"சாக்காட்டின் சரிதை"
அவர்கள்
தமது உரிமைக்காக
உடமைகளை மட்டுமல்ல
உடலுறுப்புக்களையும்
ஒப்பற்ற "உயிரையும்"
ஒப்புக்கொடுத்திருந்தனர்.
அவர்களது தியாக வேள்வி
நியாயத்தின் அடிப்படையில்
நம்பிக்கையை முதலீடாக்கி
நடத்தப்படுவதாக
அவர்கள் மட்டுமல்ல
உலகமும் நம்புகிறது.
ஆனாலும்
அவர்களது வேகத்தை
நம்பிக்கையை மழுங்கடிக்க,
ஒரு வர்க்கக் கூட்டம்
பல இடங்களில் ஒளிந்திருந்து
ஓங்காரமாக பூசை செய்து கொண்டிருக்கிறது.
அவர்கள் சுயமாக
நாட்டி வளர்த்த மரங்களும்,
கட்டி வாழ்ந்த வீடும்,
வாழ்வாதாரங்களும்,
அடிக்கடி கொடிய விலங்குகளால்
சுடுகாடாக்கப்பட்டபோது,
ஏன் என்று ஒருவரும் கேட்கவில்லை.
அவர்கள் ஒருமுகமாக
ஒப்பற்ற தலைமையுடன்
எதிர்கொண்டு எழுந்தபோது,
சூத்திரம் சுக்குநூறாகியது.
மானுடம் திரும்பி பார்த்தபோது
பட்டிமன்றகாரர்கள்
பதைபதைத்துவிட்டனர்.
வைரத்தை வைரத்தால்
வெட்டவேண்டாமென்றும்
கொடுந் தீயை
நீர் கொண்டு அணைக்க வேண்டாமென்றும்
வைக்கோல் கொண்டு மூடும்படி
பட்டிமன்ற பேச்சாளர்களின்
ஆராய்ச்சியின் முடிவு சொல்லுகிறது.
ஊரே சுடுகாடாகி
ஓலச்சத்தம்
விண் முட்டி வெளியானபோதும்,
பத்துப்பேரின் பலியா
பால்குடிகளின்
படுகொலையா, கொடியது
சாவை தலைப்பாக்கி
பட்டிமன்றங்களில்
விவாதங்கள் வித்தியாசமாக.
இன்று
அவர்களது ஒருபகுதி
ஈமைக்கிரியை செய்யப்படாத
(சுடுகாடல்ல), "சாக்காட்டின் சரிதை"
ஒரு புள்ளியளவு
"ஒருசில மனிதாபிமானிகளால்"
ஆவணமாக அம்பலமாகியபோது,
மீண்டும்
பட்டிமன்ற விற்பன்னர்களின்
வெறும் வாய்
விவாதத்துக்கு தயாராகிவிட்டது.
ஆனாலும்
அவர்களது உரிமை நிலை
பட்டிமன்றங்களால்
ஒருவேளை செப்பனிடப்பட்டால்!
அவர்கள் திரும்பக்கூடும்!.
>ஊர்க்குருவி.<
No comments:
Post a Comment