27 மே 2011 அன்று ஸ்ரீலங்காவின் தலைநகரம் கொழும்பு முழுவதும் ஏகப்பட்ட பந்தோபஸ்து குவிக்கப்பட்டு. பல ஆயிரக்கணக்கான சிவில் உடைதரித்த இராணுவ, பொலிஸ் பிரிவுகளின் புலனாய்வுதுறையினரின் பாதுகாப்புக்குள்,

பாதுகாப்பாக பிரதான தெருக்கள் எல்லாம் மூடப்பட்ட நிலையில், காலி முகத்திடலில் குண்டு துளைக்காத கூண்டினுள் நின்று ஸ்ரீலங்காவின் அதி உத்தம ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, 2 ம் ஆண்டு வெற்றிக்கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றினார்.

ஜனாதிபதி தனது உரையில், தேசிய ஒருமைப்பாட்டுடன் வட, கிழக்கு வாழ் மக்களுக்கான ஜனநாயக உரிமையினை வழங்குவதற்கு நாங்கள் ஒருபோதும் தயங்கவில்லை. இருப்பினும் பிரிவினைவாதக் குழுக்கள் கேட்பதை கொடுக்க நாங்கள் தயாராகவில்லையென ஒருவித பயத்துடன் அதை வெளிக்காட்டாமல் தலை கனத்த நிலையில் முழக்கமாக சிங்கள மக்கள் கூட்டத்தின் முன் தெரிவித்தார்.

அவரது முழக்கத்தின் சாராம்ஷம், "வரும்? ஆனால் வராது!" என்ற அர்த்தப்பட்டதாகவே தொனித்தது. அவர் ஸ்ரீலங்கா நாட்டின் அதி உத்தம சனாதிபதி. நிறைவேற்று அதிகாரம் கொண்டவர். சர்வ வல்லமை படைத்தவர். அந்தப்பெருமகன் இந்தக்கருத்தை இன்று நேற்று அல்ல, தொடர்ந்து சொல்லிக்கொண்டுதானிருக்கிறார், இருந்தும் அவர் குறிப்பிட்ட "தேசிய ஒருமைப்பாட்டுடன் வட, கிழக்கு வாழ் மக்களுக்கான ஜனநாயக உரிமையினை வழங்குவதற்கு நாங்கள் ஒருபோதும் தயங்கவில்லை." அந்த "தயங்கவில்லை" என்று அவர் கூறும் அதை தயக்கமில்லாமல் நிறைவேற்றுவதற்கு என்ன தடை குறுக்கே நிற்கிறது. இதுதானே பாவப்பட்ட அந்த மக்களின் எதிர்பார்ப்பு.

அவர் குறிப்பிடுவதுபோல, பிரிவினைவாதக் குழுக்கள் கேட்பவற்றை கவனத்திலெடுக்காமல், தேசிய ஒருமைப்பாட்டுடன் வட, கிழக்கு வாழ் மக்களுக்கான ஜனநாயக உரிமையினை வழங்கவேண்டியதுதானே, அப்படி அவர் வழங்கினால்த்தானே அது என்னவென்று வடக்கு கிழக்கு மக்களுக்கு புரியும். மக்களுக்கு வழங்கவேண்டிய ஜனநாயக உரிமைகள் வழங்கப்பட்டுவிட்டால் பிரிவினைவாதிகளை மக்களே புறந்தள்ளி விடப்போகிறார்கள். விட்டு விட்டு வாய்ப்பந்தல் போட்டு மட்டும் காரியம் என்ன ஆகப்போகிறது.

சர்வதேசத்தைப் பயன்படுத்தி பிரிவினைவாதக் குழுக்கள் முன்னெடுக்கும் முயற்சிகள், சாத்தியமாகப் போவதில்லை?. உள்வீட்டுப் பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்வோம்.? அதில் வெளியார் தலையீட்டுக்கு ஒருபோதும் இடமில்லையெனவும் அவர் கூறினார். வீட்டிலுள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கான சுதந்திரத்தையும், உணவு உடையை ஆகியவற்றை கொடுத்துவிட்டால் குழந்தைகள் தெருவுக்கு வந்து ஆற்பாட்டம் போடவேண்டிய தேவை ஏற்படப்போவதில்லையே. குழந்தைத்தனமாக பேசுவதை சனாதிபதியார் விட்டுவிட்டு, ஆகவேண்டியதை பார்க்கவேண்டும். இப்படியே புலுடா காட்டிக்கொண்டிருப்பாராக இருந்தால் உலக நாடுகளுடன் சேர்ந்து குழந்தைகள் பெரியவர்கள் செய்யவேண்டிய வேலையைத்தான் செய்ய முயற்சிப்பார்கள், அதன்பின் அவர்களை பயங்கரவாதிகள் என்றோ பிரிவினைவாதிகள் என்றோ சனாதிபதி தவிர வேறு எவரும் சொல்லப்போவதில்லை.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி போர் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியிலும், பின் 2009 மே, சண்டை முடிவுற்றுவிட்டதாக அறிவித்தபின்னும், உலகத்தை ஏமாற்றும் நோக்கத்தோடு அவர் கூறுவதுபோல ஒற்றை சிங்கள தலைமையின் கீழ். தமிழினம் வாழமுடியும் என்று கூறுவதற்கு சுதந்திர இலங்கையின் அறுபது ஆண்டுகால வரலாற்றில் ஏதாவது ஒரு அடிப்படை ஆதாரம் இருக்கவேண்டும். அல்லது அதற்கான முன்னுதாரணமாக இன்றய நிலையிலாவது பட்டுணர்ந்த பாடங்களின் அடிப்படையில் சனாதிபதி அவர்கள் வாய்ப் பேச்சை நிறுத்தி தமிழருக்காக சிறு துரும்பையாவது அகற்றி கருமமாற்ற முயலவேண்டும்.

முட்டலுக்கும் மோதலுக்குமான, பிரிவினை வாய்ச்சவடால்களை அவர் முதலில் நிறுத்தவேண்டும். சிங்களவனின் வாய்ச்சவடால்களும் அடக்குமுறையும்தான் தமிழனை ஆயுதம் தூக்க வைத்தது. நிலமை சீராக்கப்படாவிட்டால் மீண்டும் தமிழன் எவனும் ஆயுதம் தூக்க மாட்டேன் என்று எழுதிக்கொடுக்கவுமில்லை. "முக்கியமானவைகள் எதுவும் அழிந்து போனதாகவும் தெரியவில்லை மறைவுத்தானத்திலும் தனல் நிலையிலும் இருப்பதால்த்தான் வெப்பமும் புகையும் வெளியே வந்துகொண்டிருக்கிறது" இந்த யதார்த்தத்தை சிங்கள அரசியல்வாதிகள் உணராதவரை பிரிவினையும் விரிசலும் அதிகரிக்குமே தவிர சுருங்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இப்படிப்பட்ட பெரும்பான்மையினரின் மனநிலைதான் ஸ்ரீலங்காவிலும் வேறு பல தமிழர்கள் வாழும் நாடுகளில் காணப்படுகிறது.

வேண்டாப் பெண்டாட்டியின் கைபட்டால் குற்றம். கால்பட்டாலும் குற்றம். இது ஒரு தமிழ்ப்பழமொழி., இந்தப் பழமொழி உலகத் தமிழினத்திற்கு சரியாகத்தான் பொருந்தியிருக்கிறது. விவாகரத்துக்கான விரிசலின் முதல் ஆணிவேரே இந்த மனநிலைதானே.

இலங்கையில் வந்திறங்கிய ஐரோப்பியரின் ஆட்சிக்காலத்தில், தமிழருக்கான பிரதேசங்களில் தமிழினம் வெள்ளையருக்கு திறை செலுத்தி வேண்டப்பெண்டாட்டியாக வாழவேண்டிய நிர்ப்பந்தம் இருந்திருந்தாலும் நாகரீகம் தெரிந்த ஐரோப்பியர்கள் தமிழன்தன் தனித்தன்மைக்கு ஓரளவு மதிப்பளித்து நாகரீகமாக நடந்து வந்திருக்கின்றனர். வெள்ளையரிடம் நாடு அடிமைப்பட்டுக்கிடந்தபோது இல்லாத மானுடம் காணாத சகிக்க முடியாத சிறுமையை சுதந்திரத்துக்குப்பின் தமிழினம் மிக மோசமாகச் சிங்களவனிடம் சந்தித்திருக்கிறது இவை இலகுவில் மறக்கக்கூடியவைகளுமல்ல.

சிங்கள இனம்தான் மிருகத்தனமாக நடக்கிறதென்றால், பார்வையாளர்களாக இருந்து நியாயத்தை சொல்லக்கூடியவர்களும், மத்தியஸ்தம் வகிக்க வந்த மேல் நாட்டவரும். இலங்கைக்குள் தூதரகங்களை வைத்திருப்பவர்களும். ஏனோ நியாயத்தின்பக்கம் நிற்காமல் ஆட்சி அதிகாரம் இருக்கும் பக்கம் பார்த்து ஒருதலைப்பட்ஷமாக, அதிகாரம் மிகுந்த சிலநாடுகளின் வெறுப்புக்கு ஆளாகாமல் தப்பிக்கும் நோக்கத்தோடு தமது வெளியுறவுக்கொள்கையை சிக்கலில்லாமல் தவிர்க்கும் பொருட்டு. "வரும் ஆனால் வராது" என்பதுபோல் திரிவுபட பேசி அடிப்படையை மறைத்து முற்றுப்பெறாத தொடராக ஏதேதோ தொடர்ந்து பேசிக்கொண்டேயிருக்கின்றனர்.

உதாரணமாக அதி உத்தம ஐநா வின் பொதுச்செயலாளரான பான் கீ மூன் அவர்களின் சறுக்கல் போக்கையே எடுத்துக்கொள்ளலாம்: இலங்கை விவகாரம் தொடர்பாக பல கேள்விகளைக் கேட்டு அடிக்கடி ஐ.நா அதிகாரிகளை சங்கடத்துக்கு உள்ளாக்கும் ஒரே ஒரு ஊடகமாக இருப்பது இன்னர் சிற்றி பிரஸ், (இந்த ஊடகமும் இல்லையென்றால் ஐநா கலாசாலையின் அதிக அழுக்குக்கள் வெளியே தெரிவதற்கான வாய்ப்பும் இல்லை.)

சமீபத்தில் இவ்வூடகம் ஐ.நா நிபுணர்கள் குழு பரிந்துரைசெய்த அறிக்கையை ஏன் அமுல்படுத்த முடியாமல் உள்ளது என்ற கேள்வியை நேரடியாக பான் கீ மூன், அவர்களிடம் தொடுத்திருந்தது. அதற்கு பதிலளித்த கீ மூன், சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்பதனை கருதி தன்னால் அதை நகர்த்த முடியாது என்றும், ஐநா பொதுக் குழு கூடித்தான் முடிவெடுக்கவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இச் சந்தேகத்தை இன்னர் சிற்றி பிரஸ், ஐநா பொதுக் குழுவின் தலைவர் ஜோசெப்,பிடம் கேட்டபோது. இவ்விடையம் குறித்து பான் கீ மூன் அவர்களே முடிவெடுக்கவேண்டும் என பொதுக்குழுவின் தலைவர் ஜோசேப் தெரிவித்துள்ளார். பான் கீ மூனிடம் கேட்டால் பொதுக் குழுவின் தலைவர் அல்லது பாதுகாப்பு கவுன்சிலே முடிவெடுக்கவேண்டும் என்று கூறுவதும், பொதுக் குழுவின் தலைவரிடம் கேட்டால் பான் கீ மூனே முடிவெடுக்கவேண்டும் என்று கூறுவதும் சிறுபிள்ளைத் தனமாக இருப்பதாக இன்னர் சிற்றி பிரஸ், விசனம் தெரிவித்துள்ளது. நிபுணர்கள் குழு அறிக்கை வெளியாகி மாதக்கணக்காகியும் இது குறித்து இன்னமும் தீர்க்கமான எந்த ஒரு முடிவும் இதுவரை எடுக்கப்படவே இல்லை.

இந்நிலையில் ஈழத்தின் போர்க்குற்றம் சம்பந்தமாக ஒரு நிபுணர்கள் குழுவை அமைத்து ஏன் ஒரு அறிக்கையை பான் கீ மூன் தயார் செய்தார் என்கிற கேள்வி எழுகிறது, ஒரு வாதத்திற்கு அந்த அறிக்கையின் நகர்வுகளை பொதுக்குழுதான் நகர்த்தவேண்டுமென்றால் நிபுணர்கள் குழுவை கலைக்காமல் அறிக்கையையும் நிபுணர் குழுவினரையும் தனது சிபார்சுடன் பொதுக்குழுமுன் நிறுத்தியிருக்கவேண்டிய பொறுப்பு பான் கீ மூன் அவர்களுக்குத்தானே இருக்கிறது. இங்கும் "வரும் ஆனால் வராது" நகைச்சுவைதானே பல்லைக்காட்டுகிறது.

ஐநா செயலாளர் கூட, எந்தெந்தநாடுகள் இலங்கை விடயத்தில் நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்டுகின்றதென்பதை நாசுக்காக கவனித்து உச்ச சக்திவாய்ந்த நாடுகள் என்ன கருத்தை கொண்டிருக்கின்றதென்பதை சூசகமாக உணர்ந்து. காரியமாற்ற முயற்சிக்கிறார் என்றால் நீதி நியாயம் என்பது எல்லாம் தனி மனித நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதன் கருத்துக்கொப்பவே நகர்த்தப்படுகிறதென கொள்ள முடியும். அடுத்த ஐநாவின் செயலாளர் தெரிவில் பதவி விட்டுப்போய்விடக்கூடாது என்னும் பயம் பான் கீ மூன் அவர்களிடம் அடி மனதில் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கவும் கூடும். பான் கீ மூனின் நடத்தையும், ரோம் நகரத்து நீரோ மன்னனின் பிடில் வாசிப்பும் ஒத்துப்போவது தெரியவில்லையா.

இலங்கையில் காலாகாலமாக வாழ்ந்து வருவது இரண்டுக்கு மேற்பட்ட வேறுபட்ட இனங்கள், மொழி வாரியாக பார்த்தாலும் ஒன்றுக்கொன்று புரியாத எந்தத் தொடர்பும் இல்லாத இரண்டு வெவ்வேறு மொழிகள், மதம் என்று பார்த்தாலும் முற்று முழுதாக வேறுபட்டவர்கள், இவர்கள் ஒன்றாக ஒரு நாட்டுக்குள் தினக்கொலையும் குற்றுயிருமாக வாழ்வதும் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இலங்கைக்குள் இல்லை.

சிங்களவனால் தமிழினத்திற்கு ஏற்பட்ட இழப்புக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பகைக்கான காரணங்கள் படுகொலைகளை தாண்டி நிறையவுண்டு, ஒத்துப்போய் வாழ முடியாததற்கு முற்று முழுதாக அவை தமிழ்மக்களின் ஆழ்மனதின் உணர்வு சம்பந்தப்படவை. வயிற்றுக்காக, கல்விக்காக, கற்புக்காக, உயிரைவிடவேண்டும் அல்லது நீதி விசாரணை எதுவுமில்லாமல் சிறையில் கிடக்கவேண்டும். என்கிற சூழ்நிலை, இச் சூழல் அனைத்தும் ஒரு இரவில் நடந்து முடிந்த நிகழ்வுமல்ல இவை கால ஓட்டத்தின் நீண்ட கால வரலாற்றுப் பதிவுகள். இந்த வரலாற்று உண்மை உலகத்திலுள்ளவர்களுக்கு தெரியாததுமல்ல. இருந்தும் துணிச்சலுடன் எவரும் தமிழ்க்களுக்கு ஒரு சுமூகமான முடிவு கட்டுவதற்கு தயங்குகின்றனர். தமிழர்களுக்கென்று ஒரு ராய்ச்சியம் இல்லாததும் தமிழருக்கு சாதகமாக பல நாடுகள் இருந்தாலும் வல்லாதிக்கங்களை எதிர்த்து நேர்சீரான குரல் கொடுக்கக்கூடிய ஆதரவு இல்லாததுமே இதற்கான முக்கிய காரணமாகும்.

முதலாவதாக இலங்கை என்கிற தீவு, இந்தியாவுக்கு அருகாமையில் பூகோள ரீதியாக உருவானது மிகப்பெரிய துரதிஸ்டமும், அவமானமும் காலக்குற்ற அவலமுமாகும்.


இப்படிச்சொல்லுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. சிறுபான்மையான தமிழினத்தை சீண்டினால் ஏன் என்று கேட்பார் எவரும் இல்லையென்ற மனநிலையோடு, இந்திய மத்திய மானில அரசுகளின் தேவையற்ற அரசியல் தலையீடுகள். நடைமுறைப் படுத்தப்போவதில்லை என்று தெரிந்துகொண்டும், தான்தோன்றித்தனமான தாமே நிறைவேற்றும் தமிழருக்கான தீர்வுத்திட்டங்கள் வரைதல். அத்திட்டங்களை காட்டி தமது அரசியலை வளர்த்து ஏமாற்றும் அசிங்கம். பேச்சுவார்த்தை என்னும் போர்வையில் தன்னலன் சார்ந்த முண்டுகொடுப்பு. சர்வதேசரீதியான தலையீட்டு சதிகள். உள்ளூரில் தமிழரின் உரிமைப்போராட்டத்துக்குள் மரபு மீறி செய்த அநீதிகள். இவை அனைத்தும் சேர்ந்து ஈழத்தவரின் உச்ச வெறுப்பில் இன்று ஸ்ரீலங்காவை விட முன்னணியில் பகைமை கொண்டு நிற்பது இந்தியா என்கிற தற்குறி நாடாகும்,

மிருக வம்ஷமான, (சிங்கத்துக்கு பிறந்த) சிங்கபாகு என்ற இந்திய சிற்றரசனால் இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவன். சிங்கபாகு பெற்ற மகனான விஜயன். சுக்கான் இல்லா கப்பலில் ஏற்றி விரட்டப்பட்டு, அவன் பல ரவுடிகளுடன் கரையொதுங்கிய இடம் இலங்கை. இந்தியாவுக்கு அருகாமையில் இலங்கைத்தீவு அமைந்திருந்ததால் விஜயன் இலங்கையில் தரையிறங்குவதற்கு சாதகமாக இருந்தது. இந்நிகழ்வே இன்று இலங்கை தமிழினத்துக்கு மாபெரும் கேடாக அமைந்திருக்கிறது.

இலங்கையின் தமிழ் அரசியல் தலைமைகள் தாம் வாழுவதற்காக, இந்தியாவை தாய் வீடென்றும் தந்தை வீடென்றும் போற்றி. இந்தியத்தலையீட்டை வேண்டி விளக்கு வைத்து வரவேற்றதும், வீணே வேண்டாத அவலத்தை ஈழ மண்ணில் விஷ தாவரமான பரத்தேனியம் செடி கணக்காக வளர்த்து விட்டிருக்கிறது. அன்றய தமிழ் அரசியல் தலைமைகள் விட்டுச்சென்ற மாபெரும் தவறுகளே இன்றய தமிழினத்தின் அழிவுக்கு பெரும் காரணியாக பல இடங்களில் "குற்றமாகியிருக்கிறது".

நாடு சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமான 1915/ 1960 காலப்பகுதிகளில் ஆங்கிலேயருடன் பேச்சுக்களை நடத்தக்கூடிய கற்றறிந்த வல்லமை கொண்ட, ஈழத்து வரலாறு அறிந்த அரசியல்த் தலைமைகள் சிங்கள அரசியல் வாதிகளை விடவும் தமிழர் தரப்பில் அதிகமாக இருந்திருக்கின்றனர். ஆனால் அவர்கள், தாம் இலங்கையின் மேட்டும்குடியில் பிறந்த பெருத்த கல்விமான்கள் என்பதை பிரித்தானியர் மத்தியில் காண்பிக்க முயன்றனரே தவிர. பிற்காலத்தில் ஏற்படப்போகும் அனர்த்தத்தை ஊடுருவி நெடும் பார்வைகொண்டு சிந்திக்கவில்லை என்றே படுகிறது.

ஈழத்து கல்விமானான வன்னியை சேர்ந்த சுந்தரலிங்கம் என்பவர் பிரித்தானியா மகாராணிக்கு கணித பாடம் சொல்லிக் கொடுத்தவர் என்ற பெருமை பெற்றவர். பிரித்தானியா மகாராணிக்கு கணிதம் சொல்லிக்கொடுத்த அவரால் தமிழினத்திற்கு நியாயமாக கிடைக்கவேண்டிய உரிமை எதையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. 56 தேசங்களை பிரித்தானியா தனது ஆளுகைக்குட்படுத்தி வைத்திருந்தபோது, மகாராணிக்கு கணக்கு சொல்லிக்கொடுக்கக்கூடிய சிறந்த ஒரு ஆசிரியர், ஈழத்தமிழினத்தில் பிறந்து கல்விமானாக இருக்கிறார். என்பதை மதிப்பிட்டு பிரித்தானிய அரசு தேடி கண்டுபிடித்திருக்கிறது. தமிழினத்தில் பிறந்த சுந்தரலிங்கம் அவர்கள், பாண்டித்தியத்தில் தான் மதிப்பு பெற்று பெயர் எடுத்து உயர்ந்த அளவுக்கு, நாடு- மக்கள்- நலன் சார்ந்து சாதனை செய்து மதிப்பு பெறவில்லை என்றே படுகிறது.

பிரித்தானியா மாகாராணியின் மூலம் சிறீலங்காவில் தமிழர்களுக்கான குறைந்தபட்ஷ சுயநிர்ணய உரிமையை சுந்தரலிங்கம் அவர்களால் பெறமுடிந்திருந்தால் வரலாறு பேசியிருக்கும். இன்று படுகொலைகள்பற்றி பேசவேண்டியிருந்திருக்காது தமிழர்கள் சிறீலங்காவில் நிம்மதியாக வாழ வழி செய்திருந்தால் சுந்தரலிங்கம் அவர்கள் பற்றி பெருமையாக கூறலாம். பிரித்தானிய ராசாத்திக்கு கணக்கு பாடம் சொல்லிக் கொடுத்ததால் தமிழினத்துக்கு என்ன நன்மையை சுந்தரலிங்கம் அவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார், எலிசபெத் மகாராணிக்கும் தனக்கும் தனது குடும்பத்திற்கும் மட்டும் பெருமையை சேர்த்திருக்கிறார்.

எலிசபெத் மகாராணியாரின் திருமணத்திற்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்ட ஆசிய கண்டத்து தனிமனிதர் ஒருவர் என்றால் அது சுந்தரலிங்கம் அவர்கள் ஒருவர்தான். என்ற பெருமை தவிர வேறொன்றுமில்லை.

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம் என்றே கருதப்படுகிறது. கலவரத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் சிறுபான்மையினரான தமிழ் பேசும் முஸ்லிம்கள். இக்கலவரம் பெரும்பான்மை சிங்கள இன மக்களுக்கும் சிறுபான்மையினரான முஸ்லிம் இன மக்களுக்கும் இடையே ஏற்பட்டது. இதுதொடர்பில் சிங்கள அரசியல்த்தலைவர்களே மூல காரணியாக இருந்து செயற்பட்டனர் என குற்றஞ்சாட்டி ஆங்கிலேய அரசு பாரபட்ஷம் பாராது தீவிரமாகச் செயற்பட்டு டீ. எஸ் சேனானாயக்கா, பண்டாரநாயக்கா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா, டீ. எஸ் விஜேவர்தனா, டொக்டர் நெயிசர் பெரேரா, ஈ. டீ. த சில்வா, எச் அமரசூரிய, ஏ. எச். மொலமூறே போன்ற பல சிங்களத் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

சிங்களவன் சிறைப்பட்டது கேள்வியுற்று சினம் கொண்ட தமிழ் அரசியல் தலைவரும் கல்விமானுமாகிய சேர் பொன்னம்பலம் இராமநாதன், விட்டேனோ பார் என ஆக்கிரோசம் கொண்டெழுந்து இங்கிலாந்து சென்று தனது வாதத்திறமையால் ஆங்கிலேய ராய்ச்சியத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி. சலுகைபெற்று சிங்களத் தலைவர்களை விடுதலை செய்ய வைத்தார். இங்கிலாந்தில் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு இராமநாதன் நாடு திரும்பியபோது சிங்களத் தலைவர்கள் கொழும்பு துறைமுகத்தில் இராமநாதனை வரவேற்றதோடு, அவரது குதிரை வண்டியின் குதிரைகளைக் அவிழ்த்து விட்டு. வண்டியை தாமே காலி வீதி வழியாக அவரது வீடுவரை இழுத்துச் சென்றனர். இப்படிப்பட்ட மேதாவிலாசங்களைத்தான் இராமநாதன் போன்ற எமது மூத்த அரசியல் கல்விமான்கள் மிக விரும்பி ஏற்றிருக்கின்றனர்.

அந்த நேரத்தில் பிரித்தானிய அதிகாரத்திடமிருந்து சிங்களவனை காத்து பிணை எடுப்பதற்கு சிங்களவர்களிடம் தகுதியும் மதிப்பும் இருக்கவில்லை. தமிழனின் உதவி சிங்களவனுக்கு அப்போ தேவைப்பட்டது. இன்று தமிழன் நிம்மதியாக வாழமுடியாத தத்தளிப்பு நிலை சிங்களவனால் ஏற்படுத்தப்பட்டு இராணுவ கொடுஞ்சிறையில் வாடும் என் தாய் சகோதரிகளை பிணை எடுக்க கடவுளைத்தவிர வேறு எவரும் இல்லை! (கடவுளும் இல்லை என்றே தோன்றுகிறது!)

சிங்களவன், தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறையில் இறங்கி. கலவரத்தை உண்டுபண்ணியதற்கான காரணத்தை அன்றே விலாவாரியாக ஆராய்ந்து. இனக்கிளர்ச்சிக்கு காரணமானவர்களை கடும்போக்கோடு தண்டிக்காவிட்டாலும் குற்றத்தை புரியவைத்து நீதி விசாரணையின் பின்,ஒரு நாட்டின் குடிமக்கள் அன்னியோன்யமான புரிந்துணர்வோடு வாழுவதற்கான சூழலை உருவாக்காமல் சிபார்சு அடிப்படையில் சிங்களவனை இராமநாதன், போன்றோர் பிணை எடுக்க முயற்சித்தது, இன்று முழுத்தமிழினமும் எவராலும் பிணையெடுக்க முடியாத சிக்கலுக்குள் மூழ்கியிருக்கிறது.

ஆரம்பத்திலேயே தொலைநோக்கோடு தமிழ்த் தலைமைகள் விடயத்தை அணுகியிருந்தால் பிரித்தானியருக்கும் மூலம் புரிந்திருக்கும். சிங்களவனுக்கும் படிப்பினையாக இருந்திருக்கும். யாழ்ப்பாண தமிழன் என தம்மை காட்டிக்கொண்டு கொழும்பில் குடியிருந்து சொகுசாக வாழ்ந்த தமிழ் தலைவர்கள் தமிழினத்துக்கு தொலை நோக்குப்பார்வையில் எதையும் செய்யவில்லை என்பதே உண்மை. இதேகருத்தை புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழருக்கான அரசியல் தலைமைகள் என்று சொல்லுபவர்கள் புரிந்துகொண்டு காரியத்தில் இறங்க வேண்டும். காலங்கடந்தபின் ஏற்படும் எந்த ஞானமும் கௌவைக்கும் உதவாது.

இலங்கையின் வரலாற்றில் சட்டவாளர்கள் நிறைய இருந்திருந்தாலும் குயின்ஸ் கவுன்சில், (Queen's counsel) என்ற தகமை பெற்ற சட்டத்தரணிகள் இரண்டே இரண்டு பேர் மட்டுமே. ஒருவர் ஜீஜீ பொன்னம்பலம் கியூ சி., அடுத்தவர் எஸ். ஜெ. வி. செல்வநாயகம் கியூ சி,. இந்த இரண்டு அறிவார்ந்த சட்டவாளர்களும், பிரித்தானிய பேரரசின்கீழ் ஆளப்பட்ட எந்த நாட்டிலும் ஒரு வழக்குக்காக அந்நாட்டின் உயர் நீதிமன்றத்தில் ஆஜாராகி வழக்காடும் தகுதி பெற்றிருந்தனர்.

இதன்காரணமாகவும்,, இலங்கை அரசியலில் மேலான இடத்தில் இவர்களின் பங்கீடு தேவைப்பட்டு இருந்ததாலும்,,. பிரித்தானிய அரசமட்டத்திலும் இவ் இருவரும் நன்கு அறியப்பட்டவர்களாக இருந்தனர். ஆனால் இவ்வளவு தகுதி பெற்ற இருவரும் சுதந்திரத்தின் பின் இலங்கை அரசியலில், தலைமை போட்டி காரணமாக ஒற்றுமையுடன் தமிழருக்கான நிலையான அரசியலை சீரிய முடிவாக நிறுவ முடியவில்லை. இவர்களின் பின் தமிழர்களுக்கு தலைமை வகித்த எந்த அரசியல் தலைவர்களும் மாற்றுச்சிந்தனை எதுவுமின்றி,, "தேசியத்தலைவர் பிரபாகரன், அவர்களது வரவுவரை", பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றவகையில் வந்ததும் பாராளுமன்ற கதிரையை சுத்தமாக்கிவிட்டு போனதும் மட்டுமே காணமுடிகிறது.

ஆரம்ப காலத்தில் அரசியல் ரீதியாக ஈழப்பிரச்சினையை தட்டிக்கேட்கக்கூடிய தகுதியுடன் இருந்த அரசியல் தலைவர்கள், மேதாவிலாசங்களையும் தமது பகட்டான இருப்பையும் முதன்மையாகக்கொண்டு மக்கள் அவஸ்த்தை படுவதற்கு இயன்றளவு அத்திவாரமிட்டுவிட்டு மேதாவிகளாக வாழ்ந்து, சிங்களவனுக்கு போதிய அளவு அரசியல் ஞானம் இராச(தந்திரம்) கற்பித்து உதவிவிட்டு சென்று சேர்ந்துவிட்டனர்.

இந்த பழைய தலைவர்கள் வேண்டுமென்று இவ்விடயங்களை செய்யாவிட்டாலும், தொலை நோக்கு பார்வையற்ற குறைபாடும்,படாடோபமும், தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களிடமுள்ள நுண்ணறிவான மதிநுட்பமும் மக்கள்மீதும் மண்மீதும் தலைவர் பிரபாகரன் அவர்கள் கொண்டது போன்ற பற்றுறுதியும் இல்லாததே குறைபாடாகும். தாம் கற்றறிந்த கல்விமான்கள் என்கின்ற வித்தகச் செருக்கு, என்கின்ற பலவீனமும். தமிழினத்தை இந்நிலைக்கு இட்டு படுகுழியில் தள்ளியிருக்கிறது என்பதுதான் தமிழினம் பட்டறிந்த பாடமாக கொண்டிருக்கிறது.

அடக்குமுறை என்பது ஸ்ரீலங்காவில் காலாகாலமாக இருந்தாலும் தமிழ் அரசியல்வாதிகளே அதை களைய முயற்சிக்காமல் வளர்த்து விட்ட மூலவேர்கள் என்பதும் எவராலும் மறுக்க முடியாது, சிங்களவனை குறை கூறுவதற்குமுன் எமது அரசியல்வாதிகளின் கடந்த கால வழித்தடத்தையும் நிகழ்காலத்தின் தமிழ் அரசியல் அம்புகள் விரையும் நேர் கோட்டையும் கவனத்தில் கொண்டால் விடை தேட நீண்ட தூரம் போக வேண்டியதில்லை.

இந்திய தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் வரலாற்றில், ஈழத்தமிழர் நெருக்கடிக்குள்ளான காலங்களில் தமிழகத்தில் கருணாநிதி, எம்ஜீஆர், ஜெயலலிதா ஆகியோர் தமிழக அரசில் அதிகாரத்தில் இருந்தவர்கள். இவர்களில் எம்ஜீஆர் அவர்கள் ஈழமக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்பதிலும், "ஈழமக்களின் அரசியல்" ஈழமக்கள் சார்ந்த விடயம் என்பதிலும் தெளிவாக இருந்து, தன்னால் முடிந்த உதவியை பிரதியுபகாரம் எதையும் எதிர்பார்க்காமல் துணிச்சலுடன் செய்தார், கருணாநிதியின் வஞ்சக சுயநல நாடகங்கள் உலகளாவி விக்கிலீக்ஸ்வரை நாற்றமெடுத்து கடை நிலையில் இப்போ அடங்கிக் கிடக்கிறது. ஜெயலலிதா அவர்கள் ஆரம்பத்தில் தவறான கண்ணோட்டத்தோடு ஈழத்தமிழினத்தையும் போராட்டத்தையும் நோக்கியிருந்தாலும், தற்போது ஈழத்தமிழர்களின் நிலை, மற்றும் உலக அரசியல் மாற்றங்கள். அனைத்தும் கவனித்த அவரது அரசியல் பாதையில் நிறைய வித்தியாசங்கள் தெரிகிறது. எனவே ஜெயலலிதா அவர்களின் நடவடிக்கைகளை ஈழத்தமிழினம் நம்பிக்கையுடன் சற்றே பொறுத்திருந்து பார்க்கவேண்டியுள்ளது.

முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தின் பிந்திய ஈழத்தமிழினத்தின் வாழ்வியலை, குறைபாடுகளை, இலங்கையில் அரசியல் செய்யும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற கட்சிகளால் கடுகளவேனும் செப்பனிட முடியவில்லை. குறைந்தபட்ஷ அடிப்படையைக்கூட அவர்களால் நிறைவேற்ற முடியாத சூழல் தெரிகிறது. அப்பாவித்தனமான அவர்களது அறிக்கைகள்கூட உள்ளூர் பத்திரிகைகளுடன் கரைந்து போய் விடுகிறது. தாமும் ஸ்ரீலங்காவின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற தகுதி தவிர, பாராளுமன்றத்தில் இருந்து இவர்களால் ஒரு குண்டூசியைக்கூட பெற்றுக்கொள்ள முடியாது. இவைதான் அவர்களுடைய நீண்டகால அரசியல் யதார்த்தம். சுய ஆத்மதிருப்த்திக்கு எப்போ வேண்டுமானாலும் அவர்களால் அறிக்கை மட்டும் வெளியிடமுடியும். இராணுவத்தை விமர்சித்தோ ஜனாதிபதி அமைச்சர்களை விமர்சித்தோ தமிழர்களின் அவலம் குறித்தோ அறிக்கை எழுத அவர்களால் எண்ணிப்பார்க்கவும் முடியாது. அவற்றை அவர்களே தணிக்கைக்கு உட்படுத்திக்கொள்ளுவதுமுண்டு.

பயம் ஒரு காரணமாக இருந்தாலும் இவர்களுக்கான அரசியல் விஸ்தீரண பரப்பளவு வெளியும் அவ்வளவுதான் காணப்படுகிறது. இதற்கு தமிழ் எட்டப்பர்களான டக்கிளஸ் தேவானந்தா, வினாயகமூர்த்தி முரளிதரன் என்கிற கருணா, கிழக்கு மாகாணத்தின் அபசகுனமான பிள்ளையான் போதாக்குறைக்கு கேபி. இந்த எட்டப்பர் கூட்டம் சிங்களவனுடன் தூமை தோய்த்துக்கொண்டிருக்கும் வரை ஸ்ரீலங்காவில் உள்ளூர் தமிழ் அரசியல்வாதிகள் எண்ணுக் கணக்குக்கு பாராளுமன்றத்தில் ஆசனங்களை நிரப்பிக்கொண்டிருப்பனரே தவிர, உரிமை எதனையும் வென்றெடுத்து சாதனை படைக்கப்போவதில்லை.

விடுதலைப்புலிகளின் ஆட்சி ஈழத்தில் இருக்கும்வரை துணிவுடன் சில கருத்துக்களையாவது முன் வைத்த தமிழ் அரசியல்வாதிகள், முள்ளிவாய்க்கால் அமைதிக்குப்பின், என்ன செய்கிறார்கள் என்பதை கவனிப்பதற்க்குக்கூட தமிழினம் சிரத்தை எடுத்ததாகவும் தெரியவில்லை.

ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ராஜபக்க்ஷ விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டேன் என்று கொக்கரித்த வாயால் வெளிநாடுகளில் தப்பி வாழும் விடுதலைப்புலிகளால் தனக்கும் தனது அரசுக்கும் நெருக்கடிகள் தொடருகிறதென்று திரும்பவும் அழுகிறர். சமீபத்தில் காலிமுகத்திடலில் நடைபெற்ற யுத்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் புலம்பியவை. சமீபத்தில் தமிழ்நாட்டின் மூத்த முதலையான கருணாநிதி புலம்பியதை ஞாபகமூட்டியது. ராஜபக்க்ஷ வெளியிட்ட கருத்துக்களும் அதற்கான கற்பனை பதில் மறுமொழிகளும்.

1,வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கையில் பிரிவினைகளை ஏற்படுத்த தொடர்ந்தும் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

#(எது போலியான பிரச்சாரங்கள். ஐநா அறிக்கையா. சனல்4 வெளியிட்டிருக்கும் படுகொலைக்காட்சிகளா?)

2,புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளை விடுதலை செய்வதன் மூலம், இலங்கை நேர்மையான மனித உரிமைகளை கட்டியெழுப்பிவருகிறது.

#(சரணடைந்த 14 ஆயிரம் புலிகளில் மூவாயிரம் புலிகள் கணக்கில் காட்டினால். மீதி 11 ஆயிரம் போராளிகளும், ரமேஸ், புதுவை இரத்தினதுரை, யோகி, போன்ற தலைவர்களும் மனித உரிமைகளை கட்டியெழுப்பும் கட்டிட நிர்மாண வேலையில் இருந்துகொண்டு இருக்கின்றனரா?)

3,தேசிய ஒருமைப்பாட்டுடன் வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கான ஜனநாயக உரிமையினை வழங்குவதற்கு நாங்கள் ஒருபோதும் தயங்கவில்லை.

#(வடக்கு கிழக்கு மக்களுக்கான ஜனநாயக உரிமை என்ன என்பதை தெரியப்படுத்தலாமே)

3,A,இருப்பினும் பிரிவினைவாதக் குழுக்கள் கேட்பதை கொடுக்க நாங்கள் தயாராகவில்லை.

# (நீங்கள் என்னத்தை கொடுக்கிறது, காலாகாலமாக சிங்களவனுடன் வாழ முடியாதென்று பிரிவினை கோருபவர்கள் தமிழர்கள், பிரிவினை கோராதவர்கள் என்று நீங்கள் கூறுவது , டக்கிளஸ், கருணா. பிள்ளையான் கேபி. இவர்களை, இந்த கூட்டத்தை வைத்துக்கொண்டு எவ்வளவு காலம் ஓட்டுவதாக உத்தேசம்?

4,எமது உள்வீட்டுப் பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்வோம். அதில் வெளியாரின் தலையீட்டுக்கு இடமளிக்கப்படமாட்டாது.
# அப்படியே ஆகட்டும்,, தமிழர்களும் அப்படியே,

5,பழைய காயங்களை பெருப்பித்து மக்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்த இனிமேல் ஒருபோதும் இடமில்லையென்பதை அரசியல் கட்சிகளுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

# (நீங்கள் கூறுவது தமிழர் தேசியக்கூட்டமைப்புக்குத்தான் என்பது தெரியும். ஆனால் அந்தப் பழைய காயங்கள்தானே வலியோடு ஆறாமல் எங்களை அரற்றுகிறது, அதை தமிழர் தேசியக்கூட்டமைப்பிற்கு கூறி ஒன்றும் நடக்கப்போவதில்லை)

6, அரசாங்கத்துடன் இணைந்து நாட்டையும் நாட்டு மக்களையும் அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் கட்சிகள் ஈடுபட வேண்டுமென்பதையும் கேட்டுக்கொள்கிறேன்.

#( டக்கிளஸ், கருணா, பிள்ளையான், உங்களோடுதானே சாகும்வரை இருப்பார்கள் கேக்கத்தேவையில்லை)

7,எமது இராணுவத்தினர் ஒரு கையில் துப்பாக்கியையும், மறு கையில் மனித உரிமைப் பிரகடனத்தையும் சுமந்து கொண்டுதான் பயங்கரவாதிகளிடமிருந்து இந்நாட்டை விடுதலை செய்வதில் தங்களை அர்ப்பணித்திருந்தார்கள்.

# (சனல் 4 தொலைக்காட்சியையும், ஐநா நிபுணர்கள் குழுவின் அறிக்கையை திரும்ப பார்க்கவும்,)

8, ஆயிரக்கணக்கான முப்படையினர் மற்றும் பொலிசாரின் உயிர்த்தியாகங்களின் மூலம் விடுதலை செய்யப்பட்ட நாட்டை எந்தவொரு அந்நிய சக்திகளிடமோ, பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளிடமோ ஒருபோதும் தாரைவார்க்க நான் தயாராக இல்லை.

#(ஆயிரக்கணக்கான துப்பாக்கி ஏந்திய முப்படையினர் பொலிஸாரின் குண்டுகளில் மாண்டுபோனது அன்னியரல்ல எங்கள் இலட்சக்கணக்கான உறவினர்கள்)

9, பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டதன் காரணமாக தங்கள் வருமானத்தை இழந்துள்ள முன்னாள் பயங்கரவாதிகள் மீண்டும் ஒன்று சோ்ந்து தாய்நாட்டுக்கு விரோதமான முறையிலும் வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்தித்திட்டங்களுக்கு எதிர்ப்புக் காட்டும் முறையிலும் செயற்படத் தொடங்கியுள்ளனர்.

#(புலிகள் என்று சொல்லுங்கோ,, புலிகளை அழிச்சிட்டம் என்று நீங்கள் சொன்னதாக ஞாபகம்,,, பீனிக்ஸ் பறவைபோல அவர்கள் சாம்பலிலிருந்து புறப்படுகிறார்கள் என்று நினைக்கத்தொன்றுகிறது, அத்துடன் வருமானத்தை அப்புகாமியும் பியசேனவும் கொடுத்திருந்தால் சிலவேளை உங்களுக்கு நஸ்டம். ஆனால் சுப்பையாவும், கணபதிப்பிள்ளையும், அன்னலட்சுமியும் தங்கள் காசை, அதுவும் வெளிநாட்டிலிருந்து தாய் நாட்டுக்காக குடுத்து என்னவாகுதல் செய்யட்டுமே நீங்க ஏன் அழுகிறீங்க)

10, ஆயினும் முன்னைய காயங்களை மீண்டும் மீண்டும் கிளறுவதாலோ, நடந்து முடிந்த சம்பவங்களை திரும்பத்திரும்ப ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பதாலோ யாருக்கும் எந்தவித நன்மையும் விளையப் போவதில்லை

#அதைத்தானே நாங்களும் சொல்லிக்கொண்டிருக்கிறோம் நீங்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாமல் காயம் பட்ட வலிக்கு மருந்து தடவ விட்டிருந்தால் கொஞ்சமாவது அமைதி காக்க தோன்றும்,, விடுத்து வேதனையை விதந்து சீண்டிக்கொண்டிருந்தால். காயம் ஏற்படுத்தியவனையும் துன்பங்களை உண்டாக்கியவனையும் கழுவில் ஏற்றாமல் தமிழினம் உறங்காது)

மேலே குறிப்பிட்டவை ஜனாதிபதி ராஜபக்க்ஷவின் வாயிலிருந்து விழுந்த நஞ்சுகள், ,அவை ராஜபக்க்ஷவின் இயலாமையின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து நகைச்சுவையாக யதார்த்தமான பதில்கள் பதியப்பட்டிருக்கிறது.

இலங்கையில் வாழும் பூர்வீக தமிழர்களின் தேசிய உரிமையும் அன்றாட வாழ்வில் தமிழன் படும் இன்னல்களும் "வரும் ஆனால் வராது" என்ற இந்த வடிவேலுவின் நகைச்சுவை வேடிக்கை வார்த்தை மிகச்சரியாக பிரதிபலித்தே வந்திருக்கிறது. படவேண்டிய அனைத்து அலைச்சல்களையும் சந்தித்தவன் தமிழன் என்பதால் இச்சொல்லை புதிய பொன்மொழியாக பின்பற்றி எழுதப்படும் கணிப்பீடும் சரியாகத்தானிருக்கும்.

இந்தியன் ஆமி வந்திறங்கியபோது அப்பாவியாக ஆனந்தத்தோடு கை காட்டி வரவேற்றான் தமிழன். ஐரோப்பியர் வந்திறங்கியபோதும் புளகாங்கிதத்துடன் வரவேற்றான் தமிழன்.முன்பு போத்துக்கீசர் ஒல்லாந்தர் வந்தபோதும் இவனின் கொள்ளுப் பாட்டன் எள்ளுப் பாட்டன் ஆ,,,,வென்று இப்படித்தான் வரவேற்றிருப்பான். அதேபோலத்தான் அன்றொருநாள் இந்தியாவிலிருந்து விஜயன் என்பவன் தாமிரபரணியில் வந்திறங்கியபோதும் தமிழன் பல்லைக்காட்டி வரவேற்றிருப்பான். இனி தமிழன் என்ன செய்யப்போகிறான் என்பதை உலகம் பொறுத்திருந்து பார்த்து பதிவு செய்யும்.

ஈழதேசம் இணையத்திற்காக
கனகதரன்.