Friday, June 10, 2011

பதிலே இல்லாத கேள்வி நேரம்: அனஸ் மாமாவுக்கு ஒரு திறந்த கடிதம் !

09 June, 2011 by admin

தீபம் தொலைக்காட்சியில் சமீபத்தில் கேள்வி நேரம் என்னும் ஒரு நிகழ்ச்சியூடாக பல விவாதங்களும் விமர்சனங்களும், மற்றும் மக்கள் கருத்துக்களும் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகின்றதை நான் பார்த்து வருகிறேன். நேற்று முன்தினம் புலிக்கொடி பிடிக்கவேண்டுமா வேண்டாமா என்று ஒரு விவாதக் களத்தை நீங்கள் திறந்து விட்டிருந்தீர்கள் ! விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் விடயம் என்ன? எடுத்துக் கொள்ளக்கூடாத விடயம் என்ன என்று தெரியாமல் நீங்கள் தத்தளித்தால் இக் கடிதம் அதனை உங்களுக்கு நன்றாக விளக்கும் என நான் நினைக்கிறேன். ஊடகவியலாளராக இருக்கும் நீங்கள் முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும் !

நிகழ்ச்சி நடந்த பின்னர் தீர்ப்புக் கூறுவது: மாற்றுக்கருத்தோடு தொலைபேசியில் தொடர்புகொள்வோரை இடையில் துண்டிப்பது: நிகழ்ச்சியின் கருப்பொருளுக்கு அப்பால் சென்று சம்பந்தமே இல்லாத விடயங்களைப் பற்றி அலசி ஆராய்வது என்பது ஒரு ஊடகவியலாளாரருக்கு அழகில்லை. தீர்ப்பு கூற நீங்கள் என்ன பட்டி மன்றம் நடத்துகிறீர்களா? இல்லை உங்கள் கருத்தோடு ஒத்துப் போகாத ஒருவர் நிகச்சியில் பேசவந்தால் நேரம் காணாது என்று சொல்லி துண்டித்துவிடுவீர்களா? புலிக்கொடி பிடிக்கலாமா இல்லை பிடிக்கக்கூடாதா என்ற விவாதத்திற்கும், ராஜிவ் காந்தி கொலைக்கும் இல்லை முஸ்லீம்கள் யாழை விட்டு விரட்டி அடிக்கப்பட்டதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது திரு. அனஸ் அவர்களே?

கொன்ஸ்டைன், என்கின்ற நபர் யார்? இல்லை அந் நிகழ்ச்சியில் ராஜா என்கின்ற நபர் யார்? இவர்கள் 2009ம் ஆண்டுக்கு முன்னர் எங்கே இருந்தார்கள்? இப்போது நிகழ்சிகளுக்கு வந்து புலிக்கொடி பிடிக்கவேண்டாம் என்று கூறுகிறீர்களே, 2009ம் ஆண்டு எங்கே இருந்தீர்கள்? ஏன் அப்போது அந்தக் கருத்தை நீங்கள் சொல்லவில்லை. இவ்வாறான நிகழ்ச்சிகளை ஏன் நடத்துகிறீர்கள் என்று உங்களிடம் சிலர் கேட்டால்... மக்கள் இப்போது தான் கேள்விகேட்க ஆரம்பித்திருக்கிறார்கள் அதனை நாம் ஊக்குவிக்கவேண்டும் என்று சொல்லுகிறீர்கள். தமிழர்கள் இவ்வளவு நாளாக கேள்வி கேட்காத இனமாக வாழ்ந்துவிட்டதாகவும், இனித் தான் கேள்விகேட்கும் இனமாக வாழப்போகிறார்கள் அதனை ஊக்குவிக்கப்போகிறேன் என்று சொல்கிறீர்கள்.

கேள்வி கேட்க பல விடயங்கள் உள்ளன. அதற்கு தேசிய கொடி பிடிக்கவேண்டுமா வேண்டாமா என்பது தான் ஒரு கேள்வி அல்ல ! கேள்வி நேரம் என்பது ஒரு நிகழ்சி அதில் உங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை மேடை ஏற்றவேண்டாம். குறிப்பாக எமது தேசியத்தோடு விளையாடவேண்டாம். தமிழ் தேசியத்தை கேள்விக்களமாக்க நீங்கள் யார்? தமிழர் இறையாண்மையை கேலிக்கூத்தாக்க நீங்கள் யார் ? தேசியத்துக்காகவும் தேசிய கொடிக்காவும் உயிர்நீத்த பல்லாயிரம் மாவீரர்கள் புதைந்த ஈரம் காயுமுன்னரே தேசிய கொடியைப் பிடிக்கலாமா இல்லைப் பிடிக்கக் கூடாதா என்று நிகழ்ச்சி நடத்தி தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடவேண்டாம்.

கீழே உள்ள படத்தை நன்றாகப் பாருங்கள்...



இது ரணில் விக்ரமசிங்கவின் தாயார் கடந்த 6ம் திகதி இறந்தபோது எடுக்கப்பட்டது. அதில் மகிந்தர் கலந்துகொண்டு துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறார். சிங்களவர்கள் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே ஒரு நல்ல எடுத்துக்காட்டு. நாம் ஏன் தோல்வியடைந்தோம் என்பதற்கு யார் நல்ல எடுத்துக்காட்டு என்று உங்களுக்கே தெரியும். எதை விவாதிப்பது எதை விவாதிக்ககூடாது என்பதில் நியதி உண்டு. எனவே இனிவரும் காலங்களில் கேள்வி நேரம் என்னும் நிகழ்வை பயனுள்ளதாக, தமிழ் மக்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வாக, ஆக்கபூர்வமாக நடத்துவீர்கள் என நான் நினைக்கிறேன். விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஒரு தமிழனாக அதுவும் ஒரு ஊடகவியலாளராக நீங்கள் செயல்பட நான் வாழ்த்துகிறேன்.

இந்தத் திறந்த மடலை யார் பிரசுரிப்பார்களோ தெரியாது ஆனால் பிரசுரித்தால் எனது நன்றி !

அன்புடன்,

வல்லிபுரத்தான்.



நன்றி அதிர்வு இணையம்.

No comments: