ஈழத்தமிழ் அகதிகள் பாதுகாப்பாக வாழமுடியாத முதற்தரமான நாடாக இந்தியா இருந்து வந்தது.தற்போது அகதிகளுக்கு மிகுந்த அச்சுறுத்தல் கொடுத்து அகதிகளின் உயிரோடும் வாழ்க்கையோடும் விளையாடும் நாடுகளாக அவுஸ்திரேலியா மற்றும் மலேசியா மாற்றம் பெற்றிருக்கிறது.
மலேசியா மற்றும் அவுஸ்திரேலியா அரசுகள் மனிதாபிமானம் மற்றும் மனித உரிமை, சர்வதேச அகதிகளுக்கான சட்டம் எதையும் பொருட்படுதாமல் ஈழத்தமிழ் அகதிகளை கைது செய்து முறைப்படுத்ப்பட்ட நீதி விசாரணை எதையும் நெறிப்படுத்தாமல் நேரடியாக விமானமூலம் நாடுகடத்தி ஶ்ரீலங்கா இராணுவப் புலனாய்வு துறையினரிடம் கையளித்து வருகின்றன.
தவிர்க்க முடியாத பல்வேறு காரணங்களினால் பெரும்பான்மையான ஈழத்தமிழ் அகதிகளுக்கு ஶ்ரீலங்காவில் உயிர்வாழுவதற்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உலகம் அறிந்த விடயம் என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றோம். எவராவது குற்றவாளியாக இருப்பின் அவர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவேண்டியவர் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.
பெரும்பான்மையான ஈழத் தமிழர்கள் தொடர்ச்சியாக நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறி பல்வேறு நாடுகளில் அடைக்கலம் கோரி வருகின்றனர். இது நீண்டகாலமாக இருந்து வந்தாலும் விடுதலைபுலிகளின் தோல்விக்குப்பின் அகதிகளின் விகிதாசாரம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. போர் முடிவுக்கு வந்தபின்னர் தமிழர்களுக்கான பாதுகாப்பு ஶ்ரீலங்காவில் உறுதிப்படுத்தப்படவில்லை. ஶ்ரீலங்கா அரசாங்கம் ஒருதலைப்பட்ஷமாக ஆயிரம் காரணங்களை காட்டினாலும் பாதுகாப்பு நிலையில் யதார்த்தம் எதிர் மாறாகவே இருந்து வருகிறது.
போரின் கொடூரத்தில் சிக்கி சின்னாபின்னம் அடைந்தபோதும் கடவுளின் பெயரால் உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள், ஓரளவு பொருளாதார வசதி படைத்தவர்கள், மற்றும் உறவினர்களின் உதவி கிடைக்கக்கூடியவர்கள் ஐரோப்பிய மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு சென்று தஞ்சம்கோரி வாழ்ந்து வருகின்றனர். குறிப்பிட்ட அந்த நாடுகள் மனித உரிமையை மதித்து தஞ்சம்கோரி வருபவர்களை உள்வாங்கி வாழ்வாதாரமும் உயிருக்கான பாதுகாப்பும் வழங்கி வருகிறது.
சூழ்நிலை காரணமாக ஏதோ ஒரு வகையில் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகிக்கப்படுபவர்கள் மாற்றுக்கருத்தை கொண்ட புத்திஜீவிகள், நியாயஸ்தர்கள் என்று பலர் 2009 ன் பின் ஶ்ரீலங்காவில் வாழ முடியாத துர்ப்பாக்கியநிலை தோற்றுவிக்கப்பட்டது.
யுத்தம் நடந்த இறுதி நாட்களில் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்ற சந்தேகிக்கப்படுபவர்கள், மற்றும் போராட்டத்துடன் சம்பந்தப்படாத இளம் வயது ஆண் பெண்கள் பலர் வெள்ளைக்கொடி தாங்கி ஶ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்திருந்தபோதும் அவர்களை சர்வதேச சட்ட திட்டத்துக்கமைய ஶ்ரீலங்கா அரசு சட்ட விசாரணைக்குட்படுத்தாமல் கண்ட கண்ட இடங்களில் வெட்டியும் சுட்டுக் கொன்றும் உயிருடன் தீயில் இட்டு கொழுத்தியும் தெருவில் வீசியது, இளம் பெண்களை கண்மூன்னே கற்பழித்து சித்திரவதை செய்து கொன்று புதைக்கப்பட்ட ஒளிப்பதிவுகளிம் புகைப்படங்களும் வெளிவந்து பயங்கரமான அச்சத்தை ஈழத்தமிழர்களுக்கு உண்டுபண்ணியிருந்தது.
அவ்வளவு நெருக்கடியான பயங்கரங்களை கண்ணெதிரில் கண்ட ஈழத்தமிழர்கள் எந்த ஒரு நம்பிக்கையின் அடிப்படையிலும் நாட்டில் தங்கி இருந்து சிந்திப்பதற்கான அவகாசத்தை சூழ்நிலை உண்டுபண்ணியிருக்கவில்லை. உயிர் தப்பினால் போதும் என்ற ஒரே குறி தவிர வேறு எதையும் நியாயப்படுத்தமுடியாத கையறு நிலமையே ஈழத்தமிழர்கள் முன் இன்றைக்கும் மலைபோல் குவிந்திருக்கிறது.
சிந்திப்பதற்கு அவகாசம் இல்லாத அவர்கள் கடல் மார்க்கமாக இந்தியாவுக்கும், கனடா, அவுஸ்திரேலியாவுக்கும், தாய்லாந்து இந்தோனேசியா, மலேசியாவுக்கும் இடம்பெயர்ந்தனர். கடற் பயணங்களின்போது ஆழிக்கடல் நீரில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை பல நூறை தாண்டியதாக செய்திகளும் புள்ளிவிபரங்களும் பதிவாகி இருக்கின்றன.
இந்தநிலையில் அவர்கள் உயிரை பாதுகாக்க ஶ்ரீலங்காவிலிருந்து வெளியேறி இடம்பெயர்வது தவிர வேறு எந்தவிதமான மாற்றுத் தெரிவும் காணப்படவில்லை. மலேசியாவை ஈழத்தமிழர்கள் தெரிவு செய்ததற்கு ஐநா சபையின் “அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின்” செயற்பாடே United Nations High Commissioner for Refugees, முக்கியமான காரணியாக சொல்லப்படுகிறது.
ஐநாவின் அகதிகளுக்கான பிரிவு சில வருடங்களாக மலேசியாவுக்குள் வரும் அகதிகளை உள்வாங்கி பதிவுசெய்து அடையாள அட்டைகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பல்வேறு நாடுகளைச்சேர்ந்த அகதிகள் மலேசியா கோலாலம்பூரில் அமைந்திருக்கும் United Nations High Commissioner for Refugees அலுவலகத்தில் நம்பிக்கையுடன் தம்மை பதிவு செய்துகொள்ளுகின்றனர்.
பல வெளிநாட்டவர்கள் மற்றும் உள்நாட்டவர்கள் மற்றும் பலநாடுகளின் மொழிபெயர்ப்பாளர்கள் என்று பல நூற்றுக்கணக்கான பணியாளர்கள் வேலைசெய்யும் மிகப்பிருமாண்டமான குளிரூட்டப்பட்ட அலுவலக வளாகமும் வாகனங்களும் ஐநாவின் அங்கீகாரத்துடன் தலைநகர் கோலாலம்பூர் என்ற இடத்தில் பகிரங்கமாக செயற்பட்டு வருகிறது. தினமும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள் தம்மை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கத்துடன் குறிப்பிட்ட அலுவலகத்துக்கு வந்து போய்க்கொண்டிருக்கின்றனர். அதிகாலை ஐந்து மணியிலிருந்து இரவு ஏழு மணிவரை ஈழத் தமிழ் அகதிகள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளின் அகதிகளின் நடமாட்டம் அங்கு நிரம்பி வழிகிறது.
UNHCR, அலுவலகத்தில் அகதியாக பதிவுசெய்யப்பட்ட எதிலிகளுக்கு அடையாள அட்டை வழங்கியிருந்தாலும் ஆரம்ப பதிவுக்கான திகதி குறிக்கப்பட்ட உள் நுழைவு கையேடு வழங்கப்பட்டிருந்தாலும் எதையும் மலேசியப் பொலீசார் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. தெருவில் அடையாள அட்டையுள்ள அகதி ஒருவர் பொலிசாரை சந்திக்க நேர்ந்தால் அவர் உடனடியாக கைது செய்யப்படுகிறார். கைது செய்யப்பட்டவரின் கையில் பணமிருந்தால் பணத்தை வாங்கிக்கொண்டு பொலீசார் குறிப்பிட்ட நபரை விட்டுவிடுகின்றனர்.
உடை, இருப்பிடம் வேலை செய்வதற்கான அனுமதி, வயிற்றுப்பாட்டுக்கான உதவி, சட்ட உதவி எதுவும் மலேசியாவிலுள்ள UNHCR, அமைப்பினால் தமிழ் அகதிகளுக்கு வழங்கப்படவில்லை. விசாரணை முடிந்து அகதியாக அங்கீகரிக்கப்பட்டு அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் காய்ச்சல் தலைவலி போன்ற சிறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் அரச மருத்துவ மனை வெளி நோயாளர் பிரிவில் மருந்து எடுப்பதற்கு வெளிநாட்டு உல்லாசப்பயணிகளுக்கு அறவிடும் தொகையிலிருந்து அரைவாசி பணம் கட்டணமாக குறைக்கப்பட்டிருக்கிறது. பெருத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடவுளின் குழந்தைகளக கைவிடப்பட்டவர்களாக கணிக்கப்படுகிறது. உள்ளூர் நோயளர்களின் கட்டணத்திலிருந்து வெளிநாட்டவர்களுக்கு பதினைந்து மடங்கு அதிக கட்டணம் மலேசியா மருத்துவமனைகளில் வசூலிக்கப்படுகிறது.
ஐநா அலுவலக பணியாளர்கள் மற்றும் மக்கள் தொடர்பாளர்கள் வானத்திலிருந்து வந்திறங்கிய தேவர்கள்போல குளிர்சாதன அறைகளில் பட்டுக்குஞ்சங்களாக பவனிவருகின்றனர்.
அகதி ஒருவர் பணமில்லாமல் வெறுங் கையுடன் மலேசியப் பொலீசாரால் பிடிபட்டால் ஐநா அகதிகளுக்கான ஆணையம் வழங்கியிருக்கும் அடையாள அட்டை நாக்கு வழிக்க மட்டுமே பயன்படுத்தும் அளவுக்கு அந்த அட்டை மலேசியப் பொலீசாரால் மதிக்கப்படுகிறது.
அடையாள அட்டையில் ஐநாவின் அலுவலர்களை தொடர்பு கொள்ளும் தொலைபேசி இலக்கம் இருந்து ஐநா அலுவலர்களுடன் சம்பிரதாயத்துக்கு தொடர்பு கொண்டாலும் ஐநா அதிகாரிகளை தொடர்பு கொள்ளுவது இலகுவானதாக இல்லை. காலம்தான் அகதி ஒருவரின் வாழ்வை தீர்மானிக்கிறது, கைது செய்யப்பட்டவர் வெளியே வரமுடியாத சிக்கல் மலேசிய சட்டத்தில் இருப்பதாக மலேசிய பொலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. மலேசிய இமிக்கிரேஷன் பொலிசாரிடம் ஒரு அகதி சிக்குவாராக இருந்தால் ஐநாவினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் வாக்குமூலம் எதுவும் செல்லாக்காசுக்கு சமமாக கணிக்கப்பட்டு தடுப்புக்காவலுக்கு கொண்டு செல்லப்பட்டு வருடக்கணக்கில் தண்டனை வழங்கப்படுகிறது. ஐநாவின் செல்வாக்கு அங்கு பல்லிளிப்பதாகவே உணர முடிகிறது கைது செய்யப்பட்ட பலர் பல மாதங்கள் சிறைத்தண்டனைக்குப்பிறகு வெளியே வந்திருக்கின்றனர். தற்போது அந்த நிலையும் தகற்க்கப்பட்டு கைது செய்யப்பட்டவர் தாமதமின்றி நாடு கடத்தப்படும் அபாயமே மலேசியாவில் மேலோங்கி நிற்கிறது.
சமீபத்தில் வெளிவரும் செய்திகளின்படி மலேசியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் “அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்” “UNHCR” செயலகத்தில் பதிவு செய்து கொண்டவர்களும், ஐநா அலுவலகத்தால் விசாரிக்கப்பட்டு ஐநா அடையாள அட்டை கிடைக்கப்பட்டவர்களும் என பலர் மலேசிய பொலீசாரின் சுற்றுவளைப்பால் கைது செய்யப்பட்டு ஶ்ரீலங்காவுக்கு நாடுகடத்தப்பட்டு வருகின்றனர், பலர் பொலீசாரின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. அதுபற்றி ஐநா அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் கரிசனை கொண்டதாக தெரியவில்லை.
மலேசியாவில் ஈழத் தமிழர்கள் அகதிகளாக சுமார் ஏழாயிரத்திலிருந்து எண்ணாயிரம் பேர்வரை வசித்துவருவதாக கணக்கிடப்படுகிறது, சுமார் ஆயிரத்து ஐந்நூறிலிருந்து இரண்டாயிரம் வரையிலான ஈழத்தமிழ் அகதிகள் ஐநா அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டையை கொண்டுள்ளனர், இரண்டாயிரத்து ஐந்நூறிலிருந்து மூவாயிரம் வரையிலான அகதிகள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு முற்றுப்பெறாத தொடர் விசாரணை நிலையில் இருந்துவருகின்றனர். அவர்களுக்கு படத்துடன் கூடிய ஒரு தற்காலிக பத்திரம் வழங்கப்படுகிறது. இன்னுமொரு மூவாயிரத்திலிருந்து நான்காயிரம் வரையிலானவர்கள் ஆரம்ப பதிவை செய்துவிட்டு உள்நுழைவதற்கான காலம் பதிவு செய்யப்பட்ட துண்டுச்சீட்டுடன் விசாரணைக்காக காத்திருக்கின்றனர்.
கடைசிவரியில் குறிப்பிடப்பட்டிருக்கும் பதிவு செய்துவிட்டு விசாரணைக்காக காத்திருக்கும் மூவாயிரத்திலிருந்து நான்காயிரம் வரையிலானவர்கள் தினமும் மிகவும் ஆபத்தான நிலையினை சந்திப்பவர்கள் எனக்கொள்ளமுடியும். ஏனென்றால் அவர்கள் அனைவருக்கும் இரண்டு வருடகாலம் தள்ளிப்போடப்பட்ட விசாரணைக்கான திகதி இடப்பட்ட வெள்ளை நிற துண்டுச் சீட்டு ஒன்று மட்டும் வழங்கப்படுகிறது. பெயர் இரண்டு வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட விசாரணைக்கான திகதி மட்டும் அவ்வட்டையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஏன் இப்படி ஒரு சின்னத்தனமான காரியத்தை ஐநா அகதிகளுக்கான முகவர் பிரிவு செய்து அகதிகளை மிகவும் மலிவாக எடை போடுகிறது என்ற ஆதங்க இருந்தாலும் தட்டிக்கேட்பதற்கு எவரும் இல்லை. ஐரோப்பிய நாடுகளில் உள்ளதுபோன்ற சட்ட வெளியும் அகதிகளுக்கான மனித உரிமையும் மலேசியாவில் காணப்படவில்லை அதை நோக்கி செல்வதற்கான பொருளாதாரமும் அகதிகளிடமில்லை. பலமான தொண்டரமைப்புக்களின் பின்னணியும் இல்லை.
மனிதன் என்ற அந்தஸ்து முற்றாக நிராகரிக்கப்பட்டு மனித உரிமை அனைத்தும் மீறப்பட்டு நிற்கதியாக நடைப்பிணமாக ஈழத்து தமிழ் அகதிகள் மலேசியாவில் வாழ்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் விடுதலைப்புலிகள் என்று சந்தேகிக்கப்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டு எந்த ஒரு நீதி விசாரணைக்கும் உட்படுத்தாமல் இரவோடு இரவாக அந்த நால்வரும் ஶ்ரீலங்காவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அதன்பிற்பாடு அறுபதுக்கு மேற்பட்ட அகதிகள் மலேசியப்போலீசாரால் கைது செய்யப்பட்டு இரகசியமாக நடுகடத்தி ஶ்ரீலங்கா அரசிடம் அகதிகளை கையளித்ததாக செய்திகள் வெளிவந்தன. அதுபற்றி ஐநா அகதிகள் ஆணையத்துக்கு தெரிவிக்கக்கூட கைது செய்யப்பட்ட அகதிகளுக்கு உறவினர்கள் இருக்கவில்லை ஒருசிலரது நண்பர்கள் ஐநா அகதிகள் ஆணையத்துக்கு அறிவித்தபோதும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவில்லை, நாடு கடத்தப்பட்ட அறுபது பேரின் நிலை என்ன என்பதும் யாருக்கும் தெரியாமல் மறக்கப்பட்டுவிட்டது. அடுத்து சில வாரங்களின் முன் மூன்றுபேர் சுற்றிவளைப்பு என்ற பேரில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவதற்கு தாயார் நிலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டிய தேவை இருக்கிறது. சுமார் இரண்டு முன்று வருடங்களுக்கு முன் ஒருவர் அகதியாக ஐநா அகதிகளுக்கான ஆணையத்தில் பதிவு செய்து அகதிக்கான அங்கீகாரம் பெற்ற ஐநா அடையாள அட்டையையும் பெற்றிருந்தார், அதன்பின்னர் குறிப்பிட்ட நபரின் மனைவி ஶ்ரீலங்காவிலிருந்து வந்து கணவருடன் இணைந்து கொண்டார், புதிதாக வந்து சேர்ந்த மனைவியை கணவர் அழைத்துக்கொண்டு ஐநா அகதிகளுக்கான ஆனையத்துக்கு பதிவு செய்ய சென்றபோது அவருக்கு எந்தப் பதிவும் செய்ய அனுமதிக்கப்படவில்லை, கணவரின் அடையாள அட்டை குறிப்பிட்ட காலத்தின் பின் காலாவதியான பின்னர் புதுப்பிக்க வரும்போது மனைவியையும் அழைத்துவந்து பதிவு செய்யும்படி கூறி ஐநா அலுவலக பணியாளர்கள் அந்த தம்பதியரை விரட்டிவிட்டனர், கணவருக்கான அடையாள அட்டை காலாவதியாக ஒரு வருடங்கள் இருந்தன வேறு வழியின்றி எந்தப் பதிவும் இல்லாமல் கணவர் மனைவியை தலைமறைவாக வைத்திருக்கவேண்டியதாயிற்று, அந்த காலகட்டத்தில் மனைவி கருவுற்று குழந்தை பேறுக்காக கோலாலம்பூர் மருத்துவ மனைக்கு சென்றிருக்கிறார் குழந்தையும் கிடைத்திருக்கிறது மறுநாள் மருத்துவ மனையில் அகதிகளை பிடிப்பதற்காக செயற்படும் இமிக்கிரேஷன் பொலீசார் தாயையும் குழந்தையையும் கைது செய்து நாடு கடத்துவதற்காக தடுப்புக்காவைல் வைத்திருக்கின்றனர்.
வயிற்றுப்பசி, வறுமை, வீட்டு வாடகை, வேலையில்லாத்திண்டாட்டம் அனைத்தும் அகதிகளை தன்னகப்படுத்தி வைத்திருக்கிறது இருந்தும் குறைந்த ஊதியத்துக்கு திருட்டுத்தனமாக வேலைசெய்து பிழைப்பு நடத்தவேண்டிய திரிசங்கு நிலையில் அகதிகள் உள்ளதால் அகதிகள் வேலைதேடி பல இடங்களுக்கும் அலைந்து குறைவான ஊதியத்துக்கு ஏதாவது வேலை செய்து வருகின்றனர் ஆனால் அகதிகளை பிடிப்பதற்காக தெருக்களில் தடை அமைத்து சோதனை செய்யும் பொலீசாரிடம் மாட்டிக்கொள்ளும் அகதிகள் இருக்கும் பணத்தை பொலிசாருக்கு கொடுத்து வெறுங்கையுடன் மீண்டுவரவேண்டிய சூழலை ஐநா அகதிகளுக்கான ஆணையம் உண்டாக்கி வைத்திருக்கிறது.
அவை மட்டுமல்லாமல் மலேசியாவின் இமிக்கிரேஷன் பிரிவு பொலீசார் மலேசிய மருத்துவமனை வளாகங்களில் மறைவான ஓரிடத்தில் ஒரு அலுவலகத்தை திறந்து வைத்திருக்கின்றனர் நோய் வாய்ப்பட்டு மருத்துவ மனைக்கு செல்லும் அகதி நோயாளர்கள் மருந்து எடுப்பதற்காக பதிவு செய்யப்படும் தகவல்களை ஆஸ்ப்பத்திரி நிர்வாகம் உடனடியாக நோயாளிக்கு தெரியாமல் இமிக்கிரேஷன் பொலிசாருக்கு நகர்த்தப்பட்டு உடனடியாக நோயாளி பொலீசாரால் கைது செய்யப்படுகின்றனர். இதனால் சமீப காலமாக அகதிகள் ஆஸ்ப்பத்திரிப்பக்கம் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இப்பேர்ப்பட்ட மனித உரிமை மீறல்களை எப்படி ஐநா அகதிகளுக்கான ஆணைப் பிரிவு ஏற்றுக்கொண்டு வேலை சேய்கிறது என்பது வியப்பாக இருந்தாலும் நடைமுறை அப்படித்தான் இருந்து வருகிறது.
இறுதியாக மலேசிய பொலீஸ் தலைமை பொறுப்பாளர் பிரகடனப்படுத்தியிருக்கும் அறிவித்தலின்படி ஈழத்தமிழர்கள் அனைவரையும் சுற்றிவளைப்பின்மூலம் பொலீசார் சோதனை செய்யவிருப்பதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
சமீபத்தில் ஜெர்மனியிலுள்ள மலேசிய தூதரகத்து முன்றலிலும், பிரான்ஸிலுள்ள மலேசிய தூதரகத்து முன்றலிலும் ஈழ தமிழ் மக்கள் ஒரு அடையாள ஆர்ப்பட்டத்தை நடத்தி மலேசியாவில் வசிக்கும் அகதிகளின் கைதுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். மலேசிய தூதரகங்கள் முன் போராட்டம் நடத்துவதை விடுத்து வெளி நாடுகளிலுள்ள ஐநா அலுவலகங்களின் முன்னே போராட்டம் நடத்துவதே சரியான தீர்வாக அமையும்.
ஏனெனில் இலங்கையிலுள்ள தமிழர்கள் மலேசியாவுக்கு வேண்டி விரும்பி அகதியாக வரவில்லை, ஐநா அகதிகளுக்கான ஆணையம் அகதிகளுக்கு ஆதரவு அளிப்பதாக வெளிவந்த செய்திகளின் அடிப்படையில்த்தான் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் மலேசியாவை நோக்கி படையெடுத்து வந்திருந்தனர், ஐநா அகதிகளுக்கான ஆணையம் கோலாலம்பூரில் குளிர்சாதன பிரமாண்டத்துடன் அகதிகளுக்கான கடையை திறந்திருக்காவிட்டால் அகதிகள் வேறு பாதுகாப்பான நாடுகளை நோக்கி சென்றிருக்கக்கூடும்.
ஶ்ரீலங்கா இராணுவ அரசுக்கு அகதிகளை பிடித்துக் காட்டிக்கொடுக்கும் மூன்றாம்தர ஒற்றர் வேலையை மலேசிய காவற்துறையும் ஐநா அகதிகளுக்கான ஆணையத்தின் பிரிவும் இணைந்து செய்து செயற்படுத்துவதாகவே சந்தேகங்கள் ஈழத்தமிழ் அகதிகள் மத்தியில் வேதனையுடன் எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கான விடையை காண்பதற்கு இந்த செய்திமூலம் ஐநா அகதிகளுக்கான ஆணையத்தின் ஜெனீவாவிலுள்ள தலைமை செயலகம் நிச்சியம் ஏதாவது ஒரு மாற்றீட்டு முறையை அறிமுகப்படுத்தும் என்று அகதிகள் சார்பாக பணிவுடன் வேண்டுகின்றோம்.
ஈழதேசம் செய்திகளுக்காக
மலேசியாவிலிருந்து,
ஆர் எம் நாராயணன்.
Sharing
No comments:
Post a Comment