Wednesday, December 15, 2010

கவிதை: செத்த தாய் முலை கொடுத்தாள்


விண்முட்ட விஞ்ஞானம்
வினைத்திறனாய் ஆராய்ச்சி
கண் மாற்ற கால் மாற்ற
கலர் மாற்ற- தலை
மயிர்மாற்ற
கணக்கில்லா பெரு சிகிச்சை.

புல்லுக்கு வயதென்ன
பூண்டுக்கும் உயிர் உண்டோ
நத்தைக்கும் எறும்புக்கும்
சித்தங்கலங்காமல்
மெத்தப்படித்த பலர்
சுற்றி நின்று நடைப்பயிற்சி,
நில்லாமல் நெடு வழியும்
நீண்ட நேய மனம்.
நல்லோர் புதிய யுகம்
நாம் காண்போம் என்று குரல்.

நல்லாய்த்தான் இருந்தாலும்
நாங்கள் இதில் சேர்ப்பில்லை,

ஓசோனில் ஓட்டை
உலகெங்கும் மாநாடு
தென் துருவ பனி கரைய
திகைப்புடனே ஆய்ந்தறிவு
பல நூறு ஆண்டு -முன்
செத்த படு குழிக்கு
மெத்த நூதனமாய்
அகழ்வாய்வு ஒரு பக்கம்.

நல்லாய்த்தான் இருந்தாலும்
நாங்கள் இதில் சேர்ப்பில்லை,

பூவுக்கும் வேருக்கும்
நோகாமல் பிடுங்கி எழ
நூறுக்கும் மேலான
நிபுணர் குழு கூட்டம்.
காடழிக்கக்கூடாது.
கடலழியக்கூடாது.
காட்டு விலங்குகளும்
கவலை கொள்ளக்கூடாது.,

நல்லாய்த்தான் இருந்தாலும்
நாங்கள் இதில் சேர்ப்பில்லை,

போர் செய்யக்கூடாது
புகை கூட ஆகாது
மாடிக்குடியிருப்பில்
அமைதி கெடக்கூடாது.
கூவி குழந்தைகளை
குலைய வைக்க கூடாது
தாயும் குழந்தைகழும்
சங்கடம் கொள்ளாகாது,
ஐநா அறிக்கையது
அரசுகளின் கொள்கையது

நல்லாய்த்தான் இருந்தாலும்
நாங்கள் அதில் சேர்ப்பில்லை.

கொத்துக்குண்டுகளும்
கோர ரசாயனமும்
நித்தம் மனுவுடலை
நின்றழிக்கும் நஞ்சுகளும்
சித்தம் கலங்கிவிடும்
செயல் கொண்ட
அணு குண்டும்
எத்திக்கும் தடை செய்வோம்
எதிற்பவரை அழித்திடுவோம்,
வாய் பேச்சும் வரைவுகளும்

நல்லாய்த்தான் இருந்தாலும்
நாங்கள் இதில் சேர்ப்பில்லை,

வெட்டி வீழ்த்திய என்
விடலை மகன் தலை மீது-தேர்
சில் ஏற்றி சிதைத்த
சண்டாள சங்காரம்,

குட்டி பெற இருந்த
குஞ்சம்மா குடல் கிழிந்து
கக்கி கரு நசிந்து
ரத்தச்சகதியிலே தெருவோரம்
விட்டு விடை பெற்ற பெருந்துயரம்,

செத்த தாய் முலையில்
சிதறிய தலையுடனே -பசி
மெத்த எடுத்த பிஞ்சு
பால் குடித்த பரிதாபம்,

செத்து பலர் நாட்கள்
பதுங்கி இரு குழியில்
ரத்தம் மலம் சகதி -மொத்தம்
இருந்த நீர் குடித்து
பசி தீர்த்த அநியாயம்,

கொத்துக்கொத்தாக
குஞ்சு தாய் தகப்பன்
மொத்த பரம்பரையும்
செத்து கருகிய துயர வரலாறு,

எல்லாம் எம் தலையில்
எவரும் சேர்ப்பில்லை,

கவிதை, 2009 மே 19, ஒரு வருட வக்கிரத்தின் குமுறல்,
கனகாம்பிகை கதிர்காமன்







நன்றி நெருடல்,

No comments: