Wednesday, September 8, 2010

ஈழத்தமிழினத்தின் இன்னலுக்கு பொறுப்பெடுத்து குரல் கொடுக்கப்போவது யார்???

பெரு மதிப்பிற்குரிய நாடுகடந்த தமிழீழத்திற்கான அரசாங்கத்தின் முதன்மை நிறைவேற்றுனர், திரு, விசுவநாதன் ருத்ரகுமாரன், அவர்கள் பெயரால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று வாசிக்கக்கிடைத்தது , தன்மீது சுமத்தப்பட்ட தேவையற்ற குற்றச்சாட்டுக்கு மறுப்புத்தெரிவித்து அவர்களால் வெளியிடப்பட்ட வெளியிட்ட அறிக்கை செய்தி அது,

நீண்ட தொலை நோக்கான அரசியல் திட்டங்களும், நாடுகடந்த அரசின் செயல்ப்பாடுகள் பற்றிய அனுமானத்துடன் இராசதந்திரமான முறையில் பயணிக்க வேண்டுமென்ற பல்நோக்கும், தன்மீது சுமத்தப்பட்ட அவதூறை களைவதற்கான நியாயங்களையும் கூறி தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்,

அத்துடன் ஈழத்திலும், புலத்திலும், விடுதலை வேண்டி நிற்கும் தமிழ் மக்களை உணர்ச்சிப்பிழம்பாக வைத்திருக்க வேண்டுமென அவரது அறிக்கை அழுத்தமாக கூறுவது நன்றாகத்தெரிந்தது,

அதில் எந்தத்தவறும் இல்லை, ஆனால் ஈழத்தில் இன்னலுறும் தாயகத்து சுதேசிகள் நலன்பற்றியும், அவர்கள் தற்போது பட்டுக்கொண்டிருக்கும் மோசமான மறுவாழ்வு, மீழ்குடியமர்வுக்காக அவர்கள் சந்தித்திக்கொண்டிருக்கும் இடையூறுகள் பற்றியும், கொஞ்சமேனும் நாடுகடந்த அரசு கவனமெடுக்கவேண்டிய இடத்திலிருப்பதால், நாடுகடந்த தமிழீழத்திற்கான அரச நிர்வாகத்திற்கு கிடைத்திருக்கும் சர்வதேசத்துடன் தொடர்பாடல் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பை பயன்படுத்தி அரசியல் செய்யவேண்டுமெனவும் அந்த மக்கள் விரும்புவதை பொறுப்புள்ள இடத்திலிருக்கும் ருத்திரகுமாரன், அவர்கள் நிராகரிக்க முடியாது,

“நாடுகடந்த தமிழீழ அரசு” என்பதன் தாற்பரீகம் அதன் செயற்பாடு எப்பேற்ப்பட்டது என்பதை, பாவப்பட்டுப்போய், கை கால்களை, உறவுகளை, பொருளாதாரத்தை, இழந்து வெறுமையாக நின்றுகொண்டிருக்கும் பாமரமக்களுக்கெல்லாம் உடனடியாக புரியுமென ருத்திரகுமாரன் அவர்களும் அந்த அமைப்பும் நம்பவும் முடியாது,

நாடுகடந்த அரசின் முயற்சியின் தாக்கத்தால், அங்கு தாயகத்தில் ஏதாவது அனுகூலம் ஏற்பட்டால்த்தான் மக்கள் புரிந்து கொள்ளுவதற்கான வாய்ப்பும், அவர்களின் ஆதரவும், உங்கள்மீதானதும் நாடுகடந்த அரசு மீதான நம்பிக்கையும் மக்கள் மத்தியில் பிறக்கும் என்பதே யதார்த்தமான உண்மையாகும்,

நாடுகடந்த தமிழீழ அரசுக்கான ஒவ்வொரு துறைக்கும் துறைசார்ந்த பிரிவுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் இதுவரை ஒருசதவிகிதமான செயற்பாடும் எந்தத்துறை சார்ந்தும் மக்களைச்சென்றடையவில்லை என்பதை நாடுகடந்த அரசின் அங்கத்தவர்கள் புரிந்திருப்பார்கள், ஒருசில உறுப்பினர்கள் பிழையாக நடக்க முற்படுவதாக வாக்குமூலம் அளிக்கப்பட்டிருக்கிறது, அவை உங்கள் மீதுள்ள பலவீனத்தைத்தான் வெளிப்படுத்துகிறது, உங்கள் ஆளுமையின்மீது நீங்களே அவதூறு வீசுவதுபோலாகாதா,

மாவீரர்களின் தியாகத்தையும் விடுதலை வேட்கை தீயையும் புளகாங்கிதமாகக்கூறி மட்டுமே மக்களை தொடர்ந்து தக்கவைக்க முடியாது, தேசியத்தலைவர் அவர்கள் துறைசார்ந்த பிரிவுகளை வரையறுத்து பிரித்துக்கொண்டு பிற்பாடு போராட்டத்தை தொடங்கவுமில்லை, அனுபவரீதியக எவை எப்போது தேவைப்பட்டதோ அப்போது அவைகளை அமைத்துக்கொண்டார், அவைதான் ஈழத்தமிழன் அறிந்த வரை ஊழல் இல்லாத ஆட்சியாக இருந்தது,

நான் பெருத்த அரசியல் அறிவுடையவனல்ல, தற்போதய நாடுகடந்த அரசியல் வேலைத்திட்டத்திற்கு ஜனநாயக விழுமியங்களை வெளிக்காட்ட சில வரைமுறைகள் தேவை என்பதை இங்கு நான் மறுக்கவில்லை, வருடம்வெளிவரும் இரண்டு அறிக்கை மட்டும் தமிழீழத்தின் தீர்வாக அமைந்துவிடாது, அத்துடன் ஈழமக்களின் அவலத்தை ஒவ்வொருவரும் எழுத்தில் மட்டும் பதிவுசெய்தால் முடிந்துவிடப்போவதுமில்லை ஆக்கபூர்வமான நியாயமும், நிவாரணமும்தான், ஈழத்துக்கு உடனடித்தேவை,

இன்றய நிலையில் தாயக மண் சிங்களமயமாகிறது, இதை எவரும் மறுப்பதற்கில்லை, இராணுவமுகாம்கள் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, மாங்குளம், என விஸ்தரிக்கப்படுகிறது, சிங்களக்குடியேற்றங்கள் பரவுகின்றன, இவற்றை முளையில் கிள்ளி எறியாவிட்டால், அல்லது ஏதாவது வழியில்தடுக்காவிட்டால், பெருத்த தோப்பாகிவிடும், வெட்டியழிக்கமுடியாதபடி வேர் பாய்ந்து பரந்துவிடும்,

அதன்பின் நாடுகடந்த அரசு நாடுகடந்த நிலையில்த்தான் செயற்பட்டுக்கொண்டிருக்கமுடியுமே தவிர நாட்டுக்கு பலன்தராது, இதைத்தான் என்போன்ற விடுதலை விரும்பிகள் பொறுப்புள்ளவர்களிடம் கேட்டு நெருக்குவாரம் செய்வார்கள், அனைவரினதும் அடிவயிறும் அப்படித்தான் எரிந்துகொண்டிருக்கும், ஆளாளுக்கு ஒவ்வொரு திட்டத்தை (மக்கள்) நடைமுறைப்படுத்த முடியாது, நிறுவனப்படுத்தப்பட்டால் நிறுவனங்கள்தான் மக்களுக்கு பதில் கூறவேண்டியவர்கள்,

இன்று ஈழத்து அரசியலை இந்தியாவிலுள்ள எவரெவரோ கையிலெடுத்து பூஜை செய்துகொண்டிருக்கின்றனர், தங்கள் நலனுக்காக ஒலிபெருக்கி விளம்பரங்களும் பூஜை முடிந்ததற்கான அடையாளமாக பிரசாதம் வழங்கியிருப்பதாக படங்களும் செய்திகளும் ஊடகங்களில் பல்லிழிக்கின்றன, பூசாரிகள் பலபேர் வந்து போகின்றனர், பிரசாதத்தை நேரடியாகப்பெற்றவர்கள் எத்தனைபேர் என்பது தெரியாது, பிரசாதத்திற்கே இந்தக்கதி, பூஜையால் பலனேதும் உண்டா என்றால் பத்து நூறு ஆண்டுகளுக்குப்பின் தான் அவைபற்றிச்சிந்திக்கமுடியும் என்பது போல்த்தான் வரலாற்றுப்பாதை சிரிக்கின்றது,

முள்ளிவாய்க்கால் சாவீட்டின்போது உணர்வு நரம்பை அறுத்து எறிந்துவிட்டு கொலைகாரனோடு கூட்டுச்சேர்ந்து தொகுதிப்பங்கீடு செய்தவர்களை நம்பி (அவர்களைவிட்டால் வேறுவழியே இல்லையென்று) தீர்வுத்திட்டம் பற்றி பேச்சுவார்த்தையில் தேசியக்கூட்டமைப்பினர் முனைப்புக்காட்டி நிற்கின்றனர் டில்லியும் கருணாநிதியும் தம்பாட்டிற்கு என்னென்னவோ திட்டங்களை தன்னிச்சையாக ஈழத்தமிழினத்தின் விருப்பப்பிரதிநிதியாக எவரையும் கலந்தாலோசிக்காமல் தமது தேர்தலை மட்டுமே மனதில்க்கொண்டு, வயதுக்குவந்த இரண்டு பெண்களை விட்டுவிட்டு செத்துப்போன விபச்சாரி வீட்டு சாவீட்டு கருமம் முடிக்கநிற்கும் வாடிக்கை காரர்போல் நிற்கின்றனர்,

நிருபாமா ராவ் என்ற வட இந்திய அரச நிர்வாகத்தின் அதிகாரி, இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு உதவவேண்டும் என்ற கொள்கையில் இந்தியா தொடர்ந்தும் இருக்கின்றது. ஆனாலும், இலங்கை அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருப்பதனால்
எமது தலையீடுகளும் வரையறைக்கு உட்பட்டதாகவே இருக்கின்றது என்று காரணம் கற்பிக்கிறார்,

இலங்கையில் இன்றைக்கு மட்டுமல்ல அன்றும் இன்றும் நாளையும் பெரும்பான்மை சிங்களவர்கள்தான் என்பது உலகமிறிந்த விடயம், தமிழர் பெரும்பான்மையாக இருந்தால் பிரச்சினைக்கே இடமில்லையே, இந்த அதிகாரி ஏன் வந்தார் பிரச்சினையை அறிந்துகொண்டுதான் வந்தாரா, இவரிடம் இந்த விளக்கத்தை எவர்மூலம் தெரியப்படுத்துவது, குரல் கொடுக்கவேண்டியவர்கள் எவர், கந்தனும் சுப்பனும் குரல்கொடுக்க முடியுமா என்பதுதானே ஈழத்திலிருக்கும் தமிழனின் ஆதங்கம்,

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கல் மூலம் ,அல்லது சர்வகட்சி பிரதிநிதி குழுவின் அறிக்கையினை அமுல்படுத்துவதன் மூலம் தீர்வொன்றினை காணமுடியும். ஆனாலும் இவ்விடயத்தில் அவசரப்படுவதனால் எதுவிதப் பயனும் ஏற்படாது.

இலங்கை விவகாரத்தில் இந்தியா வேகமாக செயற்பட முடியாமைக்கு பல காரணங்கள் இருக்கின்றன என்றும்.அந்த அதிகாரி எழுதிக்கொடுக்கப்பட்ட பழைய பல்லவியை பாடுகிறார்,

இலங்கை சிறுபான்மை தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இந்தியா உள்ளது. அதனையே தற்போது மேற்கொண்டு வருகின்றது. இலங்கை விவகாரத்தில் இந்தியா வேகமாக செயற்படுவதற்கு பல தடைகள் இருக்கின்றன. 1987 ஆம் ஆண்டு இருந்த நிலைமை தற்போது இல்லை. எமது செயற்பாடுகள் வரையறுக்கப்பட்டவையாகவே தற்போது காணப்படுகின்றன என்கிறார்,

இவையெல்லாம் பால்குடி குழந்தைவரை கொட்டைபோட்ட விடயம், இதைத்தானே இலங்கையும் இந்தியாவும் சுத்திச்சுத்தி ஒப்பாரியாக பாடிக்கொண்டிருக்கின்றன, இவையொன்றும் நடைமுறைக்கு வரப்போவதில்லை என்பது நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே ஈழத்தின் தமிழினத்தில் பிறந்த எல்லோருக்கும் தெரியும், ஆனால் இந்த பேச்சு வார்த்தை அதிகாரிகளுக்கு சரியான பதிலளிப்பதற்கு சமீபகாலமாக சரியான ஆட்களில்லாமல் இருப்பதுதான் எரிச்சலூட்டுகிறது, இதைத்தான் பொறுப்பானவர்கள் என முன்னணியில் நிற்பவர்கள் புரிந்து செயற்படவேண்டும்,

அவசரப்படுவதனால் எதுவிதப் பயனும் ஏற்படாது இலங்கை விவகாரத்தில் இந்தியா வேகமாக செயற்பட முடியாமைக்கு பல காரணங்கள் இருக்கின்றன என்றும் நிருபாமா கூறியிருப்பதிலிருந்து இந்தியா தொடர்ந்து தன்னலன் கொண்டபோக்கிலிருந்து மாறவில்லையென்பது தெரிகிறது,

இந்தியா தமிழருக்கான நல்ல தீர்வு எதையாவது செய்து முடிக்கவேண்டுமென நினைக்குமானால் அதற்கு பொருத்தமான காலம் இன்றைய காலகட்டத்தைத்தவிர பொருத்தமான காலம் இனியொருபொழுதும் வரப்போவதுமில்லை முன்பு வந்திருந்ததுமில்லை,ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டு, ஓரளவேனும் தமிழர்களுக்கு சுயமான வாழ்வை தீர்மானிக்கக்கூடிய 13 வது திருத்தச்சட்டத்தை அமூலுக்கு கொண்டுவருவதற்கு எது தடையாக இருக்கிறது, இழுத்தடிப்பதும், இலங்கைக்குள் தலை வைத்துப்படுப்பதும்தான் இழிந்துபோன இந்தியாவின் நோக்கமாக இருந்து வருகிறதென்பதே உண்மை,

50 ஆயிரம் வீடுகளில் 10 ஆயிரம் வீடுகள் மலையகத்தில் அமைக்கப்படும் என்பதன் அரசியல் இந்தியாவுக்கும் ராஜபக்க்ஷ குடும்பத்திற்கும்தான் புரியும் அரசியலாகும், கருணாநிதியின் மகள் கனிமொழி மலையகத்தில் வாங்கியிருக்கும் சொத்துக்கும் வீட்டுத்திட்டத்திற்கும் ஏதாவது தொடர்புமிருக்கலாம் ,

விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டு போர் ஓய்ந்த நிலையில் கடந்த 15 மாதங்களாக தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கு இந்த அரசாங்கம் உருப்படியாக செய்திருப்பவை எவை என்ற பட்டியலை இந்திய வெளி விவகாரச் செயலாளர் நிருபமா ராவ் அரசாங்க தலைவரிடம் கேட்டுவாங்கி தமிழ் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

இந்திய அரசு, இலங்கை அரசுடனும், தமிழ் கட்சிகளுடனும் தொடர்ச்சியாக பேச்சுக்களை நடத்திக்கொண்டிருந்தாலும் நடைமுறையில் எதிர்பார்க்கின்ற முன்னேற்றம் ஏற்படவில்லை, என்பதுதான் தமிழ் மக்கள் மத்தியிலே நிலவுகின்ற கருத்தாகும். இதை இலங்கை வந்துள்ள இந்திய அரசின் வெளி விவகாரச் செயலாளர் நிருபமா ராவ் அறிந்துகொள்ள வேண்டும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கு அரசியல் தீர்வை கொண்டுவரும் நோக்கம் இந்த அரசாங்கத்திற்கு இருப்பதாக நம்புவதற்கு ஒரு காரணத்தைக்கூட எம்மால் காணமுடியில்லை. 13வது திருத்தத்திற்கு அப்பால் செல்வோம் என இலங்கையில் இருந்து இந்திய ஊடகங்களுக்கு சொல்லிக்கொண்டே.,, நடைமுறையில் இருக்கின்ற உரிமைகளையும் அபகரிக்கும் காரியங்களையே இந்த அரசாங்கம் ஆற்றிக்கொண்டிருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தை மீட்டெடுத்து அவசர அவசரமாக மாகாணசபைத் தேர்தலை இந்த அரசாங்கம் நடத்தியது. ஆனால் வட மாகாணத்தை மீட்டெடுத்து அங்கு ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் ஆகியவை நடத்தப்பட்ட பிறகும்கூட வட மாகாணத்தில், மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவில்லை. வட மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றால் அங்கு அரசாங்க கூட்டணியினால் ஆட்சியை கைப்பற்ற முடியாது என்ற காரணத்திற்காக அந்த தேர்தல் ஒத்திவைக்கப்படுகின்றது.

அங்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தி போரினால் அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களை மீள குடியேற்றும் பணிகளை அந்த மாகாணசபை நிருவாகத்திற்கு வழங்கலாம். இதை ஏன் இந்த அரசாங்கத்திற்கு இதுவரையில் செய்ய முடியவில்லை? இந்திய அரசாங்கம் வழங்கும் உதவிகளையும், கட்டித் தரப்போவதாக கூறப்படும் வீடுகளையும் வட மாகாணசபையுடன் இணைந்து செய்வதுதான் பொருத்தமானதாகும்.தற்போது வட மாகாணத்தில் குறிப்பாக வன்னி மாவட்டத்தில் சிவில் நிர்வாகம் நடைபெறவில்லை. இந்நிலைமையை மாற்றி அமைப்பதற்கு இன்றைய அரசியல் அமைப்பில் இடம்பெற்றுள்ள 13வது திருத்தத்தை பயன்படுத்தி வட மாகாணசபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்படவேண்டும். இன்றைய சூழ்நிலையில் குறைந்தப்பட்சமாக இதைத்தான் செய்ய முடியும். இதற்காவது இந்த அரசாங்கத்தை இணங்க செய்வது இன்றைய சூழ்நிலையில் இந்திய அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இந்த செய்தியை இந்திய வெளி விவகாரச் செயலாளர் நிருபமா ராவ் புதுடில்லிக்கு எடுத்துசெல்லவேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்,

யுத்தம் கடுமையாக நடந்துகொண்டிருந்த காலகட்டங்களில், கொழுபில் புலனாய்வுத்துறை மற்றும் இராணுவ ஒட்டுக்குளுவினரால் கூட்டமைப்பு எம்.பி. ரவிராஜ், ஐ.தே.க.எம் பி. மகேஸ்வரன் ஆகியோரின் படுகொலைகள் தொடர்ந்தசமையம் அரசாங்கத்தால் மிகவும் அச்சுறுத்தப்பட்டு நெருக்கடியில் இருந்த ஒரு தமிழ் அரசியல்வாதியென்றால், அது ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், என்பது அமெரிக்க அரசாங்கம் வரை அறிந்த உண்மை, இருந்தும் மனோ கணேசன் அவர்கள் தனது கொள்கையிலிருந்து என்றைக்கும் மாறுபட்டது கிடையாது,

மனோ கணேசன் அவர்களின் பிரதிநிதுத்துவம் தென்னிலங்கைமக்களை சார்ந்ததாகவிருந்தாலும், அவரது குரல் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்காகவே ஓங்கியொலித்ததை உலகமே அறியும், துரதிஸ்டவசமாக மனோ கணேசன் அவர்கள் தற்போது பாராளுமன்ற அங்கத்தவராக இல்லாதபோதும், சமீபத்தில் அவரது கட்சிக்குள்ளிருந்து , மனோ கணேசன் அவர்களது சகோதரரே கால்வாரிவிட்டு ஆளுங்கட்சியோடு கூட்டுச்சேர்ந்து நெருக்கடியை கொடுத்தபோதும். எல்லாவற்றையும் உள்வாங்கி துணிச்சலான அரசியல் வாதியாக தமிழர் சமுதாயம் பின்பற்றக்கூடிய எடுத்துக்காட்டான முன்னுதாரணமாக மன உறுதியுடன் மேன்மையான இலட்சியத்துடன் இருந்து வரும் மனோ கணேசன் அவர்கள் , இந்தியாவின் அணுகுமுறைபற்றிய அவநம்பிக்கை தமிழ்ச்சமூகத்திற்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது,

நாடு கடந்த அரசானாலும் சரி, தமிழர் தேசியக்கூட்டமைப்பினராக இருந்தாலும் சரி வரட்டுக்கௌரவங்களை தள்ளிவைத்துவிட்டு நடைமுறைச்சாத்தியமான உபாயங்கள் எங்கிருந்து வந்தாலும் ஏற்று ஒன்றுபட்டு ஈழதேசத்தின் இன்றய வக்கிரத்தை அடித்துத்துரத்த ஒன்றிணைந்து செயல்ப்படுவது சிறப்பாக அமையும் என்பதே யதார்த்தமாக கண்முன் நிற்கின்றது,

ஈழத்தமிழினத்தின் இன்னலுக்கு பொறுப்பெடுத்து குரல் கொடுக்கப்போவது யார்???

மனோ கணேசனின் கருத்தும் சிந்திக்க வைக்கிறது….

- கனகதரன்,

நன்றி நெருடல் இணையம்,

No comments: