Sunday, February 10, 2013

ராஜபக்‌ஷவுக்கு எதிரான போராட்டம் இந்திய மத்திய அரசுக்கு எதிராக(?) மையம் கொள்ளுகிறது.‏

08, 02, 2013 அன்றைய ராஜபக்க்ஷவின் இந்தியப்பயணம்,  இந்திய மத்திய உளவுத்துறையின் அதி உயர் கண்காணிப்பு, மற்றும் இறுக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்திய அரசால்  ஈடேற்றப்பட்டிருந்தாலும்,  ராஜபக்‌ஷவின் பயணம் இந்திய மத்திய அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சியை நாட்டுக்குள் தோற்றுவித்து தேசிய மட்டத்தில் ஒரு பரவலான அரசியல் பதட்டத்தையும்,  மனிதாபிமானம், தேசிய மனித உரிமை,  ஜனநாயகம்,   ஆகியவற்றிற்கு உட்பட்டு அரசாங்கத்தின் அராஜக போக்கை இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்காமல்  துணிவுடன் நேரடியாக எதிர்ப்பதுபோன்ற  ஒருவித எச்சரிக்கை அலையையும் உருவாக்கியிருக்கிறது.    

ஈழத்தமிழ் இனத்தை அழித்த இலங்கை அதிபர் ராஜபக்க்ஷ,  இந்தியாவுக்குள் வருவதை எதிர்த்து, பெப்ரவரி 8ம் நாள் அன்று, தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்யும் இந்திய அரசை எதிர்த்து, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம், தனது தலைமையில் நடைபெறும்… என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ ஏற்கெனவே கூறியிருந்தார்.  அதே கருத்துப்பட செந்தமிழன் சீமான் அவர்களும் ராஜபக்‌ஷவின் வரவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

வைகோ,  சீமான், நெடுமாறன்,  அவர்கள் மட்டுமல்ல ராஜபக்‌ஷவின் பயண விடயத்தில் தமிழ்நாடு முற்றுமுழுதான எதிர்நிலையில் இருக்கின்றதென்பதை மத்திய மானில உளவுத்துறைகளும்,   மத்திய அரசும் நன்கு அறிந்தேயிருந்தன,  அப்படியிருந்தும் தமிழக மக்களின் மனநிலையை வழமைபோல கணக்கில் எடுக்காமல் உதாசீனப்படுத்திவிட்டு இனப்படுகொலையாளி ராஜபக்‌ஷவுக்கு மிகப்பெரிய அந்தஸ்தை வழங்கி கவுரவம் கொடுப்பதற்கு மத்திய ஆட்சியாளர்கள் பகீரதப்பிரயத்தனம் செய்திருந்தனர்.  இதற்கு இறையாண்மை என்று பெயரிடுவதா அல்லது அராஜகம் என்று வரித்துக்கொள்ளுவதா என்பதை இந்திய அரசியல் அகராதியில் பார்த்து தெரிந்துகொள்ளவேண்டியுள்ளது.

மத்திய அரசாங்கம் முனைப்புக்காட்டிய  ராஜபக்‌ஷ வரவேற்ப்புத்திட்டத்திற்கு   தமிழகத்தில் மட்டுமல்ல ராஜபக்‌ஷ பயணம் மேற்கொண்ட நாட்டின் அனைத்து இடங்களிலும்  ஆதரவான நிலை இருக்கவில்லை என்பதை நேற்றைய முந்தினம் நாட்டில் நடந்த உணர்ச்சிமிக்க போராட்டங்களும் எதிர்ப்புக்களும் அழுத்தம் திருத்தமாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

முன்னுக்குப்பின் முரணாக குத்துக்கரணமடித்து பல வியாக்கியானங்களை சொல்லி எதையும் நியாயப்படுத்தக்கூடிய மத்திய அரசின் கூட்டணி சகாவான தந்திரவாதி கருணாநிதி கூட "கூட்டணி தர்மம்" என்ற கொள்கைவிளக்க அடிப்படையில் துணிந்து நின்று காங்கிரஸுக்கு கைகொடுக்க முடியவில்லை என்பதை  கவலையுடன் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

ராஜபக்ஷவின் பயணத்தை எதிர்க்கப்போவதாக அறிக்கை விடுத்து ஏமாற்றி மக்கள் ஆதரவு தேடிய கருணாநிதி அன்றைய தினம் தனது சந்தற்பத்துக்கேற்ப நிறம்மாறும் உத்தியை சரியாக பயன்படுத்தி  எவருக்கும் புரியாவண்ணம் மிக நுண்ணியமாக சிந்தித்து சோனியாவை புண்படுத்தாவண்ணம் வழமைபோல தனது சூழ்ச்சி தந்திரத்தை பாவித்து டெசோ என்ற குடையை அவசரமாக விரித்து அதன்கீழ் உட்கார்ந்து டெசோவின் மூலமே ராஜபக்ஷவை எதிர்ப்பதாக சோனியாவுக்கு  காட்டி விளம்பரம் செய்து தானும் தப்பி திமுக வையும் தப்ப வைத்திருந்தார்.

2013 மார்ச்சில் ஜெனீவா ஜ.நா மனித உரிமை பேரவையின் 22ஆவது கூட்டத்தொடரில் அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் புதிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்ற ராஜபக்‌ஷவின் அறிவிப்புக்கு பின்னணியில் இந்திய அரசின் மறைமுக ஒத்துழைப்பும்,  அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தை மீண்டும் இழுத்தடித்து காலதாமதத்தை ஏற்படுத்தி நீர்த்துப்போகச்செய்யும் தந்தரம் இருப்பதாகவே உணரப்படுகிறது.

ஏற்கெனவே 2012 ல் ஐநா மன்றத்தின் 21வது மனித உரிமை அமர்வின்போது அமெரிக்கா கொண்டுவந்த இலங்கைக்கு எதிரான? தீர்மானத்தை ஆதரித்து இலங்கைக்கு எதிரான நிலையெடுக்கவேண்டிய தர்மசங்கடம் இந்திய மத்திய அரசுக்கு அப்பொழுது உருவாகியிருந்தது. அந்த நிலைக்கு சனல் 4  தொலைக்காட்சியின் ஈழப்படுகொலை ஆவணப்படமும்,  உலக நாடுகள் ஶ்ரீலங்காமீது கொண்டுள்ள அதிகப்படியான கொதிநிலையும் காரணமாக  தமிழக அரசு  சட்டசபையில் இயற்றிய தீர்மானம்,   மற்றும் தமிழக ஈழ ஆதரவு கட்சிகள்+ அமைப்புக்களின் போராட்டமும் சோனியா அரசுக்கு நெருக்கடிகளை உண்டுபண்ணி அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவான நிலைக்கு காலம் இட்டுச்சென்றது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படாமல் திமுக ஆட்சி இருந்திருக்குமாயின் நிலை வேறுமாதிரி அமைந்திருக்கும்.

 1, தமிழகத்தில் திமுகவின் படுதோல்வி,  அதனால் உண்டான ஆட்சி மாற்றம்,  2, முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மத்திய அரசை நோக்கிய இலங்கைக்கு எதிரான பொருளாதரத்தடை,  இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களை ஐநா சபைக்கு கொண்டு செல்லவேண்டுமென்ற  வற்புறுத்தல், அதற்காக சட்டசபையில் இயற்றப்பட்ட தீர்மானம்., 3, கட்சி அரசியல் ரீதியாக தமிழக மக்களிடம் இருந்து காங்கிரஸ் காணாமல் போய்விடக்கூடாது என்ற உள் நோக்கம். 4,  வீழ்ச்சியின் பின்னரான கருணாநிதியின் சந்தற்பவாத சூழ்ச்சித்தனமான அரசியற் தந்திரம்,  அனைத்தும் ஒன்று சேர்ந்து 2012 ல் அமெரிக்க தீர்மானதை எதிர்க்காமல் காட்டிக்கொள்ளவேண்டிய சூழ்நிலை சோனியா அரசுக்கு உருவாகியிருந்தது.

ஆனாலும் அந்த தீர்மானத்தை சந்தற்பவாதம் கருதி ஆதரிப்பதுபோல காட்டிக்கொண்டாலும் உள்ளூர தீர்மானத்தை நீர்த்துப்போகச்செய்யும் வழியூடாக பயணிக்கச்செய்து ராஜபக்‌ஷவின் விருப்பத்தை நிறைவுசெய்யும் வகையில் இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்,  திரைமறைவில் பகீரதப்பிரயத்தனம் செய்து  பணியாற்றியிருந்தார்,  எனவேதான் அந்த தீர்மானத்தில் அமெரிக்கா முன்மொழிந்திருந்த வேலைத்திட்டங்கள் எதையும் இலங்கை கவனத்தில்க்கொள்ளாமல் உதாசீனப்படடுத்தியிருந்தது.

அடுத்து 2013 மார்ச் வரவிருக்கும் மனித உரிமை கூட்டத்தொடரில் அமெரிக்கா சற்று கடுமையை காட்டக்கூடிய சந்தற்பம் உருவாகலாம் என்பதும்,  அதை சமாளிக்க இலங்கைக்கு இந்தியாவே கை கொடுத்து உதவவேண்டியிருக்கும் என்பதும் சாதாரணமாக புரியக்கூடிய ஒன்று.

ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வுத்திட்ட இழுபறி நிலைக்கு இந்திய அரசே காரணகர்த்தா என்பது வெளிப்படை.   ஶ்ரீலங்கா இராணுவத்திற்கு உள்நாட்டு எதிர்ப்புக்கு மத்தியிலும் பயிற்சி அளிப்பது,   இனப்படுகொலை குற்றவாளியை உள்நாட்டு மக்கள் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது வரவேற்று மரியாதை அளிப்பது,  போன்ற அராஜக செயல்கள் உள்நாட்டுக்குள் ஒரு பிரிவினை உணர்வை மக்கள் மனதில் எழுப்பியிருக்கிறது.  அந்த நிலை தொடரும்பட்சத்தில் இன்னும் விரிசல் அதிகரித்து எதுவும் நடக்கலாம் என்ற நிலை உருவாகலாம்.  அதன் ஆரம்ப நிலையே பெப் 08 நாள் ராஜபக்‌ஷவுக்கு எதிரான நாடு தழுவிய ஈழ ஆதரவாளர்களின் மிகப்பெரிய முற்றுகைப் போராட்டம்.

இந்தியாவின் இந்நிலைக்கு அரசியல் நாகரீக பண்பாட்டு முறைகேடுகள் நிறையவே இருந்தாலும். முக்கிய காரணியாக கீழ்க்காணும் விடயங்களை சுட்டி சொல்லமுடியும்,

1, பிழையான வெளியுறவு கொள்கை அடிப்படையில் இன அழிப்பில் ஶ்ரீலங்காவுடன் இணைந்து பங்காற்றியமை. 2, வழிபாட்டுக்குரிய தலைவர்களை திருப்திப்படுத்தும் வகையிலான வெளியுறவு கொள்கைவகுப்பாளர்களின் தொலைநோக்கற்ற கட்டப்பஞ்சாயத்து முறையிலான கொள்கை வகுப்பு.  3, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி வைத்திருக்கவேண்டும் என்ற நோக்கத்திற்காக முரண்பட்ட கொள்கைகளுடைய பத்து இருபதுக்கு மேற்பட்ட  கட்சிகளின் கூட்டணி.  4, மன்னர் ஆட்சியை ஒத்த குடும்ப அரசியல் பின்னணிகள்.  அதனால் ஏற்படும் அதிகார துஷ்ப்பிரயோகம்,  ஊழல்.  இவைகளை முதன்மையாக கொள்ளமுடியும்.

இந்த கலாச்சாரம் மத்திய, மானில, அரச, அதிகார அனைத்து மட்டங்களிலும் தொற்றுநோய்போல் பாரவியிருக்கிறது.

ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வுத்திட்டத்துக்கு எதிராக ஶ்ரீலங்கா அரசுடன் இணைந்து குழிபறிக்கும் இந்திய அரசின் சதி,  இனப்படுகொலை குற்றவாளியை காப்பாற்ற போடும் இரட்டைவேடம் இவைகளை தமிழக மக்களும் அரசியற்கட்சிகளும் நன்கு புரிந்துகொண்டுவிட்டன,   இனியும் பொறுமை காத்து அரசியல் செய்யுமளவுக்கு தமிழ்நாட்டு களம் இருப்பதாக தெரியவில்லை.  

அந்த நிதர்சனத்தை பெப் 08,  ராஜபக்க்‌ஷவுக்கு எதிரான போராட்டம் இந்திய மட்டத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டிருந்தது.  தமிழகத்தின் ஈழ ஆதரவு காவர்களான   மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.   நெடுமாறன்,  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், மே 17 இயக்கம்,   இடிந்தகரை அணு உலை எதிர்ப்பு போராளிகள்,  இன்ன பிற சிறிய கட்சிகள் அமைப்புக்கள் அனைத்தும் ஒரே உணர்வுடன் ஒன்றிக்கலந்து வெவ்வேறு களங்களில் கைகோர்த்து மலைபோல் நிமிர்ந்து நின்றன.

இது கயமைகளின் கூட்டுச்சதியை உடைத்தெறிய காலம் உருவாக்கியிருக்கும் அணுக்கற்றைகள் ஆகவும் இருக்குமோ என்பதும் மறுப்பதற்கில்லை.

தமிழக கடலில் மீனவர்களின் பாதுகாப்பின்மை,  கூடங்குளம் மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியிருக்கும் அணு உலை, மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு மின்சாரம் பகிரப்படாத பிரிவினை,  தேசிய நதிநீர் முகாமைத்துவத்தில் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் நடத்தும் கள்ள நாடகம்.  சிறு வர்த்தகம்,  உற்பத்திகளை பன்னாட்டுக்கு விற்கும் பொறுப்பற்ற ஊதாரித்தனம்,  வரைமுறைகளற்ற ஊழல்.   அனைத்தும் சேர்ந்து மக்களை வீதிக்கு கொண்டுவந்து போராடுவதற்கு பெரு வழியை இந்திய மத்திய அரசு  திறந்துவிட்டிருக்கிறது.

இந்தப்போராட்டச்சூழல் மத்திய காங்கிரசு அரசுக்கு ஒரு திடுக்கிடத்தக்க பின்னடைவை தோற்றுவித்து சிந்திக்க வைத்திருக்கும் என்பது அடுத்த நகர்வுகளில் நிச்சியம் தெரியவரும்.

வரும்காலங்களில் ஈழ அரசியல் அணுகுமுறையில் இந்தியா சற்று நிதானத்துடன் நடந்துகொள்ளுவதற்கு இன்றைய போராட்டம் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறதென்பதை ஆட்சியாளர்கள் வெளிப்படையாக காட்டிக்கொள்ளாவிட்டாலும் கிளர்ச்சியின் தாக்கம் வரும் காலங்களில் உணரக்கூடியதாக இருக்கும். அந்த "அனுமானம் பொய்க்குமாக"  இருந்தால் நாடு பிரிவினையை நோக்கிச்செல்வதை எந்த சாணக்கியராலும் தடுக்கமுடியாமல் போகலாம்.

இன்றைக்கு தமிழகத்தில் கட்சி அரசியல் போராட்டக்காரர்களாக இருக்கட்டும்,  சாதி கட்சி அரசியற் போராட்டக்காரர்களாக இருக்கட்டும்,  அணு உலை போராளிகளாக இருக்கட்டும். மே 17 அமைப்பு போன்ற சமூக போராளிகளாக இருக்கட்டும்.  சீமான் போன்ற இளைய அரசியற்போராளிகளாக இருக்கட்டும்,  புரட்சிகர ஊடக இணைய போராளிகளாக இருக்கட்டும் அனைத்து தரப்பினரும் மத்திய மானில அரசுகளை எதிர்த்து போராட புறப்படும்போது விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாக ஈழ போராட்ட தீப்பந்தத்தையே முதலாவதாக தெரிவுசெய்து கையில் எடுத்துக்கொள்ளுகின்றனர்.  (இதை அனைவரும் சிந்தித்துப்பார்த்து புரிந்துகொள்ள கடமைப்பட்டவர்களாயுள்ளனர்.)

இங்குதான் சிந்திக்கவேண்டும் காந்தியின் போராட்ட பின்னணி,  நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் போராட்ட பின்னணி,  பகத்சிங்கின் வீரம் செறிந்த பின்னணி,  இன்னும் எத்தனையோ வரலாற்று பின்னணிகள் இந்தியாவில் இருந்தும்,  அனைத்தையும் கடந்து (தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் என்று பிரச்சாரப்படுத்தினாலும்)  விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பின்னணியை மட்டும் ஏன் தமிழக (அரசியற்)போராட்டக்காரர்கள் பின்பற்றுகின்றனர்? 

மத்திய,  மானில அரசுகளிடம் அவர்களுக்கு ஆயிரம் கோபம் இருக்கிறது.  இலட்சம் கோரிக்கைகள் இருக்கின்றன அந்த கோபங்கள் அனைத்தையும் நேரிடையாக ஆட்சியாளர்களின் முன்வைத்து எதிர்கொள்ளுவதற்கு அவர்களுக்கு தார்மீக நியாயம் இருக்கிறது.  அப்படியிருந்தும் ஏன் உள்நாட்டு போராட்ட வரலாற்றுப்பின்னணியை ஏற்றுக்கொள்ள  தயங்குகின்றனர்.  சிந்தித்துப்பார்த்தால்  அரசியல் ரீதியாக,   கட்சிரீதியாக,   அமைப்பு ரீதியாக,   போராடி மன்னர்கள் போல வாழ்ந்து அனைத்து வகையிலும் தொடர்ச்சியாக சுரண்டி ஏமாற்றி வரும் வஞ்சக ஆளும் வர்க்கத்திடம் எதையும் சாதாரணமாக போராடி பெற்றுவிடமுடியாது ஏமாற்றமே மிஞ்சும் என்பது புரியப்பட்டுவிட்டது.

இந்த வஞ்சகர்களை வெல்லவேண்டுமானால்  விடுதலைப்புலிகள் கையில் எடுத்த சுதந்திர தனிநாடு கொள்கையின் உயிர்ப்பான தத்துவம்  இவர்களை தெரிந்தோ தெரியாமலோ உள்ளூர ஈர்த்துவிட்டிருக்கிறது.  தலைவர் பிரபாகரனின் உறுதியும் நேர்மையும் அவர்களை கவர்ந்திருக்கிறது.  என்பதை காலங்கடந்தாவது ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளக்கூடும்.

தமிழகத்தில் மாறி மாறி ஆட்சியாளர்களாக முடிசூட்டிக்கொள்ளுவதற்கு முட்டிக்கொள்ளுவது தவிர  திமுக,  அதிமுக இரண்டு கட்சிகளும் இப்போதைக்கு மட்டுமல்ல எப்போதைக்கும் மத்திய அரசிடமிருந்து தனது மானிலத்துக்கான அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுக்கப்போவதில்லை என்பது ஒவ்வொரு தமிழனுக்கும் மனதில் தீராவடுவாக பதியப்பட்டிருக்கிறது. 

1,மீனவர்களின் படுகொலைகள்.  2,கூடங்குளம் அணு திணிப்பு அடக்குமுறை.  3, நதிநீர் முகாமைத்துவம்.  4,மின்சார ஒடுக்குமுறை,  5,ஈழப்படுகொலைகள். அவற்றின் பகிரங்கமான வெளிப்பாடுதான் ராஜபக்‌ஷவுக்கு எதிர்ப்பான போராட்டம்.

இது ஒரு ஆரம்பமே.

போராட்டங்கள் இன்னும் தொடரும்,  தனித்தமிழீழம் முதலில் பிறக்கிறதோ,   தனித்தமிழ்நாடு முதலில் பிறக்கிறதோ என்பதை இப்போதைக்கு கணிக்கமுடியாது. அப்படியொரு நிலை வராமல் தடுத்து அவற்றை சீராக்கவேண்டிய தலையாய பொறுப்பு இந்திய மத்திய அரசிடமே இப்போதைக்கு உள்ளது.  இந்திய மத்திய அரசின் வெளியுறவுக்கொள்கை சீராகுமிடத்தில் ராஜபக்‌ஷகளுக்கு அதிகம் வேலையிருக்காது.  ஐநா மன்றத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவரவேண்டிய தேவையும் இருக்காது.

நெருப்பு சுவாலையாக மாறாவிட்டாலும் பற்றிக்கொண்டுவிட்டது என்பது வெப்பத்திலிருந்து உணரமுடிகிறது.

ஈழதேசம் செய்திகளுக்காக.

கனகதரன்.

No comments: