Tuesday, September 2, 2014

புலிப்பார்வை திரைப்படம் தவறான தகவல்களுடன் வெளிவரமாட்டாது – சீமான் ஈழதேசம் இணையத்திற்கு உறுதி.

ஈழப்போராட்டத்தை மோசமாக சித்தரிக்கவல்ல உத்தியுடன் பதின்ம வயது பாலியச் சிறுவர்களை விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் யுத்தத்திற்கு பயன்படுத்தினர் என்று சர்வதேச மட்டத்தில் ஆவணப்படுத்த முயலும் கருவை மையமாகக்கொண்டு “புலிப்பார்வை” என்ற திரைப்படத்தை எம் ஆர் எம் கல்விக்குழுமத்தின் உரிமையாளர் பச்சமுத்து அவர்கள் . வேந்தர் மூவீஸ் என்ற முத்திரையின் கீழ் தயாரித்திருந்தார்.
அதே நேரத்தில் லைக்கா மொபைல் நிறுவனம் பலகோடி ரூபாசெலவில் நடிகர் விஜையை வைத்து கத்தி என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறது. கத்தி திரைப்படத்தில் கருக்களம்பற்றி எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் லைக்கா மொபைல் என்ற நிறுவனம் ஈழத்தமிழர்களுக்கு எதிரான வேலைத்திட்டங்களை செய்து வருவதுடன், ராஜபக்‌ஷவின் பங்கு நிறுவனம் என்பதும் தெரிந்துகொண்டும் லைக்கா வின் முதலீட்டில் தமிழ்நாட்டில் படம் தயாரிப்பதை அங்குள்ள ஈழ ஆதரவு அமைப்புக்கள் அரசியற் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்த இரண்டு திரைப்படங்களையும் தாம் எதிர்க்கப்போவதில்லை என்றும் அந்த திரைப்படங்கள் தேவையான ஒன்று என்றும் நாம்தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்முனைப்பாக ஊடகங்களுக்கு செவ்வி வழங்கினார். அதன்பிற்பாடு புலிப்பார்வை திரைப்படத்தின் ஒலி ஓடியோ வெளியீட்டின்போதும் அந்நிகழ்வில் சமூகமளித்து அந்தப்படம் தேவையான ஒன்றுதான் என்று சான்று வழங்கி நியாயப்படுத்தினார்.
அப்போது புலிப்பார்வை திரைப்படத்தை வெளியிடுவதற்கு ஆட்சேபணை தெரிவித்த மாணவர்கள் பலர் நாம் தமிழர் இயக்க உறுப்பினர்களாலும் பச்சமுத்துவின் அடியாட்களாலும் மிக மோசமாக தாக்கப்பட்டு மண்டை உடைக்கப்பட்டனர் என்று செய்திகள் வெளிவந்தன.
அது சம்பந்தமாக ஈழதேசம் இணையத்தளம் சார்பாக நேற்று சீமானிடம் நேரில் சென்று விபரம் கேட்டபோது புலிப்பார்வை திரைப்படத்தில் இடம்பெறும் விரும்பத்தகாத காட்சிகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என்றும், பல காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டு எதிர்ப்பாளர்களுக்கு போட்டு காண்பிக்கப்படும் என்றும் அதன்பின் படத்தை எவரும் எதிக்கமுடியாத அளவுக்கு செப்பனிட்டு வெளியிட இருப்பதாகவும் கூறினார். ஒருவேளை படத்தில் இடம்பெற்ற திருத்தங்கள் தனக்கு திருப்தியளிக்காவிட்டால் படம் திரையிடப்படாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அடுத்து நடிகர் விஜய் நடிக்கும் கத்தி படத்திற்கும் தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருவதால் லைக்கா மொபைல் உரிமையாளர்களில் ஒருவரான சுபாஸ்க்கரன் என்பவரை வரவளைத்து தனது முன்னிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்த இருப்பதாகவும் அப்போது லைக்கா நிறுவனம் தமது தரப்பு நியாயங்களை பகிரங்கப்படுத்தும் என்றும் சந்தேகங்கள் தீர்க்கப்பட்டு கத்தி திரைப்படம் திரையிடப்படும் என்றும் சீமான் கூறியிருக்கிறார். 
ஈழதேசம் செய்திகளுக்காக தமிழ்நாட்டிலிருந்து
தில்லையம்பலம்.

No comments: