Monday, December 6, 2010

ஒலியாகி.. ஒளியாகி.. இசையாகி.. அவள் காற்றாகினாள்!

துக்கங்கள் பெருகும் வாழ்க்கையும் அச்சம் தீராத நிலையுந்தான் எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ!

அடுத்தடுத்துத் துயரம். தொடர்ந்தும் துக்கந்தரும் சேதிகள்…

பழகியவர்கள்…. அன்பாக இருந்தவர்கள்….. தமக்கப்பாலும் அன்பு செலுத்தத் தெரிந்தவர்கள்…. பிறரில் கரிசனை கொண்டவர்கள்….

எல்லோரும் சிலுவையிலறையப்படுவதைக் காண நேரும் விதி…

பிணக்காட்சிகளை மறப்பதற்கு முயன்றாலும் பிணமாக்கப்படும் காட்சிகள் மீள மீள வருகின்றன.

பிணமாக்கப்படும் காலத்திலிருந்து மீண்டாலும் பிணமாக்கப்பட்ட காலம் சிறைப்பிடிக்கிறது.

நினைவுகளைக் கலைக்க முடியவில்லை.

வலை வலையாக அவை என்னைச் சூழ்கின்றன.

மூச்சடைக்க வைக்கிறது இருள்.

கொல்வது கொடுமை. கொலைப்படுவதும் கொடுமை. கொல்லாமற் சிதைக்கப்படுவது அதினிலும் கொடுமை. சிதைத்துக் கொல்லப்படுவது அதினிலும் அதனிலும் கொடுமை. சிதைக்கப்பட்டவரையும் கொல்லப்பட்டவரையும் வைத்துச் செய்யும் சடங்குகள் அதனிலும் கொடுமை.

அழுது தீராது. இது கண்ணீரில் கரைந்து விடாத துக்கம். உள்ளுக்குள்ளே குமுறிக் குமைந்து…. வெந்து சாகும் வேக்காட்டுத் துக்கம்…

அந்தப் பெண்…. அவளைப் போலப் பல பெண்கள்….

அந்த மனிதர்…. அவரைப் போல பல மனிதர்கள்….

சரணடைவுக்குப் பின்னர் கொல்லப்பட்டனர். சிதைத்துக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டுச் சிதைக்கப்பட்டனர்.

அந்த வெட்டை வெளியில்…

மரணம் மட்டுமே விளைந்து நாடகமாடிய அந்த வெளியில்….

இறுதிப் பொழுதுகள் என்று விதி அமைந்த அந்த வெளியில்….

அவர்கள் கைதிகளாகியிருந்தனர். மண்டியிடவே விரும்பாதவரெல்லாம் முழந்தாளிட்டனர்.

அப்படியொரு விதி எப்படி விளைந்தது?

வெற்றியைப் பற்றியே சிந்தித்தோரின் முன்னே தோல்வி தூக்குக் கயிற்றோடு நின்றது.

அவலக்குரலெழுப்புவதற்கு அந்த நீர்க்கரையில் ஒரு ஆட்காட்டி கூட இல்லை.

எதிரிகள் மட்டும் சூழ்ந்திருந்த அந்த நீர்க்கரையில் சரணடைந்தவர்கள் அனைவரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

போர் முடிந்திருந்தது. அது முடியாத போர். ஆனால்….

முப்பதாண்டுகால நெருப்பு அன்றுதான் அணைந்திருந்தது. அது அணையாத நெருப்பு….

உள்ளுக்குள்ளே அது கொதித்துக் கொண்டிருந்தது. தணலாய்ப் பூத்திருந்தது.

ஆனாலும் முழாசி எரிய முடியாத நிலை.

உள்ளுக்குள்ளே எரிந்து தணலாகும் நிலை.

ஒருவன் எதிர்த்தான். ஒருவன் அழுதான். இன்னொருவன் கதறினான். வேறொருவன் குமுறினான். மற்றொருவன் கொந்தளித்தான்.

எதிராளிகள் அதட்டினர்.

இதைப்போல –

ஒருத்தி எதிர்த்தாள். இன்னொருத்தி அழுது புலம்பினாள். வேறொருத்தி மயங்கிச் சரிந்தாள்.

எதிராளிகள் அடக்கினர்.

காலம் மாறி வேடிக்கை பார்க்கிறது. கடவுளே…!

ஆனாலும் என்ன செய்ய முடியும்?

சரணடைவுக்குப் பின்னே எந்த உணர்ச்சிக்கும் இடமிருப்பதில்லை.

அப்போது அதிகாரம் எதிராளிடம். தீர்மானமும் எதிராளிடமே.

ஆகவே எதுவும் செய்ய முடியாது.

மண்டியிடுவதையும் விடச் சாவது மேல். அல்லது கொல்லப்படுவது மேல் எனக் கருதினர் அவர்கள்.

ஆனாலும் அப்போது எதுவும் செய்ய முடியாது.

அதிகாரம் எதிராளிடமல்லவா!

அது காலம் கடந்த நிலை. அல்லது கையறு நிலை.

எந்த நம்பிக்கையில் இப்படிச் சரணடைந்தோம் என்று எண்ணித் துக்கத்தில் சரிந்தனர்.

கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டுள்ளன. கண்கள் மறைக்கப்பட்டுள்ளன.

முப்பதாண்டுகளின் முன்னே –

தமிழ் நிலமெங்கும் இப்படித்தான் ஒரு நிலை இருந்தது.

கண்டவரெல்லாம் சுடப்பட்டனர். அல்லது பிடித்துச் செல்லப்பட்டனர். அல்லது கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர் கண்கள் மறைக்கப்பட்டன. கால்கள் பிணைக்கப்பட்டன. மலவாசலில் குழாய்கள் இறுக்கப்பட்டன.

சித்திரவதை அப்போது ஒரு இனிய சங்கதி – எதிரிகளுக்கு.

தமிழ்க்குரல் ஓலக்குரலாகவே இருந்தது அப்போது.

அந்த ஓலக்குரலைக் கேட்கப் பொறுக்காதவர் எல்லாம் காடேகினர். கடலேறினர். நெஞ்சிலே தீ கொண்டு நெருப்பாகினர்.

ஒரு யுகப் பிரளயம் நிகழும் என்ற கனவை விதைத்தனர்.

காலம் ஒன்று கனியும் என்ற நம்பிக்கையை விதைத்தனர். அந்த விதை முளைத்துச் செழித்து வருகையிலே….

இப்போது-

இப்படி-

அவர்கள் விரும்பாத நிலையில் அவர்கள் நிறுத்தப்பட்டனர். அவர்கள் ஏறத் தயாரில்லாத கழுமரத்தில் அவர்கள் ஏற்றப்பட்டனர்.

முதற்கணம்வரையில் வீறாப்போடிருந்தோர்…

வெற்றிகள் ஆயிரம் படைத்தோர்….

எதிராளிகளைக் கலங்கடித்தோர்…

வீரத்தால் சாகசங்கள் நிகழ்த்தியோர்…

புயலாக இருந்தோர்…. பூகம்பமாகி நின்றோர் எல்லாம் எதிர்பார்க்காத தருணத்தில் சிறைப்பட்டிருக்கின்றனர்.

அவர்களுடைய நிலத்திலே அவர்களுக்கு நேர்ந்த கதி அது.

அவர்கள் விரும்பாமலே அவர்களோடு மாறி விளையாடிய விதி அது.

ஆமாம், வரலாற்றின் விதி திசை மாறி விளையாடியது.

சிலுவைகளின் முன்னே நிறுத்தப்பட்டனர் அனைவரும்.

அது மரணத்தின் கணம்.

பேரவலம் – பெருமரமாக விரிந்தாடியது.

கண்களும் கைகளும் கட்டப்பட்டு….. கொலைக்கான நாடகத்தின் முன்னே நிறுத்தப்பட்டிருந்தனர் எல்லோரும்.

நடக்கப்போவது கொலை என்று தெரிந்தது. உயிர் மீளும் நம்பிக்கைகள் துளிர்ப்பது சாத்தியமேயில்லை.

சிலர் கல்லாய்ச் சமைந்தனர். சிலர் கடலாய்ப் பெருகினர். சிலர் மெழுகாய் உருகினர். சிலர் தம்மைத் தாமே நொந்து கொண்டனர்.

எதிரியை நம்புவது முட்டாள்தனமானது என்று தெரிந்தது அப்போது.

ஆனாலும் மாற்றுத் திசையுமில்லை – வேற்று வழியுமில்லை என்பதால் அந்த நிலையில் அவர்கள் அவ்வாறு சிறைப்பட்டனர்.

ஆனாலும் அவர்களைச் சிலுவையிலேற்றத் துடித்தனர் எதிரிகள்.

ஆகையால் எந்த மன்றாட்டமும் எதிரிகளின் செவியேறவில்லை.

சிலுவைகளோடு நின்றவர்கள் ஆணியறையத் துடித்தனர்.

காலமெல்லாம் வீரர்களாகவும் வீராங்கனைகளாகவும் இருந்தோர் அப்போது சிலுவையின் முன்னே மண்டியிட வைக்கப்பட்டனர்.

அவர்கள் ஒரு காலம் பேருடையோர். புகழுடையோர். ஆற்றலுடையோர்.

காற்றைப் போல வலியராகவும் வானத்தைப்போல ஒளியுடையோராயும் இருந்தவர்கள்…

இப்போது….

தனித்து விடப்பட்ட இந்த நீர்க்கரையில்…

நிர்க்கதியாகியிருக்கின்றனர். அடுத்து நடக்கவிருப்பது?

கொலைவெறியரின் முன்னே எதையும் தீர்மானிக்க முடியாது.

பழிதீர்க்கும் வன்மம் மட்டும் எதிராளிகளின் குரலில் தெரிகிறது.

வஞ்சம் தீர்க்கும் ஆவேசத்தில் எதிராளிகள்….

சரணடைந்தவர்….. நிராயுதபாணிகள்….

துப்பாக்கியின் முன்னே நிறுத்தப்பட்டனர்;.

சரணடைவுக்குப் பின்னர் கொல்லப்பட்டனர். சிதைத்துக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டுச் சிதைக்கப்பட்டனர்.

அந்த வெட்டை வெளியில்…

மரணம் மட்டுமே விளைந்து நாடகமாடிய அந்த வெளியில்….

இறுதிப்பொழுதுகள் என்று விதி அமைந்த அந்த வெளியில்….

சிலுவை… துப்பாக்கி… கொலைவெறி… மரணம்.

வெற்றியைப் பற்றியே சிந்தித்தோரின் முன்னே

விடுதலையைப் பற்றிக் கனவு கண்டோரின் முன்னே

தோல்வி தூக்குக் கயிற்றோடு நின்றது.

அவலக்குரலெழுப்புவதற்கு – அந்த நீர்க்கரையில் ஒரு ஆட்காட்டி கூட இல்லை.

00

அவள்….

ஒலியாகி….

ஒளியாகி….

இசையாகி….

காற்றிலே ஊர்வலம் வந்தவள்…

கனலும் நெருப்பிலே தன்னை வளர்த்தவள்…

நீரிலே விளையாடிய வீரனைத் தன்னோடிணைத்தவள்….

நினைவெல்லாம் அவளாகும் நிதர்சனமாய் நின்றவள்…

மாத்தளனிலே தன் பிள்ளை மூச்சிழக்கத் துயரடைந்தவள்….

பிறகு, முடிவேயில்லாத பெருஞ்சமரிலே தன்னிணையை இழந்தவள்…

ஈற்றிலே எதிராளிகளின் கையிலே சிக்கிக்…..

00

எனது ஊரில் துவக்கைக் காணாத நாட்கள் இனிமேல் இருக்குமா?

00

நன்றி: பொங்குதமிழ்,

No comments: