உலகத்தில் காலத்திற்கு காலம் சில மனிதர்களின் வாக்கியங்கள் முக்கியத்துவம் பெறும்..... அந்த வாக்கியங்களை உதிர்ப்பவர்கள் அரசியல்வாதியாகவும், ஆன்மீகவாதியாகவும், இலக்கியவாதிகளாகவும் இருக்கலாம்.

தவிர விஞ்ஞான, விடுகதை பழமொழிகளாகக்கூட இருக்கலாம்..... இருந்தும் அவைகளில் தீர்க்கதரிசனமான சில வாக்கியக்கூறுகள் சமூகத்தில் திருப்பத்தை தோற்றுவித்தவையாக நின்று நிலைத்து, சமூகத்திற்கு வழிகாட்டியாகவும், வேறு சில எதிர்மறையான வாக்கியங்கள் நடந்து முடிந்த துன்பத்தை நினைவுப்படுத்துபவையாகவும், இலக்கியவாதிகளின் பெரும்பாலான வாக்கியங்கள் பாடங்களாகவும், மனதில் படிந்து புகழ் பெற்றிருக்கின்றன.

அந்த வகையில் இருபத்து ஓராம் நூற்றாண்டில் ஈழ மக்களின் மனதில் மறக்கமுடியாத பல வாக்கியங்கள் இருந்தாலும். கீழே தரப்படும் இரண்டு வாக்கியங்களையும் அவை உதித்த சந்தற்பங்களையும், அதன் உள்ளே மறைந்திருக்கும் நஞ்சு கலந்த சுயநலமும், அபாயமும்..... இந்தப்பதிவை எழுதத்தூண்டியது.

2009 ஆண்டின் இணையற்ற வசனமாக, மு கருணாநிதியால் எழுதி ஒத்திகை பார்க்கப்பட்டு, குறுகிய நேரம் மேடையில் நடிக்கப்பெற்று கலைந்து போயிருந்தாலும். காலத்தால் அழியாத இந்த கபடம் நிறைந்த வாக்கியமும். அது இடம்பெற்ற நேரமும் என்றும் மறக்கமுடியாதவை. வக்கிரமான மனஉணர்வோடு கருணாநிதி கக்கிய வார்த்தைகள்,
1வதாக இடம்பெறுகிறது.......

# விடுதலைப்புலிகள் யுத்தநிறுத்தம் என்று அறிவித்தபின் இலங்கையில் சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்யும் என்று நான் இரவு முழுவதும் ஏங்கி.... நித்திரை முழித்து.... உண்ணாமல்.... காத்திருந்தேன்??.. இருந்தும் சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்ய முன்வராத காரணத்தால் வேதனையுடன்....என்னுடைய தமிழ் உணர்வுக்கமைய?.... என்னையே நான் அர்ப்பணித்துக்கொள்ள??... இந்த உண்ணாவிரதத்தை ஏற்று இருந்துகொண்டிருக்கின்றேன்.கழக உடன்பிறப்புக்கள் யாரும் அவர்கள் எந்தப்பொறுப்பில் இருந்தாலும் ,அமைச்சர்களாக இருந்தாலும்,, எம் எல் ஏக்களாக இருந்தாலும்,, அவர்கள் யாரும் என்னைத் தொடர்ந்து இந்த உயிர் அற்பணிப்பு?.. உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவேண்டாமென்று கேட்டுக்கொள்ளுகிறேன்!..... நான் ஒருவன் அதற்காக என்னையே "பலி?. கொடுக்க தீர்மானித்திருக்கிறேன்"?............ என்பதை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.இதை நான் மறுபடியும் மன்றாடி கெஞ்சி கேட்டுக்கொள்ளுகின்றேன்............

இந்த உலகப்பிரசித்தி பெற்ற மகா மோசமான வஞ்சகப் பொய் வார்த்தைகள் 2009 ஏப் 24 ம் திகதி மெரினா கடற்கரையில் முன்னாள் தமிழக முதல்வர் மு கருணாநிதி, ஈழத்தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் செய்யப்போவதாக நடித்த உண்ணாவிரத நாடகத்தின்போது உதிர்த்த மிகவும் பிரபலமான வசனம்.... .

அன்று கருணாநிதி தனது குடும்பம் புடைசூழ நாடகம் நடத்துகிறார் என்று, சிறு குழந்தைவரை புரிந்திருந்தாலும் ஈழத்தின் அவலத்தில் சிறிதாகவாவது ஒரு மாற்றம் நிகழாதா என்ற எதிர்பார்ப்பும் நப்பாசையும் பலரிடம் குடிகொண்டிருந்தது, இன்னும் ஒரு சாராரின் எண்ணம் அதிகாரத்திலிருக்கும் ஒரு அதரப் பழசான அசுரன், மேடை போட்டு நடத்தும் இந்த நாடகத்தை எதிர்க்க திராணியற்று மௌனம் காத்து பொறுத்துக் கொண்டதும் உண்டு. ஆனால் அன்று கருணாநிதியால் உதிர்க்கப்பட்ட அந்த கருமை நிறைந்த வஞ்சக வாக்கியம் மிகுந்த வலியோடு காலத்தால் அழியாத இடத்தை பெற்றிருக்கிறது.

இரண்டு வருடம் கழிந்து 2011 சட்டசபைத் தேர்தலில் மரண அடிவாங்கி பதவி பறிக்கப்பட்டு செல்லாக்காசாக ஆக்கப்பட்டு துரத்தப்பட்ட கருணாநிதி. தனது படுதோல்வி குறித்து ஊடகங்கள் கேட்ட கேள்விகளுக்கு தனது தோல்வியை ஒத்துக்கொள்ள முடியாமல் பழைய வார்த்தை ஜாலத்தை பயன்படுத்தி எனக்கு மக்கள் ஓய்வு அளித்திருக்கின்றனர் என்று அப்பாவித்தனமாக கூறும்போது இப்படியும் ஒரு மனிதனா !! என்பது தவிர வேறு எதுவும் முடியவில்லை.

கருணாநிதி தனது பதவி இருப்புக்காகவும் விடுதலைப்புலிகள் மீதும், ஈழம் மீதுமுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் தொடர் நாடகங்களும் வஞ்சகங்களையும் விதைத்திருந்ததால் காலம் தாழ்ந்தாவது அவருக்கான அறுவடையும் சரியாகவே கிடைத்திருக்கிறது. தனது வாய் சாதுரியத்தால் தொடர்ந்து மக்களை ஏமாற்றி பிழைத்து வந்த கருணாநிதிக்கு மக்கள் சங்கு ஊதி பிரியாவிடை கொடுத்து அனுப்பியிருக்கின்றனர்.

சுயநலனோடு அவர் வளர்த்துவிட்ட அவரது பேரன் தயாநிதி சில வருடங்களுக்கு முன் அவருக்கே வினையாகி பிரிந்துபோன போதும் தனது பலவீனங்கள் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்ற உள் நோக்கத்தோடு. கட்சி உடைந்து குடும்பத்தை விட்டுப்போய் தனது இருப்பு ஆட்டம் கண்டுவிடக்கூடாது என்ற சூழ்ச்சி காரணமாக தன் குடும்பத்திலுள்ள தூதுவர்களின் உதவியுடன் தயாநிதியை ஒருங்கிணைத்து குடும்பத்தை ஒன்று சேர்த்து இதயம் இனிக்கிறது கண்கள் பனிக்கிறது என்று குதூகலித்தார்.

இருந்தும் சத்தியம் சாக்கடையில் தங்கிவிடாமல் வெளியேறிவிட்டது,.... அடிப்படையில் கருணாநிதியின் அதே குணங்கொண்ட தயாநிதியின் மனதிலிருந்த உட்பகை, பழிவாங்கும் நிலையெடுத்து, பின் விளைவை சிந்திக்காமல் தயாநிதி தன் வாய் மூலமாகவே கருணாநிதியின் கபடத் தந்திரத்தை வெளிநாட்டு ஆய்வாளர் ஒருவர் முன் பகிரங்கப்படுத்தி உடைத்திருந்தார். இதை உலகப்பிரசித்திபெற்ற விக்கிலீக்ஸ் இணையத்தளம் உலகம் முழுவதும் தரிசிக்கும் வண்ணம் கருணாநிதியின் கயமை பரிவர்த்தனை செய்யப்பட்டு நிற்கிறது.

கருணாநிதி தனது வார்த்தை ஜாலத்தில் அபார நம்பிக்கை வைத்து மக்களை ஏமாற்றிவந்த எல்லா யுக்திகளையும் அவரது வாரிசுகளின் நடத்தையால் இழந்து, இன்று முழு நிர்வாணமாக்கப்பட்டு நடைவண்டியில் தள்ளுவதற்கும் ஆளில்லாமல், பிணத்துக்கு சமமாக முடங்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டார். வரிக்கு வரி சுயமரியாதை என்று மக்களை ஏமாற்றும் கருணாநிதி சுய மரியாதை துட்டுக்கு எவ்வளவு என்று பாமரன் கேட்கும் அளவுக்கு பரிதாபமாக நிற்கிறார்.

2ஜி ஸ்பெக்ரம் முறைகேட்டால் மகள் கனிமொழியின் சிறைவாசம், மனைவி தயாளுவை சிறைநோக்கி தள்ள நீளும் சிபிஐ யின் கரங்கள் துணைவி ராசாத்தியை சுற்றி படர்ந்துள்ள குற்றச்சாட்டுக்கள், ஈழப்பழி ராசாத்தியையும் சிறைக்கதவை நோக்கி செலுத்திவிடுமோ என்ற பயம். போதாதற்கு விக்கிலீக்ஸ் மூலம் வெளிவந்திருக்கும் தயாநிதியின் வாக்குமூலம் அனைத்தும் சுற்றி நின்று தாக்குதல் நடத்துகிறது.

இலங்கையில், இறுதி யுத்தம் மும்முரமாக இடம்பெற்ற காலப்பகுதியில், உடனடியாக அதை நிறுத்துதற்கு அழுத்தம் கொடுக்க கோரி, மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்ய போவதாக அறிவித்ததும், மெரீனா கடற்கரையில் திமுக தலைவர் மு.கருணாநிதி உண்ணாவிரதமிருந்ததும், மக்களை திசை திருப்புவதற்காக போடப்பட்ட நாடகம், என அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இதையடுத்து இலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதியில், கருணாநிதி இருந்த உண்ணாவிரதம் தொடர்பில், 'த ஹிந்து' செய்தி ஊடகம், விக்கிலீக்ஸின் தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

திமுக ஆட்சியின் போது மின்வெட்டு பிரச்சினை, அதனால் மக்களுக்கு ஏற்பட்டிருந்த கடும் கோபம் என்பவற்றை திசை திருப்புவதற்காகவும், இலங்கை தமிழர் விடயத்தில் காங்கிரஸ் கட்சியின் செயலுக்கும், தமக்கும் தொடர்பு இல்லை என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவுமே, மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்ய போவதாக கருணாநிதி நாடகம் நடத்தினார் என்றும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து தனது எம்.பிக்களை ஒருபோதும் கருணாநிதி வாபஸ் பெறமாட்டார் என உறுதியாக தான் அறிந்ததாக தயாநிதி தெரிவித்திருந்தார். எம்.பிக்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்தது, அனைத்து கட்சி கூட்டம், தீர்மானம் எல்லாமே நாடகம் தான் என்று தயாநிதி தெரிவித்ததாக அந்தச்செய்தி குறிப்பிடுகிறது.

கருணாநிதி செய்த வல்வினை அனைத்தும் இப்போ அவரது வயோதிப காலத்தில் மிகவும் மோசமாக தாக்கி உளரீதியாக அவருக்கு மிகுந்த உளைச்சலையும் அவமானத்தையும் தந்திருக்கிறது. குடும்பத்திலும் கருணாநிதிக்கு ஆறுதலளிக்ககூடிய ஆதாரமும் இல்லாமல், பெருத்த இடைவெளியும் உண்டாகியிருக்கிறது.

பேராசை பித்தரான கருணாநிதி வாழும் காலத்திலும், பின் தனது மறைவுக்குப்பின்னும் தனது பெயர் சரித்திரத்தில் பேசப்படவேண்டும் என்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டு தனது அரசியல் வாழ்வில் ஆற அமர சிந்தித்து பிடிகொடுக்காவண்ணம் அனைத்தையும் நகர்த்தி வந்திருக்கிறார். தெருத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு அடிப்பதுபோல மக்கள் வரிப்பணத்தை தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆடும் அசையா சொத்துக்களாக்கி. கட்சி உடன்பிறப்புக்கள் வாய்திறக்கக்கூடாது என்பதற்காக சிறுதொகையை அவர்களுக்கு இனாங்களாகவும் இலவசங்களாகவும் கொடுக்கும்போது அவர் தன்னை தொடர்ந்து நிலை நிறுத்துவதற்காக தனக்கான பாராட்டு விழாக்களையும் நடத்த மறந்து விடுவதில்லை.

இன்று கருணாநிதி சந்தித்துள்ள சிக்கல் சட்டத்துடன் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, சரித்திரத்திலும் அவருக்கு தீராத மறுவை தீட்டிவிட்டது. செய்வதறியாத கருணாநிதி, தனது எதிர்கால அபாயத்தை உணர்ந்து கட்சி உடன்பிறப்புக்கள் கைவிட்டு போய்விடாமல் தன்வசப்படுத்தும் முகமாக முரசொலியில் புதிதாக கடிதம் எழுதி அனுதாபம் தேடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

விடுபடவிருக்கும் சரித்திர பதிவிலிருந்து தப்பித்து விடமாட்டோமா என்ற காலங்கடந்த ஞானம் அவரது சுயசரிதத்தை திரும்ப எழுத வைக்குமளவுக்கு அவரை இறக்கிவிட்டிருக்கிறது.உடன்பிறப்பே என்னை எல்லோரும் திட்டுகின்றனர். என் சுயசரிதத்தின் முன்னோட்டமாக இதை எடுத்து நான் வந்த பாதையை அறிந்துகொள். என்று கருணாநிதி அழுத வரிகள் சென்றவார முரசொலியில் சிரிக்கிறது. கருணாநிதியின் பழைய புளுகான "நெஞ்சுக்கு நீதி" பதிப்பும் புறந்தள்ளப்பட்டுவிடுமோ என்கிற பயம் இன்றய சுயசரிதத்தின் முன்னோட்டம்.

வரலாற்றில் நளன் தமயந்தி சரித்திரம், நரகாசுரன் சரித்திரம், ஓலைச்சுவடி கல்வெட்டாகவும். சமீபத்திய ஹிட்லர் முசோலினி வரலாறு. கறுப்பு வெள்ளை ஊமைப்படங்களாகவும் சரித்திரத்தில் பதிவிடப்பட்டுள்ளபோது ஈழப்படுகொலைகளும் நிச்சியம் சரித்திரத்தில் இடம்பெறும். அந்தக்காட்சிகளில் கருணாநிதியின் நாடகக் காட்சிகளும் தவிர்க்கமுடியாமல் இணைந்தேயிருக்கும்.

#
இரண்டாவது உலகப்பிரசித்தி பெற்ற இருபத்தோராம் நூற்றாண்டு வாக்கியமாக.
கேபி, எனப்படும் செல்வராசா பத்மநாதன், கூறிய சில சொற்றொடர்கள் சரித்திரத்தில் முக்கியத்துவம் பெறாவிட்டாலும் இந்த வார்த்தையை பிரயோகித்தவர் ஈழச்சரித்திரத்தில் ஒருசில பத்திகளில் நிச்சியம் இடம் பெறுவார்.

சமீபத்தில் வட இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு றோவிடம் கூலி வாங்கிக்கொண்டு ராஜபக்க்ஷவையும் இந்திய மத்திய காங்கிரஸ் அரசை திருப்த்திப்படுத்தும் நோக்கத்தோடு கேபி எனப்படுக் செல்வராசா பத்மநாதன் வழங்கிய செவ்வியில்.

"தந்தையை இழந்த ராஜீவின் குழந்தைகளின் வலி எங்களுக்குப் புரிகிறது. தயவுசெய்து எங்களை மன்னித்து விடுங்கள். ராஜிவ் காந்தி குடும்பத்தினரிடம் பிரபாகரனின் தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்"?? என்று தமிழர்களோடு எந்த தொடர்புமற்று தமிழினத்துக்கு வில்லங்கமாக இருக்கும் கேபி என்ற பத்மநாதன் தமிழினத்தின் தலைவனாக தன்னை தானே சிங்காரித்து மகிழ்ந்திருக்கிறார்.

சிங்கள ராஜபக்க்ஷ குடும்பத்தின் காலடியில் கிடந்து நாய்க்குட்டிக்கு நாகபாம்பு பால் கொடுத்தது தப்புத்தான். என்று சூனியப்பிரதேசத்தில் துப்பறிந்து செவ்வி வழங்கி,தேவையற்ற விசமங்களை சிங்களவனுக்காக பாடி இந்திக்காரனின் தொலைக்காட்சிக்கு அனுப்பியிருக்கிறர்.

கிளிநொச்சி ஜெயபுரத்தில் தமிழன் கால் பதித்த தெருவுக்கு சிங்கள ராஜபக்க்ஷவின் பெயர் வைத்து பந்தோபஸ்து போட்டிருப்பதை இவருக்கு தெரியவில்லை. ஈழத்தில் அழிக்கப்பட்ட ஐம்பதினாயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் இவரது கண்ணுக்கு புலப்படாமல் சோனியாவின் குழந்தைகளுக்காக மன்னிப்பு கேக்கிறாராம். இவரை யார் விடுதலைப்புலிகளுடன் இணைத்து வைத்திருக்கிறர்கள் அல்லது தமிழருடன்தான் இவரது தொண்டும் தொடர்பாடலும் என்ன????

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், அதன் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும்தான் திட்டமிட்டு கொன்றனர். அது பிரபாகரனால் நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டது. இது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்திய மக்களுக்கும், குறிப்பாக ராஜிவ் காந்தி குடும்பத்தினருக்கும் நான் கூற விரும்புவது என்னவென்றால் பிரபாகரனின் தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த நகைச்சுவை காட்சியை இந்திய அரசின் அனுசரணையுடன் வடக்கத்திய ரிவி சனல் ஒன்று ஒளிபரப்பியது.

அத்துடன் நின்றுவிடாது கேபி தனது கற்பனையில் உதித்த இன்னும் பல நகைச்சுவைகளை இந்தச்சந்தற்பத்தில் தெரிவித்தார்.வாய்ப்பு கிடைத்திருந்தால் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலைப் புலிகள் கொன்றிருப்பர். அதற்காக அவர்கள் பெரிதும் முயன்றனர். ஆனால் அவர்களால் அந்தச் சதியில் வெற்றி பெற முடியவில்லை என்றும் கேபி கூறியுள்ளார்.

மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக கூறப்படும் "ஆறாடியான" கே.பி. இப்போது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சேவை செய்யும் நெருக்கமானவராகிவிட்ட வாரக்குடியாவார். இந் நிலையில் இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், அதன் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும்தான் திட்டமிட்டு கொன்றனர். அது பிரபாகரனால் நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டது. இது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்திய மக்களுக்கும், குறிப்பாக ராஜிவ் காந்தி குடும்பத்தினருக்கும் நான் கூற விரும்புவது என்னவென்றால் பிரபாகரனின் தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

தந்தையை இழந்த ராஜீவின் குழந்தைகளின் வலி எங்களுக்குப் புரிகிறது. தயவுசெய்து எங்களை மன்னித்து விடுங்கள். எங்கள் மக்கள் இப்போது சிக்கலில் உள்ளனர். மனிதர்களாக வாழ எங்களுக்கு உதவி செய்யுங்கள். போரில் நிறைய இழந்துவிட்டோம், (போரை இவர்தான் முன்நின்று நடத்தியதுபோல) இனி நாங்கள் இழப்பதற்கு எதுமில்லை.???(இவர் தனது இரண்டு பிள்ளைகளும் தாய் தந்தையும் போரில் பலி குடுத்திட்டவர் போல)

எப்போதுமே விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலை கொண்டவர் ஜெயலலிதா. இதனால் வாய்ப்பு கிடைத்தால் அவரையும் புலிகள் கொலை செய்திருப்பர். அதற்காக அவர்கள் எவ்வளவோ முயன்றனர். ஆனால் சில சமயம் அவர்களால் வெற்றி பெற முடிந்ததில்லை என்று கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவையும் ஈழத்தமிழினத்தையும், கேபி ஒரு இக்கட்டான நிலைக்குள் தள்ளுவது மட்டுமல்லாமல் புறந்தள்ளப்பட்டுள்ள ராஜீவ் காந்தி கொலையை நியாயப்படுத்துவதற்கு கேபி துணையோடு றோவும் காங்கிரஸ் அரசும் முனைப்பு கொண்டு திரைமறைவில் நிற்பது தெரிகிறது. இதில் கேபி குறிப்பிட்டவை எவரும் கணக்கிலெடுக்கப்போவதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் ஒரு அசமந்தத்தையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேவையற்ற விமர்சனத்தையும் உண்டுபண்ணுவதே இவர்களின் நோக்கமாகும்.

ராஜபக்க்ஷவிற்கு எதிரான நிலையை ஜெயலலிதா அவர்கள் சமீபத்தில் எடுத்து ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த இந்திய அரசு முயல வேண்டும். தமிழர்கள் கவுரவமான வாழ்வை அமைத்துக் கொள்ள இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இலங்கை அரசு ஒத்துழைக்க மறுத்தால் இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும். ராஜபக்க்ஷவை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்று கறாராக தெரிவித்திருந்தார்.

இந்த மனநிலையில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து இருந்து வருவாராக இருந்தால் தமிழக மக்களின் ஆதரவு முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு அதிகரித்துவிடும். என்பதை கருதி றோ ஏற்படுத்த இருக்கும் சதியே கேபியின் திடீர் நாய்க்குட்டி பாம்புக்கதை. என்பதை அறிந்துகொள்ளுவது பெரிய சிரமமான காரியமல்ல.

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாடு வலுப்பெற்றால், தமிழகத்திலுள்ள அதிகமான ஈழத்தமிழர் ஆதரவு அமைப்புக்கள், கட்சிகள் துணிச்சலுடன் வீதிக்கு வந்து மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்த முன் நிற்கும். சீமான், வைகோ, போன்றோரது கட்சிகள் சீக்கிரம் தலையெடுத்துவிடும் நிலை உருவாகும். அதனால் காங்கிரஸ் காணாமல் போய்விடும் அபாயமும் உண்டாகும். ஆட்சியிலிருக்கும் காங்கிரஸின் மத்திய அரசுக்கு நெருக்கடிகள் அதிகரித்து ராஜபக்க்ஷவுக்கு எதிரான நிலையை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு சூழல் உருவாகிவிடும். இந்தியாதான் போர் குற்றத்தின் சூத்திரதாரி என்பதை இலங்கை அரசு சர்வதேச சமூகத்திற்கு காட்டிக்கொடுத்துவிடும் அபாயமும் இருப்பதால். ஆரம்பத்திலேயே குள்ளநரி வேலைபார்க்கவேண்டிய தேவை றோவுக்கு உண்டு அதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஆறாடிக் காயாக கேபி தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

எனவே இப்போதே ஜெயலலிதாவுக்கும் ஈழத்தமிழினத்துக்குமிடையில் இப்படி ஒரு வெடிப்பை உண்டாக்கி முடிச்சைப் போட்டு நகர்வுகளை தமக்கு சாதகமாக நகர்த்துவதற்கான தந்தரமாகவும் கேபி, றோ, இந்திய மத்திய அரசு, சிங்கள ராஜபக்க்ஷ அரசு. ஆகியவைகளின் முன்னெச்சரிக்கை திட்டமாக கேபியின் செவ்வியை எடுத்துக்கொள்ளலாம்.

ஆனாலும் வெற்றி கொள்ளப்போவது என்னவோ மறைந்த தியாக மாவீரர்களின் ஈடில்லா எண்ணக் கனவும் ,, படுகொலை செய்யப்பட்டு அனாதரவாக அலையும் எண்ணிலடங்கா என் உற்றார் பெற்றோரின் சாக்காட்டு சாபத்தின் விமோசனமும்தான்.

ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்.