கை காரணமாக சற்று கவனமாக நடந்துகொள்வது யதார்த்தமான ஒன்றே!
அதுபற்றி கிருசாந்தினி விளங்கப்படுத்த முயற்சிக்கு நிர்மலா இடங்கொடுக்கவில்லை. கட்டாயமாக தடுக்கப்பட்டிருந்தார். இருதரப்பு விபரங்களையும் ஆராயாமல் எப்படி நிர்மலாவால் முடிவுக்கு வரமுடிந்தது? நீதியை தூர விரட்டிவிட்டு சொந்த மனநிலையில் தீர்ப்புக்கூறி விரட்டியிருக்கிறார்.
நான் மிகவும் மதித்து உயர்வாக நேசித்த "நிர்மலா பெரியசாமி" ஏன் இப்படி மாறினார் என்ற கேள்வி என்னுள் இடைவிடாது எழுந்து மனதை கிளறிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின்மூலம் நிர்மலாவின் உண்மை முகம் வெளிவந்ததா அல்லது துவேஷத்தின் வெளிப்பாடா என்று தெரியவில்லை. நிர்மலா பெரியசாமி அவர்கள் மீது நான் மட்டுமல்ல பல ஆயிரம் நியாயத்தை மதிக்கும் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை தவிடுபொடியாகிவிட்டது.
சிங்கள ஆட்சியாளர்களின் அடக்குமுறை, பாதுகாப்பு இன்மை, நியாயம் கிடைக்காமை, உயிர் அச்சுறுத்தல், தனிமனித சுதந்திரம் இல்லாமை, தரப்படுத்தல் போன்ற பல்வேறு ஆயிரம் காரணங்களினால் ஈழத்தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேறி பல நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். ஓரளவு பின்புல ஆதரவு உள்ளவர்களும் பணவசதி உள்ளவர்களும் ஐரோப்பா, அமெரிக்க, அவுஸ்ரேலிய கண்டங்களிலுள்ள மனித உரிமைகளை மதிக்கும் நாடுகளில் தஞ்சமடைந்து பட்ட துன்பங்களுக்கு மருந்து போடும் விதமாக அந்த நாடுகள் மதிப்பளித்து வாழ அனுமதித்திருக்கிறது.
பண வசதியற்றவர்களும் பின்புல உதவி இல்லாதவர்களும் உயிரை, மானத்தை காப்பாற்றலாம் என எண்ணி நம்பிக்கையுடன் தப்பியோடி சென்றடைந்த இடம் (இந்தியா) தமிழ்நாடு. அங்கு சென்றடைந்து அந் நாடு அகதிகளை நடத்தும் முறை பொலிஸாரின் பல்வேறுபட்ட நெருக்குவாரங்கள் ஆட்சியாளர்களின் கடும்போக்கு கண்டுகொள்ளாத்தன்மை தரப்படுத்தல்களை பார்த்து சொந்த நாட்டிலேயே செத்துவிடலாம் என திரும்பியவகள் ஏராளம். வழியில் கடலில் மாண்டவர்கள் ஏராளம். வேறு வழியின்றி தமிழ்நாட்டில் தங்கியவர்கள் கொத்தடிமைகள்போலவும் பழங்குடிகள் போலவும் முகாங்களில் அடைக்கப்பட்டு காலத்தை கழித்துக்கொண்டும் இருக்கின்றனர் பலர் சிறைச்சாலைகளில் காலவரயறையின்றி அடைக்கப்பட்டுமிருக்கின்றனர்.
முகாம்களைவிட்டு வெளியேறி சுயமாக உழைத்தும், வெளிநாட்டு உறவினர்களின் உதவியுடனும் வாழ்க்கை நடத்துபார்களும் இருக்கின்றனர். ஒருசில ஈழ ஆதரவு கட்சிகள் அமைப்புக்கள் தவிர, இந்திய தமிழக ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரமிக்க அதிகாரிகள் ஈழத்தமிழர்களை மனிதர்களாக மதிப்பதில்லை என்றே குற்றச்சாட்ட தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.
"அவர் தள்ளி விட்டுட்டாரு தன்னுடைய எதிர்காலத்தை பாக்க ஆரம்பிச்சுட்டாரு", என்று தீர்ப்பு வழங்கியிருக்கும் நிர்மலா அவர்கள் தனது பெற்ற மகளுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் இப்படித்தான் நடந்து கொள்ளுவாரா? அல்லது தமிழ்நாட்டு பெண்ணாக இருந்திருந்தால் எப்படி நடந்திருக்கிறார் என்பதை முன்னைய நிகழ்ச்சிகளில் கண்டுகொள்ளலாம். 14, 15 வயது பெண்களுக்கே திருமணம் நடத்தி வைக்க பேச்சுவார்த்தை நடத்திய நிர்மலா கணவனை பிரிந்து மறு மணத்துக்கு தயாராக இருந்த ஒரு அகதிப்பெண்ணுக்கு பாரபட்சமாக துவேஷித்து விரட்டிய நிகழ்வு மனச்சாட்சியுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
நிர்மலாவின் இந்த காழ்ப்புணர்வால் zee தமிழ் தொலைக்காட்சிக்கும் களங்கம் என்பதை தொலைக்காட்சி நிர்வாகம் புரிந்து கொண்டு திரும்பவும் கிருசாந்தினியையும் பால்துரையையும் அழைத்து நியாயமான தீர்மானத்திற்கு வருவார்கள் என நம்புகின்றோம்.
சொல்லுவதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் நாடற்ற அகதியான கிருசாந்தினி போன்ற அபலைகளுக்கு நிர்மலா பெரியசாமியால் ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கிறது.
''ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்''.
- ஊர்க்குருவி-
No comments:
Post a Comment