ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக "என்ற
கருத்துப்பட" அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு
உள்ளது.
தீர்மானத்துக்கு ஆதரவாக 25 நாடுகளும் எதிராக 13 நாடுகளும் வாக்களித்துள்ளன. 8 நாடுகள் நடுநிலை வகித்துள்ளன.
சர்வதேச
மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றுக்கு
எதிரானவை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அத்துமீறல்கள் குறித்து சுதந்திரமான
நம்பகமான சர்வதேச விசாரணை வேண்டுமென்ற மனித உரிமைகள் ஆணையாளர்
நவநீதம்பிள்ளை அவர்களின் கோரிக்கையை இலங்கை மீதான தீர்மானம் கவனத்தில்
கொண்டுள்ளதாக மட்டும் அமெரிக்கத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர
சென்ற 2012 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மனத்தை கவனத்தில்
எடுத்துக்கொள்ளாமல் ஶ்ரீலங்கா ஆட்சியாளர்கள் ஐநா மன்றத்தை
உதாசீனப்படுத்தியதற்காக இலங்கையை கண்டிக்கும் வகையில் அல்லது தண்டனை
கொடுக்கும் வகையில் இம்முறை அமெரிக்க பிரேரணையில் கண்டனம் அல்லது
இறுக்கமான சொற்பதங்கள் கூட அடக்கப்படவில்லை.
சிலகாலங்களுக்கு முன்
அடுத்தடுத்து உலகத்தால் மிக அதிற்சியுடன் கவனிக்கப்பட்ட சனல் 4
தொலைக்காட்சியில் காட்டப்பட்ட இனப்படுகொலை காட்சிகள் பற்றி ஐநா மன்றத்தில்
அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தில் கவனமெடுக்கப்படும் என்று சர்வதேச
மட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சனல் 4 தொலைக்காட்சியில்
காண்பிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கான சாட்சியங்களில் ஒரு
துளிகூட தீர்மானத்தில் கவனத்தில் எடுக்காமல் புறந்தள்ளப்பட்டிருக்கின்றன.
2012,
ம் ஆண்டு அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு, 2013, ம் ஆண்டுக்குள்
நிறைவேற்றப்படவேண்டும் என முன்மொழியப்பட்ட சரத்துக்கள் எதையும் இலங்கை
அரசாங்கம் நிறைவேற்றியிருக்கவில்லை என்ற அன்பான வருடலுடன் அதே
தீர்மானத்தில் அடக்கப்பட்ட கட்டளைகளில் பல சரத்துக்கள் மீளப்பெறப்பட்டு
2013, மார்ச் 22, அன்று ஶ்ரீலங்கா ஆட்சியாளர்களை நோக்கிய தயவான
கோரிக்கைகளாக அமெரிக்க தீர்மானத்தின் பரிந்துரைகள் மாற்றமடைந்திருக்கின்றன.
இலங்கை
அரசு தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்டு தொடர்ச்சியாக நடத்திவரும்
தமிழர்விரோத நடவடிக்கைகள் அனைத்தையும் அவர்களின் விருப்பத்தின் பேரில்
அவர்கள் மாற்றியமைப்பார்கள் என்று அமெரிக்க தீர்மானம் நம்புவதாக
குறிப்பிட்டிருக்கிறது.
முன்னைய தீர்மானத்தில் இருந்த சொற்பதங்கள்
முற்று முழுதாக இலங்கை அரசுக்கு சாதகமாக திருத்தப்பட்டிருக்கின்றன, அந்த
திருத்தங்கள் ஒரேதரத்தில் அல்லாமல் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின்
வெளியுறவு அரசியல் நகர்வுகளுக்கேற்ப நான்குமுறை அழித்தழித்து
திருத்தியமைக்கப்பட்டிருக்கின்றன, எந்த ஒரு திருத்தத்தின்போதும் குறிப்பாக
இந்தியா எந்த எதிர்விளைவையும் காட்டிக்கொள்ளாமல் மிக மவுனமாக இருந்து
காலம் கடத்தி கடைசி நேரத்தில் தம்மால் முன்வைக்கப்படும் ஏழு கோரிக்கைகள்
இணைக்கப்படவேண்டுமென்று நாடகமாடி தமது கோரிக்கைகள் இணைக்கமுடியாமல்
போய்விட்டதாக தமக்கே உரிய அரசியல் நாடகத்தை ஒப்பேற்றி முடித்திருக்கிறது.
நேரிடையாக
பாதிக்கப்பட்ட தனித்தனி தமிழ்க்குடிமக்கள், தமிழ் அரசியற்கட்சிகள்,
புலம்பெயர் அமைப்புக்கள், தமிழ்நாட்டு அரசியற்கட்சிகள், ஆதரவு
அமைப்புக்கள், தமிழக கல்லூரி மாணவ அமைப்புக்கள். மற்றும் சர்வதேச
தொண்டரமைப்புக்கள், இன்னபிற வெளிநாட்டு அரசுகள், எதிர்க்கட்சிகள் என்று
பெருவாரியாக ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைகளை கண்டித்து போரின்போது
இழைக்கப்பட்ட தமிழ் இனத்துக்கு எதிராக நடத்தப்பட்ட மிருகத்தனமான
சித்திரவதைகள், வன்முறையான கற்பழிப்புக்கள் மனித உரிமை மீறல்கள்,
திட்டமிட்ட ஆட்கடத்தல்கள், ஆகியவைகளை கண்டித்து எவரும் மறக்காவண்ணம்
தொடர்ந்து போராடிவருகின்றன,
அந்தக்குற்றங்களுக்கான தண்டனையை
குற்றவாளிகளுக்கு சட்டப்படி வழங்கவேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து
வருகின்றன, கோரிக்கையாளர்கள் ஐநா மன்றத்தையே மலையென நம்பி
குரல்கொடுத்தும் வருகின்றனர், ஆனால் அவை சம்பந்தமாக ஐநா மன்றத்தில்
நிறைவேறியிருக்கும் அமெரிக்க தீர்மானத்தில் எந்த இடத்திலும் தொட்டும்
பார்க்கப்படவில்லை பொதுவாக மனித உரிமை மீறல் என்று சாந்தமாக
வரையறுக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க தீர்மானம் என்ன சொல்லியிருக்கின்றதென்பதை கவனித்தால்.
போருக்குப்பின்னான
ராஜபக்ஷ அரசை காட்டிக்கொடுக்காமல் திருத்திவிட்டதுபோல காட்டி சர்வதேச
வழிநடத்தலுடன் சில ஆலோசனை வழிமுறைகளை ராஜபக்ஷவின் முன் வைப்பதாக அமெரிக்க
தீர்மானம் மூலமாக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
உலகம்
எதிர்பார்த்ததுபோல் தமிழர்களின் துயரத்துக்கான வடிகாலோ பிராயச்சித்தமோ
அமெரிக்க தீர்மானத்தினால் தொட்டும் பார்க்கப்பட்டிருக்கப்படவில்லை.
பெருத்த ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
இப்போது முன்வைக்கப்படும்
இந்தத் தீர்மானத்தின் செயற்படுத்தல் குறித்து தொடர்புடைய சிறப்பு
நடைமுறைகளுக்கான உரிமையாணை பெற்றவர்களிடமிருந்து உள்ளீட்டைப் பெற்று,
பொருத்தமான வகையில் நிகழ்நிலை குறித்த வாய்மொழி அறிக்கையை மனித உரிமைகள்
குழுவுக்கு அதன் இருபத்து நான்காவது அமர்வில் வழங்கும்படியும், இருபத்து
ஐந்தாவது அமர்வில் விவாதத்தைத் தொடர்ந்து ஒரு முழுமையான அறிக்கையை
வழங்கும்படியும் உயர் ஆணையர் அலுவலகத்தைக் அமெரிக்க தீர்மானம் கேட்டுக்
கொள்கிறது.
அமெரிக்கா முதலில் கொண்டுவந்த வரைபு பிரேரணையில் இருந்து பல வசனங்கள் நீக்கப்படிருக்கின்றன.
வெளியிலிருந்து
வரும் கண்காணிப்பாளர்கள் மற்றும் வல்லுனர்களுக்கு எந்தவகையான தங்கு
தடைகளும் அற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும். எனும் வாக்கிய அமைப்பு
முற்றிலும் நீக்கப்பட்டிருக்கிறது.
வெளியக விசாரணை என்பது உள்ளக விசாரணை என மாற்றப்பட்டிருக்கிறது.
பொருத்தமான சர்வதேச விசாரணை எனும் வாக்கியம் முழுமையாக நீக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை அரசை வலியுறுத்துகிறோம் எனும் சொல் ஊக்கப்படுத்துகிறோம் என மாற்றப்பட்டிருக்கிறது.
மாறாக
2008/ 2009 களில் நடைபெற்ற போரில் ஏதும் அறியாமல் கொல்லப்பட்டவர்களுக்கு
நீதியை பெற்றுத்தரும்வகையில் எந்தவிதமான அறுதியிட்ட தீர்மானம் எதையும்
முன்வைக்கப்படவில்லை.
நடந்தவைகள் நடந்தவைகளாகவே போகட்டும் அவைகள் மறக்கப்படவேண்டும் என்பதாகவே அமெரிக்காவின் தீர்மானத்தின் போக்கு காணப்படுகிறது.
செந்தமிழன்
சீமான் கூறியதுபோல தமிழர்கள் பட்ட துன்ப துயரங்கள் துடிக்க துடிக்க
நடத்தப்பட்ட படுகொலைகள் சர்வதேசத்தால் உணரப்படவில்லையோ அன்றி குறிப்பிட்ட
நாடுகளுக்கு ஈழ இனப்படுகொலை சித்திரவதைகள், தமிழர் வாழ்க்கையில் சிங்கள
ஆட்சியாளர்கள் உருவில் குறுக்கிடும் வக்கிரங்கள் பற்றிய செய்திகள்
எடுத்துச்செல்லப்படவில்லையோ என்ற சந்தேகம் தமிழர் இனத்தால் மறுபரிசீலனை
செய்யப்படவேண்டும். தொடர் போராட்டங்களும் சர்வதேசத்தை நோக்கிய அழுத்தங்கள்
மட்டுமே நீதியை பெற்றுக்கொள்ளுவதற்கு உதவிபுரியும்.
அமெரிக்கா தனது
கூட்டாளி இந்தியாவுடன் சேர்ந்து தமது அரசியல் நகர்வுக்காக வரையப்பட்ட
தீர்மானத்தை ஒட்டு மொத்தமான தமிழர்கள் நிராகரிப்பதை தவிர வேறு வழியில்லை.
ஈழதேசம் செய்திகளுக்காக.
கனகதரன்.
No comments:
Post a Comment