Thursday, February 19, 2015

மஹிந்தருக்காக ஐநாவில் வாய்தா வாங்கிய சிறிசேன.

அரசியல் ரீதியான உலக பஞ்சாயத்து பேச்சுவார்த்தைகள் தவிர்த்து, மனித குலத்தின் நெருக்குவாரங்களை வெளிக்கொண்டுவந்து தீர்வு தேடுவதற்கும் அழுத்தம் கொடுப்பதற்கும் நம்பிக்கைவாய்ந்த அமைப்புக்கள் என்று நம்பப்படுபவை சர்வதேச தொண்டர் அமைப்புக்கள். அவைகளில் பக்கச்சார்பற்ற நிலையை எடுத்து நியாயத்துக்காக குரல் கொடுக்கும் அமைப்புக்களாக International Crisis Group,amnesty international,Human Rights Watch,Global Centre for the Responsibility to Protect, ஆகியவை இருந்து வருகின்றன என்று நம்பிக்கொண்டு இருக்கிறோம்.
ஆனால் ஐநாவின் மனித உரிமை ஆணையம் எதிர்வரும் மார்ச் சமர்ப்பிக்கவேண்டிய இலங்கை அரசு தொடர்பான மனித உரிமை மற்றும் போர்க்குற்றம் சம்பந்தமான விசாரணை அறிக்கையை இலங்கை அரசு ஒருதலைப்பட்ஷமாக கேட்டுக்கொண்டவைக் கிணங்க குறிப்பிட்ட அறிக்கையை வெளிவராமல் தள்ளி வைத்து தமிழர்களுக்கு எதிரான ஒரு மனித உரிமை மீறலை செய்து அதையும் நியாயப்படுத்தியிருக்கிறது.
ஐநா சபையின் மனித உரிமை ஆணையம் 2015 மார்ச்சு அமர்வின்போது சமர்ப்பிக்க இருந்த போர் குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையை மார்ச்சு மாதத்தில் சமர்ப்பிக்காமல் ஆறுமாதங்கள் பின் போட்டு செப்ரெம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கும்படி இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன கேட்டதற்கிணங்க அறிக்கையை செப்ரெம்பர் மாதத்தில் தாக்கல் செய்ய ஒப்புக்கொண்டு அதற்கான ஆணையை மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையாளர் Zeid Ra ad Zeid al Hussein,உத்தரவாக பிறப்பித்திருந்தார்.
‘போர்க் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு விசாரணை நடத்தி வருவதாலும்? அரசு புதிதாக பொறுப்பேற்று உள்ளதாலும், இன்னும் ஆறு மாதம் பொறுத்திருக்க வேண்டும்’ என ஶ்ரீலங்காவின் சிறிசேன அரசு, மனித உரிமைகள் ஆணையத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கையின் முக்கிய தமிழ் அரசியற் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு அதற்கு உடன்பாடு தெரிவித்ததால் அந்த பிரேரணை இலங்கை அரசின் விருப்பப்படி செப்ரெம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இன்று ஒரு (அரசியல்) ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இலங்கையில் வாழும் தேசிய தமிழினத்தின்மேல் தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் கட்டுக்கடங்காத அடக்குமுறையை களைந்து சுமூகமான ஒரு தெளிவு நிலையை தோற்றுவித்து அமைதியை கொண்டுவந்து மக்களை காப்பாற்றவேண்டிய பாரிய பொறுப்பில் கணிசமான பங்கு அந்த அரசுக்கு உண்டு. அந்த கருத்தில் எவருக்கும் தடுமாற்றம் இருக்க முடியாது.
இங்கு கவனிக்கவேண்டிய கவலைக்குரிய விடயம் என்னவென்றால் ஐந்து வருடங்களுக்கு முன் துடிக்கத்துடிக்க கொன்றொழிக்கப்பட்ட ஒரு மனித இனத்தின் அவலநிலையை விசாரணைக்குட்படுத்த சர்வதேசமும் ஐநா அமைப்பும் நீதி நியாயத்துடன் சரியான முனைப்பு காட்டியிருக்கவில்லை. ஏனோ தானோ என்று தட்டிக்கழிக்கவே காரணங்களை தேடிக்கொண்டிருந்தனர். புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ச்சியாக நடத்திய ஜனநாயக போராட்டங்கள் அழுத்தங்களுக்குப்பின் ஐநா சப்பிரதாயத்துக்கு ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டது.
அதன் பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட மூன்றுபேர் கொண்ட நிபுணர்குழு அறிக்கை சில விடயங்களை வெளிப்படுத்தினாலும் அவ்வறிக்கை சரியான தாக்கத்தை இன்றுவரை பூர்த்தி செய்யவில்லை.
இப்போ 2015 மார்ச் மாதம் சமர்ப்பிக்க இருந்த விசாரணை அறிக்கையும் உரிய காலத்தில் சமர்ப்பிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்படுகிறது என்றால் இன்னும் இன்னும் தமிழர்களுக்கு எதிரான ஏதோ ஒரு பெரிய திட்டமிடப்பட்ட சதி மேல் மட்டங்களில் திரை மறைவில் நடந்துகொண்டிருக்கின்றது என்பதையே காட்டுகிறது.
மார்ச்சு மாதம் அமெரிக்கா இலங்கை அரசுக்கு எதிராக ஒரு பிரேரணையை கொண்டுவரும் என்று ஊகம் கூறப்பட்டது பின்னர் அமெரிக்கா பிரேரணையை சமர்ப்பிக்கப்போவதில்லை என்று சொல்லப்பட்டது. முன்னரும் இரண்டு பிரேரணைகளை அமெரிக்கா ஐநா மனித உரிமை அமர்வின்போது பெருத்த சலசலப்போடு தீர்மானமாக கொண்டுவந்திருந்தது அதுபற்றிய சலனமே இன்றைக்கு இல்லை.
சிறிசேனவின் தலைமையில் புதிய அரசாங்கம் தனது பணியினை செய்வதற்கும், ஐந்து வருடங்களுக்கு முன் ராஜபக்‌ஷ அரசு செய்த இனப்படுகொலை சம்பந்தமான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் இடையே என்ன சங்கடம் இருக்கிறதென்பதை நீதி நியாயத்தை விரும்பும் உலகம் அறிந்துகொள்ள வேண்டும். இந்த விடயத்தை கண்டித்து சர்வதேச மன்னிப்பு சபை மட்டும் amnesty international தனது கவலையை தெரிவித்திருக்கிறது. அறிக்கை சமர்ப்பிப்பதை தள்ளிப்போட்டு காலதாமதம் ஏற்படுத்துவதால் குற்றவாளிகள் தப்பிக்க வழிவகுக்கும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் வலயப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் சபையின் அறிக்கையை பாதிக்கப்பட்டோர் அதிகளவில் எதிர்பார்த்திருந்த நிலையில், குறித்த அறிக்கை பிற்போடப்பட்டுள்ளமை ஏமாற்றமளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கை அரசாங்கமானது ஐ.நா மனித உரிமைகள் சபையுடன் இணைந்து குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் கொண்டுவந்தால் மாத்திரம் இந்த அறிக்கை பிற்போடப்பட்டமை நியாயமுள்ளதாக அமையுமென அவர் மன்னிப்பு சபையின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தியிருக்கிறார்.
திரட்டப்பட்ட அறிக்கையை உரியகாலத்தில் சமர்ப்பிக்கவேண்டியது மனித உரிமை ஆணையத்தின் நியாயமான கடமை அது சம்பந்தமாக தொடர் வேலைத்திட்டங்களை எடுக்கவேண்டுய கடமை இலங்கை அரசுக்கு இருக்கிறது. இலங்கையின் முன்னைய அரசும் இப்படியான கால அவகாசங்களை பெற்றுக்கொண்டு சர்வதேசத்தையும் மனித குலத்தையும் ஏமாற்றிக்கொண்டிருந்தமை கருத்தில் கொள்ளவேண்டிய விடயமாகும்.
தமிழர்களுக்கு என்று ஒரு ஆட்சி அதிகாரம் இல்லாமையும் ஐநாவின் இந்த உதாசீனத்துக்கு ஒரு காரணமாக கொள்ளமுடியும். தமிழ் இனமும் பூமியில் வாழுகிறார்கள் என்று ஐநாவில் அங்கத்துவம் பெற்றிருப்பின் இன்று திரட்டப்பட அறிக்கை தள்ளிப்போவதற்கு முடியாமல் இருந்திருக்கலாம், ஆனால் அப்படி ஒரு அதிகாரம் இல்லாமையும் தற்போது தமிழர்களுக்கென்றிருக்கும் வலுவில்லாத ஊடலித்துப்போன தலைமைத்துவத்தாலும் யாராலும் எதுவும் செய்யமுடியவில்லை.
இலங்கையில் புதிய ஆட்சி நடைபெறுவது காரணமாக சில நிர்வாக நடைமுறைகளுக்கு கால அவகாசம் தேவை என்பதை ஓரளவு ஏற்றுக்கொண்டாலும் புதிய அரசுடன் சம்பந்தமில்லாத போர் சம்பந்தமான அறிக்கையை தடுத்து நிறுத்தவேண்டிய தேவை என்ன இருக்கிறது. அறிக்கையை தடுத்து நிறுத்துவதால் கொலைகாரர்களுக்கு சாதகமான காய் நகர்த்தல் ஒன்றுக்கு வழிதேடுவது தவிர வேறு என்ன ஒளிந்திருக்கமுடியும்?
உதாரணத்துக்கு ஒரு வீட்டில் பட்டப்பகலில் ஒருவன் பல படுகொலைகளை செய்தான். கொலைகாரன் யார் என்பதும் துல்லியமாக பல ஆயிரம் சாட்சியங்களுடன் வீடியோ பதிவுகளும் சேர்ந்து இனங்காணப்பட்டுவிட்டது கொலை சம்பந்தமாக அவன்மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு நடந்து வருகிறது. கொலைகாரன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுவிட்டான். அனைத்தும் தெரிந்துகொண்டு புதிதாக ஒருவர் வீட்டுக்கு குடியிருக்க வருகிறார் கொலை நடந்து ஆறு வருடங்களுக்குப்பின் புதிதாக குடி வந்தவர் வழக்கை தவணை போட்டு தள்ளிவைக்கும்படி ஏன் மனுச்செய்து மல்லுக்கட்டவேண்டும் இது எங்கோ இடிப்பதாக தெரியவில்லையா. இதை ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இடிக்கவில்லை. சம்பிரதாயத்துக்கேனும் ஏன் தமிழர் பிரதிநிதிகள் எதிர்ப்பு காட்டவில்லை.
சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு உச்ச பட்ச அரசியல்தீர்வை இந்தியாவை சார்ந்து இந்தியா மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என்று ஏதோ காரணங்களுக்காக கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
மோடி அரசும் சரி, முன்னைய காங்கிரஸ் அரசும்சரி சம்பந்தன் தரப்பை ஒரு சல்லிக்காசுக்கு மதிப்பதாக தெரியவில்லை. இந்திய தரப்பினர் ராஜபக்‌ஷவையும் ஶ்ரீசேனவையும் பூர்வீகரீதியாக தமது சந்ததி வாரிசுகளாக கருதி அரசியல் செய்து வருகின்றனர். சிங்களப்படைகள் தமிழகத்து மீனவர்களை கொன்று குவித்தபோதும் இந்திய அரசு இதுவரை ஶ்ரீலங்கா அரசை கண்டித்ததோ தண்டித்ததோ கிடையாது.
ஐநா அறிக்கை தள்ளி வைக்கப்பட்டதற்கான நெம்புகோல் இந்தியாவின் அழுத்தத்திலிருந்தே தொடங்கப்பட்டிருக்கிறது. அறிக்கை தள்ளிவைக்க கோரிக்கை வைக்கப்பட்ட மறுநாள் சிறிசேன இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈழதேசம் செய்திகளுக்காக.
கனகதரன்.

Saturday, January 31, 2015

ஶ்ரீலங்கா அரசாங்கத்தின் பொய்ப் பிரச்சாரம் அகதிகள் வாழ்வில் பெருத்த அடியாக விழும்.


ஶ்ரீலங்காவில் ஆட்சி ஒன்று மாறியிருக்கிறது, அங்கு இருந்த அரசியல்நிலை மாறி அமைதிநிலை தோற்றுவிக்கவும் பட்டிருக்கிறது,என்று ஶ்ரீலங்கா ஆட்சியாளர்களும் அவற்றை ஆமோதிக்கும் விதமாக சர்வதேச நாடுகளும் வழமைபோல பிரச்சாரத்தை தொடங்கியிருக்கின்றன.
வரவிருக்கும் ஜெனீவா மனித உரிமை அமர்வின் ஒன்றுகூடலிலும் இந்த முழக்கம் எதிரொலிக்கலாம்.
இதன் தாக்கம் முதலாவதாக அகதியாக புலம்பெயர்ந்து விசாரணை நிலையில் இருக்கும் அகதிகளுக்கான முதலாவது அடியாக விழும் என்பதில் எவருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.
குறிப்பாக இந்த பிரச்சாரம் சர்வதேசத்தின் நிதி உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் ஶ்ரீலங்காவின் ஆட்சியாளர்களும் இலங்கைக்கு உதவி வழங்கும் மேற்குலக நாடுகளிடமிருந்தும் தொடங்கியிருக்கிறது. இது இன்று நேற்றல்ல காலாகாலமாக நடந்துவரும் ஒரு வழமையான நிகழ்வுதான்.
தொடர்ந்து ஶ்ரீலங்காவை ஆட்சி செய்பவர்கள் கூறிக்கொள்ளும் கூற்றையே இன்றைய புதிய ஆட்சியாளர்களும் வழமைபோல முன்வைத்திருக்கின்றனர். ஆட்சியாளர்களின் நடைப்பயணம் இப்போதுதான் தொடங்கப்பட்டிருக்கிறது, இரண்டுகல் தூரம் செல்லும்வரை எந்தவிதமான தீர்மானத்துக்கும் வரமுடியாது என்பதே தமிழர்களின் அனுபவம்.
சர்வதேசத்திடமிருந்து அபிவிருத்தி என்ற பெயரில் நிதி உதவிகளை பெறுவதற்கான தந்திர சமிக்கையாக ஶ்ரீலங்கா ஆட்சியாளர்கள் வெளிநாடுகளுக்கும், நாட்டில் உயிர் வாழமுடியாமல் நாட்டைவிட்டு தப்பியோடும் அகதிகளை கட்டுப்படுத்தி, ஏற்கெனவே சென்று சேர்ந்த அகதிகளை திருப்பி அனுப்புவதற்காக வெளிநாடுகளும் இந்த பிரச்சாரத்தை மேற்கொள்ளுவது வழமையான ஒன்றே. இந்த பிரச்சாரத்தின் மூலம் வியப்பதற்கோ சிந்திப்பதற்கோ ஒன்றுமில்லை.
இலங்கை சுதந்திரம் அடைந்த 1948 ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை நடந்துவரும் பாராளுமன்ற முறமைக்குட்பட்ட ஜனநாயக உரிமை போராட்டம் அடுத்து நடைபெற்ற முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற உணர்வு மயமான ஆயுதப்போராட்டம், அதன் பின் 2009 மே போர் முடிவுக்கு வந்த பின்னரான ஐந்தாண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் அரசியல் வாக்குறுதிகளும் கண்கட்டி வித்தைகளும் முடிந்து, 2015 ஜனவரி 08 புதிய ஆட்சியாளர் தெரிவு, அதனைத்தொடர்ந்து மாறியிருப்பதாக கூறப்படும் அமைதி நிலை?


அமைதி நிலை பற்றிய ஒரு பிரச்சாரம் இப்போ வழமைபோல திரும்பவும் தொடங்கியிருக்கிறது. கூடவே ஒன்றாக இருந்து கும்மாளம் அடித்தவர்கள் இப்போ ராஜபக்‌ஷவை காட்டிக்கொடுப்பது மிகப்பெரிய சாதனை அரசியலாக காட்டப்படுகிறது ராஜபக்‌ஷவின் ஊழலுக்கும் தமிழர் அடிப்படை அரசியலுக்கும் என்ன சம்பந்தம் என்பதே பலருக்கு புரியவில்லை.
இலங்கையில் தமிழர்களுக்கான நீண்ட நெடிய காலமாக ஏமாற்றப்பட்டு தட்டிக்கழிக்கப்பட்டுவரும் ஈழத் தமிழர்களின் தேசிய அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு, ஒப்பந்தம் கைச்சாத்து என்ற வழமையாக நடைபெற்று குப்பைக்கூடைக்குள் சென்றடையும் சம்பிரதாய முறைமைகளைத் தாண்டி நடைமுறையில் ஒளிவு மறைவு இல்லாத ஒரு ஆரோக்கியமான அரசியல் செயற்பாடு ஒன்று தமிழர்களின் கைகளில் நடைமுறைக்கு வரும்வரை ஶ்ரீலங்கா ஆட்சியாளர்களோ சர்வதேச நாடுகளோ கூறிக்கொள்ளும் ஶ்ரீலங்காவில் அமைதி என்ற சுலோகம் சுலோகமாக மட்டுமே பார்க்க முடியும்.
ஶ்ரீலங்காவில் ஒவ்வொரு ஆட்சி மாற்றங்களின்போதும் அகதிகளின் வரவை குறைக்கவேண்டும் என்பதற்காக இப்படியான பிரச்சாரங்களில் ஈடுபடுவது ஐரோப்பிய நாடுகள் சிலவற்றின் வெளியுறவு கொள்கையாகவும்,. அதேபோல உயிரை பாதுகாப்பதற்கு அகதியாகி இடம்பெயர்ந்து வேறொரு பாதுகாப்பான நாட்டுக்கு சென்று தனது பாதுகாப்பு அற்ற நிலையை அகதியான ஒருவர் தனது தர்ம சங்கடத்தை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்துவதும்தான் தமிழர்களின் தரப்பு வெளியுறவு செய்தியாக இருந்து வருகிறது.
தமிழர்கள் தமது தரப்பு பாதுகாப்பு இன்மையை நாடு கடந்து வேறொரு நாடுகளில் தஞ்சமடைந்து அகதிகளாக தம்மை பதிவு செய்வதன்மூலமே தனது இனத்தின்பால் நடைபெறும் பாதுகாப்பு இன்மையை மனித உரிமை மீறலை சர்வதேச அரங்கத்துக்கு வெளிப்படுத்தி வருகின்றனர்.
தற்போது ஶ்ரீலங்காவில் நடந்து முடிந்த தேர்தல் அதன்மூலம் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் இலங்கை ஆட்சியாளர்களின் நீண்டகாலமாக பட்டுணர்ந்த அனுபவங்கள் நியாயமாக தமிழர்கள் வாழ்வில் ஒரு நல்ல திருப்பத்தை கொண்டுவருவதாகவே இருக்கட்டும். அவை அனைத்தும் செயற் திட்டங்களாக மாற்றப்பட்டு தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அங்கீகார அரசியற் செயற்பாடு ஒன்று அங்கு நிகழும்வரை பிரச்சாரங்கள் பிரச்சாரங்களாகவே இருந்துகொண்டிருக்கும் என்ற உண்மையை உலகமும் ஶ்ரீலங்கா ஆட்சியாளர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
மேற்கூறிய விடயத்தின் முன்னோட்டமாக இலங்கையில் தமிழர்களின் எதிர்காலம் என்ன? என்ற கருத்தின் கீழ் பிரித்தானிய பொதுச்சபையில் ஆரோக்கியமான விவாதம் ஒன்று நேற்று நடைபெற்றிருந்தது.
விவாத்தின்போது தமிழர்களின் அனைத்து அரசியல் நிலவரங்களும் பேசப்படா விட்டாலும் முக்கியமான சில விடயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதில் திருப்திப்பட்டுக்கொள்ள முடியும்.
இலங்கையில் நடைபெற்று முடிந்த தமிழர் இன அழிப்பை தடுத்து நிறுத்துவதிலிருந்து சர்வதேச சமூகம் தோல்வி கண்டுள்ளதாக பிரித்தானிய நாடாளுமன்ற பொதுசபையில் கலந்துகொண்ட சிலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இனப்பிரச்சினைக்கான தீர்வானது சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வாக அமைய வேண்டும். அதுவே இனப்பிரச்சினைக்கான அடிப்படை காரணத்தை இல்லாமல் செய்யும் என்று தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட் தெரிவித்திருந்தார்.
“அதேவேளை இலங்கையின் புதிய அரசாங்கமும். தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவ சூன்யத்தை ஏற்படுத்துவது தொடர்பில் எந்த ஒரு மாற்றத்தை ஏற்படுத்தாது என்ற நிலை உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்”.
எனவே இலங்கை மீது சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்கால கடன் திட்டங்களின் போது அழுத்தம் கொடுப்பதன் மூலம் தமிழர்கள் தொடர்பிலான கொள்கையில் மாற்றங்களை கொண்டு வர உந்துதலை அளிக்க முடியும் என்றும் லீ குறிப்பிட்டார். இது அவரது ஆலோசனை மட்டும் என்பதாகவே கொள்ள முடியும்.
சிறீலங்காவின் புதிய ஜனாதிபதி, மைத்திரிபால ஶ்ரீசேன ஏற்கனவே பதவியில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கட்சியை சேர்ந்தவர் என்ற யதார்த்த உண்மையையும் லீ பதிவு செய்தார்.
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இறுதிப்போரின் போது பாதுகாப்பு அமைச்சராக இருந்தமையை பொதுச்சபை கருத்தரங்கில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சியோப்ஹெய்ன் மெக்டோனாக் குறிப்பிட்டு சுட்டிக்காட்டினார்,.


சிறீலங்கா அரசாங்கம் அரசியல் தீர்வை காண வேண்டும் என்ற நிலையில் தமிழர் பிரதிநிதிகளும் அதற்கான முனைப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் சியோப்ஹெய்ன் மெக்டோனாக் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரொபேட் ஹாபென் உரையாற்றும் போது, இலங்கையில் தமிழர்கள், பல தசாப்தங்களாக துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பலர் இன்னும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் செனொன் உரையாற்றும் போது, வன்னியில் சுமார் 150000 சிங்கள படையினர் நிலைகொண்டிருப்பதால், அங்கு சிங்களமயத்திட்டம் மேற்கொள்ளப்படலாம் என்றும் ஐயம் தெரிவித்தார். தமிழ் பிரதேசங்களில் உள்ள 05 பொதுமக்களுக்கு ஒரு இராணுவவீரர் என்ற அடிப்படையில் படையினர் நிலைகொண்டுள்ளதாகவும் ,அதனால் வடக்கில் பெண்கள் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு ஆளாகின்றனர் என்றும் திருமணம் செய்துக்கொள்வதாக உறுதியளித்தும் அல்லது பணத்துக்காகவும் சிங்கள படையினர் சில தமிழ்பெண்களுடன் பாலியல் உறவை மேற்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளெக்மேன் தமது உரையில், இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மெக்டொனல், தமது உரையின் போது போர்க்குற்றச்சாட்டுக்கான உள்நாட்டு விசாரணை என்ற திட்டத்தை முழுதாக நிராகரித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கெரி மெக்கார்தி, புதிய ஜனாதிபதி இலங்கையில் முன்னேற்றமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.வடக்கில் இருந்து இராணுவம் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்
நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் லிங்டன், இலங்கையில் நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகளின் போது பாரிய சவால்கள் இருப்பதை புறந்தள்ளிவிட முடியாது என்று குறிப்பிட்டார்.
இவை அனைத்தும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டபோது விவாதிக்கப்பட்ட விடயங்களாகும். அந்த விவாதத்தின் கருத்தியலில் ஒரு நியாயம் இருப்பதயும் புறந்தள்ள முடியாது.
அந்த கருத்து கோவையை இலங்கை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டுமாயின் இலங்கையில் செயற்பாட்டிலிருக்கும் தமிழ் அரசியற் கட்சிகள் மற்றும் தமிழர்பால் செயற்படும் அமைப்புக்கள் இலங்கை பாராளுமன்றத்திலும் தீர்வுக்கான பேச்சுவார்த்தை விவாதங்களின்போதும் ஒருமித்து அக் கருத்துக்கொப்ப செயற்படவேண்டியவர்களாக இருக்கின்றனர்.
அது நடைபெறுமா என்பது மில்லியன் டொலர் கேள்வியாக இருந்தாலும் பிரித்தானிய பொதுச்சபையின் கருத்தியல் தீர்மானங்களை திசைகாட்டியாக முன்னிலைப்படுத்தி “டப்ளின் மக்கள் தீர்ப்பாயம்” 2009ஆம் ஆண்டு போரின் போது தமிழ் மக்கள் மீது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் இழைக்கப் பட்டிருந்ததை 2010 ஜனவரியில் அயர்லாந்தின் டப்பிளின் நகரில் விசாரணையில்,
நிரூபிக்கப்பட்ட

1. சிறிலங்க அரசு போர்க் குற்றவாளியே.
2. சிறிலங்க அரசு மானுடத்திற்கு எதிரான குற்றம் இழைத்துள்ளது.
3. சிறிலங்காவிற்கு எதிரான இனப் படுகொலை குற்றச்சாட்டின் மீது மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும். என்ற டப்ளின் தீர்மான ஆவண சான்றின் திசை காட்டுதலை முன்னிலைப்படுத்துவதுபோல பிரித்தானிய பாராளுமன்ற பொதுச்சபை உறுப்பினர்களின் ஒன்றுகூடல் தீர்மானங்களை திசைகாட்டியாக முன்னிலைப்படுத்தி அரசியற் பேச்சுவார்த்தைகளை நகர்த்த முயற்சிக்கவேண்டும்.
இது ஒரு ஆதாரம் மட்டுமே என்றாலும் இன்றைய நிலையில் பல்வேறு காரணங்களினால் அகதியாகி வெளிநாடுகளில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்திருக்கும் பல அகதிகள் விடயத்தில் புதிய அரசாங்கத்தின் வாய்ப்பேச்சை மட்டும் முடிந்த தீர்மானமாக கருதி ஒரு முடிவுக்கு வரமுடியாது என்பதை தமிழர் அரசியலின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.
ஶ்ரீலங்காவில் தமிழர்களுக்கான அரசியல் நிர்ணயம் செய்யப்பட்டு இடைக்கால சபை ஒன்று நிறுவப்பட்டு இராணுவம் வெளியேற்றப்பட்டு சிவில் அதாவது பொலீஸ் நீதி நிர்வாகம் மேலாண்மை கொள்ளுமிடத்தில் அகதிகள் திரும்பிச்செல்வது மக்களின் பாதுகாப்புக்கு பங்கமில்லமல் இருக்கும். என்பதை தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்கள் கருத்தில் கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றனர் என்பதை ஊன்றி பதிவு செய்ய முடியும்.
நாட்டில் பிரச்சினை இல்லை என்றால் இராணுவத்துக்கு அங்கு வேலையில்லை. இராணுவம் அங்கு நிலை கொண்டிருக்கும்வரை பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருக்கும் என்பது சர்வதேச சித்தாந்தம்.
அரசியல் வேலைத்திட்டத்தின் முதல் நகர்த்தல் இராணுவ வெளியேற்றம் என்பது உறுதிப்படுத்தப்படும்வரை தமிழர்களுக்கான பாதுகாப்பை எவரும் கொண்டுவரமுடியாது.
ஈழதேசம் செய்திகளுக்காக.
கனகதரன்.