உலக சித்திரவதைகள் படுகொலைகள் (எதிர்ப்பு) தினம் ஜூன் 26, அன்றய தினம் ஈழத்தமிழினத்தின் படுகொலைகளின் நினைவாக தமிழ்நாடு சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்ந்து முடிந்திருக்கிறது.

'மே17, என்ற ஈழத்தமிழர்கள் ஆதரவு அமைப்பால் இதயபூர்வமாக நினைவுகூரல் ஏற்பாடு செய்யப்பட்டு மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செய்யும் நினைவேந்தல் சிறப்பாக இடம்பெற்றது.

முக்கியமான ஈழ ஆதரவு அமைப்புக்களான, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், மதிமுக, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், உள்ளிட்டோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இந் நினைவு நிகழ்வின்போது, முன்னைய தமிழகத்து ஆட்சியில், தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் அளவுக்கு கடுமையாக இருந்த பொலீஸ் கெடுபிடி இருக்கவில்லை. பொலீஸ் கெடுபிடி இல்லாமைக்கு இன்றைய அ.இ.அ.தி.மு.க. அரசின் ஈழ ஆதரவு, எதிர்ப்பின்மை. அல்லது தமிழ்நாடு அரசு தமிழக மக்களின் மனநிலைக்கு மதிப்பளித்திருக்கிறது எனக்கொள்ள முடியும்.

நிகழ்வின் சிறப்பம்சம் என்னவென்றால் அரசியல் கலப்பற்ற ஒரு அமைப்பான, மே17 இயக்கம், இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருத்தது. மே17, அமைப்பைப்பொறுத்தவரை அவர்களின் தொடர் நடவடிக்கைகளை கவனிக்கும்போது, அவர்கள் உணர்ச்சிமயமான செயற்பாட்டை விட அறிவுபூர்வமாக செயற்படுவதையே நோக்கமாக கொண்டியங்கி வருவது தெரிகிறது.

ஒரு சில அமைப்புக்கள் தவிர, தமிழ்நாட்டின் அனேக அரசியல்கலப்பான அமைப்புக்கள் ஈழ ஆதரவு தளத்தில் சுயநலமான ஏதேதோ நோக்கத்தோடு ஈழ கோசத்தை விட்டு விலகாமல் இரும்புப்பிடியோடு இருந்தாலும், இன்றுவரை அவர்களால் ஈழத்தமிழினத்திற்கு எந்தப்பயனும் விளைந்திருக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

தமிழகத்திலுள்ள அனேக அமைப்புக்கள் மக்களின் உணர்வை தூண்டிவிட்டு தாம் சொகுசாக வாழுவதற்கே முழு முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கின்றன. அவைகளின் செயற்பாடுகள், குமுறி கொந்தளிக்கும் மக்களின் உணர்வை அவ்வப்போது கட்டுக்குள் கொண்டுவரும் கோசங்களாகவும், வெற்று தீர்மானங்களாகவும், தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ள உகந்த ஏமாற்றாகவே உள்ளடி வேலைகளை திரைமறைவில் நிகழ்த்தி தமிழ்நாட்டில் வாழ்ந்திருக்கின்றன.

இவைகளில் முன்னணியில் உள்ள திமுக, மற்றும் விடுதலைச்சிறுத்தைகள், பாமக போன்ற சுயநலன் சார்ந்த அரசியல் கட்சிகளை இனங்காண முடியும். இந்த அமைப்புக்கள்தான் தமிழ்நாட்டின் ஈழ போராட்ட எழுச்சியின் அழிவுக்கு காரணமான சக்திகள் என்பதும் உலக மூலையில் இருக்கும் ஒவ்வொரு சாமானியத் தமிழனும் அறிவான்.

கருணாநிதியின் திமுக வை பொறுத்தவரை தனது குடும்ப முன்னேற்றம் தவிர்ந்து, என்றைக்கும் அக்கட்சி ஈழத்தமிழருக்கு ஆதரவாக கடுகளவும் நேர்மையாக இருந்ததில்லை.

ஈழப்போராட்ட ஆரம்பத்திற்கு முன்பிருந்தே, தமிழ்நாட்டில் அதிக தொண்டர்களை கொண்ட கட்சிகளாக அதிமுக, மற்றும் திமுக, போன்ற கட்சிகள் இருந்து வருகின்றன.

தமது கட்சி கட்டுப்பாட்டின் இருப்பிலிருக்கும் தொண்டன் திசைதிரும்பி வெளியேறிவிடாமல் தடுப்பதற்காக, ஈழ வித்தையும், தமிழ்வேசம் போடவேண்டிய தேவையும் அவர்களுக்கு இருந்ததுண்டு. ஈழம் கொலைக்களமானபோது தொண்டனின் மனக்குமுறலான கொந்தளிப்பு நிலையை ஏற்றுக்கொண்டதுபோல் காட்டிக்கொள்ள பல்வேறு நாடகங்களும் தந்திரமும் கருணாநிதி, திருமாவளவன், ராமதாஸ் போன்றோரிடம் இரண்டறக்கலந்து அவர்களது பிறப்பு வாசியாக இன்றும் தொடர்கிறது.

கருணாநிதியின் அரசியல் வாழ்வில் தமிழீழத்திற்கென்று 1958 இருந்து 2011 வரை மில்லியன் கணக்கான வாக்குறுதிகளும் தீர்மானங்களும், அனுமன் வால்போல அவர் சளைக்காமல் பட்டியல் இட்டு தனது குடும்ப சுகத்தை நிறைவேற்ற உதவியிருக்கிறது.

2011 ஏப் நடந்த சட்டமன்றத்தேர்தல், ஈழப்படுகொலைக்கு துணை நின்ற தமிழகத்து துரோகிகளை களங்கமற இனங்காட்டியது. ஈழப்படுகொலைக் கோபம், இந்த நாடக அரசியல் பண்டிதர்களின் புலுடாவால் கட்டுப்படுத்த முடியவில்லை. துரோகத்தின் வேசம் கலைக்கப்பட்ட தேர்தலாகவும், திமுக, விடுதலைச்சிறுத்தைகள். மற்றும் பாமகவுக்கு, சரியான சூடு வைத்த தமிழகமக்களின் வெற்றியாகவும் 2011ஏப் வரலாற்றில் அமைந்துவிட்டது.

இன்று ஆட்சியிலிருக்கும் ஜெயலலிதா அவர்களின் அதிமுக, பகிரங்கமான ஈழ, புலி, எதிர்ப்பு கட்சி என்று பலரும் பார்க்கமுடியும். இதில் உண்மையில்லாமலும் அல்ல, ஆனால் அக்கட்சி இன்று மக்களின் மனவோட்டத்தை உணர்ந்து யதார்த்தத்தை ஓரளவு புரிய தலைப்பட்டிருக்கிறது. கொள்கைகளில் நிறைய மாற்றத்தை கொண்டுவந்திருக்கிறது. மக்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்து, வெற்றி தோல்வியின் வீரியத்தை படிப்பினையாக பெற்றிருக்கிறது. என்று படுகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா பகிரங்கமாக சொல்லாவிட்டாலும், முதல்வர் அவர்களின் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளும் இந்த உண்மை பிரதிபலிப்பதை காணலாம். ஜெயலலிதா அவர்களின் நடவடிக்கையை அவரது பொதுவான குணம் சார்ந்து ஓரளவாவது அனுபவ ரீதியாக அனுமானிக்க முடியும்.

கருணாநிதியைப்போன்று உள்ளொன்றுவைத்து புறம் ஒன்று பேசுவது, தந்தரமான சொல்லாடல்கள், முகஸ்துதியான பேச்சுக்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பெரும்பாலும் காணமுடியாதது. பட்டதை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சிலகட்டங்களில் நடந்துகொள்வாரே தவிர, ஒருவரை திருப்திப்படுத்துவதற்கு பொய்யான வாய் ஜாலம் நாடகம் போடுவதெல்லாம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அகராதியில் கிடையாத ஒன்று. இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே தமிழகத்து தமிழனும் உலக தமிழினமும் ஜெயலலிதா அவர்களை ஓரளவேனும் நம்புகின்றனர்.

வரலாறு காட்டிய அரசியல் முதிர்ச்சி காரணமாக, தமிழக மக்களின் மனநிலையை ஜெயலலிதா நன்கு உணர்ந்திருக்கிறார். தனது விட்டுக்கொடுக்காத முன்னைய கடும்போக்கு வீழ்ச்சியை விளைவிக்கும் என்பதை நன்கு புரிந்துமிருக்கிறார்.

ஈழப்பிரச்சினை தீர்க்கப்பட்டால் நன்றிக்கடன் காரணமாகவும்,, தீர்க்கப்படாவிட்டால் நம்பிக்கைத்துரோகம் காரணமாகவும்,, இன்னும் ஒரு பத்தாண்டுகாலம் ஈழப்பிரச்சினை தமிழ்நாடு அரசியலை ஆளும், என்ற உண்மை யதார்த்தத்தை உணர்ந்திருக்கிறார். அதுதான் நிஜம் என்பதையும் கடந்த கால அரசியலில் ஜெயலலிதா மட்டுமல்ல இன்னும்பல அரசியல்வாதிகள் பாடமாக கற்றிருக்கின்றனர்.

ஜெயலலிதா அவர்கள் தான் தீர்க்கமாக முடிவெடுத்து முனைப்பு காட்டும் முயற்சிகளில் வரும் தடைகளையும் அவர் இலேசாக விட்டுவிட மாட்டார் என்பதும் நிச்சியம். தனக்கு பிடிக்காதவற்றை நேரடியாகவே மறுத்துவிடும் துணிச்சலும் அந்த நேர்மையும் ஜெயலலிதா அவர்களிடம் இருக்கிறது.

இந்நிலையில் தமிழக மக்களின் விருப்பத்திற்கமைய தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஸ்ரீலங்கா அரசுத் தலைவருக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் ஜெயலலிதா ஜூன் முற்பகுதியில் முன்மொழிந்து நிறைவேற்றினார். இத்தீர்மானம் பற்றி பலதரப்பட்ட ஊகங்களும் கருத்துக்களும், எதிராகவும் சாதகமாகவும் வந்துகொண்டிருக்கின்றன.

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவுடன் இந்திய மத்திய அரசு தடாலடியாக பணிந்து தீர்மானத்தை நிறைவேற்றிவிடும் என்பதும் சுவாரஸ்யமான கற்பனைதான்.

சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறுநாள் மத்திய அரசின் மூவர் குழு சென்னைக்கு வந்து முதலமைச்சரின் எண்ணக்கருவை கேட்டறிந்த பின் ஸ்ரீலங்கா சென்று திரும்பியது. மறுநாட்செய்திகளிலேயே தமிழ்நாடு அரசின் தீர்மானம் கவனத்தில் கொள்ளப்பட்டதற்கான சான்று எதுவும் காணப்படவில்லை மத்திய அரசின் தூதுக்குழு ஸ்ரீலங்கா அரச தரப்பிடம் தமிழ்நாட்டின் உணர்வை எடுத்துச்சொன்னதாகவும் தெரியவில்லை.

இரண்டு நாடுகளுக்கிடையே நடைபெறும் இராசதந்திர பேச்சுக்களின்போது ஒரு மானில அரசின் கருத்தை நேரடியாக வலியுறுத்தாமல் பொதுவான கொள்கையாக அக்கருத்தை முன்னிலைப்படுத்தவேண்டிய கட்டாயம் ஒரு அரசுக்கு உண்டு. ஆனாலும் இந்திய அரசின் மோசமான பலவீனம் ஸ்ரீலங்கா அரசுடன் வெட்டு நறுக்காக எதையுமே பேசித்தீர்க்க இதுவரை முடிந்திருக்கவில்லை. அதற்கு வேறு உட் காரணங்களும் இருக்கக்கூடும்.

மூத்த மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, கிருஷ்ணா. தொடங்கி வெளியுறவு செயலாளர் நிருபாமா ராவ், வரை எத்தனையோ மட்ட தூதுக்குழுக்களின் கால விரையமும் பணவிரையமும் தவிர, ஸ்ரீலங்காவின் செயற்பாட்டில் ஈழத்தமிழ் இனம் சார்பாக சிறு துரும்பைக்கூட இந்தியாவால் இடம் மாற்ற முடியவில்லை. 2020ல் இந்திய என்கிற பிச்சைக்கார ஊழல் நாடு வல்லரசாகிவிடும் என்பது மட்டும் அரசியல் மட்டத்திலிருந்து விசுவின் மக்கள் அரங்கம்வரை குத்துப்பாட்டாக வலம்வருகிறது.

இப்படியிருக்கும்போது மீண்டும் தமிழ்நாடு அரசு தீர்மானம் எதையாவது நிறைவேற்றப்போகிறதா ஈழம் அல்லது இலங்கை தமிழர் சார்ந்து ஏதாவது போராட்ட நடவடிக்கைகளுக்கு அறிவிக்கப்போகிறதா என்று பலரும் சிந்திக்கின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களும் எந்த எதிர்விளைவையும் காட்டிக்கொள்ளவுமில்லை. அப்படியானால் கருணாநிதி முன்பு பலதடவை கூறியதுபோல ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எந்தவிதத்தில் உதவ முடியும், இன்னொரு நாட்டின் விவகாரத்தில் ஒரு மானில அரசாங்கம் ஒரு அளவுக்குத்தான் தலையிட முடியும் என்பதுதான் நடைமுறைச்சாத்தியமா என்றும் சிந்திக்க இடமிருக்கிறது.

ஒரு நாடு நெருக்கடிநிலையில் இருக்கும்போது, உள்நாட்டு கிளர்ச்சி அல்லது போர் ஏதாவது நடந்துகொண்டிருக்கும் நிலையில், உதவி செய்யும் பொருட்டோ, சிக்கலை தீர்த்து வைக்கும் பொருட்டோ இன்னுமொரு நாடு தலையிட முடியும் என்றும் ஐநா சாசனம் சொல்லுகிறது. அது தகுதியுள்ள அயல் நாடாக இருந்தால் இன்னும் கூடுதல் முன்னுரிமையுமுண்டு என்றும் வரையப்பட்டிருக்கிறது. அந்த சாரத்துக்கமையத்தான் தமிழ்நாடு சட்டசபை தீர்மானத்தின் தாக்கம் நகர்த்தப்படவேண்டும்.

போர்த்தலையீடாக இருந்தால் மட்டும் ஐநா பாதுகாப்புச்சபையின் அனுமதியில்லாமல் எந்த ஒருநாடும் இன்னுமொரு நாட்டுக்குள் தன்னிச்சையாக தலையிட முடியாது.

ஆனால் இந்தியா இந்த மரபைமீறி ஈழப்போரின் போது இரகசியமான போர் தலையீடு செய்து இராணுவ ரீதியில் ஸ்ரீலங்கா அரசுக்கு உதவியதற்கான குற்றச்சட்டு புகைப்பட ஆதாரங்களுடன் இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை உறுதிப்படுத்தப்பட்டால் சர்வதேச சட்டப்படி இந்தியாவும் போர் குற்றம்புரிந்த நாடாக சர்வதேசத்திற்கு இனங்காட்ட முடியும்.

வல்லாதிக்க சக்திகளிடம் ஐநா சபை கட்டுண்டு மூழ்கிப்போயிருப்பதால், ஈழத்தமிழினம் போன்ற சிறிய பிரிவால் இந்தியாவை குற்றவாளியாக்க முடியுமா என்பதும் பில்லியன் டொலர்க் கேள்வி! உலகத்தின் கண்முன் கொத்துக்கொத்தாக தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களால் தமிழினம் சிங்களவனால் அழிக்கப்பட்ட கொடுமைக்கு அனைத்து உயர் அமைப்புக்களும் ஒருவரை ஒருவர் ஆள்க்காட்டிக் கொண்டிருக்கும்போது சிங்கள அராஜகத்திற்கு மறைந்திருந்து உதவிய இந்திய கொடுங்கோலை உலகத்துக்கு இனங்காட்டுவது யார்?

போர் முடிவுக்கு வந்துவிட்ட ஸ்ரீலங்கா போன்ற ஒரு தேசத்தில், போருக்குப்பின் காரணமின்றி வேறு எந்த ஒருநாடும் தலையிட முடியாது என்று சில கருத்துக்கள் சிலநாடுகளாலும் ஸ்ரீலங்கா அதிபராலும் முன் வைக்கப்படுகின்றன.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து சுமூகநிலை ஏற்பட்டிருந்தால் அங்கு வாழும் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்புடன் நீதியான வாழ்வாதாரம் கிடைத்திருக்கவேண்டும். சிக்கலற்ற சுதந்திர உணர்வு காணப்படவேண்டும். தடங்கலற்ற பேச்சு சுதந்திரமாவது கிட்டியிருக்கவேண்டும். இவைகளை அரசசார்பற்ற மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சர்வதேச பொது தொண்டர் அமைப்புக்கள் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். குறைந்தபட்ஷம் பாரபட்சமற்ற சக்திவாய்ந்த ஒரு ஊடகம் செய்தியாவது வெளியிட்டுருக்கவேண்டும்.

மேற் சொன்ன எதுவும் ஸ்ரீலங்காவில் நடைபெறவில்லை. நாட்டின் நெருக்கடி நிலையும் "அவசரகாலச்சட்டமும்" போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து அமூலில் இருந்து வருகிறது. வீடு வாசலற்று மரங்களின் கீழ் வாழும் மக்களின் இருப்பிடமும் நாளுக்கு நாள் இராணுவத்தால் சோதனைக்குள்ளாக்கப்படுகிறது. விசாரணைக்கென்று அழைத்துச் செல்லப்படும் விதவைப் பெண்கள் வீடுதிரும்புவதில்லை.

ர்வதேச மட்டத்தில் ராஜபக்க்ஷ படு மோசமான போர் குற்றவாளி என்றும், இனவெறி கொண்டு ஒரு இனத்தை மோசமாக அழிக்கிறான் என்றும், அதற்கான ஆதார காணொளிகளை திகதி வாரியாக உலக தொலைக்காட்சிகள் மிக வருத்தத்துடன் ஒளிபரப்புகின்றன.

போர் மட்டும் நிறுத்தப்பட்டிருப்பது ஒத்துக்கொள்ளவேண்டிய ஒன்றுதான். ஆனால் ஸ்ரீலங்கா முழுவதும் தொடர்ச்சியாக போர்க்கால கட்டமைப்புக்களே பரவி காணப்படுகின்றன.

மக்கள் சொந்த வீடுகளுக்கு சென்று வாழும் சூழல் பூச்சியமாயிருக்கிறது, மக்களின் சுதந்திரம் எவராலும் உறுதிப்படுத்தப்படவில்லை. இராணுவ வல்லாதிக்கம் கட்டுப்பாடற்று தலையீடு செய்கிறது , அவசரகாலச்சட்டம் என்கிற கொடுமையான இராணுவச்சட்டம் நீக்கப்படவில்லை. சிவில் நிர்வாக அமைப்புக்கள் இராணுவ கொட்டடியில் முடங்கி கிடக்கின்றன,

இந்த அடிப்படையில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு உதவ சக்தி வாய்ந்த எவராவது தலையிட்டாகவேண்டிய கட்டாயம் ஸ்ரீலங்காவுக்குள் நிறையவே காணப்படுகிறது.

ஒரு மோசமான பாசிச போர்குற்றவாளியின் அராஜக ஆட்சிப்பிடியில் தொடர்ச்சியாக குந்தகம் அனுபவிக்க அந்த துயரத்தை சுமந்த மக்களால் இனியும் முடியாது என்பதை உலகம் உணரவேண்டும்.

போர்க்கால சூழலை விட மிக மோசமாக பாதிப்புக்குள்ளாகியிருக்கும் அம்மக்களின் கையறுநிலையை திரிவுபடுத்தி இங்கு எவரும் போர் நிறுத்தம் சம்பந்தமாக ஸ்ரீலங்கா அரசுத்தலைவருடன் பேச முயலுவதாகவும் எந்த தரவுமில்லை.

அபிவிருத்தியும் அந் நாட்டின் சிறுபான்மை மக்களான தமிழர்களது உயிர் அச்சுறுத்தலற்ற அன்றாட பாதுகாப்பான வாழ்வுக்கான அரசியல் அதிகாரங்களும் கிடைக்க வழி செய்யவேண்டும் என்பதே தலையிடுபவர்களின் குறியீடு.

போர்நடந்து முடிந்த நாடாக, மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழல் ஏற்பட்டிருந்தால், கேள்வி கேட்க எவரும் முனைப்புக்காட்டியிருக்க மாட்டார்கள். தேவையும் இருந்திருக்காது. போர் முடிவுக்கு வந்ததாக ஸ்ரீலங்கா அரசு சுட்டிக்காட்டும் 2009 மே 19ம் திகதிக்குப்பின் சரணடைந்தவர்களையும், சாதாரணமாக இடம்பெயர்ந்து வழி தெரியாமல் இராணுவத்தின் பிடியில் சிக்கி திகைத்தவர்களையும் நீதி விசாரணைக்குட்படுத்தாமல், இனத்துவேசம் காரணமாக சித்திரவதை செய்து கற்பழித்து படுகொலை நிகழ்த்திய ஒரு பாதக அரக்கனை விசாரணைக்குட்படுத்துங்கள் என்பதுதான் இன்றைய உலகத்தின் கேள்வி.

தமிழர்களுக்கு அனுசரணையாக முதலுதவி புரியக்கூடியவர்கள் தமிழர்களே, அந்த உரிமையில்த்தான் தமிழ்நாட்டை ஈழத்தமிழினம் நம்பிக் கொண்டிருந்தது. ஏற்கெனவே இருந்து காலாவதியாகிப்போன தமிழக முதலமைச்சர் கருணாநிதி செய்த மிருகத்தைவிட மோசமான காரியத்தை இன்றய முதலமைச்சர் மாற்றி எழுதுவார் என்று பலர் எதிர்பார்க்கின்றனர்

தொன்று தொட்டு இரத்த உறவு முறையில் உள்ள ஒரே மொழி ஒரே கலாச்சாரத்தைக்கொண்ட, இன்னுமொரு நாட்டில் வாழும் தொப்புள்க்கொடி உறவான தமிழர்கள், தலையிட்டு கேள்வி கேட்பதற்கும் முன்னுரிமை உண்டென்றே கருத இடமிருக்கிறது. மனமிருந்தால் அரசியல் ரீதியாக தலையிடுவதற்கும் சகல உரிமையும் தமிழக அரசுக்குண்டு.

இந்த அடிப்படையில்த்தான் தமிழ்நாட்டு தமிழர்கள் தாமாகவும் அமைப்பு ரீதியாகவும் குழுக்களாகவும் தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு இப்பிரச்சினையை கொண்டுவந்து பல வருடங்களாக போராடி வருகின்றனர். தமிழக மக்களின் நியாயமான மனிதாபிமான கோரிக்கை தமிழ்நாடு அரசு மூலமாகத்தான் இந்திய மத்திய அரசை சென்றடைய வேண்டும். அதன் பிற்பாடு மத்திய அரசாங்கத்தின் நடத்தை பொறுத்து அடுத்த கட்டத்திற்கு தமிழக மக்கள் சென்று சேரக்கூடும்.

இந்த ஒழுங்கு அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சட்டசபை தீர்மானத்தை பார்க்கலாம். சட்டசபையின் தீர்மானத்திற்கான சரியான மறுமொழியை மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு கொடுத்தாகவேண்டும் .தீர்மானத்தை நிராகரிப்பதாக இருந்தால் அதற்கான நியாயத்தையும் வெளிப்படுத்தியாகவேண்டும். ஆனாலும் இத்தீர்மானம் நிராகரிக்க முடியாத தன்மையை கொண்டிருப்பதாக இன மொழி கடந்து உலகம் பரிந்துரைத்துக்கொண்டிருக்கிறது.

இதன் எதிரொலியாகத்தான் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான தூதுக்குழுவினரின் பிரசன்ம நாடகம் நடத்தப்பட்டது. தீர்மானத்தை நீர்த்துப்போகச்செய்தல், காலவிரயம்பண்ணி இழுத்தடித்தல், இதற்கே மத்திய அரசு முயலக்கூடும். மூன்று வருட ஆட்சி ஆயுட்காலம் இருக்கும் மத்திய அரசு, பெரும்பான்மையற்ற தொங்கு நிலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. முண்டு கொடுத்துக்கொண்டிருந்த திமுக, ஊழல் நெருக்கடியில் சிக்கி இன்றைக்கோ நாளைக்கோ வெளியேற மறுத்தாலும் வெளியேறவேண்டிய நிலையில் தடுமாறிக்கொண்டிருக்கிறது.

அதிமுக, தனது வலையில் சிக்க மாட்டாதோ என்ற பேரவாவும் மத்திய காங்கிரஸ் ஆரசுக்குண்டு, அப்படி ஆகிவிட்டால் சுலபமாக முன்னைய கருணாநிதி அரசை கையாண்டு ஈழ விவகாரத்தை இழுத்து மூடியதுபோல் நீர்த்துப்போகச்செய்யலாம் என்கிற ராசதந்திரமும் ஒருபுறம் நடக்கிறது. ஆனாலும் முதல்வர் ஜெயலலிதா இதில் சிக்கிவிடுவதற்கான வங்குரோத்து நிலையில் தமிழ்நாடு அரசு இல்லை. வேறு சமிக்ஞைகளும் காணப்படவில்லை.

ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மிகப்பெரிய பெரும்பான்மையுடன் இருக்கிறது. வரும் ஐந்து வருடங்களுக்கு எவரும் எதுவும் செய்துவிடமுடியாத மக்கள் ஆதரவும் இருக்கிறது.

இந்த ஐந்து வருடங்களில் மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு மக்களுக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே, அடுத்த ஐந்தாண்டுகளை அதிமுக சிந்திக்க முடியும். கோரிக்கைகளில் மிகவும் முக்கியமானதாக தமிழ்நாட்டு தமிழன், தமிழ்நாடு அரசின் முன் வைத்திருப்பது ஈழப்படுகொலைக்கான நீதி, அங்கு ஈழதேசத்தில் அனாதரவாக நிற்கும் மனிதருக்கான நிம்மதியான வாழ்வு, இந்த இரு விடயங்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா ஏதாவது தீர்வு கண்டாகவேண்டும்.

அண்மையில் டில்லிக்கு சென்று திரும்பிய முதல்வர் மரியாதை நிமித்தம் கூட காங்கிரசுத்தலைவி சோனியாவை சந்திக்க விரும்பவில்லை. அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு ஜெயலலிதா அவர்கள் செவ்வி வழங்கியபோது, 2010 ஆண்டு காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்த கருத்துக்கும் இன்றய அரசியல் நிலைக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாகவும், காங்கிரசுடன் கூட்டு வைக்கவேண்டிய தேவை அதிமுக வுக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.

வரும் காலங்களில் ஈழப்பிரச்சினை சம்பந்தமாக ஜெயலலிதா அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியில் முனைப்பு காட்டுவார் என்பதே இன்றய அரசியல் நீரோட்டம், மக்கள் சக்தி மூலமாக வழி காட்டுகிறது.

ஜூன் 29, தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் சரத்குமார், சத்யராஜ், தலைமையில் கூடிய திரைப்பட நடிகர் நடிகைகள் முதலமைச்சரை சந்தித்தனர், ராஜபக்க்ஷவை போர்க்குற்றவாளியாக விசாரணைக்குட்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்து பேரணி நடாத்த அனுமதி கேட்டிருக்கின்றனர்.

எந்த மறுப்புமின்றி அனுமதி தருவதாக முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்புக்கொண்டிருக்கிறார். ஜூன் 26ம் திகதி, மே17, இயக்கத்திற்கு மெரீனாவில் மெழுகுவத்தி ஏந்திய ஒன்று கூடலுக்கு தடையில்லாமல் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தின் மூலம் இதுவரை தமிழ்நாட்டில் ஈழம் பற்றி பேசுவது தேசக்குற்றம் என்றிருந்த நிலை மாற்றப்பட்டிருக்கிறது. ஈழப்போராட்ட அழிவு சூத்திரதாரியாக இருந்த இந்திய மத்திய அரசை நோக்கிய அமைதியான மக்கள் போராட்டத்திற்கு புதிய தமிழக அரசு வழி விட்டு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது.

நாளை சீமான் அவர்களின் நாம்தமிழர் அமைப்பு தமிழ்நாட்டின் அரச அனுமதியுடன் ராஜபக்க்ஷ / இந்திய மத்திய அரசுக்கு எதிராக நிச்சியம் பேரணி நடத்தக்கூடும். இன்னும் பல அமைப்புக்களினதும் மக்களினதும் வாய்ப்பூட்டு உடைக்கப்பட்டிருக்கிறது. காலம் கடந்தேனும் ஈழம் நோக்கிய ஆதார கைகள் கட்டவிழ்ந்து ஒன்றுகூடுகின்றன. இந்த எழுச்சி ஐநா வரை சென்றடையா விட்டாலும் இந்திய மத்திய அரசை நிச்சியம்
நெருக்கடிக்குள்ளாக்கும்.

ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்,

நன்றி ஈழதேசம் இணையம்.