= கரும்புலிகள் காவிய நாள் ஜூலை, 05, 2011=
கால வயல்ப் பரப்பில்
கதிரியக்கம் ஒன்று
கரவெட்டியில்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தாறின்
ஜனவரித் திங்கள், ஒன்றில்,
ஓங்காரச் சுடராக ஒளிர்ந்து
பாலனாக பிறந்தபோது,
யாரும் நினைத்திருக்கவில்லை-அது
உலக அதிசயமாகுமென்று.
ஜூலை ஐந்து எண்பது ஏழில்
இடி முழக்கத்துடன் பிரளயமாக
இரவை பகலாக்கி
காலப்பதிவாகிய
அந்த அகோர அதிர்வு,
எனக்கும் என் உறவுகளுக்கும்
வசந்தம் வேண்டும் என்பதற்காக.
இருபது வருட இளமையை
விடுதலைக்கு இரையாக்கி
இரத்த சகதியாகி, தனலாகி
தற்கொடை சந்தனமாகுமென்று
கனவில்க்கூட எவரும் நினைக்கவில்லை.
மெல்லிய மனித உணர்வனைத்தையும்
வல்லினமாக்கி,
"மில்லராய்"
எதிரியின் கோட்டத்தை
ஒரு நொடியில் உலுக்கிய
அந்தக் கதிரியக்கம்,
தன்னலமில்லாமல் தன்னை மறந்து
உலகை திரும்பி பார்க்க வைத்தது.
தமிழ் இனத்தின் வசந்தத்துக்காக
வல்லிபுரம் பெற்றெடுத்த வசந்தன்
"மில்லராய்" மீளாத் துயில் கொண்ட நாள்.
கரும்புலி என்ற பரிமாணத்தை
காவியமாக்கி கல்வெட்டாக்கிய நாள்
பூமி உருண்டையில்
புள்ளியாய் இருந்த மாங்காய்த் தீவை
மலையாக உலகிற்கு காட்டிய வேள்வி நாள்,
நான் இருக்கும்வரை-என்
சந்ததி இருக்கும்வரை
உலகம் இருக்கும்வரை
தற்கொடையான
"மில்லர்" என்ற மாபெரும் கதிரியக்கம்,
நீக்கமற நிலையாக
தமிழர் நெஞ்சத்தில் நிறைந்திருக்கும்,
வான நட்சத்திரக் கூட்டத்தில்
வித்தியாசமான துருவ நட்சத்திரமாக
நேர் கோட்டில் நின்று
ஈழம் நோக்கி
நிச்சியம் ஒளி பகர்ந்து கொண்டேயிருக்கும்.
பால் பழம் படைக்காவிட்டாலும்
வெஞ்சினத்தோடு போராடி
மண்ணோடு விதையாகி வேராகி
விடுதலை தேடிய மறவர்களின்
நெஞ்சத்தை, உணர்வுடன்
நினைந்து போற்றுவோம்.
எமது சிறுமையான வஞ்சகத்தை மறந்து
நேர்வழிக்கான பாதையை
நிச்சியம் அவர்கள் காட்டுவார்கள்.
>ஊர்க்குருவி<
நன்றி ஈழதேசம் இணையம்.
No comments:
Post a Comment