ஈழத்தமிழர்களின் (வாழ்க்கை) அரசியலை வியாபாரப்பொருளாக்கி பல்வேறு தளங்களில் உரிமம் பெறாமல் வியாபாரம் செகசோதியாக நடைபெற்றுவருவதை அனைவரும் அறிவோம்.    இலங்கை,   இந்தியா,   புலம்பெயர் நாடுகள் என்று ஈழ வியாபாரம் மொத்தமாகவும் சில்லறையாகவும்  மிக மலிவு விலையில் கூறுபோட்டு கூவிக்கூவி சமீபகாலமாக விற்க்கப்பட்டு வருகிறது.  இந்த வியாபாரிகளால் ஈழத்தமிழினத்திற்கு வாழ்க்கையில்  அனைத்தும் இழக்கப்பட்டு எலும்புதுகள்களும்,   அவலங்களும் மட்டும் மிஞ்சியிருக்கிறது.   இருந்தும் இந்த அரசியல் வியாபாரிகள் ஈழ வியாபாரத்தை கை விடுவதாக இல்லை. 

சிக்கல் நிறைந்த இந்த அரசியல் வியாபாரத்தில் கடைசியில் நஸ்டமடைந்தவர்களும் உண்டு. 

உரிமம் பெற்ற ஈழ அரசியலின் உள்ளூர் மொத்தவியாபாரியான சம்பந்தர் விதிமீறிய இலக்குகளுடன்  இலங்கையிலிருந்தும்.  ஆக்கிரமிப்பு  வியாபாரிகளான கருணாநிதி, தொல் திருமாவளவன். இராமதாஸ்,  போன்றவர்கள் தமிழ்நாட்டிலிருந்து     தீயில் இறங்குவது போன்ற கவர்ச்சிகரமான அதிரடி விளம்பரங்களுடன்   ஈழ இலச்சினையை பயன்படுத்தி  உரிமம் இல்லாமல் தமது வியாபாரத்தை செவ்வனவே செய்து இலாபமீட்டி வருகின்றனர்.

புலம்பெயர் தேசங்களில் பலர் போலி உரிமங்களை தயாரித்து கடை கட்டி வாழ்வாங்கு வாழ்வதும் அனைவரும் அறிவோம்.

வியாபாரத்துக்கு புதன் அதிபதி,   புதனுக்கு வினோதன் என்றும்,  கணக்கன் என்றும்,   தந்திரன் என்றும்,   அலிக்கிரகம் என்றும் பெயர்கள் உண்டு.  குறிப்பிட்ட அந்த கிரகத்தின் தன்மையுடையவர்கள் நேரத்துக்கேற்ப வியூகத்தை மாற்றியமைக்கக்கூடிய மதுநுட்ப  வித்தை தெரிந்தவர்கள் மட்டுமே  வியாபாரத்தின் ஏற்ற இறக்கங்களை பகுப்பாய்ந்து தந்தரமாக வியாபாரத்தை தொய்வின்றி நடத்திவிட முடியும்.

இதில் ஈழ வியாபாரத்தை மொத்தமாக தாம் தான் செய்யவேண்டும் என்ற அடாவடியுடன் இலங்கையிலிருந்து சம்பந்தன் அவர்களும்,   தமிழ்நாட்டிலிருந்து ஆக்கிரமிப்பு வியாபாரி கருணாநிதியும் முன்னணியில் நின்று புழுதிபறக்க விளம்பரம் செய்துவருகின்ற போதிலும் இந்த இருவரின் மீதும் எவருக்கும் நம்பிக்கையில்லாமல் போய்விட்டிருக்கிறது.

சம்பந்தன் தற்போது கடையை உதவியாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்விலிருந்து அடுத்த சுத்துமாத்துக்கு தயாராவதாக சொல்லப்படுகிறது.

கருணாநிதியின் கடையில் சில்லறை வியாபாரம் படுத்துவிட்டதால் அவர் இப்போ ஈழ  வியாபாரத்தை மூட்டை மூட்டையாக கட்டி வெளிநாடுகளுக்கு மலிவு விலையில் விற்பனை செய்வதற்கு தொடங்கியிருக்கிறார். அதற்கான விளம்பரங்கள் கடந்த ஒரு சில ஆண்டுகளாக கருணாநிதி குறூப்பால் கலர் கலராக கவர்ச்சியாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த அடிப்படையில் கருணாநிதி கடைசியாக வெளியிட்ட கண்ணீர் விளம்பரம்.

ஈழ மக்களுக்காக தொடர்ந்து சிங்கள அரசுடன் ஜனநாயக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நம்பிக்கைவாய்ந்த ஈழ தமிழ் அரசியல்க்கட்சியான "தமிழ் தேசிய மக்கள் முன்னணி"  என்ற கட்சியையும் அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களையும் சேர்த்து குப்புறவிழுத்தி விற்பதற்கு திட்டமிட்டிருந்த விளம்பரம் திடுக்கிட வைக்கிறது.

கருணாநிதியின் கால்வாரும் கவர்ச்சிகர விளம்பரம் பின்வருமாறு அமைந்திருந்தது.

இலங்கையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு இலங்கை அரசு அழைப்பாணை விடுத்துள்ள பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும்.?? 

இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்விபதில் வடிவிலான அறிக்கையில்,

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பிரபல வழக்கறிஞரும், ஜி.ஜி.பொன்னம்பலத்தின் பேரனுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சட்டத்திற்குப் புறம்பாக தீவிரவாதிகளை ஆதரிப்பதாகச்சொல்லி, அதற்கு விளக்கமளிக்க வேண்டுமென்று இலங்கை சிங்கள அரசு அழைப்பாணை அனுப்பியுள்ளதாக தெரிகிறது.  இலங்கை புலனாய்வுத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக ஆஜராகும்படி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கு தகவல் வந்துள்ளதாம்.

இதில் இருந்து இலங்கை அரசு எப்படியெல்லாம் தமிழர்களை குறி பார்த்து குறுக்கு வழியில் பழி வாங்குகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்!!!.

"இந்த நிலைமைகளையெல்லாம் போக்கிடத்தான் தி.மு.க. சார்பில் டெசோ மாநாடு நடத்தி, உலக நாடுகளின் மற்றும் சர்வதேச அமைப்புகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் அதன் தீர்மானங்களை இந்திய மத்திய அரசுக்கும், ஐ.நா. மன்றத்திற்கும் நேரடியாகவே வழங்கியிருக்கிறோம்." 

இப்போதும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டுமென்று வலியுறுத்துவதாகவும் அந்த அறிக்கையில் தி.மு.க.தலைவர் கருணாநிதி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

கருணாநிதி மற்றும் இந்திய மத்திய அரசு கூட்டாக  2007ல் இருந்து 2009 வரையான காலப்பகுதியில்  எப்படியான நிலைப்பாட்டுடன் செயற்பட்டு ஈழத்தை எரித்தது என்பதை ஈழத்தமிழர்கள் எவரும் இன்னும் மறந்துவிடவில்லை,   அனைத்தையும் மறக்கடிக்கும் விதமாக இந்திய மத்திய சர்க்காரும் கருணாநிதியும் திட்டமிட்டு இப்படி பல விளம்பரங்களை செய்துவருவது ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல தமிழகத் தமிழர்களுக்கும் தீரா இடும்பையாகவே இருந்து வருகிறது. 90 வயதான கருணாநிதி சாகும்வரை ஈழத்தமிழனுக்கு தொல்லைகளும் துரங்களும் தொடர்ந்துகொண்டேயிருக்கும். 

கருணாநிதி என்ற ஒற்றை மனிதனால் ஈழமக்கள் அனுபவித்த பேரிடும்பை ஏற்கெனவே பல இடங்களில் சொல்லப்பட்டுவிட்டதால் அவைபற்றி இங்கு பட்டியலிடவில்லை இருந்தும் ஈழத்தலைவனை பெற்றெடுத்த ஈழத்தமிழ்த்தாய் பார்வதி அன்னை நோய்வாய்ப்பட்டு தமிழகம் வந்தபோது கருணாநிதி செய்த இழிசெயலும் போர்நிறுத்தத்துக்கு பாடுபடுகிறேன் என்று நாடகமாடி 2 ,1/2 மணி நேரம் கடற்கரையில் உண்ணாவிரதம் என்று ஆடிய கீழ்த்தரமான நாடகங்களும் காலத்தால் அழியாத கீழ்த்தரமான வியாபார விளம்பரம் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்வதுடன்,

ஆடு நனைகிறதென்று ஓநாய் விக்கி விக்கி அழுததாம். அந்த பழமொழியின் உட்கிடக்கை கருணாநிதியின் வியாபார விளம்பரம் கட்டியம் கூறுவதையும் வெறுப்புடன் சுட்டிக்காட்டி செல்லவேண்டியுள்ளது. 
 
நன்றி தேசம்.