Thursday, August 22, 2013

இந்திய- ஶ்ரீலங்காவின் கூட்டுச்சதிக்குள் நின்று கொண்டு திரும்பவும் மக்களை கொலைக்களத்துள் தள்ளும் சதியே மாகாணசபை தேர்தல்.‏


இந்தியாவின்,  பிராந்திய மேலாதிக்க கொள்கை,   மற்றும் நடுநிலையான தொலைநோக்கு தன்மையற்ற தன் நலன்சார்ந்த அரசியல் தலையீடு,  இலங்கைக்குள் இருக்கும்வரை இலங்கையில் இருந்துவரும் தமிழர்களுக்கான இனப்பிரச்சினை ஒருபோதும் முடிவுக்கு வரப்போவதில்லை.

இந்த விடயம் இலங்கையின் அரசியல் வறலாற்றை உற்று உணர்ந்து அறிந்துகொண்ட எவருக்கும் புதினமுமல்ல,  புரியாததுமல்ல.

அந்த உண்மையை 1987 ஜூலை,  இலங்கையின் தேசிய இனமான தமிழர் தரப்பை மதிக்காது மேலாதிக்க மனோபாவத்துடன் இந்தியாவால் எழுதப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம்,  அடுத்து அமைதிப்படை என்ற பெயரில் தமிழர் பகுதிகளில் தரையிறக்கப்பட்ட தடையற்ற இந்திய இராணுவ பிரசன்மம்,  அமைதிப்படையென்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட அத்துமீறிய படுகொலைகள் கற்பழிப்பு,  தியாகி திலீபனின் உண்ணவிரத போராட்டத்தின்போது இந்திய தூதுவர் டி என் டிக்சித்,  நடந்துகொண்ட நாகரீகமில்லாத முறை,  அதனால் தொடர்ந்த கசப்புணர்வுகளை தவிர்க்கும் நோக்குடன் பட்டறிந்த அனுமானத்தில் விடுதலைப்புலிகளின் தலைமை இந்தியாவின் சிக்கல் நிறைந்த அரசியல் கொள்கை பற்றி நன்கே புரிந்து இருந்தது.  அதனால் சுயமாக தமது சூழலுக்கேற்ப அரசியல் நிர்ணயத்தை தாமே வகுத்து கொள்ளும் மனோநிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. இதனால் இந்திய மேலாதிக்க தலையீட்டிலிருந்து  பட்டும் படாமலும் முரண்பாடற்ற விதத்தில் விலகிச்செல்லும் இராசதந்தரத்தை விடுதலைப்புலிகள் கடைசிவரை கடைப்பிடித்து வந்தனர்.

அந்த விபரங்களை அரசியல் நாகரீகம் கருதி வெளிப்படையாக விடுதலைப்புலிகள் மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தாவிட்டாலும்,  நடைமுறை நிகழ்வுகள் மூலம் மக்கள் முன் வெளிப்படுத்தியிருந்தனர், அடுத்து வந்த மேற்குலகின் நாகரீகமான அணுகுமுறை,  சிக்கல் பிடுங்கலற்ற நேர்த்தியான பேச்சுவார்த்தை அமர்வுகள்,  சர்வதேசத்தின் குவிந்த பார்வை,  படிப்படியாக தொடர்ந்த முன்னேற்றகரமான  நடைமுறைச் சம்பவங்களும் இந்திய தலையீடற்ற ஈழ அரசியல் முன்னேற்றத்தை நோக்கி நகர முற்படும் யதார்த்தத்தையும் சாதக பாதகங்களையும் மக்கள் நன்கு உணர்ந்து கொண்டிருந்தனர்.  அதனால் இந்தியத்தலையீடு என்பது தேவையற்ற ஒன்று என்ற யதார்த்த உண்மைநிலை ஈழ மக்களுக்கு புரியத்தொடங்கியிருந்தது.

விடுதலைப்புலிகளின் தலைமையின் உறுதியான விட்டுக்கொடுப்பற்ற தமிழர் தாயகத்துக்கான உறுதியான விடுதலைக் கொள்கைவகுப்பின் வெளிப்படையான  நியாயப்படுத்தலும்,  தொலைநோக்கு பார்வையுடன் கூடிய மதிநுட்பமும்,  ஆயுத பலமும்,   இந்திய தலையீட்டிலிருந்து தேசியத் தலைமை வெளியேறி ஈழ மக்களின் வாழ்வு சார்ந்து முடிவெடுக்க இடங்கொடுத்து வழிகோலியது.  விடுதலைப்புலிகள் வகுத்துக்கொண்ட கொள்கை காரணமாக இந்தியா தவிர்ந்த ஏனைய மேற்கு நாடுகளின் மத்தியஸ்த தலையீடு இலங்கைக்குள் வருவதற்கு விடுதலைப்புலிகளின் கொள்கை வகுப்பு காரணமாக அமைந்திருந்தது.  2002 போர் நிறுத்த ஒப்பந்தம், அதன்பின் நடந்த இணைத்தலைமை நாடுகளின் பேச்சுவார்த்தைகள் அனைத்திலும் இந்தியா நேரடியாக பங்குபற்றவில்லை.

இந்தியா விடுதலைப்புலிகளை பயங்கரவாத இயக்கம் என்று பகிரங்கப்படுத்தி இயக்கத்தை தடை செய்திருந்ததும்,  பேச்சுவார்த்தைகளில் இந்தியா பங்கெடுப்பதற்கு  கொள்கை ரீதியான முட்டுக்கட்டையாக  அமைந்திருந்தது,  இந்திய மத்தியஸ்தத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோது இந்தியா தனது நலன் சார்ந்து ஏற்கெனவே வரைந்து வைத்திருந்த பாவிக்க முடியாத பொறிமுறையை நோக்கி ஈழ அரசியலை நகர்த்தி இழுப்பதற்கே இந்திய கொள்கைவகுப்பாளர்கள்  தொடர்ந்து முயற்சித்து வந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  இருந்தாலும் இந்தியாவை நாங்கள் மதித்து முரண்பாடற்ற விதத்தில் மரியாதையுடன் நடந்து கொள்வோம் என்று விடுதலைப்புலிகள் ஒவ்வொரு மாவீரர் தின உரையிலும் சொல்லி வந்திருந்தனர்.  (விடுதலைப்புலிகள் இயக்கம் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்கு கொள்கைரீதியாக என்றைக்கும் மாறுபட்டு நடக்கமாட்டார்கள் என்று சர்வதேச மட்டத்தில் நம்பப்படுகிறது.)

அதே நேரத்தில் இந்தியா விடுதலைப்புலிகளின் அரசியல் நகர்வுகளை உற்றுக்கவனித்துக் கொண்டிருந்த போதும்,  கடந்த காலங்களில்  அமைதிப்படை இராணுவத்தால்  ஈழ மக்களிடையே உண்டான கசப்பான அரசியல் அனுபவங்களை மனதில்க்கொண்டு நேரடியாக உடைத்து உள் நுழைந்து தமிழர்களின் தரப்பில் தலையிடுவதிலிருந்து தவிர்த்தது,  அதற்கான காரணங்களும் நிறைய இருந்தன.  மறுபுறத்தே மறைமுகமாக விடுதலைப்புலிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி இயக்கத்தை தடை செய்யும்  பிரச்சாரங்களை ஶ்ரீலங்கா அரசுடன் இணைந்து உலக அரங்கில் மிக வேகமாக இந்தியா முடுக்கி விட்டிருந்தது.  அதே நேரம் இணைத்தலைமை நாடுகளின் மத்தியஸ்தத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின்போது சிங்கள ஏகாதிபத்யவாதிகளின் எண்ணத்தின் முன்னெடுப்புக்களையும் புலிகளின் தலைமையில் தமிழர் தரப்பின் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளின்  அனைத்து அசைவுகளையும்  தமது மேலாதிக்க மனோபாவத்தை மனதில்க்கொண்டு தமக்கூடாக சென்று சேரவேண்டும் என்ற கொள்கையை நோர்வே உட்பட அனைத்து தரப்பிடமும்  இந்தியா அழுத்தம் கொடுத்து நிழல் ஆதிக்கம் செலுத்தி வந்தது.  இந்தியாவின் இந்த தந்திரத்தை ஐநா உட்பட மேற்கு நாடுகளும் ஆசியாவின் பிராந்திய பாதுகாப்பு நலன்சார்ந்த  ஈகோ வை மனதில்க்கொண்டு அங்கீகரித்து செயற்பட்டே வந்தன.

இங்கு ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும் ஏற்கெனவே ஈழத்தில் யூலை 1987 – மார்ச் 1990 வரை நடந்து முடிந்த கசப்பான அத்தியாயத்தின் காரணமாக (இந்திய இராணுவ பிரசன்மம் அதனால் உண்டான தமிழர்களின் வாழ்வியல் இழப்புக்கள்)  தமிழர்தரப்பு இந்தியாவின் நேரடியான தலையீட்டை அதிகளவு விரும்பாதபோதும்,  தவிர்க்க முடியாமல் இந்திய தலையீடு ஏதாவது ஒரு வழியில் ஈழ அரசியலில் அங்கம் வகித்தே வந்திருக்கிறது.  சிங்கள தரப்பும் இந்தியாவின் தலையீட்டை அதிகளவு விரும்பாமல் சீனாவின்பால் சரிந்து நின்றபோதும்,  இலங்கையின் உள் நாட்டு அரசியலில் இந்தியா தலையிடும் உரிமையை தமிழ்நாடும்,  தமிழ் நாட்டு மக்களும்,  தமிழ் நாட்டு அரசியற் கட்சிகளும்  இந்தியாவுக்குரியதாகவே நிர்ணயம் செய்தது.

தமிழ்நாட்டின் அரசியற் கட்சிகள் நடத்தும் ஈழத்தமிழர்களுக்காக உணர்வு ரீதியாக உண்மைத் தன்மை கொண்ட போராட்டங்கள்,  மற்றும் பதவியை கைப்பற்றும் வாக்கு வேட்டைக்கான அரசியற் கட்சிகளின் போலி போராட்டங்களும் அழுத்தங்களும்,  பிற பொது அமைப்புக்களின் கிளர்ச்சிகளும்,  ஈற்றில் முறைப்படுத்தி  இறுதி செய்யப்படும் இடமாக இந்திய மத்திய அரசாங்கம் இருந்ததனால் இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் ஈழத்து இனப்பிரச்சினை தீர்வுக்கு வரமுடியாது என்ற எண்ணம் இந்தியாவிடம் ஒரு தலைக்கனத்துடன் மூத்தண்ணன் என்ற நிலையை தோற்றுவித்து கிட்டத்தட்ட தமிழர் தலைமை மீது ஒரு பங்காளிகளின் பகைமை நிலைக்கு இந்தியா மாறியிருந்தது.

இதனால் இணைத்தலமை நாடுகள் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது,   பொறுமையிழந்த இந்தியா களநிலையை திசை திருப்பும் உத்தியாக சிங்கள தரப்புடன் இரகசிய ஆலோசனைகளை தொடர்ந்து பேணிவந்ததுடன்,  போரை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை ஶ்ரீலங்கா தரப்புக்கு வழங்கியது.  விடுதலைப்புலிகளுடனான போரின் மூர்க்கத்தை அதிகரிக்கும் உத்தியை இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து வழங்கியதுடன்.  வெளிப்படையாக  இலங்கை இராணுவத்திற்கு இராணுவப்பயிற்சியையும்,  ராடர்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் போன்றவைகளை கொடுத்து.   மறைமுகமாக உலகத்தால் தடை செய்யப்பட்ட பெருந்தொகையான ஆயுதங்களையும் அவற்றை இயக்கும் வல்லமை கொண்ட இராணுவ அதிகாரிகளையும் இலங்கைக்கு வழங்கியது.

போரில் விடுதலைப்புலிகள் பின்னடைவை சந்திக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு  கிடைக்கும் ஆயுத வினியோகத்துக்கு  முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்றும் புலிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைத்துவரும் ஆயுதக்கப்பல்கள் அனைத்தையும் கண்காணிக்கும் பொறுப்பையும் கடைசி மூன்று நான்கு வருடங்களாக இந்தியாவே செய்தும் வந்தது.  இந்தியாவின் இந்த திட்டமிட்ட சதியினால் புலிகளின் பத்துக்கு மேற்பட்ட ஆயுதக்கப்பல்கள் கடலில் இந்தியாவால் மூழ்கடிக்கப்பட்டது.

2008 - 2009 களில் தடைசெய்யப்பட்ட ஆயுதப்பிரயோகத்தாலும் நச்சு ஆயுதங்களினாலும் தொடரப்பட்ட யுத்தத்தை சமன்செய்ய விடுதலைப்புலிகளிடம் ஆயுத தட்டுப்பாடு நிலவியது,  விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பல்கள் கடலில் மூழ்கடிக்கப்படாமல் இருந்திருந்தால் நிலமை வேறு விதமாக அமைந்திருக்கும். இந்த நிலையில் மக்களை பலியிட விரும்பாத புலிகள் பின்னடைவுகளை சந்திக்க தொடங்கினர்,  ஆனாலும் விடுதலைப்புலிகள் உறுதியில் சற்றும் தளர்ந்து போகவில்லை. கடைசி போர்க்களமான மே 18 வரை இந்தியா தனது நாசகார தந்திர அரசியலை உலக மட்டத்திலும்,   மறுபுறத்தே நாசகார இரசாயன ஆயுதங்களையும் ஒருசேர பாவித்து வஞ்சகமாக முள்ளிவாய்க்கால் பரப்புக்குள் மட்டும் ஒன்றரை இலட்சம் மக்களை கொன்று தீர்த்து ஶ்ரீலங்காவுக்கு இந்தியா வெற்றி வாங்கிக் கொடுத்தது.

இந்தியாதான் போரை நடத்தியது என்றும் அனைத்து செயற்பாடுகளுக்கும் இந்தியாவுக்கு நன்றி என்றும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ,  காலிமுகத்திடலில் நடைபெற்ற முதலாவது வெற்றி விழாவின்போது பகிரங்கமாக பிரகடனம் செய்தார்.  அடுத்தடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ, மற்றும் அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷ,  ஆகியோர் பலமுறை பகிரங்கமாக பல தரப்பட்ட ஊடகங்களுக்கு நேர்காணல் மூலம் போர் நடத்தியது இந்தியாதான் என்ற உண்மையை ஒளிவு மறைவின்றி தெரிவித்திருக்கின்றனர். (அதை இன்று வடக்கு மாகாணத்தேர்தலில் பங்குபற்ற ஒற்றைக்காலில் நிற்கும் தமிழர் தேசியக்கூட்டமைப்பு மட்டும் அறிந்திருக்கவில்லையென்றே தோன்றுகிறது.)

இந்திய ஆட்சியாளர்களின் மேற்குறிப்பிட்ட அனைத்து அசைவாக்கங்களுக்கும் இந்திய நட்புச்சக்தியான சில வல்லாதிக்கங்களும் தலையசைத்தே வந்திருக்கிறது.  ஆனாலும் இன்னும் ஒரு இரண்டு வருடங்கள் மரபு வழியில் நேர்மையாக போர் தொடர்ந்திருக்குமாயின்  இந்தியாவின் சாயம் வெளுத்து ஈழப்பிரச்சினையிலிருந்து இந்தியா அவமானத்துடன் குற்றவாளியாக வெளியேறும் நிலை ஏற்பட்டிருக்கும்.

ஒரு நாடு தன்னகத்தே கொண்டுள்ள குடிமக்களின் பாதுகாப்பு அரசியல் பொருளாதாரம்,  குடிமக்களின் வாழ்வு கலாச்சாரம்,  உயிர் வாழ்வதற்கான வாழ்வாதார உரிமை, பேச்சுரிமை  நீதி அனைத்தையும் நடு நீதியுடன் காப்பாற்ற கடமைப்பட்டுள்ளது.   ஆனால் ஶ்ரீலங்காவின் வரலாற்றில் குடிமக்களின் பாதுகாப்பு,  அரசியல் பொருளாதாரம்,  குடிமக்களின் வாழ்வு கலாச்சாரம்,  உயிர் வாழ்வதற்கான வாழ்வாதார உரிமை, பேச்சுரிமை   நீதி அனைத்தையும் இந்திய ஆலோசனையுடன் சர்வாதிகார நாஸிசத்துடன் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களின் உதவியுடன் தீர்த்து கப்பட்டிருக்கிறது.  மேலும் அனர்த்தம் தொடர்கதையாக ஆக்கப்பட்டிருக்கிறது.

மேலும் அனர்த்தம் எதனால் என்றால் இந்தியாவின் வஞ்சகமான அரசியல் குளறுபடி ஊடுருவல் என்பதுதவிர  சொல்லுவதற்கு வேறு விடையில்லை.

இருந்தும்,   மீதமுள்ள ஈழத்து தமிழினம் கொலை செய்யப்படாமல் தப்பிக்கும் உரிமையை இந்திய- இலங்கை ஆட்சியாளர்களிடம் மண்டியிட்டு பிச்சை கேட்பதுபோல  கேட்டுப்பெறவேண்டிய நிலையில் தமிழ் மக்களிடம் வாக்கு பெற்று பாராளுமன்ற அங்கத்துவம் பெற்ற தமிழ் அரசியல் விற்பன்னர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். இலங்கையின் சிறுபான்மை இனங்களின் பாராளுமன்ற அங்கத்துவ தகுதி அந்த நிலையில்த்தான் கடந்த அரை நூற்றாண்டுகளாக இருந்தும் வருகிறது.

போர் முடிவுக்கு வந்த இந்த இடைப்பட்ட நான்கு வருட காலத்தில் ஈழத்தமிழ் அரசியற் கட்சிகளும் விடுதலை போராட்ட வீச்சை எடுத்துச்செல்லும் புலம்பெயர் அமைப்புக்களும் நீதி கிடைக்கும் என்று போராடி தோல்வி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.  திரும்பவும் இந்திய தலையீட்டை விட்டால் வேறு வழியில்லை என்ற பயங்கரமான கட்டத்துக்கு ஈழத்து அரசியல் சக்திகள் சில வந்திருப்பதுபோலவே  ஈழ அரசியல் செயற்கையாக திசை திருப்பப்பட்டிருக்கிறது.  அதற்கேற்பவே ஈழத்துக்கான அரசியல் வியூகங்களும் ஈழ அரசியல்வாதிகளாலும் இந்திய ஆட்சியாளர்களாலும் திட்டமிட்டு வகுக்கப்படுகின்றன.  ஶ்ரீலங்கா ஆட்சியாளர்கள் தமிழினத்தின் பகையாளிகள் என்பதால் சிங்களவன் தமிழினத்துக்கு எதிராகவே செயற்படுவான் என்பதால் சிங்களவன் பற்றி இங்கு விமர்சிப்பதற்கு அதிக விடயம் இல்லை.

இந்தியா தான் தன் நலனுக்காக இலங்கைக்குள் ஆதிக்கம் செலுத்தவே ஈழத்தமிழர்களின் அரசியலில் தலை நுழைத்து வருகிறதென்ற உண்மை பல இடங்களில் அரை நூற்றாண்டுக்கு மேலாக இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் உணர்ந்துகொண்டபோதும்,   தேசியத் தலைவர், மற்றும் தேசியத்தலைமையின் கொள்கையை பின்பற்றுபவர்கள் தவிர்ந்த அனைவரும் இந்திய அரசியல் தவிர்ந்து பயணப்பட திராணியற்றவர்களாகவே இருந்து வருகின்றனர்.

இந்தியா தான் மட்டும்தான் இலங்கையின் முதல்த்தர நட்பு தேசமாக இருப்பதாக காட்டி ஶ்ரீலங்கா ஆட்சியாளர்களிடம் மல்லுக்கட்டக்கூடிய தகுதியில் இல்லை. ஏனென்றால் சிங்கள ஆட்சியாளர்கள் ஏற்கெனவே தமது மிகப்பெரிய நட்புச்சக்தியாக சீனாவை வரையறுத்திக்கொண்டுள்ளனர்,  எனவேதான் தமிழர்தரப்பின் அரசியல் பலவீனத்தை கால் கோளாகக்கொண்டு  இந்தியா தொடர்ந்து இலங்கைக்குள் செல்வாக்கு செலுத்தும் தந்திரத்தை கையாண்டு வருகிறது.  தமிழர் தரப்பு சாக்கில் இந்தியா இலங்கைக்குள் தொடர்ந்து தனது அரசியல் செல்வாக்கை செலுத்தவேண்டுமானால் சிங்களத்தரப்பை வெறுப்பேத்தும் விதமாக நடந்து கொள்ள முடியாது. இந்தியா சிங்களத் தரப்பை எதிர்த்து தமிழர்களின் பக்கம் சாய்வாக செயற்படுமாக இருந்தால் இலங்கை ஆட்சியாளர்கள் முற்று முழுதாக சீனாவின் சார்பு நிலையில் நின்று இந்தியாவை உதாசினப்படுத்தவும் தயங்காது என்பது உண்மை. எனவே அரசியல் வலு குறைவாக உள்ள தமிழர் தரப்பு நியாயங்களை மழுங்கடித்து காலில் போட்டு மிதித்து உரிமைகளுக்கு போராடுவதுபோல் பாசாங்கு செய்து சிங்களவர்கள் சினக்காதவண்ணம் தனது இராச தந்திரக்கொள்கையை வகுத்து இலங்கையின் நண்பனாக இந்தியா  தமிழினத்தை அழித்து செயற்பட்டு வருகிறது.

இந்தியாவை ஆளும் கட்சிகளான காங்கிரஸூம்,  சரி பாரதிய ஜனதா கட்சி,  யாக இருந்தாலும் சரி மாறாக திராவிட முன்னேற்ற கழகமாக,  இருந்தாலும் சரி இந்த கொள்கையைத்தான் பின்பற்றும் தன்மை கொண்டது என்பது ஈழத்து அரசியல்வாதிகள் அறியாததுமல்ல.  ஆனாலும் இயலாமையின் இறுதியிலும் தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ள இலங்கையில் உள்ள முதுகெலும்பற்ற அரசியல் வா(வியா)திகள் இலங்கை- இந்திய ஏமாற்று வித்தைக்குள் தாமும் இணைந்து கலர் கலராக குறளிவித்தை காட்டும் தந்தரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வளவு அனீதிகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னும் இறுதியாக தமிழினத்தின் வீழ்ச்சியை பயன்படுத்தி மாகாணசபை என்ற காட்சி மேடையேற்றப்படவிருக்கிறது.  வடக்கு மாகாணசபை நாடகத்தின் தயாரிப்பாளர் யார், நெறிப்படுத்துபவர் யார், கதாநாயகனை தெரிவு செய்தவர் யார், கதாநாயகனாக நடிப்பவர் யார்,  என்பது அனைவரும் அறிந்ததே.

வரவிருக்கும் வடக்கு மாகாணசபைக்கு எந்த அதிகாரமும் வழங்க முடியாது என்று இலங்கை ஆட்சியாளர்கள் பகிரங்கமாக முடிந்த முடிவாக தமது தரப்பு நிலைப்பாட்டை சொல்லி முடித்துவிட்டனர்.  ஆனாலும் இந்தியா அதிகாரங்களை பெற்றுத்தரும் என்று பிரச்சாரம் செய்து தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழர் தேசியக்கூட்டமைப்பு களத்தில் இறங்கி நிற்கிறது.  ஏற்கெனவே பல்வேறு தரப்புக்களால் எழுதி நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தங்களையே கிழித்தெறிந்து தமது பௌத்த சிங்கள நலன்களை வளர்த்துவரும் சிங்கள அரசு இந்தியாவின் கோரிக்கைக்கு இணங்கி எதை பெற்று கொடுத்துவிடப்போகிறது.

போர் நடந்து முடிந்த கையோடு போரினால் அழிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்றாக ஐம்பதினாயிரம் வீடுகளை இந்தியா கட்டித்தரும் என்று இந்தியா அறிவித்தது.  கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் பல வீடுகள் தமிழர்களுக்கு வழங்கியதாக பரப்புரையும் செய்யப்பட்டது,  ஆனால் இந்தியா ஒதுக்கிய பணத்தில் கட்டப்பட்ட 50 வீடுகள் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டிருந்தது.  இந்தியாவால் கட்டப்பட்ட வீடுகளின் திறப்புகளை கையளிப்பதற்கு அப்போது வெளியுறவு அமைச்சராக இருந்த எஸ் எம் கிருச்ஜ்ணா 2012 ஜன இலங்கை சென்று ஐந்து வீடுகளை தமிழர்களுக்கும்,  ஐம்பது வீடுகளை சிங்கள இராணுவத்தினருக்கும் கையளித்துவிட்டு திரும்பியிருந்தார். மீதமுள்ள வீடுகளின் கதி என்னவென்று எவருக்கும் தெரியாது.

இந்தியா விரும்பியபடி வடக்கு மாகாணத்தில் தேர்தல் ஒன்று நடத்தப்படவேண்டும் என்பதற்காக தேசியக்கூடமைப்பு  தலைமை தந்திரோபாயமாக விமர்சனத்துக்கு இடமிருக்காது என்று நினைத்து சட்டவாளரான திருவாளர் சி வி விக்னேஸ்வரன் அவர்களை வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்து நிறுத்தியது.  விக்கினேஸ்வரன் அவர்களும் ஈழ அரசியல்பற்றி ஆராய்ந்துகொள்ளாமல் அதிகப்பிரசங்கித்தனமாக மாகாணசபையை பெற்றுக்கொண்டபின் ஶ்ரீலங்கா அரசாங்கத்துடன் போராடி உரிமைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று கருத்து தெரிவித்தார்.  அந்தப்பேச்சு விமர்சனத்துக்கானபோது  இலங்கை அரசில் சட்டரீதியகவே மாகாணங்களுக்கு காணி போலிஸ் அதிகாரங்கள் இருப்பதால் அதனை இலங்கை ஜனதிபதி வழங்கியே ஆக வேண்டும் என்று தனது சட்ட புலமையின் நெறிமுறையை எடுத்தியம்பியிருந்தார்.

சர்வதேசச் சட்டங்களையே படுகொலை செய்யும் விதமாக வன்னி மண்ணில் லட்சக்கணக்கான பொதுமக்களை கொன்றொழித்து சாட்சியின்றி அழித்துவிட்ட இலங்கை- இந்திய பாசிச அரச பயங்கரவாதத்திடமிருந்து அடிப்படையில் மூச்சு விடும் உரிமையையே மக்கள் எதிர்பார்க்காத நிலையில்,  விக்னேஸ்வரன்  உரிமைகளை சட்டப்படி பெற்றுக்கொள்ளமுடியும் என்றால்,  சட்டப்படி அந்த அதிகாரங்களை பெற்றெடுத்தபின் தேர்தலில் நின்று பதவியை கைப்பற்றுவதுதானே பொருத்தமாக இருக்கும்.

உதாரணத்துக்கு பார்ப்போமானால் ஶ்ரீலங்கா இராணுவத்துடன் இந்தியாவும் இணைந்து சர்வதேச யுத்த நெறிமுறைகளை கணக்கிலெடுக்காமல் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்து ஈழத்தமிழர்களை கொன்றொழித்தது என்று தமிழர்கள் பல ஆதாரங்களுடன்  குற்றஞ்சாட்டி வருகின்றனர்.  சனல் 4 தொலைக்காட்சியும் அவைகளை ஊர்ஜிதப்படுத்தியது. நான்கு வருடங்கள் கடந்தபோதும் ஈழத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கும் தமக்கும் எந்த பங்கும் இல்லை என்று இந்தியத்தரப்பில் தொடர்ச்சியாக சொல்லிவருகின்றனர்,

ஐநாவின் நிபுணர்குழுவின் அறிக்கை,  அதன் பின்னணியில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் மற்றும் படுகொலைகள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்ற மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களின் கோரிக்கை, அதன் தொடர்பாக அமெரிக்க கொண்டுவந்த தீர்மானம் அனைத்துக்கும் முட்டுக்கட்டையாக ஜெனீவா அமர்வுகளில் ஏன்  இந்தியா நின்றது என்பதை அவர் தானும் புரிந்துகொண்டு மக்களுக்கும் புரியவைக்க வேண்டிய பொறுப்பான கடமை விக்னேஸ்வரன் அவர்களுக்கு இருக்கிறது..

ஏன் அப்படி ஒரு நிலையை இந்தியா எடுத்தது என்ற கேள்வியை எழுப்பி அதற்கு சரியான பதிலளிக்கும்வரை  இந்தியத்தலையீட்டிலிருந்து வெளியேறி ஈழத் தமிழர் தரப்பின் மன உணர்வின் தன்மையை மதித்து அதற்கான போராட்டங்களை தமிழர் தேசியக்கூட்டமைப்பு முன்னெடுத்திருக்க முடியும்,  தொடர்ந்து இந்திய இலங்கை சதித்திட்டமான மாகாணசபையை புறக்கணித்திருக்க முடியும்.  அப்படி மாகாணசபையை புறக்கணிக்கும்போது மாகாணசபை தேர்தலை நடத்த முனைப்புக்காட்டும் சக்திகள் அதற்கான நியாயப்படுத்தலை ஒப்புவிக்கவேண்டிய அரசியல் வெளி மக்கள் முன் பகிரங்கமாகும்.  அவைகளைத்தான் தொலை நோக்குப்பார்வையுடன் பயணிக்கும் அரசியற் கட்சிகள் செய்திருக்கும்.

அவைகளை தாண்டி இந்திய- ஶ்ரீலங்காவின் கூட்டுச்சதிக்குள் நின்று கொண்டு திரும்பவும் மக்களை கொலைக்களத்துள் தள்ளும் சதியே மாகாணசபை தேர்தல்.

இந்தியாவின் வாக்குறுதியை நம்பி தேர்தல் களத்தில் இறங்கும் சம்பந்தர்-விக்னேஸ்வரன் கூட்டாளிகள்.  இலங்கை அரசில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் சட்டரீதியாகவே மாகாணங்களுக்கு காணி போலிஸ் அதிகாரங்கள் இருப்பதால் அதனை இலங்கை ஜனதிபதி வழங்கியே ஆக வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர்.

ஶ்ரீலங்கா அரசு வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரித்துக்கொள்வதற்கு இலங்கையின் நீதி பரிபாலன சட்ட அடிப்படையில் வழக்கு தொடுத்து விடுப்பு பெற்றதாக அறிவித்திருக்கிறது. இன்றைக்கு வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டிருக்கின்றன, 1987 ஜூலை 29ம் திகதி இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாடுகளை இலங்கை,  இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் தலைவர்கள் நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின் எழுதி கைச்சாத்திட்டிருந்தனர். அந்த சட்டம் அமூலுக்கு வந்தது,அமூலுக்கு வரவில்லை  என்பதை ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு,  அந்த ஒப்பந்த சட்டத்தை ஒரு தலைப்பட்ஷமாக இலங்கை ஆட்சியாளர்கள் கோர்ட்டில் வழக்குப்போட்டு வடக்கு கிழக்கை பிரிக்கலாம் என்றால்,  ஒப்பந்தகாரர்களில் ஒரு பகுதியினரான இந்திய ஆட்சியாளர்களும்  தமது தரப்பு நியாயங்களை தமது நாட்டு நீதிமன்றம் ஒன்றில் முறையிட்டு வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டது சட்டவிரோதமானது என்பதையும் நிரூபித்திருக்க முடியும் ஆனால் இந்தியா அதுபற்றி வாயே திறக்கவில்லை.

வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கு நீதிமன்றம் ஒன்றின் மூலம் முடிவுகண்ட ஶ்ரீலங்கா சிங்கள ஆட்சியாளர்கள் (இல்லாத) பொலிஸ் காணி அதிகாரங்களை இராணுவ நீதிமன்றம் ஒன்றின் மூலம் இல்லாமல் செய்ய எவ்வளவு நேரம் தேவை என்பதை சட்டமேதை விக்கினேஸ்வரன் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

இங்கு தேர்தல் ஒன்று தேவையில்லை என்று வாதாடுவதற்கு எவருக்கும் ஆவல் கிடையாது.  தேர்தல் ஒன்று நடந்து அதிகாரசபை ஒன்று தோற்றம் பெறுமானால் அங்கு அதிகாரம் ஒன்று இருக்கவேண்டும் என்பதுதான் வேண்டுகோளே,  13வது திருத்த சட்டம் என்பதே என்ன என்பது இந்த வயோதிப அரசியல் வியாதியஸ்தர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.

சிங்கள ஏகாதிபத்தியம் தன்னால் முடிந்தளவுக்கு இனத்துவேஷத்தையும்  பிரிவினை அடக்குமுறை என்று எந்த உலக நீதி நியாயத்துக்கும் கட்டுப்படாமல் பிரிவினையின் அதி உச்ச அனைத்து வேலைத்திட்டங்களையும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக தினம் தினம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.  

இந்த வழியில் ஈழ அரசியல் செல்லுமாக இருந்தால் ஒரு குறிப்பிட்ட காலங்களில் ஈழத்தமிழினம் இல்லாமல் அழிக்கப்படும்.   வல்லமையுள்ளவர்கள்  யாரும் இருந்தால் அவர்கள் வேறு நாடுகளுக்கு ஓடித்தப்புவர் ஈற்றில் ராஜபக்‌ஷ சீன ஆக்கிரமிப்புடன் இந்தியாவின் மிகப்பெரிய வில்லனாக மாறும் அபாயம் எவராலும் தடுக்க முடியாமல்ப்போகும். 



ஈழதேசம் செய்திகளுக்காக.

கனகதரன்.

No comments: