Sunday, July 24, 2011

ராஜபக்க்ஷவுக்கு உதவிய இந்தியாவும் போர்க்குற்றவாளியே. அம்பலப்படுத்துவோம்..


ஈழத்தின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, ஸ்ரீலங்கா அரச இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை குற்றச்செயல்கள், மற்றும் மனித உரிமைமீறல்கள் தொடர்பில் விசாரணைசெய்ய, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டிருக்கவில்லை. எனவே இலங்கையை விசாரணைக்குட்படுத்தும் தகுதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இல்லை என நீதிமன்றின் தலைவர் சாங் ஹியூங் சொங் தெரிவித்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விதிமுறைகளுக்கு புறம்பாக செயற்படக்கூடிய முகாந்திரம் எதையும் தன்னகத்தே கொண்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்..

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறித்த ரோம் பிரகடனத்தில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இலங்கை உள்ளிட்ட சிலநாடுகள் கைச்சாத்திடவில்லை. எனவே ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் பரிந்துரை இருந்தாலன்றி தன்னிச்சையாக விசாரணைகளை முன்னெடுக்க முடியாது என்ற நடைமுறையை அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சில நாடுகள் பிரகடனத்தில் கைச்சாத்திடாத காரணத்தினால் சில சர்வாதிகார அரசுகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் அங்கம்வகிக்கும் நாடுகளில் வீற்றோ (நிராகரிக்கும் அதிகாரம்) அதிகாரம் உடைய நாடுகள் ஐந்தில், ரஷ்யாவும் சீனாவும், இலங்கைக்கு சாதகமாக எதிர்நிலையில் நிற்கின்றன. இதனால் போர்க்குற்ற வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாதிருக்கிறது.

சீனா, ஸ்ரீலங்காவின் நட்புச்சக்தி என்பதாலும், ரஷ்யா, இந்தியாவின் பாலிய நண்பன் என்பதாலும், கூட்டாக படுகொலை குற்றச்செயலில் ஈடுபட்ட நாடுகளான ஸ்ரீலங்காவையும், இந்தியாவையும், காப்பாற்றும் பொருட்டு அவ்விரு நாடுகளும் சர்வதேச மனிதாபிமான கருத்துக்கு எதிராக ஐநா பாதுகாப்புச்சபையில் முரண்பட்டு நிற்கின்றன.

"மாற்றம் ஒன்றுதான் மாறாதது" என்ற தத்துவத்திற்கமைய குறித்த நாடுகளின் ஆட்சி மாற்றங்கள் நிகழும்போது, வெளியுறவுக்கொள்கை ஒரே சீராக நீண்டகாலங்களுக்கு அப்படியே இருக்கப்போவதுமில்லை.

ஏற்கனவே 2009ம் ஆண்டு போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த போது, மெக்சிக்கோவும், கோஸ்டாரிக்காவும் பாதுகாப்புச் சபையில் சிறிலங்கா விவகாரத்தை விவாதிக்க எடுத்த முயற்சிகளை ரஷ்யாவும், சீனாவும் இணைந்து தடுத்திருந்தன. இப்போ 2011ல் நிபுணர்கள் குழு அறிக்கையை பாதுகாப்புச்சபையில் விவாதிப்பதற்கும் சீனா, ரஷ்யா, ஆகிய இரு நாடுகளும் தமது எதிர்ப்பை மீண்டும் வெளிப்படுத்தின. இவற்றின் உந்து சக்தியாக இந்தியா இருந்துவருவதாக நம்பகமான குற்றச்சாட்டுக்கள் உண்டு.

இவைகளில் சீனா இந்துசமுத்திர பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை ஸ்திரப்படுத்த வேண்டிய இராசதந்திரம் இருப்பதால் இலங்கையை தனது கட்டுக்குள் வைத்திருக்கவேண்டிய நலன் சார்ந்து இலங்கைக்கு ஆதரவாக நிற்கவேண்டிய தேவையிருக்கிறது. ரஷ்யாவுக்கு அந்தத்தேவை இருக்கவில்லை.

ரஷ்யாவினுடைய பலவருட பாலிய நண்பனான இந்தியாவின் தற்போதய அமெரிக்க சார்பை குறைக்கும்பொருட்டு இந்தியாவின் கோரிக்கைக்கு ரஷ்யா கட்டுப்பட்டு இலங்கைக்கு சாதகமாக செயற்படுவதை காணலாம்.

இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இலங்கைக்கான பொருளாதாரத்தடை விதிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இத்தீர்மானம் தொடர்பில் அதிபர் பாரக் ஒபாமாவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹவார்ட் பேர்மன், முன் மொழிந்தார். அதன் போது இலங்கை மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும் எனவும், ஊடக சுதந்திரமின்மை, அவசரகால சட்டம் அமுலில் இருத்தல் என்பன தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

இத்தீர்மானத்தின் படி இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை தவிர்ந்த ஏனைய அனைத்து நிதி உதவிகளையும் நிறுத்துவதற்கு அமெரிக்க காங்கிரஸ் வெளிநாட்டு விவகார குழு அனுமதி வழங்கியுள்ளது. இத்தீர்மானம் உடனடியாக நடைமுறைக்கு வந்தாலும், வராது விட்டாலும், யுத்தக்குற்றத்திற்கு எதிராக உலகநாடுகள் அணிவகுக்க முற்பட்டுவிட்டன என்பதை சந்தேகமில்லாமல் நம்பமுடியும்.

அமெரிக்க காங்கிரஸ் எனப்படும் அமெரிக்க நாடாளுமன்றம் எழுந்தமானத்தில் இத்தீர்மானத்தை இயற்றிவிடவில்லை, என்பதை உணர்ந்துகொள்ளலாம். பலதரப்பட்ட ஆவணங்கள் சட்ட ஆய்வுகளுக்கு பிற்பாடே உலகில் மிகப்பலம்வாய்ந்த அமெரிக்கா போன்ற ஒருநாடு இப்படியான ஒரு முடிவுக்கு வந்திருக்க முடியும்.

சனல் 4 தொலைக்காட்சியின் கொலைக்களம் இறுவட்டு ஒன்று மட்டுத்தான் அமெரிக்காவின் பொருளாதாரத்தடைக்கு காரணமாக இருக்கமுடியாது. ஏற்கெனவே நீண்டகாலமாக கிடைத்து வந்த உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஆதாரங்களுடன் இறுதியில் நம்பகத்தன்மையுடன் வெளியான சனல்4 காணொளிக்காட்சிகளும் ஆவணமாக அதிக வலுவை அமெரிக்காவுக்கு வழங்கியிருக்கிறது.

இப்படியான ஒரு நிலை ஈழத்தமிழர் தரப்பில் எதிர்பார்த்த ஒரு நிகழ்வுதான். என்றாலும், இலங்கைக்கு எதிரான பொருளாதாரத்தடை போன்ற நடவடிக்கைகள், ஒரு சிறிய நாட்டிலிருந்துதான் தொடங்கும் என எதிர்பார்த்த வேளையில். மிக உச்சத்திலுள்ள அமெரிக்கா அந்த சமிக்கையை காட்டியிருப்பது இன்னும் பல நாடுகளை இலங்கைக்கு எதிராக செயற்படவைக்கும்.

அமெரிக்காவின் தீர்மானம் இலங்கை கிரிக்கெட் விளையாட்டிலும் நிச்சியம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் அதற்கான முஸ்தீபுகளில் ஏற்கெனவே அவுஸ்ரேலிய கிறிக்கற் அணி முனைப்பாக உள்ளதாக தெரிகிறது.

இந்தியா அதைச்செய்யும் இதைச்செய்யும் என்பதெல்லாம் நடக்கப்போகும் ஒன்றல்ல. இந்திய மத்திய அரசிடம் ஈழத்தமிழரின் தீர்வுக்கான கோரிக்கை வைப்பதெல்லாம். நேர விரையமும் வீண் முயற்சியுமாகும்.

இந்த தீர்க்கதரிசனத்தை தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னே உணர்ந்திருந்தார். இருந்தும் சில இராசதந்திர நகர்வுகளுக்காக அவர் எதையும் வெளிக்காட்டி அலட்டிக்கொள்ளவில்லை.

வெளியிலிருந்து தீர்வு வாங்கித்தரும்படி கேட்டு இந்தியாவை தொழுது கையேந்தி நிற்பதாவது, இந்தியாதான் ஈழமக்களுக்கு தீர்வை ஏற்படுத்தி தரவல்ல முக்கிய பங்காளி என்று சர்வதேசத்தில் இனம் காட்டுவதற்கும், இந்தியாவின் திருட்டுத்தனமான இரட்டை வேசத்தை மறைக்க உதவுமே தவிர கால்க்காசுக்கு பலன் கிடைக்கப்போவதில்லை.

தமிழகத்தின் ஆட்சியாளர்களின் நெருக்குதல் இருந்தாலன்றி, காங்கிரஸ் அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதுமில்லை. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருப்பதால் முதல்வர் அவர்களின் நெருக்குவாரம் ஒன்று மட்டும், இந்திய மத்திய அரசுக்கு அரசியல் ரீதியான சங்கடத்தை உண்டுபண்ணக்கூடியது.

முதல்வர் ஜெயலலிதா தவிர்ந்த மற்றய சிறிய கட்சிகள், தங்கள் முகவரியை தொலையாமல் வைத்திருப்பதற்கு மட்டும். அவர்கள் தொடர்ச்சியாக போட்டுக்கொண்டிருக்கும் மத்திய அரசிற்கு எதிரான ஈழக்கோசம் உதவக்கூடும்.

இதனால் சர்வதேச மட்டத்தில் ஈழ தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய முக்கிய சக்தி இந்தியா என்கிற பிம்பம் இருந்துகொண்டிருப்பதற்கு உதவும். இத் தந்திரத்தை இந்தியாவும் நன்கு உணர்ந்திருப்பதால் ஈழப்பிரச்சினையில் தனது பங்கு உயிர்ப்பு நிலையில் இருப்பதாகவே இந்தியா தொடர்ந்து காட்டி வந்திருக்கிறது.

இதனால் சர்வதேச மட்டத்தில்க்கூட, ஈழப்பிரச்சினையிலிருந்து இந்தியாவை தள்ளி வைக்க முடியாத இராசதந்திர சங்கடம் தொடர்ச்சியாக இருந்து வருவதைக்காணலாம்.

இந்தியாவும் சளைக்காமல் வருடத்திற்கு நான்குமுறை ஈழப்பிரச்சினையை கையிலெடுத்து ஸ்ரீலங்காவுக்கான போக்குவரத்தும், பேச்சுவார்த்தையும், என்று தனது அழுக்கு முகமூடியை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. இதுகூட ஒருவகையான கிலிசகேடான அருவருப்பான இராசதந்திரம்தான்.

இன்றய நிலையில் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு மட்டும் ஈழப்பிரச்சினையில் நல்ல ஒரு மாற்றத்தை கொண்டுவரக்கூடிய களம் ஒன்று கிடைத்திருக்கிறது. (இதை குளப்புவதற்கு பல சக்திகள் திரைமறைவில் போட்டி போடுகின்றன.)

இச்சந்தற்ப்பத்தை பயன்படுத்தி ஈழமக்கள் பற்றிய முழுப் புரிதலை முதலமைச்சர் அவர்களுக்கு இன்னும் அதிகமாக ஏற்படுத்தி, தமிழகத்தின் சிறிய கட்சிகள். அமைப்புக்கள் அனைத்தும் தமிழக அரசுடன் இணைந்து முதலமைச்சரின் செயற்பாட்டுக்கு வலுச்சேர்த்து மத்திய அரசை இக்கட்டுக்குள் தள்ளலாமே தவிர, தனித்து நின்று எதையும் சாதிக்கப்போவதில்லை.

போர்க்குற்றம் சம்பந்தமாக ஸ்ரீலங்கா அரசு இன்று எவ்வளவு உலகநெருக்கடியில் சிக்கியுள்ளதோ, அதேயளவு நெருக்கடி இந்தியாவுக்கும் உண்டு. ராஜபக்க்ஷ எங்காவது ஒரு குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரானால், ராஜபக்க்ஷ மூலம் இந்தியாவின் முகமூடி கிழிக்கப்படும் அபாயம் இருக்கிறது. அந்தப்பயம் காரணமாகவே போர்க்குற்றத்தை பூசி மெழுகி ராஜபக்க்ஷவை காப்பாற்றிவிட இந்தியா முனைப்புக்காட்டிக்கொண்டிருப்பதை காணலாம்.

பின் விளைவுகள் எதையும் சிந்திக்காமல். காட்டுமிராண்டித்தனமாக போர்க்குற்றத்தில் பங்குபற்றி, ஸ்ரீலங்காவுக்கு இந்தியா உதவியிருந்தது. குறுமுட்டான திட்டங்களும் அதரப்பழசான சட்டங்களையும் கையாள பழக்கப்பட்ட இந்தியா இவ்வளவு விரைவில் சர்வதேசம் விழித்துக்கொள்ளுமென எதிர்பார்க்கவில்லை.

இன்று அமெரிக்காவின் பொருளாதாரத்தடை வெளிவந்திருக்கும் சமையத்தில் அதிலிருந்தும் இலங்கையை காக்க நிச்சியம் இந்தியா முயலக்கூடும். அல்லது அமெரிக்காவுக்கு மாற்றீடாக ஸ்ரீலங்காவிற்கு இந்தியா நிதியுதவியும் செய்ய முன்வரலாம். ஆனாலும் அமெரிக்கா அளவிற்கு நிதி உதவி செய்யக்கூடிய தகுதியும் இந்தியாவிடம் கிடையாது.

எது நடந்தாலும் ஒரு குறுகியகால நிவாரணமாக இருக்குமே தவிர ராஜபக்க்ஷவை காப்பாற்றி போர்க்குற்றத்தை நீண்டகாலத்திற்கு இழுத்து மூடிவிட இனி எவராலும் முடியாது.

ஈழப்போரின்போது கணிசமான ஆயுத உதவிகளை இந்தியா செய்திருந்ததென்றும், இராணுவ ரீதியான பங்களிப்பிலும் இந்தியா ஈடுபட்டதற்கான ஆதாரங்கள். செய்திகளாக சில காலங்களுக்கு முன் பரவலாக வெளிவந்தன, பின் அதுபற்றிய தரவுகள் எதோ காரணங்களினால் தமிழர் தரப்பிலிருந்துகூட இடை நிறுத்தப்பட்டதுபோல் காணப்படுகிறது. ஒரு தருணத்தில் இந்தியப்பிரதமர் மன் மோஹன் சிங், ஸ்ரீலங்காவுக்கு ஆயுதம் வழங்கியதை ஒப்புக்கொண்டுமிருந்தார்.

எனவே யுத்த குற்ற காணொளிகளில் இந்திய இராணுவ பங்கு பற்றிய ஆதாரங்களையும் தமிழ்த்தரப்பு தேடி கண்டுபிடித்து அம்பலப்படுத்தவேண்டிய தேவையும் இருக்கிறது. பல இடங்களில் ராஜபக்க்ஷவின் சகோதரர்களும் அரசின் உயர்மட்ட அமைச்சர்களும் இந்தியாவின் பங்களிப்பே போரில் வெற்றிகொள்ள முடிந்தது என்பதை பலமுறை பகிரங்கமாக தெரிவித்துமிருக்கின்றனர்.

அந்த தரவுகளின் அடிப்படையில் இந்தியாவை தோலுரிக்கவேண்டிய தேவை தமிழினத்துக்குண்டு. சூட்டோடு சூடாக காரியமாற்ற முயல வேண்டும். ஸ்ரீலங்காவின் அரச பயங்கரவாதிகளுடன், இந்திய அரசின் பயங்கரவாதிகளையும் உலகுக்கு இனங்காட்டவேண்டிய தேவை தமிழினத்துக்குண்டு.

இந்தியா ஒருபோதும் தமிழருக்கு சாதகமாக நடந்ததுமில்லை, நடக்கப்போவதுமில்லை. இறுதிக்கட்ட போரின்போது இலங்கைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்த ஒரு தமிழனை இந்தியா தெரிவு செய்திருக்கவில்லை.

பேச்சுவார்த்தை என்று ஸ்ரீலங்கா சென்று நாடகம் நடத்தியவர்கள் எவரும் தமிழர்கள் அல்லாதவர்களே. அந்த விடயத்தில்க்கூட இந்தியா மிக கவனமாக நச்சுத்தனமாக நடந்து வந்திருக்கிறது. மலையாள நாராயணன், சிவ்சங்கர் மேனன். கன்னட நிருபாமா ராவ், கிருஷ்ணா, ஹிந்தி பிரணாப் முகர்ஜி. ஆகியோரே. திருகுதாளங்களில் ஈடுபட்டிருந்தனர்.

சாதாரண தூதுவர்களாக அமர்த்துவதற்கே இந்தியா ஒரு தமிழனை நம்பத்தயாராக இல்லை. இந்த லட்சணத்தில் இந்தியா கிண்டி கிளப்பும் என்று கனவுகூட காணக்கூடாது. விரோதியை விரோதியாகவே பார்க்கவேண்டும்.

இன்றய கட்டத்தில் இந்தியாவின் குற்றச்செயல்களையெல்லாம் வெளியில் கொண்டுவந்து அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழ் ஊடகங்களுக்குண்டு. எதிரியை நம்பலாம் ஆனால் இந்தியா போன்ற குழிபறிக்கும் துரோக சக்திகளை காலத்துக்கும் தமிழன் மறக்கக்கூடாது.

ஈழதேசம் இணையத்திற்காக
கனகதரன்,

நன்றி ஈழதேசம் இணையம்.

No comments: