Saturday, September 28, 2013

ஈழ மக்களுக்கான அரசியலை துணிச்சல் மிக்க கண்ணியமானவர்களும் காலமும்தான் தீர்மானிக்க முடியும்.‏

வடக்கு மாகாணத்துக்கான மாகாணசபைத் தேர்தலில்   அனைவரும் எதிர்பார்த்தவாறு  பெரும்பான்மை பலத்துடன் தமிழர் தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கிறது,  
தமிழர் தேசியக்கூட்டமைப்பு தலைமைப்பீடம் உத்தியோகபூர்வமாக சீவி விக்னேஸ்வரன் அவர்களை வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக அறிவித்திருக்கிறது.  சபை உறுப்பினர்களுக்கான பிரமாணம் இன்னும் செய்யப்படவில்லை, சபை இயங்குவதற்கான இடமும் இதுவரை திட்டமிடப்படவில்லை,  இருந்தாலும் முதலமைச்சராக விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்படுவார் என்பது முடிந்த முடிவாகியிருக்கிறது.

நடைபெற்ற இந்த அரசியல் நகர்த்தல் மேலோட்டமாக ஈழத் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நிகழ்வாக தோற்றப்படுத்தபட்டாலும்,  ஈழ அரசியலின் பட்டுணர்வுத் தன்மையை மனதிற்க்கொண்டு  உணர்ச்சிவசப்பட்டு திருப்திப்படக்கூடிய முடிவான முடிவுக்கு எவரும் வந்துவிட முடியாது என்பது அனைவருக்கும் புரிந்த ஒன்று. 

சர்வதேசத்தையே ஏமாற்றும் தந்திரம் தெரிந்திருந்த ராஜபக்‌ஷவின் கைகளிலேயே அனைத்து அதிகாரங்களும் இருப்பதால் விக்னேஸ்வரன் சம்பந்தன் ஆகியோரின் சலசலப்பு எந்த அளவுக்கு ராஜபக்‌ஷவை மிரட்டும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஈழத் தமிழர் வரலாற்றில் இன்று நிகழ்ந்திருக்கும் வடக்கு மாகணசபை என்ற அரசியல் திருப்பம் இன்னும் ஒரு சில மாத, அல்லது வருட பயணப்பாட்டின் பிற்பாடான காலப்பகுதியில் அனைவரது வேஷமும் வெளுத்து மக்கள் மத்தியில் வெட்ட வெளிச்சமாகும் என்பது தவிர்க்கமுடியாமல் போனாலும்  மாகாணசபை நகர்ந்து செல்லும் ஏற்ற இறக்கங்களையும் மாகாண சபையின் பயணத்தின் பாதை மற்றும் தன்மையையும் பொறுத்து சபையின் விளைச்சல் எப்பேற்பட்ட பலனை தரும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்பதே பொருத்தமானதாக இருக்கும்.

ஆரம்பத்தில் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒரு தோற்றப்பாட்டையும்,  மக்களின் மனநிலை வேறொரு தளத்தை நோக்கிய சிந்தனையையும், விக்னேஸ்வரன்,  சம்பந்தன்,  போன்றோரின் அவ்வப்போதான சுய விருப்பான செவ்வி பேச்சுக்கள் வெவ்வேறு ஒரு மாறுபாடான போக்கையும் மக்கள் மத்தியில் ஒரு நிச்சியமற்ற தளம்பல் நிலையை தோற்றுவித்து வந்தது.  இருந்தும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அமோக வெற்றி பெறும் என்பது நிச்சியமாக அனைவராலும் உணரக்கூடியதாகவே இருந்தது.  இருந்த பொழுதும் தமிழர் தரப்பின் வெற்றியில் இரு வேறுபட்ட கருத்து எவரிடமும் இருக்கவில்லை. 

ஏனெனில் இது தமிழர்களுக்கான கன்னித்தேர்தல் என்பது ஒரு முக்கிய காரணமாக கொள்ள முடியும்.  உலக வரலாற்றில் கன்னித் தேர்தல்கள் என்றைக்கும் தோல்வியை தழுவியதில்லை.

தேர்தல் அண்மித்த காலங்களிலும் தேர்தல் முடிவுகள் கிடைத்தபின்னும் புலம்பெயர் தேசங்களிலிருக்கும் தேசியக்கூட்டமைப்பின் ஒரு சில பிரச்சார செய்தி ஊடகங்கள் தனித்தமிழ் ஈழத்தை சிங்களவனிடம் இருந்து பெற்றுவிட்ட உணர்ச்சிப்பெருக்குப்போல புளகாங்கிதத்துடன் செய்திகளையும் தொலைபேசி செவ்விகளையும் விளையாட்டு வர்ணனைபோல பறந்தடித்து வழங்கிக்கொண்டிருக்கின்றன,

இன்றைய கட்டத்தில் வடக்கு மாகாணசபைக்கான தேர்தலில் மக்கள் வாக்களிக்கும்வரை,    தமக்கான தேசிய அரசியல் உரிமைக்கமைய தேர்தல் ஒன்றில் வாக்களிப்பதற்கான உரிமையை பெற்றுக்கொள்ளவேண்டும்,  தமக்கான அடிப்படை தேசிய ஜனநாயகத்தை பெற்றுத்தரக்கூடிய ஒரு ஜனநாயக அரசியல்  வெளியை உலக அரங்கத்துக்கு எடுத்துச்சென்று,  உலக அங்கீகாரம் பெறுவதற்காக உருவாக்கப்பட்டு களமிறங்கியிருக்கும் தேசியக்கூட்டமைப்புக்கு முற்று முழுதான ஆதரவை கொடுத்து சிங்கள ஏகாதிபத்திய அரசுக்கு முழு எதிரான மக்கள் மனநிலையை உலக அரங்குக்கு காண்பிக்கவேண்டும்,  தமது ஒற்றுமையை எவ்வாறாவது வெளிக்காட்ட வேண்டும் என்ற உணர்வின் வெளிப்பாடே  வடக்கு மாகணசபை தேர்தலில் அதிக ஈடுபாட்டுடன் மக்களை ஒன்று திரள வைத்திருக்கிறது. இதில் சிங்களவனை எதிர்ப்பதற்கான மனநிலை மட்டுமே உணர்வு மயமாக வெளிப்பட்டிருக்கின்றது என்பதில் எவரும் ஐயம் கொள்ளவேண்டியதில்லை.

இத்தேர்தல் மூலம் மக்கள் கொடுத்த ஆதரவை மிக கவனமாக கையாண்டு சிங்கள அரசுடன் அடுத்த கட்டத்தை நோக்கி போராடவேண்டிய பொறுப்பை ஈழத் தமிழ் அரசியற் தலைமைகளுக்கு மக்கள் வழங்கியிருக்கின்றனர். தவிர மாகாணசபை ஒன்றின் ஊடாக ஒற்றை இலங்கைக்குள் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கான உரிமையை பகிர்ந்து கொடுத்துவிடுவார்கள் என்பதற்கான எந்த நம்பிக்கையும் எந்த இடத்திலும் காணப்படவில்லை.  அதற்கான் கள நிலையை நிச்சியமாக மாகாணசபை நிவர்த்தி செய்யும் என்று ஒருபோதும் நம்பமுடியாது என்பதும் அனைவரும் புரிந்து அறிந்த உண்மையாகும்.

முதலமைச்சராக பதவியேற்கவிருக்கும் விக்னேஸ்வரன் அவர்கள் மிகச் சாதாரணமாக சொல்லுவதுபோல  (இலங்கையின்)  சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அனைத்தையும் இலங்கை அரசாங்கத்திடமிருந்து மாகாணசபை மூலம் மிக இலகுவாக பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியிருப்பது  நெருக்கடிகளை சந்தித்து சுதந்திரக்காற்றை சுவாசிக்க துடிக்கும் சாதாரணமான ஒரு ஈழத் தமிழனால் நம்பக்கூடியதாக இல்லை.   சட்டதிட்டங்களை மதித்து நடக்கும் நாடுகளுக்கும் வாக்குறுதிகளை காப்பாற்றக்கூடிய நெறியை பின்பற்றும் அரசுகளுக்கும் அந்த விதிமுறை பொருந்தக்கூடியதாக இருக்கும் என்பது மறுப்பதற்கில்லை. 

விக்கினேஸ்வரன் அவர்கள் நீதித்துறையின் உச்ச பதவியில் ஒரு சில வருட காலங்கள் பணியாற்றியவர் என்ற முறையில் சட்டத்தைப்பற்றி அவர் பேசும்போது இடை மறித்து நியாயம் கற்பிக்கும் தகுதி நமக்கில்லாவிட்டாலும்,  இலங்கையில் இதுவரை வாழ்ந்து வந்த சட்டம்,  நீதி நியாயம்,  என்னவிலைக்கு போகிறதென்பது நீதித்துறை போன்ற உயர் பதவியிலிருப்பவர்களை விடவும் கீழ் மட்டத்திலிருக்கும் பாமரனுக்கே அதிகம் அனுபவத்துடன் புரிதலுக்கு அவ்வப்போது கிடைத்திருக்கிறது.

கடந்த கால அனுபவங்கள் அந்தகைய நம்பிக்கையீனத்தைத்தான் மக்கள் முன் விதைத்து  பெருத்த அறுவடையாக முள்ளிவாய்க்கால்வரை இலவசமாக நாங்கள் பெற்றிருக்கின்றோம். அவை மட்டுமல்லாது சர்வதேச சட்டங்களின் விலையையும் ஐநா மன்றம்வரை நாம் பெற்றுக்கொண்ட அனுபவமும் உண்டு.

தமிழீழம் தான் இறுதியான முடிவு என்ற நிலைக்கு ஈழத்தமிழினம் இன்றைக்கு அல்ல தந்தை செல்வநாயகம் அவர்களின் காலத்திலேயே தள்ளப்பட்டுவிட்டது. அதற்கான காரணங்கள் ஒன்று இரண்டு, ஒன்பது அல்ல பல பல்லாயிரம் முறை விரிவாக அதுபற்றி விளக்கப்பட்டுமிருக்கிறது. தமிழீழம் வேண்டாமென்று ஒருவன் சொல்லுவானாக இருந்தால் அவன் ஒன்று ஶ்ரீலங்கா அரசாங்கத்தில் துணைப்படையின் உறுப்பினராக இருக்கவேண்டும் அல்லது சிங்கள ஆட்சியாளர்களின் கைக்கூலியாக இருக்க வேண்டும். அவைகளை தாண்டி ஒருவன் சொல்லுவானாக இருந்தால் அவன் சாதாரண சிங்களவனாக இல்லாமல் கடும்போக்கு கொண்ட  காடை சிங்களவனாக மட்டுமே இருக்க முடியும்.

ஈழத்தமிழர்களுக்கான எதிர்கால வாழ்க்கைக்கான அரசியல் ஒருபக்கமிருக்க,   ஈழத்தமிழர்கள் சந்தித்த மிகக்கடுமையான கடந்தகால வாழ்க்கை சம்பந்தமான மிக முக்கியம் வாய்ந்த (இனப்படுகொலை) அரசியல் ஒன்றும் இருப்பதை எவரும் மறந்துவிட முடியாது. சம்பந்தன் ஐயா அவர்களுக்கும் விக்கினேஸ்வரன் அவர்களுக்கும் ஈழத்தமிழர்கள் கடந்தகாலங்களில் அணுவணுவாக  அனுபவித்த வாழ்க்கை அனர்த்தங்களை கழித்துக்கொண்டு அரசியல் வங்குரோத்து நிலையில் மீண்டும் சிங்களவர்களுடன் சமரச அரசியலுக்குள் வீழ்ந்துவிட்டதாகவே ஐக்கிய இலங்கை தீர்வுத்திட்டம் என்ற கோசம் அச்சப்பட வைக்கிறது

இலங்கை அரசியல் சட்டதிட்டங்களுக்கமைய சட்டப்படி தமிழர்களுக்கான உரிமையை பெற்றெடுக்க இருப்பதாகவும்,  தமிழ் ஈழம் என்ற கோட்பாடு தமது கொள்கை இல்லை,  ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுய நிர்ணய சபை மூலம் தமிழர்களுக்கான உரிமையை வென்றெடுக்கலாம் என்று பகிரங்கமாக பிரகடனம் செய்திருப்பது 1970, களுக்கு முன்னைய அரசியல் அரிச்சுவடிக்கு அவர்கள் திரும்பியிருப்பதை உணர்த்துகிறது.  இருந்தும் காலம்தான் அனைத்தையும் தீர்மானிக்கும் வல்லமை கொண்டது என்பது அனைவரும் புரிந்து கொள்ளும் காலம் வரும்.  சில காலங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.
 

ஈழதேசம் செய்திகளுக்காக.

கனகதரன்.

No comments: