Saturday, September 28, 2013


 

ஈழத்தமிழர்கள்மீது இலங்கை அரசு நடத்தி முடித்த மோசமான மனித உரிமை மீறல்,  கற்பழிப்பு,  இனப்படுகொலை,  உள்ளிட்ட  அனர்த்தத்துக்கான நீதி மற்றும் அரசியல் தீர்வு சம்பந்தமான விவகாரங்களை  ஶ்ரீலங்காவின் உள்நாட்டு சட்டத்துக்கமைய ஶ்ரீலங்காவுக்குள்ளேயே தீர்வுகாணவேண்டுமென்று இந்தியாவின் ஆலோசனைக்கேற்ப ஐநா, 
உட்பட பல உலகநாடுகள் இலங்கைக்கு சார்பாக ஒருதலைப்பட்ஷமாக பிரச்சாரம் செய்து வருகின்றன.  ஜெனீவா மனித உரிமை அமர்வுகளின்போது வரையப்பட்ட அமெரிக்காவின் தீர்மானமும் அதை ஓரளவு வலியுறுத்தியிருக்கிறது. அது சரியான அணுகுமுறைதானா,  அல்லது பிழையான முன்னுதாரணமா எனற தெளிவு தமிழ் அரசியல்வாதிகள் உட்பட இன்னும் பலருக்கு புரியப்படவில்லை.

ஐநா,வையும் அமெரிக்காவையும் இராசதந்திர ரீதியாக எதிர்கொள்ளக்கூடிய தலைமத்துவம் இல்லாத பலவீனம் உள்ளதால், ஶ்ரீலங்காவுடன் முரண்பட்டு நிற்பவர்கள் தமது கொள்கை சார்ந்த கருத்தை சர்வதேச மட்டத்தில் வலிமையானதாக்க முடியாதவர்களாக இந்தியா மற்றும் உலகநாடுகளின் தவறான வழிகாட்டுதலில் தொங்கி பயணப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். இருந்தும் சர்வதேச மனித உரிமை ஆணையம் மட்டும் சற்று வித்தியாசமான பார்வையுடன் நியாயமான கருத்துக்களை தெரிவித்து வருகிறது.

இந்தியா உட்பட பல உலகநாடுகளின் பிழையான வழிகாட்டுதல் ஶ்ரீலங்கா ஆட்சியாளர்களை மிக மோசமான சர்வாதிகார போக்கை நோக்கிப்  பயணப்பட வைத்திருக்கிறது. நடத்தி முடிக்கப்பட்ட அனைத்து அநீதிக்கும் குறைந்தபட்ஷ நீதி சார்ந்து முகங்கொடுக்காவிட்டாலும்,  வருங்காலங்களில் தமிழர்களுக்கான அடிப்படை உரிமைகளை சீர்செய்து மக்கள் மனங்களையும் உலக நாடுகளையும்  திருப்திப்படுத்தும் தன்மைகொண்ட இராசதந்திரத்தை பிரயோகிக்காமல் மீண்டும் மீண்டும் இனப்பகையை நீடிக்கும்வகையிலான தப்பின்மேல் தப்பை செய்து சர்வதேச சட்டத்தின் பொறியில் வீழக்கூடிய செயற்பாடுகளையே கூர்மையடையக்கூடிய செயற்பாடுகளை ஶ்ரீலங்கா கண்மூடித்தனமாக முன்னெடுத்து வருகிறது.

1987 ல் இந்தியாவால் ஒருதலைப்பட்சமாக திணிக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் தமிழர் நல்வாழ்வுக்கு ஒன்றும் இல்லையென்றாலும்,  இந்திய ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்ட 13, வது திருத்த சட்டமூலம் ஏதோ ஒன்றை பெற்றுத்தரும் என்று சிலரால் நம்பப்படுமளவுக்கு பேசப்பட்டு வந்தது. 13, வது திருத்த சட்டத்தில் குறிப்பிட்ட சரத்துக்களில் வடக்கு கிழக்கு மாகாண ஒன்றிணைப்பு, காணி அதிகாரம் மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறிப்பிட்டு சொல்லக்கூடியவைகளாக இருந்தன, அவை தவிர கல்வி நிர்வாகம்,  நீதி பரிபாலனங்களும் 13, வது திருத்த சட்டத்தினுள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக முன்னர்  கூறப்பட்டது.  இருந்தும் தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு முக்கியம் வாய்ந்ததாக கூறி மக்கள் மன்றத்தில் அரசியல் செய்துவந்தபோது

வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பானது சட்டவிரோதமான ஒன்றென  ராஜபக்‌ஷவின் கட்டுப்பாட்டிலுள்ள சிங்கள நீதிமன்றத்தின் மூலம் தமிழர்கழுக்கு எதிராக சர்வாதிகார தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கு மாகாணங்களை தனித்தனியாக பிரிக்குமாறு கோரி ஜே.வி.பி கட்சியினரால் சிங்கள அரசின் பின்னணியில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணையின் பின்னரே 16 October 2006.  வடக்கு கிழக்கு இணைப்பு சட்ட விரோதமானது என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை- இந்திய  (சர்வதேச) ஒப்பந்தத்தின் அடிப்படையில் 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் 1987,ம் ஆண்டு ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தன.

2006,ம் ஆண்டு சிங்கள நீதிமன்றத்தின் மூலம் வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டபின் தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் ஒப்பந்தத்தில் மீதமுள்ள காணி பொலீஸ் அதிகாரங்களை முன் வைத்து பிரச்சாரம் செய்து வந்தனர். அந்த பிரச்சாரத்துக்கும் மரண அடி கொடுப்பதுபோன்ற தீர்ப்பொன்றை ராஜபக்‌ஷ தனது நீதிமன்றம் மூலம் 26, செப்டம்பர் 2013,  வியாழக்கிழமை,  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது,  காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கு மாத்திரமே உரித்தானது என சிங்கள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கை அரசியலமைப்பின்படி  இந்தியா கொண்டுவந்த 13, ஆம் திருத்தச் சட்டத்தின் கூற்றுக்கமைய மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் வழங்க முடியாது என, சிங்கள நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

இந்திய ஒப்பந்தப் பிரகாரம் மீதம் இருக்கும் பொலீஸ் அதிகாரத்தைப்பற்றி இனிமேல் தமிழ் அரசியல்வாதிகள் பேசுவார்களாக இருந்தால் அடுத்த தீர்ப்பாக பொலிஸ் அதிகாரத்துக்கு அடி விழும் என்பது தமிழ் அரசியல் விற்பன்னர்களுக்கு சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.

இறுதியாக தமிழர் தரப்பு வாய் திறக்க முடியாதவாறு செய்யும் விதமாக தேர்தல் விஞ்ஞாபனம் சம்பந்தமாக தேச விரோத குற்றம் சாட்டி   தமிழ் தேசியக்கூட்டமைப்பு செயலாளர் மாவை சேனாதிராசா அவர்களுக்கு 02,ஒக்ரோபர் 2013 அன்று கோர்ட்டில் சமூகமளிக்கும்படி  சிங்கள உயர் நீதிமன்றம் கட்டளை அனுப்பியிருக்கிற்து.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டிருந்த வடக்கு மாகணசபை தேர்தல் விஞ்ஞாபனம் மூலம் இலங்கைக்குள் தனிநாட்டை உருவாக்க முயற்சிக்கப்பட்டுள்ளது என்றும்  தமிழ் மக்களுக்கு சுய தீர்மானங்களை எடுக்கும் மாகாண அரசு அவசியம் எனவும் "சுயநிர்ணய உரிமை தமிழ் மக்களுக்கு இருப்பதாகவும்"  கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது   இதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு  தேசவிரோத முரண்பாடாக இலங்கைக்குள் தனிநாட்டை உருவாக்க முயற்சித்தது என  நீதிமன்றத்தில் சிங்கள அரசின் பின்னணியில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவை மட்டுமல்லாது இனி வரும் காலங்களில் ராஜபக்‌ஷ தவிர வேறு எவரும் இலங்கைக்குள் அரசியல் பேசாதிருக்க வேண்டுமென்று நீதிமன்றம் தீர்ப்பெழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆனால் இந்த சர்வாதிகாரப்போக்கே சர்வதேச பொறிக்குள் ராஜபக்‌ஷ அரசை கொண்டு சென்று சேர்க்கும் எழுவாயாக அமையும் வல்லமை கொண்டதாக எண்ணத்தொன்றுகிறது.
 

ஊர்க்குருவி.
ஈழதேசம் இணையம்

No comments: