Wednesday, February 6, 2013

சுயரூபம்.ஆப்கானின்,
மலைக் குகைகளுக்குள்
சத்தியாக்கிரகம் செய்த
தலிபான் தீவிரவாதிகளின்
சுயரூபத்தை,
ஒஸ்காரை,  மனதில்க்கொண்டு,
கமலஹாசன்
விஸ்வரூபமாக சொன்னார்.

அமெரிக்கா
அக மகிழ்ந்தது.

ஒஸ்கார், கதவு
விரைவில் திறக்குமென
முதுமை காலத்தில்
தாமரை கலைஞன்
அக மகிழ்ந்தபோது,

அல்லாவின் பெயரால்
அடியாட்கள்,
"ஆப்பும்
வல்லீட்டு குத்தியும் தாங்கி"
அம்மாவின்
மனுநீதி மர நிழலில்
விசுவரூபம் எடுத்தனர்,

மனுநீதி சக்கரத்தை 
கையில்  ஏந்தியபடி?,
நீதி
நேர்மைக்கும் மதிப்பளித்த!
தாயின் அரசு
பொறுமையிழந்து
பொங்கியெழுந்தது.

கண்கள் கட்டப்பட்ட
நீதி தேவதையின் தத்துவம்!!
அம்மாவின் முன்னெழுந்தபோது?
தமிழக கதவுகள் அடைக்கப்பட்டு
உள் நோக்கமில்லாமல்?
நீதியின் பெயரால்??
விஸ்வரூபம்
தடை செய்யப்பட்டது?.

அதிர்ச்சியடைந்த
"ஐயா" 
அரசியல் செய்யவிரும்பவில்லை?

கண்ணீர் விட்டு கதறி அழுதார்!.

பழைய வரலாற்றின் பக்கத்திலிருந்த
கறள்'தான் காரணமோ என்று
காண்டம்  வாசித்து
கவலை தெரிவித்தார்!!

தூண்டிவிட
அவர் துளியும் விரும்பவில்லை!!?

நீதிக்காக 
நித்திரை துறந்தார்.

மத்திய சர்க்காருக்கு  முறையிட்டு,
ஐநா'வுக்கு
மகஜர் அனுப்பமுன்
விஸ்வரூப சக்கரம் 
தடம் மாறிய செய்தி வந்தது.

ஒருவேளை
நீதி கிடைக்கவில்லையென்றால்
நிச்சியம் ஒரு பொழுது 
குடும்பத்துடன்
செத்து மடியும்வரை,
கடற்கரையில்
உண்ணா நோன்புக்கு தயாராகியிருப்பார்?!!.

தமிழக தாயின்
சிறு பிள்ளைத்தனமான செயல் என்று
மக்கள் மன்றத்தில்
கருத்து  உருவானது.

அதனால்
நீர்த்துப்போனது நிகழ்வுகள்!

சமூகத்தின் அசைவாக்கம்
தாமரை கலைஞனை
தப்பிக்க வைத்தது.

 அது
நேற்று நடந்த நிகழ்வுகள்.

முந்தநாள் பொழுது.

இன்றைய உலகநாயகர் 
காதல் இளவரசனாக,
புத்துணர்வுடன்
நட்சத்திர பட்டங்கட்டி
வானில் பறந்தவேளை…

காக்கையும், அன்னமும்
கிளியும், புறாக்களும்
விட்டில் பூச்சிகளும்
கூடி சத்தமிட்டு பறந்தன.
அனைத்தும் பேடுகள்.

சமூகம் மட்டும்
தனிமைப்பட்டு,  
தலை குனிந்த நிலையில்
ஒரு புள்ளியாக
கீழ் வானத்து எல்லையில்
முகிலூடே மவுனமாக
மறைந்து போனது.

பேதம் தெரியவில்லை
கோழியும் புறாவும்
கோட்டானும் கிளிகளும்
கூட இருந்து கானம் பாடின,

புதிய ஞானம் பிறந்தது.

ஊணும் உறக்கமும்
விடுப்பெடுத்துக்கொண்டது.
பண்பாடு
இடம்பெயர்ந்து பயணித்த நேரம்.

அது,
 
தாமரை கலைஞனுக்கு
ளமை சிறகுகள்
வான் நோக்கி
சிறகடித்து பறந்த
வசந்த காலம்.

கட்டுப்படுத்தமுடியாத
கண்ணனின் பராயம்.
நெட்டவிழ்த்து
நரம்புகள்  ரீங்காரமிட்டு
"நித்தியகல்யாணி"  ராகம் இசைத்தன.

சிக்கெடுத்து
சீராக்கி
கால்க்கட்டு போட்டனர்
பெற்றோர்.

துணையோடு மனமுருகி 
கலவி கொண்டு
நிறைவடைய
மனக்குரங்கு விடவில்லை.

சன்னதம் கொண்டது
சண்டாள லீலை.
சரித்திரம் படைத்திட துடித்தது
சிருங்கார போதை,

அது மனிதக்காதல் அல்ல!
அதனையும் தாண்டி……..
மந்தார இராகத்தில்
குயில் பாடிப்பறந்தது.

மத சம்பிரதாயப்படி
மந்திரம் முழங்க
பூட்டிய மாங்கல்யம்.
அட்டமத்து சனிகளின்
அகால சேர்க்கையால்
குட்டிச்சுவரானது.

குடும்பம் உடைந்து,
குற்றுயிராக பிரிந்துபோதும்.
 எருமை மாட்டின் மழையென
திரும்பவும்
சேற்றுக்குளத்தில்
இளமை
தெம்பலடித்தது.

தாமரை கலைஞனின்
அசைவுகள் எல்லாம்
காவிய நடையென -தமிழ்
ஏடுகள் கொண்டாடின.

திரும்பொரு
பொங்கிய
சிறந்தொரு பொழுது,

இன்னொரு பறவை
இணைந்திட வந்தது.

குழந்தைகள் பிறந்தும்,
குதர்க்கமாக
சமூக கட்டுப்பாட்டை
வெட்டை வெளியில்
விற்று விட்டாரென்று
மறு தாரம்
தாய் வீடு சென்றது.

நட்சத்திர கலைஞன்
என்பதால்?!
சமூகம்
அதுபற்றி மறுபரிசீலனை செய்ய
தயாராக இல்லை.

நட்சத்திரம் என்றால்
நரகலுக்கும்
நாற்றமெடுக்காது என்றனர்.

தனி மனிதனின்  மலத்தை
கவிதையில் எழுதி
சேறடிப்பதாக
குற்றம் சுமத்தலாம்,

கலைஞன்  என்பவன்
பொதுச்சொத்து,
கசப்பானாவற்றை
குத்திக்காட்டும் கடமை
பாரதி' கண்ணதாசனுக்கு மட்டுமல்ல
ஊர்க்குருவிக்குமுண்டு.

திரை நட்சத்திரங்கள்
வான நட்சத்திரங்களாக....
கடவுளுக்கு நிகராக,
கிரகநிலை மாறியிருக்கிறது.

கந்தசஷ்டி கவசத்துக்கு நிகராக
நட்சத்திர கவசம் இயற்றப்பட்டுவிட்டது.
சிலாகித்து பூங்காவனமாக
பொருள் எழுதவும்
மூத்தவர் தயாராக இருக்கிறார்.

விடிவெள்ளியை நம்பி
பயணம் புறப்பட்டவர்கள்
என் மூததையர்.

திரை
நட்சத்திரங்களை நம்பி
எனது குழந்தை
அடியெடுக்க தயாராகிறது.
  
எதையும்
தடுக்க எவரும் தயாராக இல்லை

குஷ்புவுக்கும்
ஜெயமாலினிக்கும்
ராஜகோபுரம் எழும்பியது
முன்னாள் இளவல்கள்.

பாவனாவுக்கும், தமன்னாவுக்கும்,
நமீதாவுக்கும்
கலைமாமணி பட்டம் கொடுத்தது
மு,தமிழக அரசு.

பெரியாரின் தொண்டனும்
அண்ணாவின் தம்பியும்
தலையை
நிலத்துள் புதைத்துக்கொண்டனர்.

நாடும்,  அரசியலும்
நட்சத்திரங்களிடம்
அடகு வைக்கப்பட்டிருக்கிறது.

நட்சத்திர அந்தஸ்தும்
கட்டிய வேடமும்
மூடு திரையாக முன்னின்று
தமிழகத்தின்
முகவரியாகியது.

திருமண பந்தம்
பத்தாம் பசலித்தனம் என்றார்,
தாமரை கலைஞன்.

எல்லாம் போலி
பொய் என்று நியாயப்படுத்தினார்,
அது 
அவரது கிடக்கை.

கண்ணகி பிறந்த
தமிழ்நாடு
அவரை மட்டுமல்ல 
எவரையும் கழுவில் ஏற்றவில்லை.

ஆடு மாடுகள் மட்டுமல்ல,
மனிதரும்
எவரும் எவரையும்
வைத்துக்கொள்ளலாம் என்றார்.

வாழ்ந்தும் காட்டினார்.

கலைஞானியின்
புதிய தத்துவ சித்தாந்தம் என
ரசிகன் அக மகிழ்ந்தான்,
 தலைவர்கள்
மேடையேற்றி உச்சி முகர்ந்தனர்.

சமூகம்
அவரை தலை முழுகவில்லை.
தமிழ் சமூகம் தலையை
தண்ணீருக்குள் அமிழ்த்திக்கொண்டது.

குற்றமில்லை
எப்படியும் குலவ முடியும் என்றது
இன்னொரு நட்சத்திரம்
குஷ்பு என்ற விடிவெள்ளி.

எவருக்கும் எதுவும் புரியவில்லை.

சமூக கட்டுப்பாடுகளை
காலில் போட்டு மிதித்து,
சமூகத்தில்,
தனிப்பாதை அமைத்து
சுயரூபத்தை காட்டிய
உலக நாயகர்,
விஸ்வரூபம்
தடையென்று வந்தபோது,
சமூகத்தின் காலடியில் விழுந்து
காலையும் மாலையும்
சம்மணமிட்டு
தத்துவம் பேசி
இரங்கி யாசகம் கேட்டு கண்ணீர் விட்டார்.

பலன் கிடைத்ததாக
வெற்றியின் பின்
மனமுருகி நன்றி நவிர்ந்திருந்தார்.

என்ன விந்தை!!
எங்கே போனது புரட்சி
ஏன் கைவிட்டது
நட்சத்திர அந்தஸ்து
எப்போ கண்ணில் பட்டது சமூகம்?.

"தனிமைப்படுத்தப்பட்டுவிட்டேன்" என்றார்.
''ஓட்டாண்டியானேன்'' என்றார்.
''நாடற்ற அகதியானேன்'' என்றார்,

விதையாவேன்,
வித்துடலாவேன், என்று
வேகம் காட்டினார்.

தனக்கு தானே சொன்னாரா?
சமூகத்திடம்
பாவமன்னிப்பு கேட்டு
யாசகம் செய்தாரா?

முன்பு பிறக்காத ஞானம்
இன்று
எங்கிருந்து வந்துதித்தது?

உண்மையின்  தத்துவம்
புரிந்து கொண்டால்
அவருக்கு
கோடி நன்றிகள்!!, கோடான கோடி நன்றிகள்!!!

இப்போ
உலக நாயகரின்,
(விசுவ)  ரூபம் சுருங்கி விட்டிருக்கிறது.
சுயரூபம் மட்டும்
பதைபதைப்புடன்
முதுமையின் அரவணைப்புடன்
வெளியே தெரிகிறது.

வாழ்வு என்றால்
"சமூகம்" உண்டு.
சாவும் உண்டு

நடைமுறையில்
ஒரு தத்துவம் உண்டு.

குடும்பம் என்றால் கோவில் என்று
"வகுத்தல்" ஒன்று
மாயைகளை தாண்டி  
வரையப்பட்டிருக்கிறது.

மனித ஒழுக்கம்
என்று ஒன்றுண்டு,

ஊரோடு ஒத்தோடு என்கிறது
ஒரு பழமொழி.
தனியோடுவதானால்
கேட்டு (விசாரித்து) ஓடு என்கிறது.

அரசியல் அம்மணங்கள்,
நட்சத்திர பறவைகளின் கிரந்தங்கள்,
எத்தனை விடுகதைகள் கூறி
சமூகத்தை வெறுப்பேத்தினாலும்,

செத்தபின் பிணம் என்பர்,
அப்போதுகூட
நான்குபேர்
நிச்சியம் தேவைப்படுகிறது.

கூடங்குளம் பகுதியில்
அணு மின்னிலையத்தை
சூழ்ந்து
மக்கள் நின்றிருந்தனர்.
அவர்களை சமூகம்
ஏற்றுக்கொண்டு பின்னே நின்றது.

விடுதலைப்புலிகள்
தமிழீழத்தில் போராடிக்கொண்டிருந்தனர்.
கடைசிவரை
உலக சமூகம்
அவர்கள் பின்னால் நின்றது.

கூடங்குளத்திலும், ஈழத்திலும்
காடப்பஞ்சாய்த்துக்கு பயந்து
ஒருபோதும்
யாசகம் கேட்கப்படவில்லை,
கோரிக்கைகளே வைக்கப்பட்டன.

-ஊர்க்குருவி-
_________________

No comments: