‘கோபாலபுரத்து குணாளனே...
அறிவாலயத்தின் பெருமானே...’
-இப்படி தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தபோது முதல்வர் கருணாநிதியை கடவுள் ரேஞ்சுக்கு தூக்கி வைத்து தாக்கினார் கவிஞர் வாலி.
ஒரு சிலரைக் கொன்று பல்லாயிரக்கணக்கானோரை வாழ வைப்பதற்காக, பெருமாள்
தசாவதாரம் எடுத்ததாக கதை சொல்லப்படுவதுண்டு. ஆனால்... ஒருசிலரை
வாழவைப்பதற்காக, ஒன்றரை லட்சம் பேரை கொன்றுகுவித்த கூட்டணிக்குத் தலைமை
தாங்கிய கருணாநிதி இன்று எடுத்திருக்கும் ‘டெசோ’வதாரம்... அந்த கடவுளின்(!)
தசாவதாரத்தையே மிஞ்சுகிறது!
புது சட்டை போட்டவன் எப்படி அடிக்கடி கண்ணாடி பார்த்துக் கொண்டே
இருப்பானோ, அதேபோல புதிதாய் டெசோ வேஷம் போட்டிருக்கும் கலைஞர் அடிக்கடி
அதுபற்றி தன் கைப்பட எழுதிக் கொண்டே இருக்கிறார்.
ஜூலை 12-ம் தேதி வியாழக் கிழமை வெளிவந்த முரசொலியில் முதல் பக்கத்தில்
விடுதலைப் புலிகளுக்காகவும், ஈழத் தமிழர்களுக்காகவும் கலைஞர்
காட்டியிருக்கும் போங்கு... மன்னிக்க... பாங்கு ஐயய்யோ உருக வைக்கிறது.
ஒன்றரை லட்சம் பேரை தீர்த்துக் கட்டிவிட்டு அந்த பிணங்களையே உரங்களாக
எடுத்துக் கொண்டு வளர்ந்த புற்களில் பனித்துளி ஒட்டியிருக்கிறது. உடனே
அதைக் காட்டி, ‘இதோ பாருங்கள் என் கண்ணீர்’ என்று ஓலமிடுகிறார் கலைஞர்.
இலங்கையில் தொடரும் அநீதி... என்ற தலைப்பில் அவர் முரசொலியில் கொட்டியிருக்கும் கண்ணீர் என்ன?
“இலங்கையில் வவுனியா சிறையிலே நிர்மல ரூபன் என்ற விடுதலைப் புலியை
அடித்துக் கொன்றுவிட்டனர் சிங்கள சிறை அதிகாரிகள். நிர்மல ரூபனின் உடல்
முழுதும் ரத்தக் கறை படிந்திருப்பதாகவும் அவருடன் காயம் அடைந்த மற்றொரு
கைதி கோமா நிலையிலே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இறந்த நிர்மல ரூபனை வவுனியாவில் தகனம் செய்ய போவதாக அவரது பெற்றோர்
கூறினர். ஆனால்... இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் அதற்குக் கூட அனுமதிதராமல்
கொழும்புக்கு அருகே உள்ள சுடுகாட்டில் நிர்மல ரூபனை தகனம்
செய்துவிட்டார்களாம்.
மண்ணின் மைந்தனுக்கு மரணத்தில் கூட மண் உரிமை மறுக்கப்பட்டது மாபாதாகம் இல்லையா?’’
என்று தனது போலிக் கண்ணீரை குடம் குடமாய் கொட்டியிருக்கிறார் கருணாநிதி.
அதுமட்டுமா.... இதுக்கெல்லாம் நீதி கிடைக்கவே டெசோ மாநாடு நடத்தப்போவதாவும் புளுகி... மன்னிக்க புளங்காகிதம் அடைந்திருக்கிறார்.
எப்படி எப்படி...
இன்று ஒரே ஒரு நிர்மல ரூபன் இறந்ததற்கு இந்தக் குதியாட்டம் போடும் கருணாநிதி அவர்களே...
அதே பூமியில் அதே மண் உரிமைக்காகத்தானே மூன்று வருடங்களுக்கு முன்னர்
ஒன்றரை லட்சம் தமிழர்கள் போராடினார்கள். விடுதலைப் புலிகளுக்குக் கேடயமாக
நின்று போராடினார்கள். அப்போது அவர்கள் மீது மக்கள் மீது, போர் அற்ற
பகுதியில் ( நான்- வார் சோன்) என்று தாக்குதல் இல்லாத பகுதி என்று
அறிவிக்கப்பட்டு அங்கே தமிழர்களை குவித்து... பின் ஒட்டுமொத்தமாக அவர்கள்
மீது குண்டுபோட்டுக் கொன்றார்களே...
கருணாநிதி அப்போது உம் பேனா யாருக்கு முதுகு சொறியப் போயிருந்தது?
சொக்கத் தங்கம் சோனியாவுக்கா? அல்லது மக்குத் தலைவன் மன்மோகன் சிங்குக்கா?
ஒன்றரை லட்சம் தமிழர்கள் மண்ணுரிமை மறுக்கப்பட்டு, மனித உரிமை கூட
மறுக்கப்பட்டு எல்லா திசைகளில் இருந்து குண்டுகள் வீசப்பட்டு போர்க்
களத்தில் பிணங்களாக வீழ்ந்தபோதும்...
இங்கே
இரண்டு பக்கமும் இரண்டு பெண்டாட்டிகள், இரண்டு ஏர்கூலர்கள் என்று ஒன்றரை
மணி நேர உண்ணாவிரதக் கூத்து நடத்தியவரே! மண்ணுரிமை பற்றி இன்று மட்டும்
வாய்கிழிய பேச முடிந்த உம்மால் அன்று என்ன கிழிக்க முடிந்தது?
‘பிரபாகரன் பிடிபட்டால் அவரை போர் விதிகளுக்கு உட்பட்டு நடத்தவேண்டும்’
சொன்னது யார்? இப்படி சொன்னதின் அர்த்தம் என்ன?
‘பிரபாகரனைப் பிடிக்கவேண்டும்’ என்ற உமது உள்ளத்தின் முப்பது ஆண்டுகளாக
அரிப்பை உமது மொழி சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி தமிழக முதல்வராக
இருக்கும்போது சொன்னீர்கள். இன்று மண்ணுரிமை பேசும் விடுதலைப் புலிகளுக்காக
வேடக் கண்ணீர் வடிக்கிறீர்!
ஆஹா... ஆஹா....
காரணம் அது ஆளுங்கட்சிக் கண்... இது எதிர்க்கட்சிக் கண். பல கூட்டங்களில் உங்கள் கண்ணைப் பற்றி நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்.
‘எனக்கு ஒருகண் தான்’ என்று!
அந்த ஒரு கண்ணிலும் ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு பார்வை... எதிர்க்கட்சியாக இருக்கும் போது வேறு பார்வையா?
ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒன்றரை மணிநேர உண்ணாவிரதக் கூத்தை
ஏர்குலர்களுக்கு இடையே நடத்திமுடித்தபின்பு செய்தியாளர்கள் கருணாநிதியைக்
கேட்கிறார்கள்.
‘போர் நிறுத்தம் என்று சொல்லி உண்ணாவிரத்ததை முடித்துவிட்டீர்கள்... ஆனால், இன்னமும் குண்டுவீச்சு நடப்பதாக செய்திகள் வருகின்றனவே?’
இந்தக் கேள்விக்கு கருணாநிதியின் பதில்.
‘மழைவிட்டாலும் தூவானம் விடுவதில்லை’
-எந்த மனித நாவாவது இப்படி ஒரு பதில் சொல்லுமா?
அங்கே ரசாயன குண்டுகள் போடப்பட்டு உடல் தீய்ந்து, அறுந்து, கிழிந்து,
வெந்து, ரணப்பட்டு, புழுபுழுத்து மக்கள் ரத்தச் சேற்றில் கிடக்கிறார்கள்.
அது உமக்கு மழையா? அப்படியானால் கோபாலபுரம் இல்லத்துக்கு மட்டும் கொஞ்சம்
‘மழை’ பெய்யச் சொல்லலாமா?
ஆளுங்கட்சியாக இருக்கும்போது குண்டுகளைக் கூட மழை என்று வர்ணித்த பதவித் திமிர், அதிகார ஆணவம்....
இப்போது எதிர்க்கட்சியாக பின் மண்ணுரிமை காக்கும் மகாத்மாவாக மாறிவிட்டதா?
அதை நம்புவதற்கு என்ன நாங்கள் சுப.வீரபாண்டியனா, திருமாவளவனா? அவர்கள் கூட உள்ளே உம்மை நம்பவில்லை. வெளியேதான் காட்சி தருகிறார்கள்.
கருணாநிதி
அவர்களே... இன்று உம்மால் உமது பிள்ளைகளையே ஒற்றுமைப்படுத்த முடியவில்லை.
ஸ்டாலின் ஒருபக்கம், கனிமொழி ஒருபக்கம், அழகிரி ஒருபக்கம் என்று மோதிக்
கொண்டிருக்கிறார்கள்.
இந்த வலியிலிருந்து தப்பிக்க உங்களுக்கு ஈழம் என்ன பொழுதுபோக்கும்
மனமகிழ் மன்றமா? அங்கே கொத்துக் கொத்தாய் தமிழர்கள்
செத்துவிழுந்துகொண்டிருந்தபோது... உமது கோபாலபுரத்து வீட்டுவாசலில் நின்று
பிரணாப் முகர்ஜி என்ன சொன்னார்?
‘போர் நிறுத்தத்தை நாங்கள் கேட்கவில்லை’
-உன் வீட்டு வாசலில் நின்று போர் நிறுத்தம் கேட்கவில்லை என்றாரே
பிரணாப்.... அப்போது எதிர்த்து உம்மால் கேள்வி கேட்க முடிந்ததா? கேட்டீரா?
இன்று
அதே பிரணாப்பை குடியரசுத் தலைவர் ஆக்குவதற்காக.. தமிழ்நாட்டுக்கு முதலில்
அழைத்துவருகிறீர்கள். தமிழனை அழித்தவனை தமிழ்நாட்டுக்கு அழைத்துவந்து
மரியாதை செய்கிறீர்கள்... செண்டை மேள வரவேற்பு கொடுக்கிறீர்கள்.
ஈழத்துக்கு இழவு மேளம் கொட்டியவனுக்கு சி.ஐ.டி. காலனி வாசலில் சென்டை மேள வரவேற்பு!
அவன் டெல்லி போய் சேர்வதற்குள் இங்கே டெசோ அறிவிப்பு!
யார் ஏமாறுவார்கள் கருணாநிதி இனி உம்மிடம்?
தலைவர் பதவியைத் தருகிறேன் என்று சொல்லிச் சொல்லியே உம் பிள்ளை ஸ்டாலினை
ஏமாற்றியதுபோல... ஒட்டுமொத்த தமிழர்களையும் ஏமாற்றலாம் என்று கறுப்புக்
கண்ணாடிக்குள் கணக்கு போடுகிறீரா?
உமது டெசோவை கூத்தாடி மீசை என்று வர்ணித்தார் புலவர் புலமைப்பித்தன்.
கூத்தாடியாவது மக்களை மகிழ்ச்சிப்படுத்த மீசை வைப்பான். மீசையை எடுப்பான்.
நீங்கள் அரசியல் கூத்தாடிக் கூட அல்ல... அரசியல் கோமாளி. சிரிப்பு வரவைக்கும் கோமாளி அல்ல... வெறுப்பை வரவைக்கும் கோமாளி!
தனி ஈழம் மலர்ந்திட தலைவர் அழைக்கிறார் என்று காசு கொடுத்து சுவர்களில் எழுதிவைக்கிறார்கள் உம் கட்சிக்காரர்கள்!
இதேபோலத்தான், ‘நான்கு நாட்களில் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றிய தலைவா’
என்று பளபளக்கும் காகிதத்தில் போஸ்டர்கள் அடித்து உனது உண்ணாவிரதக்
கூத்தின்போது ஒட்டினார்கள் உமது தொண்டர்கள்.
நான்கு நாட்களா.. நான்கு ஆண்டுகள்... ஏன் உமது அரசியல்வாழ்வில் நாற்பது
ஆண்டுகளாக ஈழம் ஈழம் என்று கூவிக் கொண்டுதான் இருக்கிறீர்களே தவிர, அதற்கென
ஒரு கான்க்ரீட் ஸ்டெப் எடுத்து வைத்ததுண்டா?
கடவுள் நடித்த தசாவதாரத்தை கூட மக்கள் நம்புகிறார்கள். கமல் நடித்த தசாவாதாரத்தை கூட மக்கள் ரசிக்கிறார்கள்.
கருணாநிதி அவர்களே... இரண்டு கைகளிலும் ரத்தக் கறை... வாயில் தமிழர்களின் உரிமைப் பறை!
இந்த உமது மிகக் கொடூரமான ‘டெசோ’வதாரத்தை தமிழர்கள் சகிக்க மாட்டார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஈழத்தை தூக்கிப் பிடித்து ரத்தம் ருசிக்க நினைக்காதீர்கள்!
ஈழம் ஒன்றும் நீங்கள் மதியம் போகும் சி.ஐ.டி. காலனியோ, இரவில் தங்கும் கோபாலபுரமோ, ஓய்வுக்குப் போகும் மாமல்லபுரமோ அல்ல!
அது... கொள்கை மறவர்களின் குருதியில் நனைந்து கிடக்கும் புண்ணிய பூமி!
-திலீபன்
நன்றி;தமிழ் லீடர்.
No comments:
Post a Comment