பல்வேறு தரப்பினரின் மனிதாபிமானத்துடன் கூடிய தயவான வேண்டுகோள்கள், பல
இலட்சக்கணக்கான மனிதாபிமான கண்டன விமர்சனங்கள், பல கோடிக்கணக்கான
வயிற்றெரிச்சலுடன் மண் வாரித்திட்டிய திட்டுக்கள்,
பல ஆயிரக்கணக்கான அரசியல் அறிவுரைகள், இப்படி கூட்டாகவும், வெவ்வேறு
தளங்களிலும் திரண்ட மனித இனம், சனநாயக வழிவகைகளுக்குட்பட்டு 2009, களில்
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப் படுகொலகளை நிறுத்துவதற்காக, தமிழினம்
மட்டுமல்லாது கடல்கடந்தும் பல இன சமூக, அரசு மட்டங்களிலிருந்தும்
இனப்படுகொலையை நடத்தியவர்களுக்கு எதிராக குரல்கள் எழுந்தது. அவற்றை
இன்று பலர் மறந்திருக்கலாம்.
ஈழ இனப்படுகொலையை முன்னின்று
நடத்திக்கொண்டிருந்த நாடான இந்தியாவின் தமிழ்நாட்டில் மட்டும் "இந்திய
இனக்கொலை அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக" போராடி இனப்படுகொலையை
நிறுத்தக்கோரி இருபதுக்கு மேற்பட்ட மனித உயிர்கள் அடுத்தடுத்து தீயில்
விழுந்து கருகி உயிரை மாய்த்துக்கொண்டனர். (இவற்றை அப்போது
அதிகாரத்திலிருந்த எவரும் கண்டுகொள்ளவுமில்லை. இப்போ எவரும் ஞாபகத்தில்
வைத்துக்கொள்ளவுமில்லை.) அவை எல்லாம் அரசியலுக்கு அப்பாற்பட்ட மனித நேய
மாண்பின் அடிப்படையில் பின்புலத்தில் துளி அரசியல் ஆதாய நோக்கமில்லாமல்
உணர்வின் அடிப்படையில் இயல்பாக அரங்கேறின. அனால் இன்று தமிழ்நாட்டின்
வீழ்ச்சியடைந்த அரசியற் கட்சிகள், மக்களின் மறதியை மிகச்சரியாக
பயன்படுத்தி தீக்குளிப்பில் தாமும் பங்கு பற்றியவர்கள்போல் பாசாங்கு செய்து
அரசியல் முன்னரங்கில் நின்று வேடம் தரித்து நாடகம் ஆடுகின்றனர். "விரால்
இல்லாத குளத்தில் குறவை மீன்கள் தாமே தலைமை என்று துள்ளிக்குதித்ததுபோல்
நகைப்புக்குரியதாக நிகழ்வுகள் நகர்கின்றன".
எது எப்படி
நடந்தபோதும் அதிகாரங்களை கையில் வைத்துக்கொண்டு ஈழ மண்ணில் ஒரு சிறுபான்மை
இனத்தின்மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையை, திட்டமிட்டு
நடத்தியவர்களின் வீச்சை கோடிக்கணக்காக திரண்ட (அதிகாரமற்ற) எண்ணிக்கை
கூடிய சாதாரண மனித சக்தியால் "ஒரு வரலாற்று துரோகத்தை பதிவு செய்தது தவிர"
ஒரு சத வீதம்கூட இனப்படுகொலையை தடுத்து நிறுத்திவிட முடியவில்லை
அவ்வளவுக்கு அவ்வளவு திட்டமிடப்பட பொய்ப் பிரச்சாரத்தின் மறைவில் நின்று
ஈழத்தின் இனப்படுகொலைகள் நிறைவேற்றப்பட்டன. (இவற்றை ஒருமுறை தமிழ் இன
விடுதலை களத்தின் முன்னணியில் நிற்பதாக காட்டிக்கொள்ளும் அனைவரும்
சிந்தித்துப்பார்க்க கடமைப்பட்டுள்ளனர்)
அரசியல் அதிகாரம்
அற்று, ஈழத்தில் வாழ்ந்த தேசிய இனமான இனமானத் தமிழர்களை, எந்த ஒரு
ஆதிக்க வர்க்கசக்தியும் மனிதப்பிறப்பாக மதிக்கவில்லை. மனு தர்மத்தை
அதிகாரவர்க்கம் கூட்டுச்சேர்ந்து காலில் போட்டு மிதித்தது. குப்பை
கூளங்கள் போல வெட்டவெளியில் போட்டு எரிக்கப்பட்ட தமிழினத்தின் அவலத்தை
எவரும் கண்டுகொள்ளவில்லை. அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு குளிர்சாதன
அறைகளிலிருந்து பம்மாத்து அறிக்கை விட்ட எவனுக்கும் அந்த அவலம்
புரிந்துகொள்ள முடியாதவை.
இலங்கையின் முடிக்குரிய ஆதிமூல தேசிய
இனம் தமிழினம் என்ற அடிப்படையில், பிரித்தானியா வகுத்துக்கொடுத்த
இலங்கையின் யாப்பு அரசியலமைப்பு சட்டத்துக்குட்பட்டு உரிமை கிடைக்குமென்ற
நம்பிக்கையுடன் அன்றைய தமிழ் அரசியற் தலைமைகள் சோர்ந்துபோகாமல் கட்சி
அரசியல் நடைமுறைகளை பின்பற்றி நாகரீகமாக தமிழர்களுக்கான குறைந்தபட்ஷ
அதிகாரத்தை பெற்றெடுப்பதற்காக 1948 களிலிருந்து தந்தை செல்வநாயகம்,
ஜீஜீ பொன்னம்பலம், போன்றோரின் தலைமையில் அரசியல் சனநாயக
விழுமியங்களுக்குட்பட்டு பாராளுமன்ற கட்சி அரசியல் ரீதியாக உரிமைக்கான
சாத்வீக போராட்டம் மென்போக்காக முப்பது ஆண்டுகளாக நடைபெற்றது.
இருந்தும்
சிங்கள கடும்போக்கு ஆதிக்க வாதிகளால் திட்டமிட்டு இலங்கையில்
தமிழர்களுக்கான சனநாயக உரிமை, அடக்கு முறைகளின் மூலம் குழி தோண்டி
புதைக்கப்பட்டு அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டே வந்தன, அடி உதையும்
அடிமைத்தனமும்தான் கட்டியடிக்கப்பட்டது. அரசியல் சனநாயக போராட்டம்
சிங்கள அரசியல் வாதிகளால் உதாசீனப்படுத்தப்பட்டு தோல்வியுற்றுப்போனதால்,
அதிகாரம் இல்லாத ஒன்றினால் ஒற்றை மயிரைக்கூட அசைத்துவிட முடியாது என்பது
(இன்று மட்டுமல்ல) அன்றே ஈழ மண்ணில் தந்தை செல்வநாயகம் போறோரின் மன
அனுமானத்தில் புரியப்பட்டு விட்டதால் தமிழர்களுக்கான சுய நிர்ணய அரசியல்
ஒன்றின் முலமே தேசிய தமிழினத்தின் வாழ்வியலை காப்பாற்றிக்கொள்ள முடியும்
என்ற முடிவுக்கு தமிழ் அரசியற் தலைமைகள் தள்ளப்பட்டனர். அந்த தொலைநோக்கு
சிந்தனையின் முடிவில் தனித்தமிழீழம் ஒன்றே தமிழர்களுக்கான பாதுகாப்பு என்ற
முடிவுக்கு தந்தை செல்வநாயகம் அவர்கள் நீண்ட கால அரசியல் அனுபவத்தின்பின்
வந்திருந்தார். ( அது 1970 வதுகளின் காலம், இன்று சிங்கள- தமிழ்
இனத்திடையே நூறு மடங்கு துவேஷமும் பகைமையுணர்ச்சியும் கூடி
பிளவுபட்டுக்கிடக்கும் காலம்)
தந்தை செல்வா அவர்கள் முன்மொழிந்த
அரசியல் சித்தாந்த அடிப்படையில் உரிமையை வென்றெடுக்கும் நோக்கில் உயிரை
பணயம் வைத்து தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன், அவர்களால் தொலைநோக்குடன்
தீர்க்கமான சிந்தனையில் ஆயுதப்போராட்டம் ஈழத்தில் 1970 களின் பிற்பகுதியில்
தொடங்கப்பட்டது. இதற்கு இந்தியா, பிரித்தானியா உட்பட பல நாடுகள்
மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரவளித்தன. இது திரும்பத் திரும்ப
சொல்லப்பட்ட கருத்தாக இருந்தாலும் இன்றைக்கு இருக்கும் மர மண்டைகளுக்கு
புரிய வைப்பதற்காக திரும்பத்திரும்ப சொல்ல வேண்டிய தேவை
உண்டாகிவிடுகிறது.
எட்டப்பர்களின் தலையீட்டாலும்,
பச்சோந்திகளின் நடமாட்டத்தாலும் , உலக மட்டத்தில் செய்யப்பட்ட திட்டமிட்ட
பொய்ப்பிரச்சாரங்களினாலும் சோரம்போகும் தற்குறி அரசியற் பயணிகளாலும்,
ஈழத்தமிழர்களின் உரிமைக்கான ஆயுதப்போராட்டம் மனித படுகொலை என்ற மனித
நாகரீகமற்ற அழிப்பு அடக்குமுறையால் வெல்லப்பட்டுவிட்டதாக தெரியலாம்.
ஆனால் நாகரீக சனநாயக அரசியல் முன்னெடுப்பாலும் அடுத்து தோன்றிய உணர்வு
மயமான உரிமைக்கான ஆயுதப்போராட்டத்தாலும் பெற்றெடுக்க முடியாத சுய
வாழ்வியலுக்கான விடுதலையை பெற்றெடுப்பதற்காக அந்த மக்கள் இன்னொரு மாற்று
வழியை தேர்ந்தெடுத்து வேறு மாதிரியான போராட்ட உத்தியை பிரயோகிக்க பின்
நிற்க மாட்டார்கள் என்று எந்த வல்லரசுகளாலும் விஞ்ஞானிகளாலும் கணிப்பிட
முடியாது, என்பதாகவே கள நிலவரங்களும் சூழ்நிலைகளும் கோடிட்டு காட்டி
நிற்கின்றன.
ஶ்ரீலங்காவின் இனப்படுகொலையாளியான மஹிந்த ராஜபக்ஷ
தனது பேச்சின்போது அடிக்கொருமுறை தமிழர் தரப்பிலிருந்து தனது ஆட்சிக்கு
ஆபத்து இருக்கிறது என்பதை ஏதோ ஒரு உள்ளுணர்வின் அடிப்படையில் அடிக்கடி
சொல்லிவருவதன் அனுமானத்தையும் இங்கு புறந்தள்ளலாகாது. உலக வல்லரசான
அமெரிக்காவும் அந்த கருத்தை பல்வேறுபட்ட வரலாற்று ஆய்வுகளின்
அடிப்படையில் இலங்கையில் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகள் மறுக்கப்படும்
பட்சத்தில் அந்த மண்ணில் மீண்டும் ஒரு ஆயுதக் கிளர்ச்சி உருவாவதை
தவிர்க்கமுடியாது என்று பல இடங்களில் எச்சரிக்கையாக சொல்லிவருவதையும்
இங்கு நினைவு கூரத்தக்கது.
இலங்கையில் இனப்படுகொலையை நடத்திய
சக்திகள் விரல் விட்டு எண்ணக்கூடிய தொகையில் காணப்பட்டபொழுதும், மீதமாக
இருந்து இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்த அரசுகளும், மக்கள்
கூட்டமும் என்று பார்த்தால் இனப்படுகொலைக்கு எதிராக இருந்தவர்களின் தொகையே
அதிகமானது என்பதை நான்கு வருடங்கள் பின் நோக்கி நகர்ந்து 2009, ன் அன்றைய
மக்கள் கிளர்ச்சியின் கள நிலையை மறுவாசிப்புச்செய்து உணர்ந்து பார்த்தால்
மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அதற்கு இரத்தத்தில் ரோசமும், இனமான
உணர்வும் ஞாபக சக்தியும் தேவை என்பதும் உண்மையே.
இன்றைக்கு
இனப்படுகொலையை நடத்தியவர்களும் கூட்டாளிகளும், இனப்படுகொலைக்கு ஆதரவாக
இருந்து மவுனம் சாதித்தவர்களும், அரசியல் இலாபம் கருதி தமது கறையை
மறைத்துவிடுவதற்காக மாற்று வேடமிட்டு அரசியல் செய்துகொண்டிருப்பதும் உலகம்
அறியாததல்ல. மறதி கொண்ட பாழாகிப்போன மனித இனத்தின் பலவீனத்தை,
கொலைகாரர்களும் துரோகிகளும் மிகச்சரியாக அருமையாக பயன்படுத்த போட்டி போட்டு
நிற்கின்றனர். அவர்கள்பின்னால் மறதி நிறைந்த தமிழினமும், தமிழ் அரசியற்
பயணிகளும் வளர்ப்புப்பிராணிகளின் பவ்வியத்துடன் பின்னோக்கி சென்று
கொண்டிருப்பதை என்னவென்று சொல்லமுடியும்.
இந்த முன்னோட்டத்தை ஏன் சொல்லவேண்டி ஏற்பட்டது என்பதை இனி வரும் விடயங்கள் புலப்படுத்தும்.
விடுதலைப்புலிகளின்
விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தின் எதிரொலியாகத்தான் இன அழிப்பு இலங்கை
மண்ணில் அறியப்பட்டது என்று நியாயப்படுத்துவோரும் சில காலங்களாக நம்முடன்
விடுதலை களத்தில் பயணப்படுவதை பார்க்கும்போது சிங்களவனுக்காக பிரச்சாரம்
செய்ய வெளியிலிருந்து எவரும் தேவையில்லை நம்மவரே போதும் என்றே மனம்
கனக்கிறது. சிங்களவனின் இன அழிப்பு கலவரம் எப்போது எங்கு தொடங்கியது
என்ற வரலாற்று பதிவை அவர்களுக்கு இங்கு சுட்டிக்காட்டவேண்டிய கடமையும்
புறந்தள்ள முடியாதவை.
இலங்கை வாழ் முஸ்லீம்கள் தாய் மொழியாக தமிழ்
மொழியை பேசியவர்கள் என்பதால் முஸ்லீம்களுக்கு எதிராக சிங்கள காடையர்கள்
1915 ல் ஒரு இனக் கலவரத்தை மலையகத்தின் தலைநகரான கண்டியில்
தூண்டிவிட்டனர், மே 29, 1915 ல் கண்டியில் பெரும்பான்மை சிங்கள பெளத்த
கும்பல் ஒன்று முஸ்லீம்களின் பள்ளிவாசல் ஒன்றைத் தாக்கியதுடன், பல
முஸ்லீம்களின் வணிக நிறுவனங்களையும் சூறையாடினர். அன்றே சிங்கள இனத்துவேஷ
வாதிகளின் எண்ண உள்ளீட்டிலிருந்த துவேஷ நஞ்சு வெளிப்படையாக முதலாவதாக
வெளிப்பட்டதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
2008./ 2009 களில்
ஈழ இனப்படுகொலைக்கு இந்தியா வியூகம் அமைத்து சதி செய்தத்துபோல 1915 ன்
அன்றைய கலவரத்தின் ஊற்றுக்கண்ணாக பிரித்தானிய பேரரசு செயற்பட்டிருந்தது.
பிரித்தானியாவின்
ஆதரவுடன் அன்று சிறுபான்மை இனத்தை நசுக்க ஆரம்பித்த சிங்கள காடையர்களால்
நடத்தப்பட்ட அடுத்த இனக்கலவரம் 1958 கலவரம் என அறியப்பட்டது இக்கலவரம்
சிங்கள, தமிழ் இனத்தவரிடையே பொலனறுவை கொழும்புப் பகுதிகளில் ஏற்பட்டது இந்த
இனக் கலவரங்களில் தாக்குதலுக்குள்ளான தமிழர்களும் சிங்கள காடையர்களை
திரும்பித் தாக்கினார்கள் என்றும் கூறப்படுகிறது.
பிற்பாடு 1977
ல் தமிழர் விடுதலை கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று
எதிர்க்கட்சி அந்தஸ்தில் அமர்ந்ததை பொறுக்காத யுஎன்பீ சிங்கள அரசு
தரப்படுத்தலை தமிழர்களின் கல்வி மற்றும் வாழ்வியலில் வஞ்சகமாக
அறிமுகப்படுத்தியது அதனால் உண்டான பகைமை உணர்வு யாழ்ப்பாணத்தில்
பொலிஸாருக்கும் மாணவர்களுக்குமிடையில் கருத்துவேறுபாடாகி தொடங்கிய கலவரம்
அப்போது யாழ்ப்பாணத்தில் மூன்று மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர், அந்தக்
கலவரம் அனுராதபுரம் ரயில் நிலையம் கொழும்பு என்று விஸ்தரிக்கப்பட்டு
பெருத்த அனர்த்தத்தில் முடிந்தது.,
இந்த வரலாற்று துரோகங்கள்
பெருக்கெடுத்தபோது வேறு வழியின்றி தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கி சிங்கள
பேரினவாதத்தின் அடக்குமுறைக்கு எதிராக போராட தள்ளப்பட்டனர். உலக நாடுகளில்
பல புரட்சிகள் தோன்றுவதற்கு அங்கு ஆட்சி செய்த அரசுகளே காரணமாக
இருந்திருக்கின்றன.
பின்வந்த காலங்களில் தொடர்ச்சியாக
திட்டமிட்டு தமிழர்களுக் எதிராக சிங்கள கடும்போக்காளர்களால் அடக்குமுறை
நோக்கத்தோடு இராணுவத்தை ஏவி பல கலவரங்கள் ஏவி விடப்பட்டபோதும்.
விடுதலைப்புலிகள் என்ற அரண் மக்களை காத்து கலவரங்களை சந்தித்து சமன்
செய்தது. அதன்பின் 1983 2000, 2001, 2006 களில் சிங்கள கடும்போக்கு
ஆட்சியார்களால் கலவரங்கள் மூட்டப்பட்டாலும் விடுதலைப்புலிகள் திருப்பி
தாக்குவார்கள் என சிங்களத்தரப்பில் உணரப்பட்டதால் கலவரங்கள் அரசாங்கத்தால்
துரித கதியில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.
அதன்பிற்பாடும் கூட
பல கலவரங்களும் இனச்சுத்தீகரிப்பு படுகொலைகளும் இலங்கை மண்ணில் உலக
நாடுகளின் உதவியுடன் பல கால கட்டங்களில் சிங்கள ஆட்சியாளர்கள் நடத்த
முனைந்தபோது விடயங்களை முற்கூட்டி அறிந்த புலிகள் அந்த கலவரங்களுக்கு தாம்
முகம் கொடுத்து சமன் செய்தனர் அவைகளை விடுதலைப்புலிகளின் பயங்கரவாத
செயற்பாடு என்று சிங்கள அரசு உலகநாடுகளுக்கு கணக்கு காட்டியது.
கலவரங்களுக்கான
காரணம் என்னவென்று சர்வ தேசம்வரை அறியப்பட்டபோதும் அவற்றை விரிவாக
விவாதித்து தீர்வுக்கான திட்டமிடலுக்கு சிங்களவர்கள் என்றைக்கும் தயாராக
இல்லை. சிங்களவர்கள் தயாராக இல்லை என்பதைவிட பின்னணியில் நின்று ஊக்கமளித்த
வல்லாதிக்கங்கள் குளப்பவாதிகளாக இருந்தனர் என்பதே வரலாற்றில் கசப்புடன்
மிதந்துவரும் உண்மையாக இருந்து வருகிறது.
பிரித்தானிய
ஏகாதிபத்தியம் தனது பிடிமானத்தை 1948 காலப்பகுதியில் இலங்கையிலிருந்து
தளர்த்தி விலகிவிட்டபோது தமிழர்களுக்கான அரசியல் நிர்ணயத்தை தமிழர்கள்
முடிவுசெய்யலாம் என்று குறிப்பிட்டு எழுதியபோதும், அதற்கான் வழி வகைகளை
வரையறுத்து கோடிட்டுக் காட்டியிருக்கவில்லை, சட்டம் படித்து தகுதியான
ஆளுமை கொண்ட ஜிஜி பொன்னம்பலம், தந்தை செல்வநாயகம் ஆகியோர் மிகுந்த
மதிநுட்பத்துடன் தமிழர்களுக்கான அரசியல் வெளியை நிறைக்க முனைந்தபோதும்
பெரும்பான்மை கொண்ட சிங்கள ஏகாதிபத்தியம் ஏமாற்று ஒப்பந்தங்களை எழுதி
காலதாமதப்படுத்தி தமிழினம் ஏமாற்றப்பட்டு வந்ததே இன்றைய திகதிவரை
கரும்புள்ளி வரலாறாக உள்ளது.
அடுத்துவந்த காலங்கள் சிங்களவர்களை
வெல்ல வேண்டும் என்பதற்காக இந்தியாவை சார்ந்து தமிழர்களுக்கான உரிமையை
பெறலாம் என்ற முடிவுக்கு தமிழ் அரசியல் வாதிகள் தள்ளப்பட்டு இந்தியாவின்
ஆதரவை நாடியதுமுண்டு. ஈழ தமிழ் அரசியல்வாதிகள் தமது மக்களுக்கான உரிமையை
பெற்றனரோ இல்லையோ, தமிழக திராவிட அரசியல்வாதிகளுக்கு ஈழ அரசியல்
இலாபகரமான அரசியல்த்தளமாக இன்றுவரை இருந்து வருவதை உண்ணாவிரதம்,
மனிதச்செயின், டெசோ, போன்ற மணிக்கடைகள் செழிப்புற்று வளர்ந்து வருவதை
குறித்துக்காட்ட முடியும்.
திராவிடக்கட்சிகள் ஈழத்துக்கான கடைகளை
திறந்தபோது மாறி மாறி அனைத்து தமிழக திராவிடம், திராவிடம் அல்லாத மூன்று
நான்கு பேர் கொண்ட கட்சிகளும் ஈழத்துக்கான அரசியற் கடைகளை திறந்து
விளம்பரத்தட்டிகள் வைத்து பொருள் இல்லாமலே பெயர் பெற்று இலாபம்
ஈட்டிக்கொண்டன. ஒரு கட்டத்தில் இந்திய தேசியக்கட்சிகளான காங்கிரஸ் பாரதிய
ஜனதா கட்சிகளும் திராவிடக்கட்சிகளுக்கு ஈடாக ஈழ வியாபாரத்தில் ஈடுபடாமல்
அரசியல் வியாபாரம் ஆகாது என்ற நிலைக்கு வந்தபோது பாதுகாப்பு ஆலோசகர்களின்
ஆலோசனையுடன் ஶ்ரீலங்கா மொத்த விற்பனை நிலையம் என்ற பெயரில் அரசியற் கடைகளை
திறந்துவிட்டனர். ஶ்ரீலங்கா வியாபாரமும் ஈழ வியாபாரமும் ஒருசேர
குவிக்கப்பட்டன, தமிழக கட்சிகள் அதிர்ச்சியடைந்தாலும் தாமும் வியாபார
உத்தியை சந்தற்பத்திற்கு தகுந்தாற்போல் மாற்றிக்கொண்டனர்.
ஈழ
வியாபாரம் இலாபம் தரும்போது ஈழ வியாபாரமும், ஶ்ரீலங்கா அரசியல் வியாபாரம்
இலாபம் தரும்போது ஶ்ரீலங்கா வியாபாரமும் என்ற கொள்கைக்கு
திராவிடக்கட்சிகளும் தேசியக்கட்சிகளும் போட்டி போட்டு மாறிவிட்டதால்
ஈழப்பிரச்சினை இடியப்பச் சிக்கலாகியிருக்கிறது. வாசிப்பவர்களுக்கு
புரிகிறதோ இல்லையோ துரதிர்ஷ்ட வசமாக உண்மை நிலை அப்படித்தான் இருக்கிறது.
இந்த
இடத்தில் இன்றைய தமிழ் ஈழ அரசியல்வாதிகளின் தீர்க்க தரிசனமான இன்றைய
அரசியலையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டிய சுமையும் தமிழீழ மக்களுக்கு
சுமத்தப்பட்டிருக்கிறது. 1915 ல் தொடங்கிய இனவாதம் 2013 வரை பல்கிப்பெருகி
இன அழிப்பு, நிலப்பறிப்பு, பேச்சுசுதந்திரத்தடை, கலாச்சார சீரழிவு என்று
எண்ணற்ற அடக்குமுறைக்குள் தமிழினம் தள்ளப்பட்டிருக்கிறது.
விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் திறந்துவிட்ட அரசியல் வெளி ஒன்று
மட்டும்தான் தமிழர்களுக்கான உரிமையை பெறுவதற்கான துருப்புச்சீட்டாக
கசங்கிப்போய் கிடக்கிறது. அதை சரியாக பயன்படுத்தி திடமான நிலை
எடுக்காதவரைக்கும் எத்தனை நூற்றாண்டு சென்றாலும் ஒப்பந்தங்களும்
பேச்சுவார்த்தை என்ற மாயையுமே தொடரும். இதுதான் சிங்கள அரசியல் களத்தில்
தொடர்ந்து பாவிக்கப்பட்டுவரும் பகடை விளையாட்டு.
அடுத்த சில
மாதங்களில் வடக்கு மாகாணத்துக்கான மாகாணசபை தேர்தல் நடத்தப்பட இருப்பதாக
ஶ்ரீலங்கா அரசும் இந்திய ஆட்சியாளர்களும் பேசித்தீர்த்து முடிவுகண்டு தமிழ்
தேசியக்கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட இருப்பதாக முடிவு
செய்யப்பட்டிருக்கிறது. கிழக்கு மாகாணம் பிள்ளையான் என்ற ஒட்டுக்குழுவின்
தலைவரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
வடக்கு மாகாண சபைக்கு எந்த
அதிகாரங்களையும் கொடுத்துவிடப்போவதில்லை என்றும் அதிகாரம் அனைத்தும்
சிறீலங்கா ஜனாதிபதி ராஜபக்ஷவின் கைகளில் தொடர்ந்து இருக்கும் என்றே சிங்கள
அரசு கூறி வருகிறது. இதனால் எக்காரணம் கொண்டும் யாழ்ப்பாணம் மற்றும்
வடபகுதிகளில் குவிக்கப்பட்டிருக்கும் இராணுவம் திரும்பப்பெறப்போவதில்லை
என்பதும் உறுதியாகியிருக்கிறது.
ஆனால் தமிழர் தேசியக்கூட்டமைப்போ
தாங்கள் மாகாண சபையை கைப்பற்றி முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களின் சட்ட
அறிவைப்பயன்படுத்தி இந்தியாவின் உதவியோடு போராடி தமிழர்களுக்கான உரிமையை
பெறுவோம் என்கிறது. இதைவிட உலக நகைச்சுவை வேறு இல்லை என்பதே இந்தப்பதிவின்
கருத்து.
இந்திய அரசு 2009ல் இனப்படுகொலை செய்வதற்கு சிங்கள
அரசுக்கு எந்தளவுக்கு உதவி நின்றது என்பதை ஏன் இவர்கள் உணரவில்லை. 26
வருடங்களாக எந்த அசைவுமில்லாமல் கிடக்கும் 13 வது திருத்தச்சட்டத்தின்
மூலம் சுபீட்சமடையலாம் என்று இவர்கள் எந்த அடிப்படையில் கூறிவருகின்றனர்.
ஒர் பேச்சுக்கு 13 வது சட்டத்திருத்தத்தின் மூலம் ஏதோ ஒன்றை பெற்றுவிடலாம்
என்றாலும் முதலில் அதையல்லவா இவர்கள் வரையறுக்க வேண்டும்.
குயின்ஸ்
கவுன்ஸில்களான எஸ்ஜேவி செல்வநாயகம், ஜீஜீ பொன்னம்பலம் அவர்களுக்கு புரியாத
அரசியல் பூகோள அறிவு, அரசியல் அனுபவம் சட்ட அனுபவம் இன்று அரசியல்
பிரசன்மத்தில் திடீரென குதிக்கும் விக்கினேஸ்வரன் அவர்கள்
இட்டுக்கட்டிவிடுவாரா. அல்லது திடமாக ஒரு இடத்தில் தமிழர்கள்
மத்தியில்க்கூட ஒரு கருத்தை சொல்லமுடியாத சம்பந்தனால் இந்தச்சிக்கலை
தீர்த்துவிடத்தான் முடியுமா.
வடக்கு மாகாண சபை தேர்தலில்
தமிழர்தேசியக்கூட்டமைப்பு போட்டியிடுவதன் மூலம் வடக்கு மாகாண சபையை
கைப்பற்ற முடியும் என்பது உண்மையே. தேசியத்தலைவர் அவர்களால்
உருவாக்கப்பட்ட கட்சி தமிழர் தேசியக்கூட்டமைப்பு என்பதால் மாகாணசபைக்கு
தேர்தல் என்று ஒன்று வரும்போது மக்கள் வேறு வழியில்லாமல் சிங்களத்துக்கு
எதிரான கூட்டமைப்புக்கு வாகளிப்பார்கள் என்பது மறுக்க முடியாது. ஆனால்
மாகாணசபை தேர்தலின் பின் சிவி விக்னேஸ்வரன் அவர்கள் வரதராஜப்பெருமாள் போல
அதிகாரம் எதுவுமற்ற முதலமைச்சராவார். அதிகாரத்தை இந்தியாவுக்கு சென்று
வாங்கிவரப்போவதாக இந்தியப்பயணம் இன்னும் சில பயணங்களும் தொடரும். இதனால்
தனது முகவரியை பல நாடுகளுக்கு தெரியப்படுத்தும் அரிய வாய்ப்பு கிடைக்கும்.
அதேநேரம் அவரது அரசியல் இயலாமையும் மக்கள் மன்றத்தில் தெரியவரும்.
இங்கு
இந்த கட்டுரைமூலம் சொல்ல வருவது என்னவென்றால் ஆயுதப்போராட்டம்
தொடங்குவதற்கு முன் நாடு அமைதியாக இருந்த 1970 களிலேயே சிங்களவனுடன்
பேரம்பேசி எதையும் பெற்றுவிடமுடியாது என்று தந்தை செல்வா அவர்களால்
உணரப்பட்டு தனித்தமிழீழம்தான் முடிவாக அமையும் என்று
அனுமானிக்கப்பட்டுவிட்டது, பின் வந்த நாற்பது வருடங்களும் எப்படி நகர்ந்தது
என்பதை சம்பந்தன் ஐயாவும் மற்றும் தலைவர்களும் உணர்ந்து தீர்க்கமான
முடிவுக்கு வரவேண்டும். 2013ம் ஆண்டு வரவிருக்கும் மாகாணசபை 1987 இந்திய
ஒப்பந்த மாகாணசபை அளவுக்குக்கூட இருக்கப்போவதில்லை என்பதாகவே வரளாறுகள் பல
வகையான பாடங்களை நமக்கும் உலகத்துக்கும் புகட்டி நிற்கின்றன.
ஈழதேசம் செய்திகளுக்காக.
கனகதரன்.
No comments:
Post a Comment