http://eeladhesam.com/images/breaking/pooraadam.jpg2009 வரை ஒரே இலக்கில் புள்ளி விலகாமல் தமிழினத்தின் செய்திகளை மிக ஒற்றுமையாக வெளியிட்ட தமிழ் ஊடகங்கள், இணையங்கள், இன்று கட்டுப்பாடற்று, காட்டாறாக கரை புரண்டு காழ்ப்புணர்வு செய்திகளை கக்குகின்றன.

எதை எடுப்பது எதை நிராகரிப்பது என்பது தெரியாமல் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்குள் ஒருகருத்தை உண்டுபண்ணி தடுமாறுகிறான், இது எங்குபோய் முடியுமோ என்ற ஆதங்கத்தில் பலர் செய்வதறியாது திகைத்துப்போயுள்ளனர்.

எந்த தமிழ் இணயத்தளத்தை திறந்தாலும் மனவருத்தத்தோடு வெளியேறவேண்டிய நிலை, எங்குபார்த்தாலும் போட்டி, நானோ நீயோ என்ற நாய்களை விடக்கேவலமான கடிபாடு, ஒவ்வொருவரும் போராளியென்றும் பொறுப்பாளரென்றும் கட்டுரைகள் எழுதுகின்றனர். ஆனால் அவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில்தான் பொறுப்பாளராகவும் போராளியாகவும் இருந்ததாகத்தான் எழுதுகின்றனர் அப்போ ஏனிந்த முரண்பாடென்று தெரியவில்லை, ஒன்றரை வருட இடைவெளியில் இப்படியென்றால் ஒரு ஐந்து வருடங்கள் சென்றால் இந்திய தமிழ்நாட்டின் அரசியலையும் வென்றுவிடும் அளவுக்கு குத்து வெட்டில் வந்து முடியுமோ என்ற அச்சம் தோன்றுகிறது.

ஒருவர் கூறுகிறார் முள்ளிவாய்க்கால் இறுதிப்பொழுதில் வன்னியில் இருந்தவர் எப்படி விமானநிலையம் கடந்து வந்துசேர்ந்தார். அப்படியென்றால் இராணுவ உதவியுடன்தான் வெளியேறியிருக்கவேண்டும். இவர் உளவுபார்க்க வந்திருக்கிறார் என்கிறார், குற்றஞ்சாட்டுபவர் எப்படி வந்துசேர்ந்தார் என்பதை நோக்கினால் அவரும் உளவாளி என்றுதானே இன்னொருவர் சந்தேகப்படுவார். தீர விசாரிக்காமல் ஒருவரை குற்றஞ்சொல்லுவதை முதலில் நிறுத்தவேண்டும். உண்மையில் உளவாளியானால் நிச்சியம் கவனமெடுக்க வேண்டுமென்பது மறுப்பதற்கில்லை.

ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட கோபதாபங்களை பொதுவில் இழுத்துவிடுவது தமிழ்ச்சமூகத்தையே குப்பைக்கும்பியாக்கிவிடும். ஒருவரை சந்தேகப்பட்டால் அதில் உறுதியான நியாயம் இருக்கவேண்டும். அல்லது இரகசியமாக அமைப்புரீதியாக புலனாய்வு செய்து உறுதிப்படுத்தியபின் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் வெளியிடலாம். அனுமானத்தையும் காழ்ப்புணர்வையும் வைத்துக்கொண்டு வசைபாடுவது "வசைபாடுபவரையே சந்தேகிக்க வைக்கும்", விடுதலைப்புலிகள் இயக்கத்தில் போராளியாக இருந்த ஒருவருக்கு இதுபற்றி சொல்லிக்கொடுக்க வேண்டிய தேவை இருக்காதென்றே நம்பலாம்.

தமிழருக்கு எதிராக செயற்பட்டு தமிழினத்தை அழித்து சிதைத்த சிங்களவனைப்பற்றியோ, சிங்களவனை ஊக்குவித்து வழிநடத்திய இந்தியனைப்பற்றியோ, ஒன்றோடு ஒன்றாக இருந்து அழிவின் கொடூரங்களுக்கு பக்கச்சாவியாக செயற்பட்டு தமிழரின் சவக்காட்டுக்கு சுருதி பாடிய தமிழ்த்துரோகிகளை பற்றியோ, கவலையில்லாமல் எல்லாம் மறந்து ஒரே வீட்டுக்குள் அடிபிடி, காட்டிக்கொடுப்புக்கள். வெட்கப்பட வைக்கிறது. வெட்கம் ஒருபுறம் தள்ளி வைத்தாலும் தமிழரின் பலம் சிதைக்கப்படுகிறது என்பதை பொது நோக்கோடு உணரவேண்டும்.

பிரித்தானியாவில் ராஜபக்க்ஷவுக்கு லாடம் கட்டி ஒக்ஸ்போட்டில் கால் வைக்காமல் திருப்பியனுப்பிய புலம்பெயர் தமிழர்களின் ஒற்றுமையையும் உறுதியையும் உலகத்தமிழினமே உள்ளத்தில் பெரும் உவகையோடு கொண்டாடியது, அந்தநிகழ்வு இந்திய அரசையும் தமிழ்நாடு கருணா அரசையும் கடகடக்க வைத்திருந்தது அதை ஏன் வீர ஈழத்தமிழினம் உணரமறுக்கிறது.

நாட்டில் ஈழத்தமிழர்களுக்கான அரசியல் கட்சிகள் தம்பாட்டுக்கு ஏதோ ஒரு ராகத்தில் போய்க்கொண்டிருக்கின்றன. துரோககூட்டங்களான விரோதிகளுடன் அரசியல் அரங்கம் அமைத்து அரசாங்கத்துடன் இணைந்து உரிமையை பெறப்போவதாக நகைப்புக்கிடமாக அறிக்கை விடுகின்றன. அரசாங்கத்துடன் இணைந்து உரிமையை வென்றெடுக்கப்போவதாக அவர்கள் கூறும் உலக அதிசயத்தை அவர்களாவேயே புரிந்துகொள்ள முடியுமோ தெரியவில்லை.

தமிழனுக்கு ஒன்றுமில்லை என்பதுதான் சிங்களவனின் 100 வருடங்களுக்கு மேலான அரசியல் நிலைப்பாடு. அந்த நிலையை எதிர்த்து உருவானதுதான் ஆயுதப்போராட்டம். இப்போ அரசாங்கத்துடன் இணைந்து தமிழரின் உரிமையை வென்றெடுக்கப்போகிறோம் என்கின்றனர் .சில அரசியல் ஆசான்கள் இன்னும் ஒருபடி மேலேபோய் துரோகி கருணா மூலம் தமிழர்களுக்கான உரிமைகளை தட்டிக்கேட்டு பெறமுடியும் என்று தன்னிலை மறந்து கூறியிருக்கின்றனர். இதைவிட ஒரு நகைச்சுவை தமிழ்ச்சினிமாவிலும் இதுவரை எவரும் கண்டுகளித்திருக்கு முடியாது.

தமிழர்களுக்கான நியாயம் இருப்பதை உலகம் உணர்ந்துகொள்ளும் இந்தச்சமயத்தில் எமது ஒற்றுமையை குலைக்கலாமா? உலகமே வியக்கக்கூடிய அளவு வீரத்தையும் விவேகத்தையும் கொண்ட விடுதலைப்புலிகளின் வாரிசுகளான நாம் எமது உள்க்கட்டமைப்பை உடைத்து பலயீனமானவர்களாக எதை சாதித்துவிடப்போகிறோம்? விடுதலைப்புலிகளின் உட்கட்டமைப்பும் வெளிக்கசிவு ஏற்படாத அறுதியான உறுதியும் எம்மாலேயே கேள்விக்குள்ளாகலாமா.

செயல்ப்பாடுதான் எதையும் நிர்ணயிக்கும் தராசாக இருந்துவருவதாக பலசந்தர்ப்பங்கள் தமிழினத்திற்கு இனங்காட்டியிருக்கின்றன, விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளே உலகுக்கு தமிழரின் இன்னலை எடுத்துச்சென்றது. இன்றய எமது செயற்பாடுகள் நிச்சியம் எமக்கான இடத்தை தீர்மானிக்கும்.

எல்லாவற்றிர்கும் மேலாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுதியும், தலைவரின் சுயநலமற்ற தீர்க்கதரிசனமான தொலைநோக்கும்தான் இன்று தமிழர்களை ஒரு ஒழுங்குக்குட்பட்டு நடக்கக்கூடியவர்கள் என உலகநாடுகளுக்கு அறியவைத்திருக்கிறது.

சில கட்டுப்பாடுகளுக்காகவும் சபிரதாயத்திற்காகவும் விடுதலைப்புலிகளின் போராட்டத்தை உலகம் எதிர்த்தாலும், தனிப்பட்ட ரீதியில் தலைவர் பிரபாகரன் அவர்களை உலக அரசியல்த்தலைவர்கள் மிகுந்த மரியாதையோடுதான் நோக்குகின்றனர், அவரது நடத்தையை அவரை எதிர்ப்பவர்கள் கூட விமர்சிப்பதில்லை என்பதை தமிழினம் பெருமையுடன் பார்க்கவேண்டும். இன்று தலைவர் வெளிவரமுடியாத குறுகிய காலத்தில் கண்மூடி ஒருவினாடி தலைவரை நினைத்து அடுத்த அடியை எடுத்து வைக்க கட்டுப்பாட்டுடன் முயற்சிப்போம்,, ஒற்றுமையே எமது இனத்தின் விடுதலையை தீர்மானிக்கும்,.

ஈழதேசம் இணையத்திற்காக ஆரணி.