Friday, July 22, 2016
தமிழக அரசியலுக்கு நாம் தமிழர் கட்சியின் வரவு காலத்தின் கட்டாயமே.
2016, புத்தாண்டு இனிதே பிறந்துவிட்டது. அனைவரும் புத்தாண்டை இனிதே கொண்டாடும் அதே நேரத்தில், இந்தியாவின் தமிழ்நாட்டில் 2016, மே மாதமாளவில் தமிழ்நாடு அரசு சட்டசபைக்கான தேர்தல் திருவிழா நடக்கவிருக்கிறது.
தேர்தல் திருவிழாவுக்கான அனைத்து ஆரம்ப வேலைகளையும் அனைத்து கட்சியினரும் சிரம் தழ்த்தி தத்தமது இடங்களை தக்க வைப்பதற்காக கொள்கை கோட்பாடுகளை ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு தேர்தல் விழாவுக்கான நடவடிக்கைகளை பொறுப்பேற்றுக்கொண்டுவிட்டனர்.
முன்னைய செயற்பாடுகளால் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களும், செயற்பாடு இன்றி கிடந்தவர்களுக்கும் பேருதவி செய்யும் விதமாக பெருத்த வெள்ளப்பெருக்கை இயற்கை தமிழநாட்டில் ஏற்படுத்தி கொடுத்து காணாமல்ப்போன கட்சியினரையும் மக்கள் மன்றத்தில் கலக்க வைத்து உதவியிருக்கிறது.
போதாக்குறைக்கு நடப்பில் ஆட்சியிலிருக்கும் ஜெயலலிதா அரசின் ஊழல் மற்றும் மக்களை கண்டுகொள்ளாத ஆண்டான் அடிமை போன்ற மோசமான நடவடிக்கைக்கள் எதிர்த்தரப்பினருக்கு வாக்கு வங்கியை அதிகரிப்பதற்கான அனைத்து செயற்பாட்டையும் செய்து கொடுத்திருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை இரு பெரும் திராவிட கட்சிகளான அதிமுக, மற்றும் திமுக ஆகிய இரண்டுகட்சிகளும் மக்களை ஏமாற்றி இரு பெரு மதங்கள்போல செழித்து வழர்ந்து நிற்கின்றன. இவை இரண்டில் ஒருகட்சிதான் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்பது பணக்கார கட்சிகளான அக்கட்சிகள் மற்றும் அக்கட்சிகளின் பின்னணியில் இருந்து செயற்பட்டுவரும் ஊடகங்களின் விருப்பம்.
ஊடகங்கள் எதை நோக்கி கை காட்டுகின்றனவோ அவற்றை உண்மையென்று நம்பி பின்பற்றுவதுதான் தமிழ்நாட்டு மக்களின் தலைவிதியாக இருந்துவருகிறது.
ஊடகங்கள் தமது விருப்பத்திற்கேற்ப இரண்டு கட்சிகளுக்கும் போட்டி போட்டு தமது ஆதரவு வர்ணனையை தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்கின்றன.
இருந்தும் குடும்பநல அரசியல் கட்டப்பஞ்சாயத்து, நிலமோசடி ஒழுக்கமின்மை போன்றவற்றால் செல்வாக்கு சரிந்திருந்து கூட்டணிகள் மூலம் சரிக்கட்டி ஆட்சியை பிடித்து சுபபோகமாக வாழ்ந்துவந்த கருணாநிதியின் திமுக, 2009ல், நடைபெற்ற ஈழ இனப்படுகொலை அதோடு ஒட்டி வந்த 2 ஜீ ஸ்பெக்ரம் மேஹா ஊழல் காரணமாக படு பாதாளத்தில் வீழ்ந்துவிட்டது.
கருணாநிதியின் கட்சியின் வீழ்ச்சி ஜெயலலிதாவின் அகம்பாவத்தை அதிகரித்ததுடன் மக்களை மதியாமை எதேச்சதிகாரம் ஆகிய ஜெயலலிதாவின் இயல்பான குணநலங்களை இன்னும் அதிகரிக்க செய்திருக்கிறது.
எவர் எப்படி எதை பதிவு செய்தாலும் கருணாநிதியின் படு வீழ்ச்சியின் மூழுமூலம், ஈழ தமிழர்களின் இனப்படுகொலைக்கு கருணாநிதி நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவினார் என்பதே, இதை கருணாநிதியின் மனச்சாட்சியும் மறுக்க முடியாது ஜெயலலிதாவாலும் மறுக்கமுடியாது, வரலாறும் மறுக்கப்போவதில்லை.
இங்குதான் தமிழகத்து அரசியல் அதிகாரத்தின் வெற்றி தோல்வி எதை வைத்து எதனால் தீர்மானிக்கப்படுகின்ற என்பதை புரிந்துகொள்ள முடியும்.
ஈழதேச தமிழர்களின் அரசியலின் அசைவாக்க உந்துதல் இன்றி தமிழ்நாட்டில் எந்த ஒரு பிரிவினரும் அரசியல் செய்ய முடியாது. இதுதான் யதார்த்தம், கடந்தகால வரலாற்றை புரட்டிப்பார்த்தால் இந்த உண்மை யாவரும் புரிந்து கொள்ள முடியும்.
இதுதான் தமிழகத்தின் விதி.
இதிலிருந்து தெரிந்துகொள்ளுவது என்னவெனில் தமிழ்நாட்டிலுள்ள தொண்ணூறு சதவிகித மக்கள் தமிழீழ விடுதலையை வேண்டி வரவேற்பவர்களாகவே இருந்துவருகின்றனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளையும் விடுதலைப்போராட்டத்தையும் மறைமுகமாக கொள்கை ரீதியாக எதிர்த்து அரசியல் செய்துவரும் கருணாநிதி, மற்றும் ஜெயலலிதா இவர்களை தாண்டி தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் கூட ஈழ விடுதலைப்போராட்டத்தை வெளிப்படையாக எதிர்ப்பதற்கு அஞ்சுகின்றனர். காரணம் மக்கள் ஆதரவு தமக்கு இல்லாமல் போய்விடும் என்பதை அவர்கள் நன்கே உணர்ந்திருக்கின்றனர்.
இலங்கையில் 1975 ம் ஆண்டளவில் தொடங்கப்பட்டு இன்றுவரை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக தனி தமிழ் ஈழத்துக்கான ஆயுதப் போராட்டம் நடந்தது, கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் தேசியத்தலைவர் வே பிரபாகரன் அவர்களது தலைமையில் தமிழர்களுக்கான ஆட்சியும் அங்கு நடந்தேறியது.
2009 மே நடந்த இறுதிப்போரில் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் இந்திய அரசாங்கத்தின் சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டது. ( விடுதலைப்போராட்டம் தோற்கடிக்கப்பட்ட விதம். இறுதி போரில் விடுதலைப்புலிகள் சந்தித்த மிக நெருக்கடியான சவால்கள் அனைத்தும் உலக தமிழர்கள் அறிந்த ஒன்றுதான்)
இருந்தும் ஈழ விடுதலைக்கான தமிழர்களின் போராட்டத்தை கொள்கை ரீதியாக எவராலும் தோற்கடிக்க முடியவில்லை. அந்த உண்மையை இந்தியா மட்டுமல்லாது உலகநாடுகள் அனைத்தும் அறிந்து கொண்டே இருக்கின்றன. இப்படி இருக்கும்போது தமிழகத்தின் தமிழ் அரசியற் கட்சிகள் அவறறை புரிந்துகொள்ளாமல் இருக்க முடியாது.
ஈழ போராட்டத்துக்கான தேவை எது என்பதை எந்த ஒரு தமிழனும் உலக அரங்கில் எந்த ஒரு இடத்திலும் உரக்க கூவி கேள்வி எழுப்பக்கூடிய வெளியை ஈழப்போராட்டத்தின் தார்மீக நியாயம் இன்றுவரை எந்த சக்தியாலும் தடுக்க முடியாத வகையில் நியாயப்படுத்தி விட்டிருக்கிறது.
சாதாரணமாக சொல்லுவதாக இருந்தால் போராட்டத்தின் முக்கிய தரப்பான விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்த நாடுகளே தடையை விலக்கிக்கொள்ள தொடங்கிவிட்டன.
இந்தியாவின் அழுத்தம் காரணமாக ஒருசில தரப்புக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தடையை மீளப்பெற தயங்கினாலும் சம்பிரதாய தடைபோலல்லாமல் பெருத்த தடை உத்தரவுகளை பேண எவராலும் முடியவில்லை.
இன்று தனது செயற்பாடுகள் மூலமாக ஜெயலலிதா அரசு மக்கள் மன்றத்தில் மிகுந்த அதிருப்தியை பெற்று கணிசமாக செல்வாக்கு இழந்திருக்கிறது. இந்த இடைவெளியை பயன்படுத்தி எவரை கூட்டு சேர்த்தாவது ஆட்சியை கைப்பற்ற கருணாநிதியின் திமுக பகீரத பிரயத்தனத்தை மேற்கொண்டு வருகிறது.
2011 நடைபெற்ற தேர்தலின்போது விஜயகாந்தை மிக மலிவாக வடிவேலுவை வைத்து விமர்சித்த கருணாநிதி இன்றைய தப்பித்தலுக்காக விஜயகாந்தின் காலடியிலும் விழுவதற்கும் மறுப்பின்றி தயாராகி வருகிறார்.
இருந்தும் கருணாநிதியுடன் கூட்டு சேர எவரும் தயாராக இல்லை என்பதுதான் இன்றுவரையுள்ள கள நிலவரம். இனப்படுகொலையாளி என்று எல்லோராலும் தூற்றப்பட்ட ஒருவனுடன் கூட்டு வைத்துக்கொண்டு எப்படி மக்களிடையே வாக்கு கேட்பது என்ற அச்சம் கூச்சம் காரணமாக எவரும் கருணாநிதியை நெருங்க அஞ்சுகின்றனர்.
அதன் எதிரொலியாகத்தான் கருணாநிதியை புறந்தள்ளிவிட்டு இன்று மக்கள்நல கூட்டணி என்ற பெயரில் வைகோ, திருமா, மற்றும் கம்யூனிஸ்டுக்கள் ஒன்றுசேர காரணமாகியிருக்கிறது. இவர்களுடன் இறுதியில் விஜயகாந்தின் தேமுதிக வும் இணையக்கூடும் இல்லாமல் விஜயகாந்தின் கட்சி பாஜகவுடனும் பயணப்படலாம் வேறு எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம்.
இந்த தேர்தலுக்கான அரசியற் கட்சிகளின் கள வெள்ள ஓட்டத்தில் புதிதாக இணைந்திருப்பவர்கள் சீமானின் தலைமையிலான “நாம் தமிழர்” கட்சியினர்.
சீமான் எவ்வளவுதான் பிரபாகரனின் தம்பி என்று தன்னை முன்னிறுத்தினாலும் மிக மிக உணர்ச்சிகரமாக ஈழம் சார்ந்த பேருரைகளை நிகழ்த்தினாலும், “கத்தி” பட பஞ்சாயத்து, புலிப்பார்வை பட வெளியீடுகளின்போது அவர் எடுத்துக்கொண்ட நழுவல்ப்போக்கு ஈழ மக்களிடம் சீமான் முன்பிருந்த நெருக்கத்தை தொடர்ந்து பேணிக்கொள்ள முடியுமா என்ற கேள்வி பல தளங்களில் எழுந்து அடங்கியிருக்கிறது.
ஆனாலும் இப்போதைக்கு கருணாநிதி போன்று ஈழத்தமிழர்களுக்கு சீமான் பெருத்த ஆபத்தானவர் இல்லை என்பது மேலோட்டமான கருத்து. இன்னும் ஒரு கோணத்தில் பார்த்தால் தமிழ்நாட்டில் அவ்வளவு உறுதியாக நின்று இலகுவில் அரசியலில் கரை சேர்ந்துவிட முடியாது என்ற பொதுவான குணநலனும் புறந்தள்ள முடியாதது.
காலம் ஓட்டத்தில் மக்களிடமிருந்து மறக்கப்பட்டுவிடுவோம் என்ற பயம், .விபச்சார கூட்டங்கள்போல சுயநலவாத அரசியல் வியாபாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து தமது கட்சியை காணாமல் செய்துவிடுவார்களோ என்ற அச்சம், காலம் ஓடுவதால் தொண்டர்களை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் கட்சி கரைந்துவிடுமோ என்ற உள் உதறல் இவைகளை வைத்துதான் தமிழ்நாடு போன்ற களங்களில் அராசியலில் கரையேற வேண்டிய கட்டாயம் சீமானை தளம்பல்நிலைக்கு இட்டுச்சென்றிருக்கலாம். என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர்.
என்ன இருந்தாலும் சீமானின் அரசியல் வரவு என்பது கருணாநிதிக்கு பெருத்த சவால் என்பது மறுப்பதற்கில்லை. தமிழகத்தில் மன்னர்கள் போன்று கோலோச்சும் திராவிட கட்சிகளின் அஸ்தமனமும் அதன் பின் ஒன்றுதிரழும் தேசிய நோக்கம் கொண்ட தமிழகத்து இளைஞர்களின் அரசியல் இயக்க உருவாக்கம் ஒன்றுதான் இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்களிடையே ஒரு மாற்றத்தை உருவாக்க ஏதுவாக இருக்கும்
பதவிக்காக அரசியல் செய்து பதவிக்காக மத்திய அரசாங்கத்துடன் இணைந்து கூத்தாடக்கூடிய அரசியற்கட்சிகள் வீழ்ச்சி பெறாதவரை இந்திய மத்திய அரசு சிங்களவனின் நண்பனாகவே தொடரும் அபாயம் தவிர்க்கமுடியாத ஒன்றாகவே இருக்கும்.
விதிவசமாக இலங்கை இந்தியாவுக்கு பக்கத்தில் அமைந்துவிட்டது. ஆயுதப்போராட்டத்தின்போது அடங்கி கிடந்த சக்திகள் எல்லாம் இப்போ வன்மம் தீர்க்கவும் எழுச்சியை மழுங்கடிக்கவும் முனைப்பு கட்டுவரே தவிர உளப்பூர்வமான செயற்பாடுகளை எதிர்பார்க்க முடியாது.
ஜெயலலிதா தமிழீழத்துக்கு எதிராக செயற்பட்டவர். ஆனால் கருணாநிதி உன்னோடு உன்னோடு என்று சொல்லி கழுத்தறுத்து துரோகம் செய்தவர் இந்த இடத்தில் காலத்தின் கட்டாயத்திற்கமைய சீமானை வலிந்து தமிழகத்து அரசியல் உள்வாங்கியிருக்கிறது பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கையானது அந்தவகையில் சீமானின் வரவு தமிழீழத்திற்கு நன்மை பயற்கிறதோ இல்லையோ தமிழ்நாடுக்கு மிக மிக தேவையான ஒன்றே.
வயசு. வாய்ஜாலம் இவைகளை புறந்தள்ளி புதிய கொள்கைரீதியான சிந்தனை துடிப்பு ஆகியவற்றை கருத்தில்க்கொண்டு சீமானின் நாம் தமிழர் கட்சியை ஊடகங்கள் அங்கீகரிக்கவேண்டும்.
ஈழதேசம். செய்திக்காக
கனகதரன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment