Sunday, February 24, 2013

பாலச்சந்திரன்.
பன்னிரண்டு வயது குழந்தை
பாலச்சந்திரன்,
ஈழக்குழந்தை என்பதால்
ஏன் எதற்கு கொல்லப்படுகிறேன்
என்று அறியாமல்
"கேட்பதற்கும் ஆளில்லாததால்"
சல்லடையாக்கப்பட்டு
படுகொலை செய்யப்பட்டான்!

செய்தி மட்டும்
ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்க தக்க
அமெரிக்க படத்துக்கிணையாக,
ஆவணப்படமாக
எட்டுத்திக்கும்,
இலவசமாக காட்டப்படுகிறது.

ஆங்காங்கே
அரசியல் இலாபத்திற்கென்றாலும்,
கண்டனங்களும்,  விமர்சனங்களும்
சூடு பறக்க விவாதிக்கப்படுகின்றன.

வில்லனாக,
எட்டுக்கோடி தமிழர்களை
தன்னகத்தே கொண்ட இந்தியா.
சத்தமில்லாமல்
தனது வேலையை செய்கிறது.

"ராஜபக்‌ஷ,
நிச்சியம் தண்டிக்கப்படலாம்",
தமிழர்களுக்கு
இந்தியா
வில்லனாக இல்லாவிட்டால்.

சோனியாவின் ஒற்றனாக
"தமிழகத்தில் எவரும் இல்லையென்றால்",
இந்தியா தமிழர்களின் வில்லனாக
நீண்டகாலம் தொடரமுடியாது.

ராஜபக்‌ஷ தண்டிக்கப்பட்டால்
பூனை வெளியே வந்துவிடும்.

அதனால்
இலங்கை அல்லது,
இந்திய அரசியலில்
படுபட்சி காலம் தவிர்ந்து
ராஜபக்‌ஷவை
சர்வதேசமும் தண்டிக்க முடியாது.

ஆவணப்படத்தின்
அலைவரிசைக்கேற்ப
படுகொலை சூத்திரதாரிகளும்
தந்தரம் புரிந்தவர்களும்
மக்கள் கிளர்ச்சியை மந்தமாக்க
மேடை அமைத்து
தேர்தல் திருவிழாவுக்காக
அப்பாவியாக
வேடங்கட்ட தலைப்பட்டுள்ளனர்.

பாலச்சந்திரனின்
கோரக் கொலைச் செய்தியை,
இன்னொன்று மறைக்கும்வரை
ஒப்புக்கு சப்பாணியாக,
உலகத்தை ஏமாற்ற
அலகு குத்தி
ஆயிரம் மைல்
அங்கப்பிரதிஸ்டை செய்யவும்
தமிழீன தலைவர் தயாராகி விட்டார்.

கருணாநிதி
அன்று மனிதனாக தன்னை
கொஞ்சமாவது நினைத்திருந்தால்,
பாலச்சந்திரன் சல்லடையாகியிருக்க மாட்டான்.
முத்துக்குமாரும் மூட்டிக்கொண்டிருக்கமாட்டான்.

கொலைக்களம் ஒன்று
ஆவணப்படமாக
ஹிட்லரின் ஜெர்மனி படங்களை
விஞ்சுமளவுக்கு வெளிவந்துமிருக்காது.

சனியன் பிடித்து
இந்த அழுக்கு மனிதன் செய்த சதி,
பல இலட்சம்
படுகொலையில் விடிந்திருக்கிறது.
இருந்தும் கிரகநிலை மாறி
சனியன் விடுபட்ட
அறிகுறி தென்படவில்லை.

கண்டம் தாண்டி
இங்கிலாந்தின் சனல் 4
தொலைக்காட்சி
இலங்கைக்கும்,  இந்தியாவுக்கும்
தொல்லைக்காட்சியாகி
கொள்ளி வைத்துவிடுமோ என்று மட்டும்
வஞ்சகர்கள் அஞ்சுகின்றனர்.

பாலச்சந்திரனை படுகொலை செய்தது
இலங்கை இராணுவம்.

கொலைக்களத்தை
வடிவமைத்தது இந்திய அரசு.

சோனியா அரசுக்கு பந்தல் போட்டு
புரியாத கிரந்தத்தில் சுலோகம் சொல்லி
உற்சவம் நடத்தி
திசை திருப்பியது கருணாநிதி.

வேலியே பயிரை மேய்ந்துவிட்டு
விடுப்புக்காட்ட
சாட்சிக்கூண்டில் ஏறி வாகடம் பேசுகிறது.

யார்
யாரை குற்றம் சொல்லுவது,
எவரை தண்டிப்பது?
"கொலைக்களம்"  ஆவணப்படம்
உணர்ச்சியை தூண்டும் ஒன்றாகவே
சிலநாட்கள் ஓடி மறைந்துவிடும்.


ராஜபக்‌ஷ சிங்களவன்.

அறுபது வருடங்களாக
தமிழனை எரிப்பதற்காக சிங்களவன்
தீ மூட்டி திட்டமிட்டு
காத்திருக்கிறான்.

இத்தாலிக்காரி மட்டும்
ராஜபக்‌ஷவுக்கு கம்பளம் விரித்திருக்காவிட்டால்
முள்ளிவாய்க்கால் முட்டுக்குள்
தமிழனை எவராலும் அழித்திருக்க முடியாது.

செல்ல மகளை காப்பதற்காக,
தமிழினத்தின் எழுச்சி அனைத்தையும்
திட்டமிட்டு செத்தவீடாக்கிய
கருங்காலி கருணாநிதி.

"பாலச்சந்திரன்
பிரபாகரனின் மகன் என்பதால்
அது மட்டும்தான்
படுகொலை அல்ல".

ஆவணப்படத்தில் காட்டப்பட்ட
அனைத்தும் நவீன நரபலிகள்.

அரசியல் இயலாமைக்காக
இந்தியா தேர்ந்தெடுத்த பஞ்சதந்திரம்.

வலிமையற்ற இனம் வலிமையுடன்
திரண்டுவிட்டதால்,
காவுகொள்ளப்பட்ட இனப்படுகொலை.
.
காட்டுமிராண்டிகளால் கழுத்தறுக்கப்பட்ட
கூட்டுச்சதி.

காணாமல் போனவர்கள்
இலட்சத்து முப்பத்து ஏழாயிரம்பேர்
அத்தனையும் இறந்த காலங்கள்.

காணாமல் போன ஆண்களின்
தொண்ணூறு ஆயிரம் மனைவிகள்
விதவைகள்.

அங்கு கருணாநிதியைப்போல்
கைம்பெண்களுக்கு வாழ்வு கொடுக்க
ஆண்களில்லை.

பாலச்சந்திரன் மட்டும்
படுகொலை செய்யப்படவில்லை.
ஒரு இனம் திட்டமிடப்பட்டு
கருவறுக்கப்பட்டிருக்கிறது.

இனப்படுகொலையாளி
ராஜபக்‌ஷ மட்டும்தான் என்பதை
மீடியாக்கள் நிறுத்திவிடவேண்டும்.

இந்தியாவும்,  கருணாநிதியும்
இணைந்த
இனப்படுகொலை என்பதை
துணிந்து  நிறுவவேண்டும்.

ஈழத்தமிழர்களை திட்டமிட்டு அழித்தது
இலங்கை,
மற்றும் இந்தியா.

சர்வதேசம் சோரம்போனது.

செய்தவன் ராஜபக்‌ஷ, என்றால்
சித்திர குப்தராக
எழுதுகோல் ஏந்தியவர்கள்
சோனியா, மன்மோஹன்,

எருமை வாகனமாக
அனைத்தையும் சுமந்தது கருணாநிதி.

வழக்கு,
அமெரிக்காவின்
அபிவிருத்திச்சபையாக செயற்படும்
ஐநாமன்ற வாசல்வரை போயிருக்கிறது
இதில்
யார் எவரை தண்டிக்கப்போகிறார்கள்?

ஆவணப்படத்தை பார்த்து
உணர்ச்சி வசப்படுபவர்கள்,
2009ம் ஆண்டு
தமிழகம் கொண்ட எழுச்சியை
திரும்பி பார்க்கவேண்டும்.

படுகொலை நடந்தபோது
தமிழர்களின் அரக்கனாக
சிம்மாசனத்தை வைத்துக்கொண்டு,
சோனியாவின் நிழலுக்குள்
பதுங்கி
நஞ்சு விதைத்த கருணாநிதி,
இன்று மேடையேறி
குரல் மாற்றி ஊளையிம்போது
2009 நிகழ்வுகள் அனைத்தும் மறந்துவிட்டதாகவே
மனம் பதைபதைக்கிறது.

கருணாவுக்கு தந்திரம் தெரிந்ததால்,
ஏமாற்றும் வித்தை புரிந்ததால்,
எல்லோரையும் முந்திக்கொண்டு
இடம் பொருள் ஏவல் அறிந்து
ஐநாவின் பிறவேலிவரை
நோஞ்சான் தளபதியை அனுப்பியிருக்கிறார்.

2009ல் ஈழம் சுடுகாடானபோது
தள்ளுவண்டியில் டில்லி சென்று
அவர் சோனியாவிடம் கோரியது
குடும்ப மந்திரி பதவியும்
செல்வச்செழிப்புக்கு வழிவகையும்

இன்று எதற்காக பறந்தடிக்கிறார்?

நடந்தவற்றை எல்லோரும் மறந்துவிட்டனர்.
எங்கே ஒளிந்தது உண்மை!
யாரிடம் இருக்கிறது மனிதாபிமானம்?
எங்கே இருக்கிறது மனுநீதி?

அனுமதி இல்லாமல்
தெரு நாயை சுட்டுவிட்டால்
தண்டனை.
நடு முற்றத்தில்
நீ வளர்த்த மரத்தை நீ தறித்தால்
அது சட்டவிரோதம்.
பெற்று வளர்த்த பிள்ளையை
தாய் அடித்துவிட்டால்
பெருங் குற்றம்,
பொது இடத்தில் சத்தம்போட்டு பேசினால்
விதிமீறல்,

இது
சர்வதேசத்தின் மனிதாபிமான
கட்டளைச் சட்டம்.

எறும்புக்கு ஆயுள் எவ்வளவு.
நரிக்கு எத்தனை பல்லு.
நத்தை
மணிக்கு எவ்வளவு தூரம் நகரும்,
நடுக்காட்டில் "துணைவி இல்லாமல்
பச்சோந்தி தனியாக வாழுகிறதா,
பன்றி புணர்ச்சி செய்யும்போது
பட்டாசு வெடிக்கக்கூடாது.

அது
அறிவியல் +  மனிதாபிமானம்??

அவைகளை கண்காணிக்க,
வரையறை செய்ய
ஐநா சபையில்
தனிப்பிரிவு செயற்படுகிறது.

உலகம் முழுவதும்
அமைப்புக்கள் அதற்காக
விழி மூடாமல் சுழியோடுகின்றன.

உன்னை வழிநடத்த உலகத்தில்
ஏதாவது சட்டம் உண்டா?
இருந்தாலும்,
அதை அண்மிக்க
எவராவது விட்டு விடுவார்களா?

மிஞ்சிப்போனால்
கருணா, ஜெயலலிதா விஜயகாந்து, திருமா. சம்பந்தன்
அவர்கள் உயிரோடு இருந்திருந்தால்
முள்ளிவாய்க்காலில்
தொடர்ச்சியாக மூன்று மாதம்
திறந்த வெளியில் கருமாதி நடந்திருக்குமா?

அன்று
கொள்ளைக்கார மகளுக்காக
டில்லியில்
கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு
சோனியாவின் காலடியில் மண்டியிட்டு
கண்ணீர் விட்டு
கருணா
மகளை மீட்டு வரவில்லையா?

ஏன் ஈழத்தில் ஒரு குழந்தையை
கருணாவால் காப்பாற்ற முடியவில்லை?

அன்று அகதிகளுக்கு
நெடுமாறன் கப்பலில் மருந்து உணவு அனுப்ப
குறுக்கே நின்ற கோடரிக்காம்பு
கருணா.
இப்போ மட்டும்
ஐநாவில் அனுமதி வாங்கி
கப்பல் கொண்டுபோய்
தமிழர்களை காப்பாற்றி விடுவாரா.

மோட்டு தமிழா
ஈனத் தலைவரின்
பம்மாத்தை இன்னுமா நம்புகிறாய்!

பாலச்சந்திரன்
தமிழ்க் குழந்தை
சாகப்பிறந்தவன் என்று
விதிக்கப்பட்டிருக்கிறது.
செத்து தொலையட்டும்.
சாவுக்கான சாத்தான் யார் என தேடி
கழுவிலேற்றப்பார்.

உணர்ச்சிவசப்படாதே.
முன்னால் கிடக்கும்
இரத்தம் தோய்ந்த கடப்பாரையையும்
கண்ட கோடரியை
கண்திறந்து பார்.
துல்லியமாக
கொலைகாரனின் கை அடையாளம் தெரிகிறது.

பாலச்சந்திரனை,
சல்லடையாக்கி தூக்கிப்போட்டதை
கண்டங்கடந்து
இங்கிலாந்துக்காரன் பகிரங்கப்படுத்துகிறான்.

ஏழு கோடி தமிழர்கள் வாழும்
தலைப்பாகை கட்டிய
இந்தியா
இழுத்து மூடிக்கொண்டு படுத்திருக்கிறது.

ஏன் என்று சிந்தித்தாயா?

பாலச்சந்திரன் படுகொலை
சுரங்குறைந்து
திண்ணை பேச்சாகி
மண்ணோடு மண்ணாகிவிட வேண்டடும்.
அதுவரை போலி கண்டனங்களும்
காது குத்துக்களும் தொடரும்.

பல
பத்தாயிரம் ஈழ குழந்தைகளில்
பாலச்சந்திரனும் ஒன்று.

அதுதான் நிதர்சனம்.

நீ தமிழனென்றால்!
அதுவும்
ஈழத்தமிழனென்றால்!
உன்னை
சுட்டு படுகொலை செய்யாமல் விட்டால்
பெருங்குற்றம்.

பிஞ்சு குழந்தைகளையும்,
பேறுகால தாய் இனத்தையும்,
வஞ்சகமாக கொல்லாமல் விட்டால்
அது குற்றம்.

ஈழத்து பெண்களை கற்பழிக்காமல் விட்டால்
சோனியாவும் தாத்தாவும்
கோபித்துக்கொள்ளுவார்கள்.

அவர்களை துன்புறுத்தாமல் விட்டால்
தேசத்துரோகம்
தமிழகத்தில்
அரசியல் செய்ய ஆதாரமில்லை.

ஓட்டாண்டியாக்கி
ஓட ஓட விரட்டாமல் விட்டால்.
அது
எழுதப்படாத சர்வதேச அவமதிப்பு,

இப்படித்தானே புரியப்பட்டிருக்கிறது
ஈழத்தமிழினத்துக்கு.

உரிமைக்காக போராட தமிழனுக்கு
உரிமையில்லை.

கடலில் நீ கட்டுமரம் கட்டி
மீன் பிடிக்கக்கூடாது.

அணுவை பரிசோதிக்க
உன்னை பயன்படுத்தினால்
உன் சந்ததியை அழித்தாலும்
நீ வாய் திறக்கக்கூடாது.
நீ குப்புற குறுகி
படுத்து கிடக்கவேண்டும்.

கோபப்பட்டால்.
ஈழத்தின் கதி
உனக்கும் நடக்கலாம்  .

உனக்கென்று
ஆயிரம் அரசியல் வியாதிகள்
அதிகாரத்துடன் இருந்தாலும்
அவர்கள்  ஒருபோதும்
உண்மையாக
உனக்காக குரல் கொடுக்கப்போவதில்லை.
அவர்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் உண்டு.

நீ தமிழன்
உன்னை காப்பாற்றுவதால்
அவர்களுக்கு என்ன இலாபம்?

மஹிந்த ராஜபக்‌ஷ அரசன்.
அவன் கொலை செய்தால்
அது கலாச்சார புரட்சி.

அவனை காப்பாற்ற
இந்தியா இருக்கிறது
தமிழ்நாடு சார்பாக
கருணாநிதி இருக்கிறார்.
பகை நாடுகளாக இருந்தாலும்
பாக்கிஸ்தான் சீனாவுடன்
ஒன்றிக்கலந்து சோனியா அரசு
தமிழனுக்கு மங்களம் பாடியிருக்கிறது.

உனக்கு நீ மட்டும்தான்.
மிஞ்சிப்போனால்
சீமான், வைகோ
அவர்களும் அத்துமீறினால்
சட்டம் தன் கடமையை செய்யும்.

தாத்தா அடிக்கடி சொல்லிய வார்த்தை.

செத்துப்போனால்
சில நாட்கள் சத்தம்போட
நாலுபேர் வரலாம்
தீக்குளித்து எதிர்த்தாலும்
மாற்றி எழுதும் வல்லமை தமிழனுக்கில்லை.

இரும்பு நெஞ்சுகள் ஒன்று சேர்ந்து
தடையத்தை மாற்றிவிட
நீலிக்கண்ணீர் வடித்து
பிரமாண்ட பாலம் கட்டுகின்றன.
காலமாற்றம் ஒன்று தவிர
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
எதுவும் தெரியவில்லை.

இளங்குருத்து
பாலச்சந்திரன்
அவனது பிஞ்சு நெஞ்சில்
ஆணியடித்ததுபோன்ற
ஐந்து குண்டுத் துளைகள்.
ஈட்டியாக நெஞ்சை துளைக்கின்றன.

அவனது கடைசி நேரம்
எப்படி காய்ந்திருக்கும்.

மிரட்டுவதற்கு
துப்பாக்கி
தூக்குகிறார்கள் என்று நினைத்திருப்பானோ?
முலை கொடுத்த தாயின்
அரவணைப்புக்காக ஏங்கியிருப்பானோ?
பக்கத்து நாடு
நிச்சியம் உதவும் என்ற வதந்தியை
நம்பியிருப்பானோ?

அனைத்தும் பூய்ச்சியமாகிவிட்டது.

அவன்
ஓடும்போது சுடப்பட்டிருந்தால்,
ஒளிவிடத்திலிருந்து கொல்லப்பட்டிருந்தால்,
ஆயுதத்துடன் பிடிபட்டிருந்தால்,
அது நியாயம்.

அல்லது
ராஜீவ் காந்தியைப்போல
குண்டு வெடிப்பில் செத்திருந்தால்
விசாரித்து விடையறிய நாளெடுக்கும்.

அவன் ஓடவில்லை ஒளியவில்லை.

"இன்னும் விளையாட வேண்டும் என்பதற்காக
சரணடைந்திருக்கிறான்".

பலி ஆட்டுக்கு
மஞ்சள் நீராட்டி
பழம் கொடுத்து கழுத்தறுத்ததபோல,
மிக சாதாரணமாக
பாலச்சந்திரனுக்கு
பிஸ்கற் கொடுத்து
சுட்டு கொன்று படம்பிடித்து போட்டிருக்கிறது
ஒரு அரக்கனின் அரசு.

ஈழத்தில் பிறந்தது
அந்த குழந்தையின் குற்றமென்பதா?
தமிழனாக பிறந்ததின் தண்டனையா?
பிரபாகரனுக்கு பிள்ளையாக பிறந்தது
அவனது குற்றமா?

கனிமொழியின் குழந்தை
ஆதித்யாவை
ராஜபக்‌ஷவின் படைகள் கொன்றிருந்தால்,
கருணாநிதி மத்திய அரசுக்கு
முண்டு கொடுத்துக்கொண்டு
தேனீர் ஆற்றிக்கொண்டிருப்பாரா?

இப்படித்தான் ஆவணப்படத்தை பார்த்து
பட்டிமன்றம் நடந்திருக்குமா?

எங்கே இருக்கிறது நீதி!

அவர்கள் ஆளப்பிறந்தவர்கள்
வானத்திலிருந்து
வந்ததற்கு சமமானவர்கள்.

பன்னிரண்டு வயது
பாலச்சந்திரன் என்ன
அரசியல்வாதியின் மகனா?
கூட்டணி தர்மம் காக்கும் குலக்கொழுந்தின்
வாரிசா?
அவனை யார் தமிழனாக பிறக்கச்சொன்னது?
அவனது தந்தை பிரபாகரனை
யார்
தமிழனுக்காக போராடச்சொன்னது?

ஆனாலும்.

காலமாற்றம் ஒன்றின்
சக்கரத்தடத்தில்
அராஜகம் மேலெழுந்து சதிராடுகிறது.
சக்கரம் இன்னும் சுழலும்
அது நியதி.

-ஊர்க்குருவி-
 நன்றி சவுக்கு.
No comments: