Sunday, May 22, 2011

சமன்பாடு




வானம் சூல்கொண்டு
குடையை ஞாபகப்படுத்துகிறது.
மழைக்கால அறிகுறிகள்.
முகில் கூட்டங்கள் அங்கும் இங்கும்
இடம்மாறி,
பூதம் யானை பூனை போல குதூகலமாக.
சிரித்து சம்பாசிக்கின்றன.

வர்ண மலர்கள் மகிழ்வுடன்
நெட்டவிழ்த்து
வண்ணக்கோலமாகி மண் மணக்கிறது.
தூரத்தே கருகிய வாடையும்
கூடவே கலந்து உறுத்துகிறது.

காற்று சற்று வேகம் கூடி
அதன் பாட்டுக்கு சுற்றித்திரிகிறது.
ஊளை சத்தம் ஒன்று மட்டும்
மிக மிக வித்தியாசமாக
உடைந்த கரகரப்புடன்
முகாரி ராகத்தில்
மந்தாரமாக மேட்டு தெருவில்
தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருக்கிறது.

உத்திரத்து பரணில்
நீண்டநாள் பாவனை முடிந்து கிடந்த
உருட்டுக்கட்டைகளும்
வெட்டரிவாள்களும்
கிரந்தம் எழுதிய தாள் கட்டுகளும்
சிலந்தி வலையின் சிக்கிடுக்கில்
மறு பாவனைக்கு தயாராக.

கீழே அசை போட்டுக்கொண்டு,
திமிங்கிலத்தின் திரட்சியோடு
பெண் நாய்களுடன் புணர்ச்சியில்
ஏகபோகியாகிக்கிடந்த கிழட்டு நாய்
முட்பொறியில் சிக்கி அடிபட்டு
காலில் முள் தைத்த வெப்பத்தில்
ஊர் அமைதி கெட்டுவிட்டதாக
ஊளையிடுகிறது,, உரக்க குரைக்கிறது.

ஆனால்
எவரும் சட்டை செய்ததாக தெரியவில்லை..
மக்கள் தம்பாட்டில் ஆரவாரப்பட்டு
களிப்புடன்
வாய்வழி செய்தியாக ஏதோ
பரிமாறிக்கொண்டிருக்கின்றனர்.
கலைஞர் ரிவி செய்தியை நிறுத்திவிட்டு
மானாட மயிலாட
மறு ஒளிபரப்பு செய்துகொண்டிருக்கிறது.

ஆடும் மாடும் தமது மொழிகளில்
குரலெடுத்து கும்மாளமிடுகின்றன.
கன்றுகளும், குட்டிகளும்,
காலை'யை விட்டு வெளியேறி
ஆற்றங்கரையிலும் புல்வெளியிலும்
மேய்ச்சல் மறந்த நிலையில்.

கோ(வா)லபுரமும் சிஐடி நகரும்
பெரும்பான்மையை இழந்து,,
ஏகாந்தத்தின் உச்ச பிடிக்குள்.
சாவீட்டின் நெடியுடன்,,.

பால்க்காரன் பாலை வீசிவிட்டு
சிந்தனையுடன்
திருப்தியில்லாமல் திரும்பிக்கொண்டிருக்கிறான்.
தனியே ஓரத்தில்
சக்கர நாற்காலி ஒன்று
தள்ள ஆளில்லாமல் தனித்துக்கிடக்கிறது.

=========================== ஊர்க்குருவி ========================

No comments: