என் தாத்தாவின் தாத்தாவுக்கு நிகரான தமிழகத்தின் தாத்தா, முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி அவர்களுக்கு!... ஐயா... ஈழத்து தமிழச்சியான நான் மனம் வருந்தி உங்கள் கடைசிகாலத்தில் எழுதிக்கொள்ளும் வேதனை மடல்!.

ஈழத்து பெண்ணான எனது நலம் உங்கள் புண்ணியத்தில் நீங்கள் அறியாததல்ல. "நாங்கள் சிலர் இருக்கிறோம்"! என்பது மட்டும் நான் உங்களுக்கு இப்போதைக்கு சொல்லமுடியும். உங்கள் நலனுக்கு நான் வணங்கும் ஆண்டவன் தன் சக்திக்கேற்ப பகுத்துணர்ந்து அருள் புரியட்டும்!

உங்களுக்கு மடல் எழுதியோ கோரிக்கை வைத்தோ எதுவும் நடக்கப்போவதில்லை என்பது என் சிற்றறிவுக்கு எட்டிய பேருண்மை. இருந்தும் நீங்கள் மிகவும் பலவீனமாகிப்போயிருக்கும் இந்த தருணத்தில் நீங்கள் உங்கள் குடும்ப நலனுக்காக எங்களுக்கு செய்த, தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் மனிதம் காணாத வஞ்சகத்தை நிறுத்துவீர்கள்,,, அல்லது அதுபற்றி சற்றேனும் சிந்திப்பீர்கள் என்று நம்பி இம் மடலை எழுதுகிறேன். இம் மடல் உங்கள் மனதை மாற்றாவிட்டாலும் கொஞ்சமாவது சிந்திக்க வைத்தாலே அது என்னைப்படைத்த ஆண்டவனுக்கு கிடைத்த வெற்றியாக கருதுவேன்.

இந்து சாஸ்திர சித்தாந்தங்களின்படி இன்றைய காலகட்டம் உங்களுக்கு படுபட்சி காலம், என்பதுபோல் எனக்கு படுகிறது. உங்கள் இருப்பும் சூழ்நிலையும் சற்று கடினமாக இருப்பதையும் நாங்கள் அறிவோம். நீங்கள் எதையும் வெளிப்படையாக காட்டிக்கொள்ள விரும்பாவிட்டாலும் உங்களது இயலாமை, உங்களையும் மீறி நீங்கள் உடைந்து புலம்பும் புலம்பலை பத்திரிகைகள் ஊடகங்கள் போட்டி போட்டு பிரசங்கப்படுத்திக்கொண்டிருக்கின்றன. இதுவரை உங்கள் மிரட்டலுக்கு அடங்கி ஒத்தூதிய பத்திரிகைகள் அனேகமானவை இன்று உங்கள் பலவீனம் கண்டு திருப்பித்தாக்குகின்றன. நீங்களும் உங்களால் முடிந்தவரை கட்டுக்கடங்காத உதாரணங்களை மேற்கோள் காட்டி உங்களை நியாயப்படுத்தி பதிலடி கொடுத்துக் கொண்டேயிருக்கிறீர்கள். அவை அனைத்தும் எருமை மாட்டின்மீது பெய்த மழைநீர்போல எந்த எதிர் விளைவுமில்லாமல் திரும்பவும் உங்கள் முன்னே வந்து நிற்கிறது. இது உங்கள்மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையீனத்தின் வெளிப்பாடென்ற பொதுவான உண்மைக் கருத்தை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

வீட்டுக்கூரை ஓட்டையில்லையென்றால் திரும்பத்திரும்ப செப்பனிடவேண்டிய தேவை இருக்காது. நீங்கள் எதை போட்டு மூடிமறைக்க முயன்றாலும், மழை பெய்ததும் கூரை ஒழுகத்தானே செய்கிறது. கூரை பிரித்து வேயவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. உங்கள் அரசியல் தொழில் நுட்பத்திலும் அடிப்படைக்கோளாறு இருப்பதால் இனி உங்களால் கூரையை ஒருபோதும் சரிப்படுத்த முடியப்போவதிவில்லை. நீங்கள் எதைப்போட்டு மூடி மறைக்க முயன்றாலும் இனி முடியாது என்றே நடைமுறை காட்டி நிற்கிறது. இப்படியே விட்டால் ஒழுக்கினால் சுவர்களுக்கும் ஈரம் கசிந்து சுவர்களும் விழுந்து உள்ளேயிருக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் ஆபத்தாக முடியும் என்பதுபோலவே நிலமை தெரிகிறது.

நீங்கள் என்றைக்கும் எதையும் நேரடியாக நேர்மையாக ஒரு பொருள்பட ஒரே கருத்தில் பேசியவர் கிடையாது. எதுகை மோனையுடன் வஞ்சகங்களை கவர்ச்சிகரமாக தங்கத்தட்டில் எடுத்துவிட்டு ஏமாற்றுவதில் வல்லவர் என்பதை காலப்போக்கில் நான் நன்கு அறிந்துகொண்டேன், நீங்கள் நேரடியாக எதையும் இல்லையென்று மறுத்ததும் கிடையாது. சுயநலம் இல்லாமல் எதையும் கொடுத்ததும் கிடையாது. ஒரு கேள்விக்கு பத்துப்பொருள்பட பதிலளித்து ஏமாற்றி தப்புவதற்கு உங்களை விட்டால் உலகத்தில் இன்றுவரை எவரும் பிறக்கவில்லை என்பதும் அறிவேன். அந்தச் சாதனை நிச்சியம் வரலாற்றுப்பக்கங்களில் கறுப்பு எழுத்துக்களாலோ சிகப்பு எழுத்துக்களாலோ பதியப்படும் என்பது திண்ணம்.

இம்முறை தேர்தலில் நீங்கள் வெற்றி பெறுவீர்களோ?? நாட்டில் பலரும் (நானும்கூட) நம்புவதுபோல தோல்வியை தழுவுவீர்களோ, மே 13ம் திகதி தெரிந்துவிடும். இருந்தும் நீங்கள் தோற்றுவிடவேண்டுமென்றே தமிழ்நாட்டிலுள்ள பெருவாரியான தமிழர்களும், ஈழத்தை பூர்வீகமாகக்கொண்ட ஒட்டு மொத்த தமிழர்களும் உலகத்தமிழர்களும் விரும்புகின்றனர் என்பதே உண்மை. தேர்தலில் வாக்கு பெறுவதற்காக வீடு வீடாக பணம் கொடுத்து கற்பூரம் கொழுத்தி சத்தியம் வாங்கித்தான் நீங்கள் தேர்தலை சந்தித்ததாக பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். அப்படி பணங்கொடுத்து, வேறு கயமையான உள்ளடி வேலைகள் செய்தும்,, தமிழ்நாட்டில் வசிக்கும் அயல் மானிலங்களின் தமிழர்களல்லாத தெலுங்கர், கன்னடர், மலயாளி, களின் வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றாலும் பெறக்கூடும். ஆனாலும் அறுதிப்பெரும்பான்மையை நீங்கள் நெருங்க முடியாது. கூட்டணிக்கட்சிகளான பாமக. விடுதலைச்சிறுத்தைகள். காங்கிரஸ் இவைகளின் உதவியுடன்தான் ஒருவேளை??? ஆட்சியை அமைக்கமுடியும்.

காங்கிரஸ்கட்சி உங்களை காய் வெட்டுவதற்கென்று காத்திருப்பது பல சந்தற்பங்களில் புலப்படுகிறது. தேர்தல் தொகுதி பங்கீட்டிலும் வேறு வழிகளிலும் உங்களை படுத்திய பாடும், நீங்களும் உங்கள் பாட்டுக்கு பொதுக்குழு கூட்டி ஆடிய நாடகங்களும் எங்களை விட நீங்கள் நன்கு அறிந்துகொண்டிருக்கிறீர்கள். எனவே வஞ்சகத்தை வஞ்சகத்தால் வெல்லுவதற்கு உங்களுக்கு பாலபாடம் நான் சொல்லித்தரத்தேவையில்லை.

கடப்படியில் வைத்து காங்கிரசுக்கு தகுந்த தந்திரமான காயை சரியான சந்தற்பத்தில் நீங்கள் வெட்டுவீர்கள் என்பது எல்லோரும் அறிவர். காங்கிரஸ் கட்சியை உடைத்து சங்காரம் செய்யவும் நீங்கள் பின்நிற்கப்போவதில்லை. ஆனால் அந்தப் பயறு கூட்டணியின் இன்னொரு அங்கத்துவரான ராமதாஸ் மாமாவிடத்தில் அவிப்பதுதான் சற்று சிரமமாக இருக்கும். ராமதாஸ்மாமா வில்லங்கம் செய்ய நினைத்தார் என்றால் நீங்கள் தாங்கமாட்டீர்கள் என்பதை சிறியவளான நான் சொல்லுவதை வருங்காலங்களில் உணருவீர்கள். ஆக மொத்தத்தில் வருங்காலம் நீங்கள் சிலநாட்களுக்கு முன் கூறியதுபோல உங்களுக்கு சங்கடங்கள் நிறைந்த காலமாகவே அமைய இருக்கின்றன. எனவே இந்தத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் தோல்வி கண்டதுபோலவே சங்கடங்கள் உங்களை துரத்த இருக்கின்றன. அவற்றை விடவும் நீங்கள் தோற்றுப்போனால் சற்று நிம்மதி அடைவதோடு மக்களிடமிருந்து கொஞ்சம் அனுதாபமாவது உங்களுக்கு கிடைத்து பக்கபலமாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை.

ஒரு பெருத்த அரசியல் சாணக்கியருக்கு இவையெல்லாம் நான் சொல்லி தெரியவேண்டுமென்பதுமில்லை. எனது மனதுக்குள் இருக்கும் முற்றுப்பெறாத சந்தேகத்தை வினவுவதே எனது மடலின் நோக்கம். இலங்கையில் தமிழராக நாங்கள் பிறந்துவிட்டதால் எங்களை வைத்து அரசியல் செய்யும் நீங்களும், தமிழ்நாட்டின் இன்னும் பல அரசியல்க்கட்சிகளும் இலங்கையில் வாழும் மக்கள் அனைவரும் சிங்களவராக இருந்திருந்தால் எதை வைத்து உங்கள் வெற்றி தோல்விக்கு அரசியல் செய்திருப்பீர்கள் என்ற கேள்வியும் என்னுள் எழுவதுண்டு.

குறிப்பாக நீங்கள் எங்களை வைத்து அரசியல் செய்து பிழைக்கிறீர்கள். அதனால் எங்களுக்கு உங்களால் பெருத்த தீமை தவிர கடுகளவு நன்மையுமில்லை, முழு நற்பலனும் உங்களுக்கு கிடைத்து நீங்கள் பட்டம் பதவியுடன் தமிழ் வளர்த்த தாத்தா என்ற பெயரையும் தட்டிச்சென்று விடுகிறீர்கள். உங்கள் தொடர் இருப்புக்காக எங்களை பாழுங்கிணற்றில் தள்ளி பாறாங்கல்லையும் தூக்கி போட்டுவிடுகிறீர்களே, இது நியாயம்தானா என்பதை இந்த படு முதுமைப்பருவத்திலென்றாலும் யோசித்திருக்கிறீர்களா? நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை ஏன் வஞ்சக அநீதி செய்கிறீர்கள். உங்களுக்கு நாங்கள் செய்த பாவம் என்ன? இதுவரை உங்களால் நாங்கள் பட்ட துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல. உயிரிழந்து, பொருள் பண்டங்களை இழந்து, நாடற்று, இருக்க இடமின்றி,பாதுகாப்பின்றி, இன்று கடைநிலையில் அலைந்து திரியும்வரை துரத்தி துரத்தி தாக்கி துன்பமிழைக்கிறீர்களே. உங்கள் பதவிகளை இருப்பை எங்கள் உயிரிலும் வாழ்விலும் நீங்கள் நிர்ணயிப்பது நிலைக்கும் என்று நினைக்கிறீர்களா??.

உங்கள் மகள் கனிமொழி, ஸ்பெக்ரம் திருட்டுக்கேசில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுவிட்டார் என்றதும் பதைபதைத்து நேற்றய முந்தினம் அண்ணா அறிவாலயத்தில் உயர்நிலை திட்டக்குழுவை கூட்டிய நீங்கள் உங்கள் மகளை திருட்டுக்கேசிலிருந்து காப்பதற்காக எவ்வளவு துடித்தீர்கள். இல்லாத பொல்லாத உதாரணங்கள் எவ்வளவை எடுத்து வைத்து நாடகமாடினீர்கள். உங்கள் மகள் என்பதற்காக உண்மையான ஒரு திருட்டு மோசடிப் பேர்வழியை காக்கத்துடித்தீர்கள்.

உங்கள் மகள் கனிமொழியை ஒத்த வயதுடைய எங்கள் சகோதரி நளினி அவர்கள், ராஜீவ் காந்தி கொலைக்குற்றச்சாட்டில் பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு 20 வருடங்களாக சிறையில் வாடுகிறாரே அவரது துன்பத்தில் ஒரு துளியாவது உங்கள் வாரிசுகள் பட்டிருக்குமா?? எவ்வளவு நியாயங்களை எடுத்துக்காட்டி நளினியை சட்டப்படி விடுதலை செய்யும்படி வழக்குரைஞர்கள் எத்தனை வருடங்களாக வாதாடி களைத்துப்போயிருக்கின்றனர். சொற்ப கருணையாவது நீங்கள் காட்டியிருக்கிறீர்களா? சோனியாவை திருப்திப்படுத்துவதற்காக எங்கள் உடன்பிறப்பு நளினியை உயிருடன் நரபலியாக்கியிருக்கிறீர்களே.

உங்கள் மகன் ஸ்ராலின் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த ஒரு பெண்ணை புணர்ச்சி செய்ய கேட்டபோது அப்பெண் மறுத்துவிட்டதால் அப்பெண்ணை ஸ்ராலின் ஈவு இரக்கமில்லாமல் கற்பழித்தார் என்று ஆதாரத்துடன் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது, நீங்கள் முதலமைச்சர் ஒரு கட்சியை வைத்திருப்பவர் என்ற தகுதியை வைத்து கேசை இல்லாமலே செய்துவிட்டீர்கள். அடுத்து உங்கள் இன்னொரு மகனான அழகிரி கட்சிக்கும் சமூகத்துக்கும் விரோதமாக நடக்கிறார் என தமிழ் நாடே குற்றஞ்சாட்டியபோது அழகிரியை மதுரைக்கு நாடுகடத்தி கட்சியை விட்டு தள்ளிவைக்கிறேன் என்று புலுடா காட்டி மறைமுகமாக அவரை வளர்த்தீர்கள்.

மதுரையில் உங்கள் கட்சிக்காக நாயாய் உழைத்துக்கொண்டிருந்த மாவட்டச்செயலாளரான த கிருஷ்ணனை தெருவில் கூலிப்படைகளை வைத்து அழகிரி வெட்டிக்கொன்றதாக த கிருஷ்ணனின் குடும்பத்தாரால் குற்றஞ்சாட்டப்பட்டு அழகிரி பொலிசாரால் கைதும் செய்யப்பட்டார். உங்கள் அதிகாரத்தை பிரயோகித்து எல்லாவற்றையும் இழுத்து மூடிவிட்டீர்கள். அத்துடன் அழகிரி தனது அராஜகத்தை நிறுத்தியிருந்தாரா?. உங்கள் குடும்ப நிறுவனமான சன் தயாநிதியின் தினகரன் பத்திரிகை, கருத்துக்கணிப்பு என்ற பெயரில் அழகிரியின் கூடப்பிறந்த தம்பியான ஸ்ராலினை முன்னிறுத்திவிட்டது என்பதற்காக தினகரன் அலுவலகத்தை உடைத்து எரித்தார் அழகிரி, தினகரன் பத்திரிகை அலுவலகம் உங்கள் குடும்ப அலுவலகம் என்பதால் சட்டப்படி குற்றம் என்றாலும்,, நீங்கள் சமரசத்துக்கு போயிருக்கலாம். ஆனால் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் மூவர் அநியாயமாக தீயில் வெந்து கொல்லப்பட்டனரே அழகிரிமீது சுமத்தப்பட்ட அந்தக் குற்றச்சாட்டு என்னவானது??.

கட்சியின் மூத்த உறுப்பினர் த கிருஷ்ணன் கொல்லப்பட்டதற்காக பாகுபாடு கடந்து உங்கள் கட்சியின் மத்திய உயர்நிலை தீர்ப்பாயத்தை கூட்டி நியாயமான முடிவு ஏதாவது எடுத்தீர்களா??. பதிலுக்கு கொலைக்குற்றவாளி அழகிரியை மத்திய மந்திரியாக்கியிருக்கிறீர்கள். எங்கள் சகோதரி நளினிக்கு ஒரு நியாயமும் உங்கள் கொலை கற்பளிப்பு ஊழல்க் கொள்ளை வாரிசுகளுக்கு ஒரு நியாயமும் இவையெல்லாம் உங்கள் இதயத்துக்கு நீதியாகப் படுகிறதா?

ஒரு வாதத்திற்கு நளினி விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவானவர் என்று எடுத்துக்கொண்டாலும். விடுதலைப்புலிகள் இயக்கம் முற்று முழுதாக ஒடுக்கப்பட்டுவிட்டதாக நீங்களும் சோனியாவும் ராஜபக்க்ஷவும் கூட்டாக ஒப்புதல் அறிக்கைகள் விடுத்துமிருக்கிறீர்கள். அப்படியிருக்கும்போது நளினியால் உங்களுக்கும் இந்தியாவுக்கும் என்ன அச்சுறுத்தல் நிகழ்ந்துவிடப்போகிறது. ஒரு குடும்பப்பெண்ணான நளினி நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்காலத்தில் ஒழுக்கமாகவும் சட்டத்துக்குட்பட்டும் நடந்திருக்கிறார். ஆயுட்கால தண்டனை என்பது 14/16 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்று இந்திய குற்றவியல் சட்டம் சொல்லுவதாக சட்டத்தரணிகள் வாதிடுகின்றனர். ஆனால் உங்கள் தலையீடு காரணமாகத்தான் நளினி விடுதலை பெறமுடியவில்லை என்று நேரடியாக சட்ட வல்லுனர்களின் கருத்தில் கூறப்படுகிறது, நளினியை அவரது குடும்பத்திலிருந்து பல பத்தாண்டுகள் பிரித்துவைத்து வதைக்கிறீர்களே, இதுதான் தர்மமா?

நீங்கள் உங்கள் பல தார குடும்பங்களுடன் காலை ஒருவீட்டிலும் மாலை ஒருவீட்டிலும் இரவு ஒருவீட்டிலும் இன்பச்சுற்றுலா போல் வாழ்கிறீர்களே நீங்களும் உங்கள் குடும்பமும் செய்யும் அநீதிகளை விட நளினி என்ன செய்துவிட்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தற்ப வசமாக சிக்கிக்கொண்ட ஒரு சந்தேக நபர்.. இது தவிர ஈழத்தமிழர்கள் அனைவரைப்போலவும் நளினியும் தேசியத்தலைவரையும் மண்ணையும் நேசிக்கும் சராசரியான ஈழத்துப்பெண் அவ்வளவுதான். நளினியை மிரட்டி பொலிஸ் குற்றவாளியாக்கியிருக்கிறது என்பதை இத்தனை வருடங்கள் கழிந்த பின்னாவது ஏன் உணரமாட்டேன் என்று முரண்டுபிடிக்கிறீர்கள்?

தலைவர் பிரபாகரன் உங்களது போலி அரசியல் பம்மாத்துக்கு பணிந்து மண்டியிடவில்லை என்பதால் ஒட்டு மொத்த ஈழமக்களையும் நீங்கள் காவுகொள்ள வைத்து பழி தீர்ப்பது நான் அறியாததல்ல. எனது தலைவருக்கும் உங்களுக்கும் இருக்கும் இடை வெளி உயரம் உங்களால் எந்தக்காலத்திலும் எட்டமுடியாதது என்பது தெரிந்தும்,நீங்கள் வஞ்சகத்தாலாவது தொட்டுவிடலாம் என்று விழாக்களும் மாநாடுகளும் நடாத்தி பார்க்கிறீர்கள் உங்கள் ஏமாற்றுக்கு மக்கள் எவரும் மயங்காததற்கு யார் என்ன செய்ய முடியும், நீங்கள் அடிப்படையில் ஒரு நடிகன், தலைவர் பிரபாகரன் அவர்கள் நடிக்கத்தெரியாதவர். நீங்கள் வஞ்சகப்புகழ்ச்சிக்காரன். தலைவர் பிரபாகரனுக்கு அது வராத ஒன்று.

நான் உங்களுக்கு ஒரு சில எடுத்துக்காட்டை மட்டும் மேற்கோள் காட்டமுடியும் சொல்லக்கூடாத விடயமாக இருந்தாலும் உங்களுக்கு சொல்லிக்காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறபடியால் சொல்லுகின்றேன். உங்கள் வயதுக்கு எவ்வளவோ விடயங்களை நீங்கள் கண்டிருப்பீர்கள். உங்கள் சுக வாழ்வுக்காக அரசியலில் எத்தனையோ பேரை காவு கொடுத்திருப்பீர்கள். எத்தனையோ குடும்பங்களை அழித்திருப்பீர்கள், அலைய விட்டிருப்பீர்கள், ஆனால் தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது குழந்தைகளைக்கூட போராட்டத்திலிருந்தும் மக்களிடமிருந்தும் பிரித்து பார்த்தது கிடையாது. தலைவர் தன் மகன் சார்ள்ஸ் அன்ரனி மற்றும் பெண் குழந்தை துவாரகா அவர்களைக்கூட ஈழ மண்மீட்பு போராட்டத்திற்கு தாரைவார்த்து கொடுத்திருந்தார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

தமிழ் நாட்டில் நீங்கள் அரசியலை குத்தகை எடுத்தபின் உங்கள் இருப்பை தொடர்வதற்கான நகர்வுகளையே நீங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறீர்கள் இந்தக்காலகட்டங்களில் எத்தனையோ போராட்டங்கள் வெடித்திருக்கின்றன ஆனால் 2009 ம் ஆண்டு ஒரு குறிப்பிட்டு காலத்துக்குள் தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு நிலையெடுத்து மக்கள் வீதிக்கு வந்து போராடிய அளவு மக்கள் போராட்டம் தமிழ்நாட்டில் என்றைக்கும் நடைபெறவில்லை அந்தப்போராட்டங்களுக்கு தமிழகத்து மக்களின் மனநிலை உணர்ந்து ஆதரவு தரவேண்டிய நீங்கள் செய்த துரோகங்களும் பாதகங்களும் கொஞ்சமல்ல என்பது பதிவாகியிருக்கிறது. உங்கள் அடக்குமுறை நடவடிக்கையை தமிழ்நாடு தூக்கியெறிந்து உதாசீனப்படுத்தியது.

காழ்ப்புணர்வு கொண்ட நீங்கள் நீதிமன்ற வளாகத்தினுள்ளும் கல்வி வளாகங்களினுள்ளும் பொலிஸை ஏவி பால் வேறுபாடின்றி தடியடி நடத்தினீர்கள். அரசியல் தலைவர்களை சிறையில் அடைத்தீர்கள். அடக்குமுறை செய்வதைத்தவிர சிந்தித்து உங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

அடுத்து வந்த தேர்தலில் வெற்றி பெற்றோம் மக்கள் எங்கள் பக்கம் நின்றதால்தானே சாத்தியமாச்சு என்று நீங்கள் கூறக்கூடும். தேர்தலில் தில்லுமுல்லு செய்து பணம் கொடுத்து சத்தியம் வாங்கி வெற்றிபெறும் கலாச்சாரத்தையும் ஐயா நீங்கள்தானே அழகிரி மூலம் அறிமுகப்படுத்தி அசிங்கப்படுத்தினீர்கள். பணம் கொடுத்து பதவியையும் தக்க வைத்து, பதவியை வைத்து அடக்குமுறை செய்வதையும், உங்களைத்தவிர எவரால் செய்ய முடிந்திருக்கிறது.

அப்படி இருந்தும் கொதிநிலையில் இருந்த தமிழகத்தில் உங்கள் அராஜகத்திற்கு எதிராக இரண்டாவது தற்கொடை போராளியாக ஆளுனர் மாளிகை முன் கரிக்கட்டையானாரே மாவீரன் முத்துக்குமார். தொடர்ந்து சென்ற வாரம் நெல்லை மாவட்டம் சங்கரன் கோயில் சீகம்பட்டி கிருஷ்ணமூர்த்தி வரை 22 பேர் ஈழக்கொடுமையை எதிர்த்து தீக்குளித்து உயிர் விட்டிருக்கின்றனர். இதற்கு உங்கள் பதில் என்ன?? குரல் கொடுப்போம், கடிதம் எழுதுவோம் தந்தி அடிப்போம் , தீர்மானம் நிறைவேற்றுவோம், வலியுறுத்துவோம், என்று நீங்கள் மாறி மாறி ஏமாற்றி பாட்டு பாடிக்கொண்டிருக்க உங்கள் பல்லவியை முறியடித்து தமிழீழ தேசியத்தலைவரின் உண்மையான உறுதியை நம்பி ஏற்று தலைவர் பிரபாகரன் அவர்களின் முகம் தெரியாத தமிழ்நாட்டு தமிழ் உறவுகள் 22 க்கும் அதிகமானவர்கள் தங்கள் உயிரைத்துறந்து வரலாறானார்களே, உலகத்தில் எங்காவது இப்படி நடந்திருக்கிறதா என்று நீங்கள் ஒரு கணமேனும் சிந்தித்ததுண்டா??

உங்கள் அராஜகம் பொறுக்கமுடியாத தேர்தல் ஆணையம் 2011 ஏப் நடைபெற்ற தேர்தலில் விழித்துக்கொண்டு தேர்தல் விதி மீறல்களை ஓரளவுக்கேனும் கட்டுக்குள் கொண்டுவந்ததற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி சொல்லவேண்டும் தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவுகளை ஜீரணித்துக்கொள்ள முடியாத நீங்கள் வைத்த ஒப்பாரிகள் ஓலங்கள் கொஞ்ச நஞ்சமா. நெருக்கடி நிலை என்றீர்கள் நான் முதலமைச்சரா என்றீர்கள். அழகிரிக்கு ஆபத்து பாதுகாப்பில்லை என்றீர்கள்.

ஸ்பெக்ரம் அலைக்கற்றை மோசடியில் நீங்களும் உங்கள் குடும்பமும் சம்பந்தப்பட்டிருப்பது உலகம் முழுவதும் வேளிச்சமாகி நாறியபின்னும் நல்லபிள்ளைக்கு நடிக்க நாண்டுகொண்டு நின்று ஈழம் காப்பேன் என்று தொடர்ந்து வஞ்சகமாக செய்த தவறை மீண்டும் செய்வதற்கு தமிழீழம்தான் எங்கள் குறிக்கோள் இன்று நேற்றல்ல தந்தை செல்வாவின் காலத்திலிருந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தனி ஈழம்தான் எங்களது குறிக்கோள். அதனை அடைவதற்கு முன்பு இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் இருசாராருக்குமிடையே சமத்துவநிலை உருவாக வரைமுறைகள் வகுக்கவேண்டும் என்று நடக்க முடியாத கிரந்தம் பேசுகிறீர்களே.

உங்களிடம் யார் தமிழீழம் பெற்றுத்தரும்படி கோரிக்கை வைத்திருக்கிறார்கள். தமிழீழத்தின் தாற்பரீகம் உங்களுக்கு புரியுமா? சிங்களவனுக்கும் தமிழனுக்கும் சமத்துவ நிலை உருவாக வரைமுறைகள் வகுக்க வேண்டும் என்கிறீர்களே, அது இரண்டு முட்டையும் வீட்டுக்கு ஒரு 2000 ரூ கலர் ரிவியும் கொடுப்பது போன்ற விடயமென்று சாதாரணமாக நினைக்கிறீர்களா? 40.000 போராளிகளின் தியாகம், 30 வருட உறக்கமில்லா உழைப்பு 3.00.000 பொதுமக்களின் மரணம். கணக்கிலடங்கா சொத்துக்களின் அழிவு. . தவிர எண்ணிலடங்கா பெண்களின் வாழ்க்கை கற்பு நிம்மதி இதுபற்றி உங்களுக்கு புரிதல் ஏதும் உண்டா அத்துடன் தன்னிகரில்லாத் தலைவனின் உறுதி குலையாத ஆளுமை,தமிழீழத்திற்கான எல்லாவற்றையும் பார்க்கவேண்டியவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். நீங்கள் இடைச்செருவலாக நிற்காமல் வெளியேறுவதே பேருதவியாக இருக்கும். முடிந்தால் வஞ்சகமாக பேசுவதை விடுத்து நடைமுறையில் ஏதேனும் ஒன்றை செய்யுங்கள் அல்லது மனிதக்சங்கிலி., சர்வகட்சிக்குழு, ராஜினாமா, 1/2 நாள் உண்ணாவிரதம் என்பதுபோல ஒன்றை திரும்ப தொடங்கி பாம்பும் ஏணியும் விளையாட்டில் கொண்டுபோய்
முடிக்க நினைக்காமல் விலகி உங்கள் அரசியல் வேலைகளை பாருங்கள்.அதுதான் எல்லோருக்கும் நல்லது. நாங்கள் பட்ட துன்பங்களும் மோசமான கணங்களும் அதிகாரத்தில் இருந்து, சோனியாவின் தூதுவனான நீங்கள் உணர்ந்து கொள்ளுவதற்கு நியாயமில்லை. ஒரு வெள்ளை இனத்தவரிடமுள்ள ஈடுபாடும் புரிந்துணர்வும் உங்களிடமில்லையே என்று மனம் வருந்துகிறேன்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பர். ஈழத்தமிழர்களுக்கு செய்த வஞ்சகத்திற்கும் தமிழ்நாட்டில் தீக்குளித்து உயிர் விட்ட தமிழர்களுக்குமான கணக்கு முடிக்கப்படுவதற்கான பரீட்சையாக ஸ்பெக்ரமும், 2011 சட்டசபை தேர்தலும் உங்கள் முன் வைக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை.

செங்கல்பட்டு முகாமில் 23 தமிழர்களும் பூந்தமல்லியில் 4 தமிழர்களும் உங்கள் அரசால் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். மேற்கண்ட முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்கள் குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டும், உரிய முறையில் பிணை பெற்றும் இருக்கின்றனர். ஆனால் நீங்கள் அவர்களை சட்டத்திற்குப் புறம்பாக சிறப்பு முகாம் என்ற பெயரில் அங்கு அடைத்து வைத்துள்ளது கொடுமை இளைக்கிறீர்கள்.
கங்காதரன், சந்திரகுமார், அமலன், ஜெயமோகன் ஆகிய 4 பேரும் தங்களை விடுவிக்கக் கோரி பூந்தமல்லி முகாமில் கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.ஆனால் இவர்களின் கூக்குரல் இதுவரை உங்களுக்கு எட்டவில்லை. உங்கள் குடும்பத்தவர்களின் ஸ்பெக்றம் போன்ற திருட்டு வழக்கிலிருந்து எப்படி மீளலாம் என்பதை கட்சியின் உயர்மட்ட திட்டக்குழுவுக்கு கொண்டுவந்து கண்ணீர் விட்டு விவாதிக்கிறீர்கள்.

ஐயா கண்ணீரும் துன்பமும் துயரமும் எல்லோருக்கும் பொதுவானது. திருட்டுக்குற்றத்திற்காக கனிமொழி சிறைக்குப்போனால் அது தண்டனை. பொய் வழக்கில் அல்லது சந்தேகத்தின் பேரில் செங்கல்ப்பட்டிலும் பூந்தமல்லியிலும் ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டு தண்டிக்கப்பட்டால் அது நிந்தனை.

இதற்கு பிறகாவது உங்களைப்போல வஞ்சக நடிப்பிற்காக 1/2 நாள் உண்ணாவிரதமிருக்காமல் 12 நாட்களாக உண்ணாவிரதமிருக்கும் ஈழத்தமிழர்களை மனிதாபிமானத்துடன் நடத்தினீர்களென்றால் நீங்கள் நாத்தீகர் என்று கூறிக்கொண்டு மறைவாக வணங்கும் கடவுள் உங்களுக்காக கொஞ்சமேனும் இரங்கக்கூடும்.

ஈழதேசம் இணையத்திற்காக ஆரணி..