Friday, December 19, 2014

ஈழம் நோக்கிய போராட்டத்தை அடுத்த படிக்கு கொண்டுசெல்ல தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிப்பதே சிறந்தது!!


ஜன 08 2015, வரவிருக்கும் ஶ்ரீலங்காவுக்கான ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ வெற்றிபெறுவார் என்றும், இல்லை மாறாகராஜபக்‌ஷவின் அதே கருத்தை கொள்கையாக கொண்ட அதி தீவிரவாத சிங்கள தரப்பான சந்திரிகா, ரணில் கூட்டு குழுவினரால் திட்டமிட்டு களமிறக்கப்பட்டிருக்கும் மைத்திரிபால ஶ்ரீசேனதான் வெற்றி பெறுவார் என்றும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உள் வெளி மட்டங்களிலிருந்து வெளிவருகின்றன,
இன்னும் பலர் ஜனாதிபதிக்கான போட்டியல் நின்றாலும் மஹிந்த, மைத்திரி, இருவரில் ஒருவர்தான் வெற்றி பெறுவார் என்பதும் இந்த வெற்றி தோல்வியால் தமிழர்களின் வாழ்வில் பெரிய திருப்பம் எதுவும் நடந்துவிடப்போவதில்லை என்பதும் தேர்தலுக்கு முன்னும், தேர்தல் முடிந்தபின்னும் புரிந்ததும் புரியக்கூடியதுமான ஒன்றுதான்.
இந்த மைத்திரிபால சிறிசேன 2015 ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்கள் செய்யும்வரை மஹிந்த ராஜபக்‌ஷவின் அரச சபையில் ஆஸ்தான ஆலோசகராக, மந்திரியாக பத்து வருடங்கள் பணியாற்றியவர் என்பது இங்கு சிலரது ஞாபகத்துக்காக சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. அவை போக மைத்திரி குழுமத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையில் ஒற்றை ஆட்சியின்கீழ் அதிகார பரவலாக்கம் செய்யப்படும் என்றும். எக்காரணம் கொண்டும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும், தமிழர்களுக்கான அரசியல் பொறுப்புக் கூறலுக்கு பொறுப்பேற்கபோவதில்லை என்றும் மஹிந்தவின் அதே கொள்கை முழக்கத்துடன் மைத்திரிபால சிறிசேன களம் இறக்கப்படிருக்கிறார்.
ஆக ஆள் மாற்றம் ஒன்றுக்கான தேர்தல் ஒன்றுக்கு இலங்கை தயாராக இருக்கிறது என்பது தவிர வேறு எதுவும் இல்லை என்பதே நிதர்சனமான நிலவரம்.
குறிப்பிட்ட இருவரில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல்/ மற்றும் அன்றாட வாழ்வியலில் ஏதாவது மாற்றம் நிகழுமா என்றால் இல்லை என்பதுதான் யதார்த்தமாக இருந்தாலும், தமிழர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக அரசியல் களத்தில் இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் அந்த யதார்த்த உண்மையை இதுவரை துணிச்சலாக வெளிப்படையாக மக்கள் மன்றத்தில் சொல்லமுடியவில்லை.
கடந்த 2010,ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின்போதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது அரசியலை மிக நேர்த்தியாக நகர்த்தி ராஜபக்‌ஷவின் ஆட்சியில் நடைபெற்ற ஈழ இனப்படுகொலையின் செயற்பாட்டாளரான ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு எந்தவித குற்ற உணர்வுமில்லாமல் தங்கள் ஆதரவை மனமுவந்து நல்லாசியுடன் நல்கியிருந்தனர். ஏன் அப்படி ஒரு நிலையை கூட்டமைப்பினர் எடுத்தனர் என்பது தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தவிர மற்ற எவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.
ரணிலால் சுட்டிக்காட்டப்பட்ட மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதுதான் தமிழர்களின் நலனில் ஆரம்ப காலந்தொட்டு அக்கறை கொண்டுள்ள மேற்குலக நாடுகளின் இன்றைய விருப்பமாக இருந்துவருகிறது, மேற்குலக நாடுகளின் அக்கறை ஒருபக்கம் இருந்தாலும் அவர்களின் வெளியுறவு கொள்கை கோட்பாடுகளுக்கு இலங்கையில் தாம் விரும்பியவாறு ஆட்சி மாற்றம் ஒன்று நடந்தாகவேண்டிய கட்டாயமும் இருக்கிறது.
அயல்நாடான இந்தியாவும் இலங்கையில் ஒரு அரசியல் மாற்றம் நிகழவேண்டும் என்று விரும்புவதாகவே சில நடவடிக்கைகள் வெளிப்பட்டாலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ராஜபக்‌ஷவே வெற்றிபெற்று ஜனாதிபதியாக வரவேண்டும் என்று வெளிப்படையாக கூறி தனது ஆதரவை முன்கூட்டியே தெரிவித்திருக்கிறார்.. அவரது கருத்தில்க்கூட தமிழர் நலன் ஒரு புள்ளியளவுகூட முன்னிறுத்தப்படாமல் பூகோள அரசியல் மற்றும் பாதுகாப்பு மற்றும் அவர்களது பொருளாதாரம் சந்தை வர்த்தகம் ஆகிய நலன்களின் அடிப்படையிலேயே இந்தியா காய் நகர்த்துவதாக புரியக்கூடியதாக உள்ளது.
சீனா பாகிஸ்தான், ரஷ்யா, போன்ற நாடுகள் மஹிந்த ராஜபக்‌ஷ் ஜனாதிபதியாக தொடரவேண்டும் என்று நேரடியாக விரும்புகின்றன. சர்வதேச பூகோள ஆதிக்க அரசியல் சார்ந்து அவர்கள் கவலைதவிர வேறெதுவும் இருக்க முடியாது.
இலங்கயில் வாழும் தமிழர்கள், குறிப்பாக ஈழத்தமிழர்கள் நடந்து முடிந்த யுத்தத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி ஆகியவற்றை நேரடியாக அனுபவித்ததன் காரணமாக, ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக வரவேண்டாம் என்று வெறுக்கக்கூடும், யதார்த்தமும் அதைத்தான் முன்னெடுக்கும் என்பதும் மறுப்பதற்கில்லை. ஆனால் இலங்கை தமிழர்களின் அரசியல் முன்னணியாக செயற்படும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு எந்த வாத பிரதிவாதங்களையும் வெளிப்படுத்தி நிலைப்பாட்டை தெரியப்படுத்தாமல் மறைமுகமாக மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதுபோலவே சில அசைவுகள் வெளிவருகின்றன.
சான்றாக சமீபத்தில் வடக்கு மாகாணசபை சபை அமர்வின்போது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் காலம் தாழ்த்தியாவது அடித்த குத்துக்கரணத்தை சான்றாக இதற்கு பொருத்திப்பார்க்கக்கூடியதாக உள்ளது.
வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விசேட விவாதம் கைதடியிலுள்ள வடமாகாண சபையில் நேற்றைய முந்தினம் காலை 9 மணிக்கு ஆரம்பமானது. முதலமைச்சர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு விவாதங்கள் இடம்பெற்றிருந்தது
அங்கு உரையாற்றிய முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் கூறும்போது கையறு நிலையில் தாங்களும் மாகாணசபையும் இருப்பதாகவும் ஒன்றுமேயற்ற மாகாணசபை இது என இப்போது புரிந்து கொண்டிருப்பதாகவும் முதல்முறையாக மாகாணசபை அமர்வில் தனது கவலையை தெரிவித்திருந்தார். அவரது உரையிலிருந்து மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியை விமர்சித்து ரணில் சந்திரிகாவின் தெரிவான மைத்திரியை ஆதரிப்பதன் தொடராக அவரது கருத்தை எடுத்துக்கொள்ள முடிகின்றது.
அவரை தொடர்ந்து உரையாற்றிய கூட்டமைப்பு உறுப்பினர்களான சுகிர்தன், சிராய்வா, கஜதீபன் ,ஜெகநாதன் என பலரும் நடைமுறையின் உண்மையினை முதலமைச்சர் உணர்ந்து கொண்டதற்காக நன்றியை முதலமைச்சரிற்கு தெரிவித்துக்கொண்டனர். அந்த நன்றியிலிருந்து குறிப்பிட்ட உறுப்பினர்களும் நாட்டில் ஒரு சர்வாதிகார ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது எனவே ஆட்சி மாற்றம் நிகழவேண்டும் என்றும் அதற்கு வழிதேட அவர்கள் தயாராகி இருப்பது வெள்ளிடை மலையாக கருத்தியல்கள் மூலம் சபையில் முன் வைக்கப்பட்டிருக்கிறது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிற்கு வெறும் 6 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கி விட்டு எந்தவொரு மாகாணத்திலும் இல்லாதவாறு வடக்கில் ஆளுநருக்கு 130,மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதை கண்டித்து அதனை தான் ஆட்சேபிப்பதாகவும் முதலமைச்சர் திரு விக்கி அவர்கள் கருத்து தெரிவித்தார்.
மாகாணசபை அமர்வுகளின்போது முதலமைச்சர் மூலம் வெளிப்படும் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி கொள்கை ரீதியான தீர்மான கருத்துக்கள் பத்திரிகை செய்தியாக அன்றாடம் வெளிவருவதால் அச் செய்தி மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களை ஜனாதிபதி தேர்தலில் ஒரு நிலையெடுத்து திருப்பத்தை கொண்டுவரும் என்பதை உணர்ந்து சம்பந்தன் தரப்பு விக்கிமூலம் தமது விருப்ப தெரிவான மைத்திரியின் சார்பாக பழைய அரசாங்கத்தை விமர்சனம் செய்யப்பட்டிருக்கிறது
இதனிடையே இன்னொரு கருத்தை இங்கு சுட்டிக்காட்டவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஈழ தமிழர்களின் செல்வாக்குள்ள மற்றொரு அரசியற் கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தமது நிலைப்பாட்டை எந்தவித தயக்கமும் இல்லாமல் நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமது  நியாயப்பாடுகளையும் தமது கருத்தையும் மிக தெளிவாக முன் வைத்திருந்தார்.
த தே ம முன்னணி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னணி வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்‌ஷவையோ, மாறாக நேற்றுவரை ராஜபக்‌ஷவுடன் கூட்டாட்சியில் இருந்து சந்தற்பவாதமாக தமிழர்களை ஏமாற்றுவதற்காக அல்லது சிங்கள ஏகாதிபத்யத்தை தொடர்ந்து கட்டி காப்பதற்காக எதிரணியாக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன வையோ ஆதரிக்கப்போவதில்லை என்றும் அதற்கான மூலகாரணங்களை ஈழத்தமிழர்கள் புரிந்துகொண்டு செயற்படவேண்டும் என்று வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்திருக்கிறார்.
அதேபோல வடக்கு மாகாணசபை உறுப்பினரான சிவாஜிலிங்கம் அவர்களும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் நிலைப்பாடு எதுவாக இருக்க வேண்டும் என்பதை செவ்வியாக வழங்கி தனது நிலைப்பாட்டை மிக தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார்.
எனவே இனி ஜனாதிபதி தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்ற சிக்கல் பெரிதாக இல்லாவிட்டாலும் இனப்படுகொலையாளியான ராஜபக்‌ஷவை தோற்கடிக்கவேண்டும் என்று எவரும் மூர்க்கமாக நம்பி தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாசுக்கான நகர்வையும் கருத்தில்க்கொண்டு மைத்திரிக்கு வாக்களிக்கவே யதார்த்தமாக மனது அலைபாயும் என்பதில் யாரும் ஐயப்படமுடியாது.
ராஜபக்‌ஷவை தோற்கடிப்பது என்பது ஆத்ம திருப்தியாக இருக்கும் என்பதும், பழிவாங்கும் உணர்வாகக்கூட ஒவ்வொருவரினது ஆழ்மனதும் உற்சாகம் அடையும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
ஆனால் இங்கு குறிப்பிடும் விடயம் பலருக்கு அதிர்ச்சியாகவும் கோபமூட்டுவதாகவும் கூட இருக்கலாம்.
ஒட்டுமொத்தமாக தமிழர்களும் இனப்படுகொலையாளி ராஜபக்‌ஷவுக்கு வாக்களிக்காமல் விடுவது, அதேபோல ராஜபக்‌ஷவின் அரச சபையில் ஒன்றாக இருந்து இனப்படுகொலையை ஆதரித்து மந்திரிப்பதவி வகித்த மைத்திரிக்கும் வாக்களிக்காமல் விடுவது ஒருவகை புத்திசாலித்தனமானதாக கணிக்கப்படுவதுபோல மைத்திரியை வெற்றிபெற வைத்து ஜனாதிபதியாக்கிவிட்டு “ராஜபக்‌ஷவை தோற்கடிப்பது என்பது மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும்”.
மீண்டும் ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக வருவதுதான் தமிழினத்தின் அரசியல் தீர்வுக்கு சொற்பமேனும் உதவும், ராஜபக்‌ஷவை தண்டிப்பதற்கும் ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதியாக வருவதுதான் உவப்பான ஒன்று.
அல்லாமல் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானால், சர்வதேச சலசலப்புக்கு அஞ்சி உடனடி நிவாரணங்கள் சில கிடைக்கப்பெறலாம், புற்றுநோயை அறவே அகற்றும் மருந்து கிடைக்காமல் நோயின் மூர்க்கத்தை குறைத்து பக்க விளைவை உண்டுபண்ணி உயிருக்கு ஆபத்தான நிலையை புதிய தெரிவு நிச்சியம் கொண்டு வரும்.
நூறு மைல் பயணம் போகவேண்டிய தமிழினம் மிகப்பெரிய போராட்டத்தை சந்தித்து இனப்படுகொலையை பரிசாக பெற்றிருந்தாலும் கிட்டத்தட்ட 50,60 மைல் தூரத்தை இன்று தமிழினம் கடந்துவிட்டது, புதிய அரசாங்கம் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால வரும் பட்ஷத்தில் தமிழருக்கான அரசியல் தீர்வு முதலாவது மைல் கல்லிலிருந்து தொடங்கப்பட்டு காலதாமதம் செய்து ஏமாற்றப்படும் அபாயம் எவராலும் தடுக்க முடியாது.
அதுதான் நாம் இதுவரை கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து கிடைத்திருக்கும் அனுபவம் என்பதை எவரும் மறந்துவிட முடியாது.
இன்றைக்கு ராஜபக்‌ஷ என்ற கொடுங்கோலன் சர்வதேசத்துக்கு பதில் சொல்லவேண்டிய பொறியில் நின்றுகொண்டிருக்கின்றான், பக்கத்து நாடான இந்தியா என்னதான் நட்புநாடு என்று பாராட்டினாலும் உள்ளூர பகைமை உணர்வுடனேயே ராஜதந்திர செயற்பாட்டு பரிவர்த்தனைகள் ஓடும் புளியம்பழமும்போல நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, அங்கு விரிசலுக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றனவே தவிர ஒட்டியுறவாடும் கட்டங்கள் பெருகப்போவதில்லை.
சர்வதேசநாடுகள் மற்றும் ஐநா அவை ஆகியன ராஜபக்‌ஷவை பொறிக்குள் கொண்டுவருவதற்கு ராஜபக்‌ஷ ஆட்சியாளனாக இருக்கவேண்டிய கட்டாயம் தேவைப்படுகிறது ராஜபக்‌ஷவால் தூக்கிய காவடி ராஜபக்‌ஷவால் இறக்கி வைக்கப்படவேண்டும்.
ஒருவேளை ஆட்சி மாற்றத்தின் பின் இனப்படுகொலை குற்றத்துக்காக ராஜபக்‌ஷ என்ற தனிமனிதனை சர்வதேச நீதிமன்றம் தூக்கில் போட்டாலும் அரசியற் தீர்வை பதவி இல்லாத ராஜபக்‌ஷவை வைத்து சர்வதேசம் தீர்மானிக்க முடியாது.
புதிய ஆட்சியாளர்கள், புதிய கொள்கை, புதிய பேச்சுவார்த்தை, புதிய களம், புதிய தலைமை, என்று எல்லாம் புதிதாக மாறி இலக்கம் ஒன்றிலிருந்து எண்ணப்பட்டு மீண்டும் அரசியற் பேச்சுவார்த்தை தொடங்கப்படும்.
விடுதலைப்புலிகள் என்ற மாபெரும் அமைப்பும் மிகப்பெரிய ஆயுத பலமும் ஆயுட்காலத்தில் காணமுடியாத தலைவனின் வழிநடத்தலும் இருந்தே ஒரு 50,60 மைல் தூரத்தைதான் நம்மால் கடக்க முடிந்திருக்கிறது.
புதிய ஆட்சி, சமாதானத்துக்கான போர் நடத்திய சந்திரிகா, சதி செய்து காட்டிக்கொடுத்த ரணில், ஒன்றும் தெரியாத சம்பந்தன், வாசுதேவ நாணயக்காரவின் சம்பந்தி விக்கி, மக்களால் தெரிவு செய்யப்படாத சுமந்திரன் இவர்கள் தலைமையில் சந்திரீகா ரணிலுடன் பேச்சுவார்த்தை, அதற்கான இடம் பொருள் ஏவல் இவை எதை நிறுவும் என்பதை இழப்புக்களை கண்ட பொதுசனங்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.
தேர்தல் முடிந்ததும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை, சம்பந்தனும் ரணிலும் இணைந்தால் என்ன நடக்கும் என்பதை நான் இங்கு சொல்லித்தான் தெரியவேண்டும் என்று கட்டாயமும் இல்லை.
எனவே மைத்திரிக்கோ மகிந்தவிற்கோ வாக்களிக்காமல் அன்று தலைவர் எடுத்த தீர்க்கதரிசனமான அதே முடிவை தமிழ் மக்கள் எடுக்கவேண்டும் அது எமக்கு சாதகமாக மாற்றப்பட்டு  தொடர்ந்த போராட்டங்கள் அப்படியே தொடரப்படவேண்டும் அரசியற் தீர்வு சர்வதேச விசாரணை என்பதை இன்னும் இறுக்கி தீர்வை நோக்கி பயணப்படுவதே சர்வதேசத்துக்கும் தமிழினத்துக்கும் இலகுவாக இருக்கும். புதியவர் வந்தால் ஆள் மாற்றம் ஒன்றைத் தவிர வேறு எதுவும் சாத்தியமில்லை.
கனகதரன்
ஈழதேசம்

No comments: