படுகொலைகள் மற்றும் பாலியல் வன்புணர்வுகளையும் மகாவம்சத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற வரலாற்று உண்மையை,

சிறீலங்காவின் பிரசித்திபெற்ற முன்னாள் கொலைக்கள தளபதியும், போர்க்குற்ற நபருமான சரத் பொன்சேகா கொழும்பு மேல் நீதிமன்றத்தில், செய்தியாளர்களின் சந்திப்பின்போது, மகாவம்சத்தில் கண்டிப்பாக இணைக்க வேண்டிய காலப் பதிவை, சிறையில் ஞானம்பிறந்த நிலையில் வெளிப்படுத்தியுள்ளார்.

யாழ். குடாநாட்டில் மீண்டும் படைத்தரப்பினர் ஆட்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை, ஒரு வரைமுறைக்குட்படாத வகையில், மீண்டும் போர்க்கால அடிப்படையில் தொடங்கியிருக்கின்றனர்.

காலைவேளைகளில் முகாம்களிலிருந்து புறப்படும் எட்டு முதல் பத்துப்பேர் வரையிலான சிப்பாய்களைக் கொண்ட குழுவே, பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முன்னதாக வீட்டை சல்லடை போட்டுத் தேடும் இவர்கள், சமையலறை மற்றும் குளியலறையைக் கூட விட்டு வைப்பதில்லையென குற்றஞ்சாட்டப்படுகின்றது. பின்னர் வீட்டு அங்கத்தவர்களது விபரங்கள் திரட்டப்படுவதுடன், தம்மோடு எடுத்துவரும் கைத்தொலைப்பேசிகளால் குடும்ப அங்கத்தவர்களும், வீடுகளும் புகைப்படம் பிடிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

குடும்ப அங்கத்தவர்களில் எவராவது விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தனரா?, காணாமல் போயுள்ளனரா? தடுப்பு முகாம்களில் உள்ளனரா, என்பது பற்றியே கேள்விகள் அமைகின்றன. அத்துடன் புலம் பெயர்ந்த நாடுகளில் தங்கியுள்ள அங்கத்தவர்கள் பற்றியும் அதிகம் கேள்வி எழுப்பப் படுவதாக சொல்லப்படுகின்றது. எவர்மீதாவது சந்தேகம் இருப்பதாக இராணுவத்தினரின் மனநிலை இருந்தால், விசாரணைக்கு என்று சம்பந்தப்பட்ட நபரை கையோடு அழைத்துச் செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது.

நிலமை இப்படியிருக்கும்போது, விஞ்ஞானிகள், கொடு நோய்க்கான மருந்து வகைகளை கண்டுபிடிப்பதற்கு, தவளை, எலி, போன்ற பிராணிகளை மருத்துவ ஆராய்ச்சியில் பயன்படுத்தி, நோய்க்கிருமிகளின் தாக்கத்தை அறிந்து மருந்து கண்டுபிடித்து தீர்வு காண்பதுபோல, சில தினங்களுக்கு முன், பிரித்தானிய இராய்ச்சியம் 26 ஈழத்தமிழர்களை, அவர்களது விருப்பமில்லாமல் வலுக்கட்டாயமாக ஸ்ரீலங்காவுக்கு திருப்பி அனுப்பி அராய்ச்சி செய்திருக்கிறது.

இந்த 26 பேரும், சிங்கள் இராணுவ பேராதிக்க அரசிடமிருந்து தப்பிப் பிழைத்தால்,, ஏற்கெனவே திட்டமிட்டபடி அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு இருக்கின்ற இலங்கையர்களில் இன்னும் ஒரு தொகையினர், எதிர்வரும் 30 ஆம் திகதி நாடு கடத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு இருக்கின்ற இலங்கையர்களில். ஒரு தொகையினர் கடந்த 16 ஆம் திகதி விசேட விமானம் ஒன்றின் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதனை நாடி பிடித்துப் பார்க்கும் ஒரு சோதனை நடவடிக்கையாகவே பிரிட்டன் மேற்கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

அவ்வாறு தமிழர்கள் நாடு கடத்தப்பட்ட போது, பிரிட்டனில் பாரிய எதிர்ப்பலைகள் எழும்பாத காரணத்தினால், தற்போது தஞ்சம் மறுக்கப்பட்ட அடுத்த தொகுதி அகதிகளையும் திருப்பியனுப்ப பிரிட்டனின் எல்லை முகவர் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. அடுத்த நாடு கடத்தல் இம்மாத இறுதியில் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஜூன்16 ம் திகதி, நாடு கடத்தப்பட்ட 26 பேரும் விசேட விமானம்மூலம் ஸ்ரீலங்கா சென்றடைந்து தரையிறங்கியதும். தயாராக இருந்த ஸ்ரீலங்காவின் பொலிஸ் இராணுவப்பிரிவின் புலனாய்வுத்துறையினர். குறிப்பிட்ட அனைவரையும் விசாரணைக்குட்படுத்துவதற்காக, முகாம்களுக்கு அழைத்துச்சென்றதாக தகவல்கள் வருகின்றன. நாடு கடத்தப்பட்ட அகதிகள் பற்றிய மேலதிக நிலமைகள்பற்றி எந்த செய்தியும் ஸ்ரீலங்கா வெளியிடப்படவில்லை.

பிரித்தானிய அரசை திருப்திப்படும் வகையில் குறிப்பிட்ட அகதிகளை விசாரணையின்பின் ஒருவேளை? விடுவிக்கப்பட்டாலும், இராணுவத்தினர் சிலதினங்களின்பின் அவர்கள் மீண்டும், கைது செய்யப்படமாட்டார்கள் என்பதற்கான உத்தரவாதம் எதுவும் கிடையாது. திருப்பி அனுப்பப்பட்டவர்கள் பலர், பிரித்தானியாவில் பல ஜனநாயக மக்கள் போராட்டங்களில் இணைந்து குரல் கொடுத்து காணொளிகளில் ஆவணமாகிவிட்டவர்கள் என்பதும் அச்சத்திற்கு இன்னும் ஒரு அதிககாரணம். இவர்கள் விடுவிக்கப் படாவிட்டாலும் ஏன் என்று கேட்டு விவாதிப்பதற்கு எந்த வழிமுறையும் ஸ்ரீலங்காவில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய அரசின் இந்தப்பரிசோதனை, ஈழத்தமிழர்கள் பலரின் வாழ்க்கையில் கொடும் விதியாக விளையாடியிருக்கிறது. ஸ்ரீலங்காவில் உள்ள கொடூரமான பேரினவாத நோய்க்கிருமிகளால், திருப்பி அனுப்பப்படுபவர்கள் மோசமான தாக்கத்துக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதை பிரித்தானியா உள்ளூர உணர்ந்தாலும் கேட்பார் இல்லாதபடியால் மனிதாபிமானம் இல்லாமல் திருப்பி அனுப்பும் விஷப்பரீட்சை சாதாரணமாக நடந்திருக்கிறது.

ஆனால் ஈழத்தமிழர்களின் கவசமாக இருப்பதாகச்சொல்லும், நாடுகடந்த அரசு,, இதில் உடனடியாக தலையிட்டு அகதிகளை தடுத்து நிறுத்த முயற்சி எதையும் எடுத்ததாக தெரியவில்லை. நாடுகடந்த அரசில் இருப்பவர்கள் ஏதோ ஒருவகையில் நல்ல வதிவிட உரிமையை பெற்று, வசதி வாய்ப்புக்களோடு இருப்பவர்கள் என்பதால், விளிம்பு நிலையில் அகதிகளாக திருப்பி அனுப்பப்படும் நிலையில், அல்லலுக்குள்ளாகி தத்தளிப்பவர்களின் மனநிலை பற்றி உளமார உணர முடியாமல் இருந்துவிட்டனரோ, என்று வேதனையடைய வைக்கிறது.

இங்கிலாந்தில் மட்டுமல்லாது, மேற்கத்திய நாடுகள் அனைத்திலும் அடைக்கலம் கோரும் ஒருவரது தனிப்பட்ட உயிர் அச்சுறுத்தலும், அதற்கான காரணங்களும் மட்டுமே அந்த நாடுகளில் கவனத்தில் கொள்ளப்படுகிறது. ஒருவரது உயிர் அச்சுறுத்தலுக்கான முக்கியமான பல புறக்காரணிகள் எவ்வளவுதான் எடுத்துரைத்தாலும், பெரும்பாலானவை ஏனோ ஏற்றுக்கொள்ளப்பட்டுவதில்லை.

ஆனால் ஸ்ரீலங்காவில் இராணுவத்தால் ஒருவர் விசாரணைக்குட்படுத்தப்படும்போது, ஒருவரது குடும்பம், அவரது உறவினர்கள், அயல் வீட்டின் நண்பர்கள் பற்றியும், மிகவும் முக்கியத்துவம் கொடுத்து விசாரிக்கப்படுகிறது. அப்படி இராணுவ வளையத்தில் இருக்கும் நண்பர்களலும் குடும்பத்தினராலும் உயிர் அச்சுறுத்தலுக்குள்ளானவர்கள் நிறையவுண்டு, இதை இந்த புலம்பெயர் நாடுகளுக்கு புரியவைப்பது யார்.

குடும்ப அங்கத்தவர்களில் எவராவது விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தனரா? காணாமல் போயுள்ளனரா? தடுப்பு முகாம்களில் உள்ளனரா என்பது பற்றிய கேள்விகள் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் மிக முக்கியத்துவம் பெறுகிறது. அத்துடன் புலம் பெயர்ந்த நாடுகளில் தங்கியுள்ள அங்கத்தவர்கள் பற்றியும் அதிகம் கேள்வி எழுப்பப் படுகின்றது.

ஈழத்தமிழர்களில் பலர் சூழ்நிலை குற்றவாளிகளாகி, புறச் சூழலில் பல காரணிகள் அவரது உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையை தோற்றுவித்து அச்சுறுத்துவது எந்தவித சோடிப்புமில்லாத உண்மை. இவற்றை புலம்பெயர் தேசங்களிலுள்ள நிறுவனப்பட்ட தமிழர் அமைப்புக்கள் தலையிட்டு, பொதுப்பிரச்சினையாக அந்தந்த நாடுகளின் நீதிமன்றங்களுக்கு அல்லது சார்ந்த துறைகளுக்கு எடுத்து சென்று விளக்கவேண்டும், இப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து, பிரச்சினையை சட்டத்துக்குட்படுத்தி கட்டுக்குள் கொண்டுவரத் தவறினால், பிரச்சினை வேறு நாடுகளையும் சென்றடையும் அபாயம் உண்டு.

2010 ஆண்டில் சுவிற்சர்லாந்தில் அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட அகதிகள், 2,000 பேருக்கும் அதிகமாக ஸ்ரீலங்காவுக்கு திருப்பி அனுப்பும் அனுமானத்தோடு தயாராக இருப்பதாக அந்நாட்டிலிருந்து செய்திகள் வந்தன. அதுபற்றி அறிவுறுத்தல்களையும் அலோசனை கூட்டங்களையும் சுவிற்சர்லாந்து தமிழர் பேரவை, ஈழத்தமிழ் அகதிகளுக்கு அறிவுறுதல்களையும் பகிர்ந்து சில வேலைத்திட்டங்களையும் நடத்தியிருந்தது. சுவிற்சர்லாந்து தமிழர் பேரவை சுவிஸ் குடியேற்ற அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடி நிலமையை கொண்டு சேர்த்ததாகவும் தெரிகிறது,

பிரித்தானிய தொலைக்காட்சி, சனல்4, சிலதினங்களுக்கு முன்தான், அத்துமீறிய ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கொடும் போர் குற்ற காட்சிகள் அடங்கிய காணொளித் தொகுப்பை, ஆவணப்படமாக வெளியிட்டது. அந்த ஆவணத்தொகுப்பின் எதிரொலியாக, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன்,அவர்கள் இலங்கையின் இறுதி கட்டப் போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்களை பதிவு செய்துள்ள ஆவணப்படத்தை சனல் 4 ஒளிபரப்பியுள்ள நிலையில், அது குறித்த விசாரணைகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது உரையாற்றுகையில், அவர் இவ்வாறு இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளார்.

சனல் 4 ஆவணப் படம் குறித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறை துணை அமைச்சரான அலிஸ்ட்டர் பர்ட் கூறுகையில், "இந்த ஆவணப்படத்தை பார்த்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். அதைப் பார்க்கும் போது, சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியதற்கான ஆதாரங்கள் இருப்பது போல இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க, இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், சர்வதேச சமூகத்துடன் இணைந்து அனைத்து சாத்தியக்கூறுகளையும் கண்டறிய இங்கிலாந்து அரசு தயாராக இருக்கிறது," என்றார்.

இவை நடந்து முடிந்த கையோடு 26 ஈழத்தமிழர்கள் நாடுகடத்தப்பட்டமை மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகவே காணப்படுகிறது. இது இங்கிலாந்து அரசிற்கு ஈழ அகதிகள் பற்றிய மிகச் சரியான தகவல்கள் போய்ச்சேரவில்லை, அல்லது இங்கிலாந்து அரசு ஸ்ரீலங்கா அரசுபற்றியும் அந்த நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு இருக்கும் ஆபத்துப்பற்றியும் சரியாக புரிந்துகொள்ளவில்லை,, என்கிற சந்தேகமும், இரட்டை வேட நாடகங்கள் எங்காவது ஈடேறுகிறதா என்கிற பயமும். அடைக்கலம் நிராகரிக்கப்பட்டு விளிம்பு நிலையில் தளம்பும் ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் உண்டு.

90 களுக்குப்பிந்திய அதிக காலகட்டங்களில் இலங்கையில் வாழலாம் திரும்பிப்போ. என்று திருப்பி அனுப்பபட்ட பலர் காணாமல் போனதும், இராணுவ சித்திரவதைக்குள்ளாகி சிறைப்பட்டதும், கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியும் அமைச்சர்களும் திருப்பி அனுப்பப்படுபவர்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவார்கள் என்பதும் சித்திரவதைக்குட்படமாட்டார்கள் என்று சொல்லுவதும் புதிதல்ல.

தமிழனுக்கு பாதுகாப்பில்லை என்பதை பல நாடுகளும் தொண்டு நிறுவனங்களும் ஒப்புக்கொள்ளுகின்றன. தமிழருக்கான அரசியல் தீர்வு எதுவும் ஸ்ரீலங்காவில் நிறுவப்படவில்லை என்பதும் அமெரிக்கா இங்கிலாந்து ஐநா சபை கூட ஒப்புக்கொள்ளுகிறது.

தமது நாட்டுக்குள் அகதியாக எவரும் நுழையவேண்டாம் என்று கட்டளையிட அந்த அந்த நாடுகளுக்கு உரிமையுண்டு, ஐநாவின் அகதிகளுக்கு மறுவாழ்வளிக்கும் சாசனத்தில் கைச்சாத்திட்டுவிட்டு, மனிதாபிமானமில்லாமல் ஒரு கொலைக்களத்துக்கு ஒருவரை தாரைவார்த்து திருப்பி அனுப்புவதென்பது மனிதாபிமானமற்ற சட்டத்துக்கு புறம்பாந்தென்பதே பொதுவான கருத்து.

"ஒரே ஒரு விடுதலைப் புலிகள் இயக்கம்" இன்று பல முகத்துடன் பயணிக்கிறது. ஒவ்வொருவரிடமும் கருத்துக்கேட்டால். தலைவர் வே பிரபாகரன் என்றும். நோக்கம் சிங்கள ஏகாதிபத்தியத்திடமிருந்து ஈழத்தமிழ் இனத்துக்கான விடுதலை, என்றும் கூறுகின்றனர். இன்றய நிலையில் களம் புலம்பெயர் தேசங்களில்த்தான் சாத்தியமாகவும் இருக்கிறது. தலைவர் வெளிவரமுடியாத நிலையில், தலைவரின் இராசதந்திரமும் அப்படித்தான் சொல்லுகிறது.

ஆனால் திருப்பி அனுப்பப்படும் அகதியைக்கூட சட்டத்துக்குட்பட தடுத்து நிறுத்த எம்மால் முடியவில்லை, அல்லது முயற்சி செய்ய நேரம் இல்லை, என்றே தோன்றுகிறது. நாடு கடந்த ஈழத்தமிழ் மக்களுக்காக ஒரு அரசாங்கமும் இயங்குகிறது எல்லாத்துறைகளுக்கும் மந்திரி மாரும் உள்ளனர். அடைக்கலம் தேடி வந்தவர்களுக்கான துறை இல்லையோ என்ற சந்தேகம், எல்லா அடைக்கல அகதிகளையும் பற்றி நிற்கிறது.
அடுத்த மாதம் நாடு கடத்தப்பட இருக்கும் அகதிகளை நிறுத்துவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கையிலாவது நாடுகடந்த அரசு உடனடியாக இறங்கி அதற்கான முயற்சியை செய்யும் என்று ஒவ்வொரு ஈழ அகதித் தமிழனும் நம்புகிறான்.

இனியாவது அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளை சார்ந்தவர்கள் ஈழத்தமிழன் ஒருவன் திருப்பி ஸ்ரீலங்காவுக்கு அனுப்பப்பட்டால் அவனுக்கு என்ன நேரும் எப்பேற்பட்ட சங்கடங்களையும் சித்திரவதையையும் அனுபவிப்பான் அவனது உயிருக்கு உத்தரவாதம் உண்டா, அவனது குடும்பம் உறவினர்களின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பதை , நாம் ஒவ்வொருவரும் எமது நிலையில் இருந்து பார்த்தால், அதுவேதான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கொள்கையாகவும்,, ஈழத்தமிழனத்தின் நம்பிக்கையாகவும் இருக்கும்.

ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்.