இலங்கையில் போருக்கு முன்னயகாலங்களில்  சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் உள்ளவர்களை  குற்றப்பத்திரிகை பதிவு செய்தபின் அவர்களை பிணையில் செல்ல அனுமதிக்கவேண்டும். அவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன்   சகசமான வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டு நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்கலாம் என்பதுதான் சர்வதேசத்தின் நிலைப்பாடு.  இலங்கை அரசு நடைமுறையில் வேறு விதமான சித்தாந்தத்தை கைக்கொண்டாலும் வெளிப்படையாக சர்வதேசத்தின் கருத்தை மறுக்க முடியாமல் இருந்துவருகிறது.

ஸ்ரீலங்காவில் சிறைகளில் எத்தனைபேர் அடைக்கப்பட்டிருக்கின்றனர் என்ற கணக்கு வெளிப்படையாக எவருக்கும் தெரியாமலே இருந்து வருகிறது. சந்தேகத்திற்கிடமான முறையில் தடுத்து வைத்திருப்பவர்களை பிணையில் விடும் பட்சத்தில் விடுதலைப்புலிகள் என சரணடைந்தவர்கள் எவ்வளவுபேர் இருக்கின்றனர் என்ற கணக்கை உலகத்திற்கு காட்டவேண்டிய சிக்கல் அரசாங்கத்துக்கு இருப்பதாலும், தமிழர்களின் தேசியப்பிரச்சினையை தீர்வுக்கு கொண்டுவந்துவிடக்கூடாது என்ற நோக்கம் ராஜபக்க்ஷ தரப்பினருக்கு உள்ளூர இருப்பதாலும் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்கள் பல பத்து ஆண்டுகள் சிறையில் வாடிவருகின்றனர்.

அந்தநாட்டின் கொடுங்கோல் ஆட்சியாளர்களின் துவேஷமும், புத்த துறவிகள்-சிங்களவர்களின் மனநிலையும் அதற்கு துணையாக இருக்கும் என்பதால் ஆட்சியாளர்களிடம் பேசுவதால் எந்தப்பலனும் கிடைக்கப்போவதில்லை. சர்வதேச தலையீடு ஒன்றுமட்டுமே இனி வரும் காலங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்.

இலங்கையில் அப்படியென்றால் தமிழ்நாட்டிலும் கைதிகள் சார்பாக சர்வதேச தலையீடு தேவை என்ற நிலை தோன்றியிருக்கிறது.  ஈழத்திலிருந்து அகதிகளாக தமிழ்நாட்டுக்கு தப்பிச்சென்று தஞ்சமடைந்தவர்களை  தேசத்துரோகிகள் போல சித்தரித்து எந்த முகாந்திரமும் இல்லாமல் பல ஆண்டுகள் சிறப்பு தடுப்பு முகாம்களில் அடைத்தி சித்திரவதை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பூந்தமல்லியிலும் செங்கல்பட்டிலும் சிறப்பு முகாம் என்ற பெயரில் இலங்கைத்தடை முகாம்களை மிஞ்சி நிற்கும் சித்திரவதை கூடமாக மூன்று முகாம்கள் செயற்பட்டு வருகின்றன. பெயரளவில் மட்டும் முகாம் என அழைக்கப்படும் இந்த இடங்கள் அடிப்படை வசதிகள் அற்றவை. இங்கு அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்கள் பலர் நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டு குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டவர்களாகவும் இருந்தபோதும் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக தமிழக அரசால் பல ஈழத்தமிழர்கள் இந்த சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக்கூடங்களில் துன்பப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இவர்கள்மீது பெருத்த தேசத்துரோக குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லை.  2007 -2009  காலங்களில் ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள அரசின் கொலைவெறித் தாக்குதலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஈழத்தில் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்தபோது அவர்களுக்கான அத்தியாவசிய  உயிர்காக்கும் மருந்துகளை தமிழகத்திலிந்து இலங்கைக்கு கடத்த முயன்றதாக பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்திருப்பதாக தெரிகிறது.   அதே போல, அத்தியாவசிய பொருட்களான பற்ரறி, டோர்ச் லைட், சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகள், பெட்ரோல், டீசல் மற்றும் என்ஜின்கள் ஆகியவற்றை கடத்தியதாகவும், பீடி, போன்றவற்றை கடத்தியதாகவும் பலர் கைது செய்யப்பட்டு மேற்படி முகாம்களில் அடைக்கப்பட்டனர்.

சென்னை சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்ற வாலிபரை பட்டப்பகலில் சுட்டுக்கொன்ற டக்கிளஸ் தேவானந்தாவை, இரத்தின கம்பளம் விரித்து இருகரம் கூப்பி வரவேற்கின்றார் பாரதப்பிரதமர் மன்மோகன் சிங். கொலைக்குற்றவாளி ராஜபக்க்ஷவை அரச விருந்தினராக பெருத்த விழாக்களுக்கு பிரதம விருந்தினராக அழைக்கப்படுகின்றார்,. டக்கிளஸ் தேவானந்தா தேடப்படும் கொலை குற்றவாளியாக நீதிமன்றம் பிடியாணையும் பிறப்பித்திருந்தது. அவைபற்றி எந்தவிதமான எதிர்வினையையும் இந்திய மத்திய அரசோ தமிழக மானில அரசோ காட்டி பெரிது படுத்தவில்லை.

சமீபத்தில் இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் சிலர் எதிர்க்கட்சி தலைவர் சுஸ்மா சுவராஜ், தலைமையில் இன்பச்சுற்றுலாவாக இலங்கை சென்று திரும்பியிருக்கின்றனர். 2009ல் கருணாநிதியின் கபட பணிப்பின் பேரில் கனிமொழி தலைமையில் சென்று ராஜபக்க்ஷவுடன் குலாவி பரிசுப்பொருட்கள் வாங்கி வந்த அதே நிலைப்பாட்டை ஒற்றி பயணம் "திருப்திகரமாக" அமைந்தது ராஜபக்க்ஷ தீர்வுதிட்டத்திற்கு ஒத்துக்கொண்டிருக்கிறார் என அறிக்கை வெளியிட்டு ராஜபக்க்ஷ புகழ் பாடி எம்பீ,க்கள் குழு கலைந்துவிட்டனர்.

அவர்களது உள்நாட்டில் செங்கல்ப்பட்டிலும் பூந்தமல்லியிலும் அடைபட்டுக்கிடக்கும் ஈழத்தமிழர்கள் நிலைபற்றி சுற்றுலா குழுவில் பங்குபற்றிய தமிழக காங்கிரஸ்-கொம்யூனிஸ்ற் உறுப்பினர்கள் இதுவரை எந்த முயற்சியும் செய்யவில்லை.

இன்று அரசியல் அனாதையாக்கப்பட்டு செய்வதறியாது திகைத்து நிற்கும் கருணாநிதி என்ன காரணத்தினால் ஆட்சி கட்டிலிருந்து தூக்கி வீசப்பட்டார் என்பதை இப்போ நன்கு அறிந்து, ஈழமே தனது மூச்சு என்று மூச்சுக்கு முன்னூறு அறிக்கை விளாசி வருகிறார். சில நாட்களுக்கு முன் தமிழீழம் கிடைக்கும்வரை போராட்டம் தொடருமென தன்னாரவாரமாக அறிக்கை வெளியிட்டார். கடைசியாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் காந்திய வழியில் ஈழம் கிடைக்கும்வரை போராடப்போவதாக முழங்கியிருக்கின்றார்.

'போரட்டம்'  சோனியா காந்தி வழியா, கரம்சந்த் மோகன்லால் காந்தி வழியா என்பதை அவர் குறிப்பிடவில்லை. இன்று இவ்வளவு துள்ளி குதிக்கும் கருணாநிதி 2011 ஆட்சியிலிருக்கும்வரை செங்கல்ப்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாமிலிருந்த கைதிகள் நடத்திய தொடர் சாத்வீக போராட்டத்திற்கு சிறு அசைவைக்கூட காட்டி அவர்களுக்கு உதவவில்லை.

இன்றய முதல்வர் ஜெயலலிதா கூட மத்திய அரசின் மனநிலையை நோகடிக்காமல் நழுவல்ப்போக்கில் நகர்வதாகவே தெரிகிறது. செங்கல்பட்டு முகாமில் உள்ளவர்களில்  17 பேர் உண்ணாவிரதம் இருந்து மயக்க நிலையை அடைந்து இருக்கிறார்கள்.  சந்திரகுமார் என்ற கைதி நீர் கூட அருந்தாமல், தனது உண்ணாவிரதத்தை துவங்கியிருந்தார். அவர்களின் கோரிக்கை எல்லாம்  மற்ற முகாம்களில் இருக்கும் தங்களுடைய உறவினர்களோடு தங்களை சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்பது மட்டுமே.

இலங்கையில் வாழமுடியாத நெருக்கடியான சூழலில் மூன்றாம் நாடு ஒன்றுக்கு தப்பிச்செல்ல பொருளாதார வசதி இல்லாதவர்கள், தங்களிடமிருக்கும் நகை நட்டுக்களை அடகு வைத்து சிறு தொகையை செலுத்தி தமிழ்நாட்டுக்கு அகதிகளாக செல்வது வழக்கமான ஒன்று.

அகதியாக நாடுகடந்து செல்பவர்கள் பாஸ்போட்டை பயன்படுத்துவதும் மிகவும் குறைவானது, அல்லது கள்ள பாஸ்ப்போட்டை பயன்படுத்துவதுமுண்டு. வளர்ந்தநாடுகள் இவற்றை புரிந்துகொண்டு குதர்க்கம் செய்யாமல் தஞ்சம் கொடுத்து வருகின்றன. ஆனால் தமிழகத்து சிறப்பு முகாமில் அடைபட்டு கிடப்பவர்கள் சிலர்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு பாஸ்போட் இல்லாமல் நாட்டுக்குள் பிரவேசித்ததே குற்றமாக பதியப்பட்டிருக்கிறது. அடுத்து பீடி கடத்தியதும் ராஜ துரோகமாக காட்டப்பட்டிருக்கிறது.

தஞ்சம் கோரும் ஒருவரை "எதிலி" என்ற சொல் பதத்தால் விளிக்கப்படுவதுண்டு. அனைத்தையும் இழந்த ஒருவரே எதிலி ஆவார். கருணாநிதி ஆனாலும் சரி முதலமைச்சர் ஜெயலலிதா ஆனாலும் சரி மாற்று கட்சிகளை சார்ந்த எவரானாலும் சரி இவற்றை புரிந்து கொண்டு முதலில் செங்கல்ப்பட்டு, பூந்தமல்லி சிறப்பு (சித்திரவதை) முகாம்களில் துயருறும் மனிதர்களை மனிதர்களாக மதித்து மனிதாபிமானத்துடன் சகச வாழ்வில் கலக்க ஆவன செய்யவேண்டும்.

ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்.