இலங்கையில் ஈழ தமிழர்கள்மீது நடத்திமுடிக்கப்பட்ட. ஒரு படுமோசமான மனித இனப்படுகொலையை விசாரணை செய்யச்சொல்லி. உலகிலுள்ள எத்தனையோ ஜனநாயகநாடுகளும், மனிதநேய அமைப்புக்களும், கூட்டாக கூக்குரலிட்டு நீதிநியாயம் வேண்டிப்போராடும் வேளையில். இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணைகளை ஒத்தி வைக்குமாறு இந்தியா, ஐக்கிய நாடுகள்சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது,

இப்படி வக்கிரமாகவும் மிகவும் கீழ்த்தரமாகவும் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா இறங்கியிருப்பது இன்றுமட்டுமல்ல பல்லாண்டுகளாக செய்துவந்தாலும். இந்தியா தனது காட்டுமிராண்டி அரசியலை சர்வதேசத்திற்கும் கொண்டுசேர்க்க நியாயம்துறந்து மானம்துறந்து சர்வ நிர்வாணியாக தலைவிரித்தாடுகிறது.

இந்திய இலங்கை உடன்படிக்கையின் பின்னர் அமைதி காக்கும் நோக்கில். இலங்கைக்கு விஜயம்செய்த இந்திய அமைதிகாக்கும் படையில் கடமையாற்றிய ''சித்தார்த்த சட்டர்ஜீ'' என்ற உயர் இராணுவ அதிகாரி இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சித்தார்த்த சட்டர்ஜீ, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் மகளைத் திருமணம் முடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதிலிருந்து, இந்தியாவின் அரசியல்வாதிகள் உயர் அதிகாரிகளின் தன்னிச்சையான குடும்ப அரசியல் கலாச்சாரம், சர்வதேச மட்டத்தில் அதிகாரத்திலிருப்பவர்கள் கூட தங்கள் நலன் சார்ந்து எந்தவிதமான மாற்றங்களையும் அதிகாரமட்டத்தலையீடுகளையும், ஐநா மன்றம்வரை குடும்ப செல்வாக்கைப்பயன்படுத்தி நீட்டிக்குறுக்க முடியுமென்ற அசிங்கமான உண்மை உலகுக்கு சொல்லப்பட்டிருக்கிறது,

இதில் எவ்வளவு சாதகபாதகம், நடைமுறையில் தோற்றம் பெறும் என்பது ஒருபுறம் விவாதத்துக்குள்ளதாக இருப்பினும், மேற்சொன்ன செய்தியில் ஓரளவு உண்மைத்தன்மை உள்ளதென்பது பான் கீ மூன் அவர்களின் செயற்பாடுகளில் அவ்வப்போது எதிரொலித்துக்கொண்டு மிருந்ததை உணரலாம்,

இலங்கை ஜனாதிபதி ராஜபக்க்ஷவும் கூட்டாளிகளும். இந்தியாவுக்கும் ஐநா சபைக்கும் எந்தமதிப்பும் கொடுக்காத போதிலும். ஈழபடுகொலை போர்க்குற்றத்தை தடுத்து நிறுத்த, அல்லது திசைமாற்ற, இந்தியா தன்னிச்சையாக தேவையற்ற விதத்தில் தலையிடுவதன் பின்னணியில் படுபயங்கரம் மறைந்திருப்பதை ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ளவேண்டும். தேவையில்லாமல் இலங்கையில் இடம்பெற்ற மனித அவலப்போர்க்குற்றத்தை இலாபநோக்கமில்லாமல் இந்தியா தலையிட்டு நிறுத்தவேண்டிய தேவையில்லை. விசாரணையின் முடிவு இந்தியாவுக்கு பாதகமான சூழலை ஏற்படுத்திவிடும், அல்லது இந்தியா இழைத்த குற்றம் உலக அரங்கில் அம்பலப்பட்டுப்போகும் என்ற பயம். இந்தியாவை பீடித்திருக்கிறது, என்பதை கைபிடித்துப்பாற்காமலே இந்தியாவின் இந்த உதறலும் உளறலும் வெளிக்காட்டி நிற்கிறது,

சர்வதேச மனுதர்ம அமைப்புக்களின் இடைவிடா நெருக்குவாரத்தால் தோற்றுவிக்கப்பட்ட. பான் கீ மூனின், இலங்கை தொடர்பான ஆலோசனைக் குழு அண்மையில் தமது பணிகளை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இலங்கையின் சர்வாதிகார அதிபர் தன்பாட்டிற்கும் நல்லிணக்க ஆணைக்குழு என்று ஒன்றை உருவாக்கி தனக்கு விசுவாசமானவர்களை நியமித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.

சமீபத்தில் விசாரணைகளை தொடங்கியிருந்த சிறிலங்கா அரசின் விசாரணைக்குழுவின்முன், தனது மனஆறுதலுக்காக குழு முன்னிலையில் சாட்சியமளித்த, விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர்களில் ஒருவரான எழிலனின் மனைவி, சிறிலங்கா அரசின் விசாரணைக்குழு முன்னிலையில் தனது கவலைகளை தைரியமாக மிகத்தெளிவாக தெரிவித்தார்.

இந்த குழு முன்பு சமூகமளித்த விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியற்துறை பொறுப்பாளரான எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன், தன்னுடைய கணவர் எழிலன், வணக்கத்துக்குரிய அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் தலைமையில், எழிலன் மற்றும் பல அரசியல் துறைப் போராளிகள் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைவதை தான் நேரில் பார்த்ததாகவும், அதன் பின்னர் தனது கணவர் குறித்து எவ்வித தகவலும் இல்லை என கூறியுள்ளார்.

இந்தக் குழுவின் விசாரணைகள் பல பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்கமாக நடைபெறுகின்றன. என்றாலும், குறிப்பிட்ட இந்த விசாரணைகளுக்கு பிபிசி செய்தியாளர்கள் சென்று செய்தி சேகரிக்க அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. மறுப்புக்கு காரணம் தொடர்பில் அரசாங்கம் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. அரசாங்கத்தின் இத்தகைய தமிழர்விரோதம் பற்றிய தொடர் நிலைப்பாடுகள் விசாரணைக்குழுவின் நம்பகத்தன்மையில் மீண்டும் சந்தேகத்தை இரட்டிப்பாக்கியிருக்கிறது. ஏனெனில் குற்றத்தையும் கொலைக்களத்தையும் நடத்தியவனே விசாரணைக்குழு அமைத்து விசாரிக்கும் அவலமும் ஈழத்தமிழர்கள் முன் உருவாக்கி பக்கச்சார்பற்ற வகையில் சர்வதேச பத்திரிகையாளரின் பார்வையையும் தடைசெய்திருப்பது விசாரணையின் முடிவின் லட்சணம் எந்தளவுக்கு தமிழருக்கு நீதி வழங்குமென்பதை காட்டுகிறது,

இலங்கை இந்திய வரலாற்றில் விசாரணைக்குழுக்கள் என்பதே காலத்தை இழுத்தடிப்பது, பிரச்சினையை திசைதிருப்புவது அல்லது குறிப்பிட்டபிரச்சினையை இல்லாமல் செய்யும் வசதியான உத்தியென்றே கடந்தகால நிகழ்வுகளின் பாடங்கள் போதித்திருக்கின்றன. இதையும் தமிழர் தரப்பு கவனமாக நினைவில்க்கொள்ளவேண்டிய ஒன்றாகும்.

இன்று புலம்பெயர் சமூகம் இடைவெளியில்லாமல் தொடரும் காத்திரமான வேலைத்திட்டங்களான. கவனயீர்ப்பு நடைப்பயணங்கள். ஜனநாயகரீதியான போராட்டங்கள், சர்வதேசகவனத்தை ஈர்த்துநிற்க்கும் இந்தநேரத்தில். முக்கியமாக இனப்படுகொலை விசாரணைகளை தாமதிக்காமல் துரிதப்படுத்தும் கோரிக்கைகளை வேண்டுகோளாக மட்டும் வைக்காமல். எம்பக்கத்து நியாயங்களை அவர்கள் உள்வாங்கச்செய்யவேண்டிய கட்டாயமும் புலம்பெயர் சமூகத்துக்குண்டு,

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு, கனடியத்தமிழர் அமைப்புக்கள், நாடுகடந்த தமிழீழ அரசு அமைப்பு, ஐரோப்பியத்தமிழர் அமைப்புக்கள், கூட்டாகவோ தனித்தனியாகவோ, ஐநா வால் ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட போர்க்குற்றவிசாரணையை எந்தத்தலையீடுகளும் குறுக்கீடு செய்து குளப்பிவிட இடமளித்துவிடக்கூடாது,

ஈழத்தின் குரலாக ஸ்ரீலங்கா அரசின் விசாரணைக்குழுவின்முன் விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியல்த்துறைப்பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி துணிச்சலான ஒரு ஆரம்பத்தை தொடக்கிவைத்திருக்கிறார்,

இன்றைய சூழலில் ஈழத்திலிருந்து துணிவான ஒருகுரலை இவ்வளவு விரைவில் எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை, இந்த ஆரம்பம் விசாரணைகளில் தோற்றப்போகும் பாதிக்கப்பட்ட இன்னும் பல தமிழ் உறவுகளுக்கும் ஈழத்திலுள்ள தமிழ் அரசியல்வாதிகளுக்கும் ஒரு துணிச்சலான ஆரம்பமாக அமைந்திருக்குமென்றும் நம்பலாம்,

யுத்தம் முடிவடைந்தபின் சரணடைந்த விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்கள், போராளிகள், தீவிர ஆதரவாளர்களின், இருப்பு பற்றிய கேள்வி இன்னும் அதிகரித்திருக்கிறது, 3,00,000 இலட்சத்துக்கு அதிகமான பொதுமக்களும் 12,000 ஆயிரத்துக்கும் அதிகமான விடுதலைப்புலிகளும் கடைசி நேரத்தில் அரச படையினரிடம் சரணடைந்திருந்தனர், மூத்தவிடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் இதில் சேர்த்ததாக தெரியவில்லை, படிப்படியாக கணக்கு குறைக்கப்பட்டு கடைசியாக 7,000 க்கும்குறைவானபோராளிகளுக்குள்தான் கணக்கு இருந்ததாதாகவும் அவர்களும் படிப்படியாக
விடுவிக்கப்பட்டு வருவதாகவும் சிங்கள அரசால் கணக்கு முடிக்கப்படுகிறது,

மூத்த உறுப்பினர்களின் கதை எதுவும் வெளிவரவில்லை, சரணடைந்தவர்களுக்கு பொறுப்பாகவிருந்த டி.யு. குணசேகர, மூத்த உறுப்பினர் வே. பாலகுமாரனின், மற்றும் தாயகக்கவிஞர் புதுவை இரத்தினதுரை ஆகியோரின் இருப்புப்பற்றிய கேள்வியுடன் மௌனமாகிவிட்டார்,

பொதுமக்களில் பல இளம் பராயத்தினர் ஆரம்பகாலத்திலேயே இரவுகளில் முகாம்களில் இருந்து வெள்ளை வான்கள் மூலம் காணாமல் போனதும் மறந்தகதையாகிவிட்டது, இனியொரு சுயாதீன விசாரணைக்குழுவொன்று விசாரிக்கும் பட்ஷத்தில் சிலகணக்கு வெளிவரலாம், வெளிவராமலும் போகலாம், பத்து பன்னிரண்டு என்று ஒட்டுமொத்த குடும்பமாக கொல்லப்பட்டு இல்லாமல்ப்போய் தேடுவதற்கு ஆளில்லாத கணக்குகளும் மண்ணோடு மண்ணாகி அவை முடிந்தகதை, முள்ளிவாய்க்கால் முற்றுகைக்குள் அழிக்கப்பட்ட கணக்கு இங்கு எவருக்கும் எவரும் சரியாக வெளிப்படுத்தவில்லை,

இந்த லட்சணத்தில் இந்தியா ஐநா செயலாளரை அணுகி விசாரணைகளை ஒத்திவைக்குமாறு கேட்டதாகச்சொல்லப்படுகிறது, இவைஎல்லாவற்றிற்கும் முடிவுகட்ட ஏதாவது மாற்றீட்டுத்திட்டம் இல்லாமலில்லை, ''நாம்தான் அந்தக்கதவை தட்டி அணுகாமலிருக்கிறோமோ'' எனவும் எண்ணத்தோன்றுகிறது.

சமீபத்தில் : பொன் - குகதாசன் அவர்கள் எழுதியிருந்த ஒரு கட்டுரையில் சில நியாயங்கள் அவரால் முன் வைக்கப்பட்டிருந்தது, சுதந்திரமடைந்த காலந்தொட்டு இலங்கைத் தீவில் மாறிமாறி வந்த சிங்களப் பெரும்பான்மை மொழி மதவாத அரசாங்கங்கள் யாவும், தாங்கள், ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட , அரசியலமைப்பைக் கொண்ட சுய தன்னாதிக்கம் உள்ள ஒரு இறைமையுள்ள அரசாங்கம் என்ற வகையில் தங்களது எந்தத் தவறுகளை யார் சுட்டிக் காட்டினாலும், ஐ நா அடங்கலாக அனைவரையும் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதாக குற்றஞ்சாட்டி மறுதலிப்பது வழமையாகிவிட்டது. என்பதை சுட்டிக்காட்டி இன்னும்பல நடைமுறைச்சாத்தியமான விடயங்களையும் முன்வைத்திருந்தார்,

உலக நாடுகளை அவசியமானபோது கூட கட்டுப்படுத்தும் பலத்தை ஐ நா இழந்து விட்டமையும், உலகை உலுப்பிக் கொண்டிருந்த அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக எந்த நாட்டின் மீதும் அதனால் படையெடுக்க இயலாத இன்றைய நிலையும், போரை விரும்பாத ஒபாமாவின்
அமெரிக்காவும், சீனாவின் எழுச்சியும், உலக ஒழுங்கு மாற்றமுமே தவிர வேறுகாரணங்கள் காணப்படவில்லை. என்றும் குறிப்பிட்டிருந்தார் ,

இந்தச்சந்தற்பத்தை பயன்படுத்தி சீனாவின் கழுத்தில் சிறீலங்கா ஏறி அமர்ந்து கொண்டு ஐரோப்பா அமெரிக்கா இந்தியா போன்ற தேசங்களுடனேயே வாதத்தில் இறங்கியுள்ளது., .

ஈராக் மீதான படையெடப்பை ஐ நாவை மீறி அன்று அமெரிக்கா எடுத்தமையால் தான் ஐ நா முற்றாகவே செல்லாக்காசாக்கப்பட்டது. இப்போது அமெரிக்கா பொருளாதார வீழச்சிக்குள் படு வேகமாக கீழிறங்கிக் கொண்டிருக்கையில் சீனா உச்ச பலத்தை அடைந்து விட்டது. அமெரிக்கா அன்று தான்விட்ட தவறால் சீனாவை தட்டிக்கேட்க அமெரிக்காவால் இன்று முடியவில்லை,

மறு புறத்தில் அஞ்சினாலும் போர்க் குற்ற விசாரணையிலிருந்து தப்ப வேறு மார்க்கமேயில்லாமல் விளைவுகளை கருதாமல் சீனாவுடன் சிங்கள ஆட்சியாளர்கள் சேர்ந்துள்ளனர். இதன் வாதங்களின் போது பயன்படும் வெறும் சொற்கள் தான் இந்த இறைமை, அரசியலமைப்பு, மக்கள் முடிவு, நீதி மன்ற முடிவு போனறனவே ஒழிய, இறைமை அல்ல.

மனித உரிமைச் சாசனங்களில் ஒப்பமிட்டுவிட்டு அவற்றை மக்களால் அல்ல மகேசனால் கூட அடிப்படை மனித உரிமை விதிகளை மீற முடியுமா? மூன்றில் மூன்று பலமிருந்தாலும் வாக்கெடுப்பிற்கு விட முடியாத, விடக் கூடாத அம்சங்களை சிறீலங்காவானது வாக்கெடுப்பிற்கு விட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் தானே என்னமோ சில நாடுகளின், அரசியலமைப்புக்களில் அடிப்படை விதிகள் என ஒரு பகுதியை வாக்கெடுப்பிற்கு விட முடியாத பகுதியாக வரையறை செய்து வைத்துள்ளனர்.

உண்மையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட ஜனநாயக நாட்டின் தேசிய எல்லைகளிற்குள் நீதிச் சட்டங்களின் கரங்கள் இலகுவாக நுழைய இயலும். இதற்கு ஏற்றாற் போல் ஐ நா வில் பல வழிவகைகள் உள்ளன. “ஆர் ரூ பி” என்று அழைக்கப்படும் பாதுகாப்பதற்கான கடமை சர்வ தேச நாடுகளிற்கு உண்டு. பிராந்திய அமைப்புக்கள் அடங்கலாக வெளிநாடுகளிற்கு சர்வ தேசப் பொறுப்பு என்று ஒன்றும் உண்டு. யாரும் உள்நாட்டு விடயங்களில் தலையிட முடியததென்றால் இவை தோற்றம் பெற்று செயற்பட்டது எப்படி,

அடுத்து சிறீ லங்கா அரசானது , மக்கள் அங்கீகாரம் என்பதையும் காட்டி தர்க்கம் செய்து வருகிறது. உரிமை என்ற சொல்லிற்குள்ளேயே அது அவர்களிற்கு உரியது என்னும் போது இறைமையுள்ள அரசைக் கொண்டிருந்த தமிழ்த் தேசிய இனத்தின் உரிமையின் அளவை தீர்மானக்கும் அதிகாரத்தை எந்த ஜனநாயகம் பெரும்பான்மை இனவாத வாக்காளரிற்கு கொடுத்தது.

எல்லா முடிவுகளையம் வாக்கெடுப்பிற்கு விட இயலாதே. தமிழர்களை இலங்கைத் தீவில் கடலுள் தள்ளி கொல்வதா வேண்டாமா என்று சர்வ சன வாக்கெடுப்பை சிறீ லங்காவில் நடாத்தினால் கொல்லத்தான் வேண்டும் என்று தான் சிங்கள மக்கள் வாக்களிப்பர். இது மக்கள் தீர்ப்பா? அல்லது மக்களின் இனவாத ஆசையா?

சரணடைந்தமைக்கான சாட்சியங்களும் வெளியாகிவிட்டன. ஒரு வீட்டுள் ஒருவரை இன்னொருவரைக் கொன்றது உறுதியாகிய பின்னரும் யாரும் அந்த வீட்டிற்குள் நுழைய இயலாதா? தட்டிக் கேட்க இயலாதா? விசாரனை நடாத்த பொலிசாரிற்கும் அனுமதி இல்லையா, உண்மை என்னவென்றால் இந்த அடிப்படையில் வாதிட கொழும்பில் எந்தவொரு நாட்டுத் தூதரும் தயாராகவில்லை. என்பது தான் உண்மையே ஒழிய இறைமை அவர்களிற்கு தடை போடுவது என்பது எற்புடையது அல்ல.


சர்வதேசதரத்தில் அல்லது உரிய முறையில் இடம் பெயர்ந்த தமிழ் அகதிகளை கவனிக்க பொருளாதார பலம் இல்லை உதவுங்கள் என்று சிறீ லங்கா கேட்டால் உங்களிற்கு ஏன் சிரமம் நமது நாட்டு தொண்டர் நிறுவனங்களை அனுமதியுங்கள் என்று கனடாவும் ஐரோப்பிய நாடுகளும் கேட்கவும் இறைமை தடுக்குமா?

புலம்பெயர் சமூகம் முனைப்புடன் செய்ய விளையும் திட்டங்களில் எதையாவது முன்னிலைப்படுத்த முனையும்போது முதலாவதாக போர்க்குற்ற விசாரணைகளை முன்வைக்கவேண்டும் போர்க்குற்றவிசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது மற்றய வேலைத்திட்டங்கள் தானாக முகங்கொடுக்கும், தவறும் பட்சத்தில் நல்லிணக்கம், அரசியல்த்தீர்வு சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் சர்வதேச ஊடகங்களையும் அனுமதிக்கக்கோரவேண்டும்,

இவைதான் இன்று புலம்பெயர் சொந்தங்கள் ஈழத்தில் தவிக்கும் உறுவுகளுக்கு ஈட்டித்தரக்கூடிய அரசியல் மறுமலர்ச்சியாகும். ஈழத்திற்கான ஆரம்பமும் அதிலிருந்துதான் ஆரம்பமாகும், ஈழத்தின் சோர்வை போக்கும் அரசியல் புலத்திலிருக்கும் ஈழத்தமிழரின் கைகளினால்த்தான் முடிவுபெறும் என்ற யதார்த்தம்தான், போராட்டம் தனக்கு தேவையான்வர்களை புலத்தை நோக்கி நகர்த்திவைத்திருக்கிறது, அவைதான் யூதர்களின் இஸ்ரேலின் பிறப்பின் வரலாறுமாகும்,

பொது வெளியீடு
கனகதரன்,

நன்றி ஈழதேசம்,