போராட்டம் முடிவுக்கு வந்ததாக சிங்கள அரசாங்கம் கூறிக்கொண்ட கையுடன் இந்தியாவுடன் சேர்ந்து ஸ்ரீலங்கா அரசாங்கம் உலகநாடுகளுக்கு கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம். தீவிரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்துள்ளோம் இனி தாமதமில்லாமல் அப்பாவித்தமிழருக்கான சரியான அரசியல்த்தீர்வு உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதாகும்,



அடுத்து வந்தநாட்களில் 1987ல் இந்தியாவால் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழர்தரப்பால் நிராகரிக்கப்பட்டிருந்த 13 திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த உடனடியாக தயாராகிவிட்டோம் தமிழரின் நலனை கருத்தில் கொண்டு அதற்கு மேலேயும் சென்று அதிகாரங்கள் தமிழர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்றும் ஸ்ரீலங்கா இந்தியாவால் கூட்டாக விளம்பரப்படுத்தப்பட்டது.

பாமரத்தமிழர்கள் சிலர் இதை முற்று முழுதாக நம்பியதுமுண்டு. அதற்கான ஆரம்ப ஆயத்த ஆலோசனைகளை இந்திய அரசுடன் ஆலோசித்து நடைமுறைப்படுத்த ஆராய்ந்துகொண்டிருக்கிறோம் என்ற பரப்புரையுடன் இந்தியாவும் இலங்கையும் மாறி மாறி பயணங்களும் அறிக்கைகளும் தொடர்ந்தன. போதாக்குறைக்கு தமிழர்களால் படுகொலைக்குற்றவாளி என இனங்காணப்பட்டு உதாசீனப்படுத்தப்பட்டு புறந்தள்ளப்படிருந்த தமிழகத்தின் முதல் மந்திரி கருணாநிதியின் கடித நாடகங்கள் ஒருபுறம் ஈடேற்றப்பட்டு ஓய்ந்துபோய் விட்டன, எதுவும் நடக்கவில்லை.

ஈழத்தில் தமிழரின் நிலமை நாளுக்கு நாள் படுமோசமாகிக்கொண்டு போவதை ஏன் என்று கேட்பதற்கும் இன்று ஒருவருமில்லை. சிங்கள அரசாங்கம் நினைத்ததை இராணுவத்தின்மூலம் வடக்கு கிழக்கில் ஈடேற்றப்படுகிறது. அதற்கு பக்கபலமாக தமிழினத்தின் அழிவுச்சக்திகளான தமிழக முதல்வர் மு கருணாநிதி, டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான், கேபி, என்று பலருடன் யாழ் அரசாங்க அதிபர் அவர்களும் சேர்ந்து சிங்கள அரசுக்கு முண்டுகொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆனாலும் ஈழத்து பூர்வீக தேசிய இனமான தமிழர்களின் 60 ஆண்டுகால போராட்டம் தமிழர்களுக்கான சரியான தீர்வு எட்டப்படாதவரை பிரிவினைக்கான காரணங்களோடு விடுதலைக்கான தேவையும் இலங்கை மண்ணில் நீறுபூத்த நெருப்பாக இருந்துகொண்டிருக்குமே தவிர, அணைந்துபோவதர்க்கான சாத்தியங்கள் எந்தச்சந்தற்பத்திலும் காணப்படவில்லை. அல்லது எவராலும் தோற்றுவிக்கப்படவில்லை. இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்கான சூழ்நிலை பலகாலங்களில் இயல்பாகவும், இறுக்கமான நடவடிக்கைகளினாலும் ஏற்பட்டிருந்தது. ஆனால் துரதிஸ்டவசமாக எவரும் சூழலை சரியாகப்பயன்படுத்தவில்லை என்பது கடந்தகாலப்படிப்பினை.

நேற்றுவரை இதற்கான காரணங்கள் ஒவ்வொரு கட்டங்களிலும் பற்றி எரியும் நிலையிலேயே கனன்றுகொண்டிருக்கிறது. பலர் இன்று மறந்துவிட்ட புத்தர் சிலை நிர்மாணிப்புடன் வீதிகளுக்கான சிங்கள பெயர் சூட்டலும் முடிவற்ற தொடர்கதையக கடந்த வெள்ளி, சனி இரவுகளில் ஒரு தொகை சிங்கள குடும்பங்கள் இராணுவ பாதுகாப்புடன் யாழ். நாவற்குழி வீடமைப்புத் திட்டத்தில் சிங்கள அரசால் திட்டமிட்டு குடியேற்றப்பட்டுள்ளன. இதற்கு முன் சுமார் 30 குடும்பங்கள் வரை குடியேற்றப்பட்டு இருந்தன. தற்போது மொத்தமாக 55 குடும்பங்கள் வரை இங்கு குடியமர்த்தப்பட்டிருக்கின்றன. இங்கு இக்குடும்பங்களுக்கு தேவையான கொட்டில்களை இராணுவ சிப்பாய்கள் அமைத்து கொடுத்துள்ளனர். வீடமைப்புத் திட்டத்தின் மூன்றில் இரண்டு பகுதி இச்சிங்கள குடும்பங்கள் வசம் தற்போது உள்ளது.urrurrnewsnews

இந்தச்சூழல் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற யதார்த்தத்தை கிஞ்சித்தும் சிந்திக்காது புறக்கணித்து அரசு எல்லாவற்றையும் இராணுவ அடக்குமுறைக்குள் கொண்டுவர ராஜபக்க்ஷவும் ஒட்டுக்குழுக்களும் முனைப்புடன் செயற்படுகின்றன. 1980 களில் சுமூகமாக யாழ்மாவட்டத்திற்குள் வாழ்ந்த பல ஆயிரம் குடும்பங்கள் தமது இருப்பிடங்களை இராணுவத்திடமிழந்து தமது காணிகள் வீடுகள் எப்படியிருக்கின்றன எங்கேயிருக்கின்றன என்று தெரியாமல் தொலைத்துவிட்டு அலைந்துகொண்டிருக்கும்போது தெற்கேயிருந்து அரசாங்கத்தால் அனுப்பிவைக்கப்பட்ட சிங்களவர்களுக்கு இராணுவ மரியாதையுடன் தமிழரின் பூர்வீக நிலம் பகிரப்படுகிறது.

தந்தை செல்வநாயகம் அவர்களின் காலத்திலும் அதற்குப்பிந்திய அமிர்தலிங்கம் காலத்திலும் தொடர்ச்சியாக நிலவிய தீர்வுக்கான சூழ்நிலைகளை உதாசீனப்படுத்திய சிங்கள ஆட்சியாளர்கள் தமிழினத்தை வழிநடத்திய விதம் விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் இன்னும் பிற போராட்டக்குழுக்களையும் இலங்கைக்கு அறிமுகப்படுத்திய துரதிஸ்டம் நிகழ்ந்திருந்தது. போராட்டக்குழுக்கள் உருவானதற்கான முழுப்பொறுப்பும் சிங்கள ஆட்சியாளர்களையே சாரும். நாட்டின் பதட்டநிலைக்கும் சிங்கள ஆட்சியாளர்களே என்றைக்கும் பொறுப்பாக இருந்துகொண்டிருக்கின்றனர்.

news30 வருடங்களுக்கும் மேலாக வடக்கு கிழக்கையும் இலங்கைத்தீவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தமிழரின் திடமான விடுதலைப்போராட்டம் முடிக்கப்பட்டதாக கூறப்பட்டு சண்டை இல்லையென்று உலகுக்கு சிங்கள அரசுபறைசாற்றினாலும் நாடு இராணுவமயப்படுத்தப்பட்டு தமிழர்களின் உணர்வுபூர்வமான மனிதசுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில். சுமூக நிலைக்கு மாறாக பாலியல் பலாத்காரங்களும் படுகொலைகளும் கப்பம் கோரலும் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களும் தமிழர்களை சிறுமைப்படுத்துவதிலேயே சிங்கள அரசு முனைப்புக்காட்டி இம்சைப்படுத்தி வருகிறது. இதன் வெளிப்பாடு ஒவ்வொரு தமிழனின் மனதில் ரணமாக கொதித்துக்கொண்டிருந்தாலும் வெளிக்காட்டமுடியாத அச்சுறுத்தல் தமிழினத்தை சூழ்ந்துகொண்டிருப்பதைக்காணலாம் .

இருந்தும் திரும்பவும் எங்கோ எப்போவோ வெளிப்படவேண்டிய தமிழரின் உணர்வின் சமிக்ஞையை சமீபத்தில் யாழ் செயலகத்தில் நல்லிணக்க ஆணைக்குழு முன்னதாக வாக்குமூலம் அளித்த நிகழ்வின்போது யாழ் மாவட்ட அரசியல் பிரமுகரும் அரச சார்பற்ற அமைப்புப் பிரதிநிதியுமான சிவிகே சிவஞானம் அவர்கள் இயல்பாக தனது கருத்தில் இந்த ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார். யுத்தம் என்பது முடிவல்ல எங்களது அபிலாசைகள் என்றுமே முடிவற்றதாகும், யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதன் மூலம் எமது அபிலாசைகளும் முடிவிற்கு வந்து விட்டதாக அர்த்தப்பட மாட்டாது என சிவிகே சிவஞானம். யாழ் செயலகத்தில் நல்லிணக்க ஆணைக்குழு முன்னதாக வாக்குமூலம் அளித்த நிகழ்வில் தெரிவித்தார். உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜனநாயக வழியில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். அந்தப் போராட்டம் வெற்றியளிக்காவிட்டால் மீண்டுமொரு "ஆயுதப் போராட்டம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது" எனவும் தெரிவித்தார்.(


இக்கருத்து யதார்த்தமாக ஒவ்வொரு மனிதனிடமிருந்து வெளிவரத்துடிக்கும் உள்ளக்கிடக்கையாகவே காணலாம். இராணுவமயப்படுத்தி தமிழனைக்கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என்பது சிங்கள அரசின் திட்டமாகவிருந்தாலும். நீண்டகாலத்துக்கு இராணுவமூலம் அமைதியை தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்பதும் ஆய்விற்குரிய விடயமாகும், அத்துடன் திரு சிவஞானம் அவர்கள் தெரிவித்ததுபோல அடுத்து உடனடியாக ஒரு ஆயுதப்போராட்டம் தோற்றுவிக்கப்படலாம் என்பதெல்லாம் உணர்வின் வெளிப்பாடான வாதம் என்றே கருதினாலும். அரசாங்கம் வஞ்சக நோக்கத்தோடு தமிழர்களை பழிவாங்கும் நடவடிக்கையாக தொடங்கப்பட்டிருக்கும் தொலைநோக்கற்ற சிங்களக்குடியேற்றத்திட்டங்கள் மற்றும் மனித உரிமை நெருக்கடிகள் பெருத்த சிக்கலை இரு சமூகத்தினூடேயும் தோற்றுவிக்கும் என்பது எவரும் தவிர்க்க முடியாது.

இதுவே நாளடைவில் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு வழிகோலும் ஊற்றுவாயாகும். இன்று உரிமைகள் மறுக்கப்பட்டு நடைப்பிணமாக தமது இடங்களிலேயே குடியமர முடியாமல் அல்லலுறும் தமிழ்ச்சமூகத்தின் வேதனையை சிங்களக்குடியேற்றங்கள் சீண்டி வெறுப்பேற்றுமே தவிர அமைதியை ஒருபோதும் ஏற்படுத்தப்போவதில்லை.

வெளிநாடுகளும் வெளியுறவுக்கொள்கைகளும் எல்லாக்காலங்களிலும் அடக்குமுறைக்கும் துணைபோய்க்கொண்டிருக்குமென எதிர்பார்க்கமுடியாது, இந்திய வெளியுறவுக்கொள்கை அங்கு ஆட்சியிலிருக்கும் அரசாங்கங்கள் மாறுபடும்போது கேள்விக்குறியாகிவிடும். தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியும் திமுகவும்தான் இந்தியா என்று அரசியலில் தீர்மானித்துவிட முடியாது. இருதுருவங்களான சீன, இந்திய, நாடுகளுக்கான இலங்கையின் உறுதியற்ற வெளியுறவுக்கொள்கை இன்றய சூழ்நிலைக்கு தாக்குப்பிடித்தாலும் தொடர்ந்து அந்த நாடுகளில் ஏற்படும் அரசியல் மாற்றங்களின்போது ஸ்ரீலங்கா அரசின் தந்திரம் வெளுத்துப்போவதற்கு நிறையவே சந்தற்பங்கள் இருக்கின்றன.

சிங்கள அரசாங்கத்தின் இப்பேற்பட்ட சமூக அநீதி, அதற்குத்துணைபோய்க்கொண்டிருக்கும் இந்திய ஆட்சியாளர்களின் செயற்பாடும் இந்தியாவின் உள்நாட்டு அரசியலிலும் அமைதிக்குலைவை உண்டுபண்ணும். இவற்றை இந்தியா உணரவேண்டிய வாய்ப்புக்களையும் புறந்தள்ள முடியாது. ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரல் இன்று தமிழ்நாட்டில் அதிகமாக உணரப்பட்டிருக்கிறது. சீமான் தலைமையிலான "நாம் தமிழர்" இயக்கம். வழக்குரைஞர் புகழேந்தி தலைமையிலான "தமிழக மக்கள் உரிமைக்கழகம்", தமிழக அரசியல்வாதிகளான வைகோ, நெடுமாறன் போன்றோரின் இடைவிடாத ஈழ ஆதரவுக்குரல் இவற்றை இந்திய அரசு தொடர்ந்து உதாசீனப்படுத்துமாகவிருந்தால் தமிழ்நாட்டிலும் பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் காரணியாக ஈழ அடக்குமுறை மாற்றம்காணலாம்.

newsஇந்திய அரசியல்வாதிகளை தவிர்த்து தமிழகமக்கள் என்ற இடத்திற்கு வந்துபார்த்தால் ஒரு அதிசயமான உண்மை எவராலும் உணரலாம், 2009 ம் ஆண்டும் அதற்கு முன்னும் ஈழ அழிப்பின் வேதனை தாங்காது தம்மையும் தமது குடும்பத்தையும் மறந்து இந்திய அரசாங்கத்தின் அராஜகத்திற்கு எதிராக தனித்தனி மனிதராக இந்திய மத்திய மானில அரசுகளை வழிக்கு கொண்டுவரவேண்டுமென்கின்ற நோக்கத்தோடு தமிழகத்தில் தீக்குளித்து தம்மை கருக்கி உயிர் துறந்தவர்கள் 18க்கும் மேல் இது ஒரு சாதாரண சம்பவமல்ல உலகத்தில் மிகவும் அரிதாக நடக்கும் அதிசயமாகும். தமிழகத்து பாமரமக்களின் இன உணர்வை சாதாரணமாக எவரும் எடைபோடமுடியாது. உயிரை துச்சமென மதிக்கும் இன உணர்வாளர்கள் தமிழ்நாட்டில் நிறையவேயுண்டு.

உலகத்தை வியப்பிலாழ்த்திய விஞ்ஞானிகளையும் அதிக இராணுவ பலத்தையும் கொண்ட, உலகத்தில் மிகப்பெரிய நிலப்பரப்பைக்கொண்ட இரும்புத்திரை நாடென்று அழைக்கப்பட்ட சோவியத்யூனியன் உடைந்துபோன வரலாறுகளுமுண்டு, அந்த உடைவுக்கான காரணங்கள் வேறாக இருந்தாலும் ஒருநாட்டின் ஒற்றுமையும் உடைவும் மக்களின் கைகளில் தங்கியிருக்கிறது. இன்றுவரை இந்தியா ஒருநாடு என்று கூறப்பட்டாலும் இந்தியா ஒரு துணைக்கண்டம் என்பதே உண்மை. இந்தியா ஒரு தேசிய இனத்தைக்கொண்ட ஒரு மொழி வரலாறு கொண்ட நாடுமல்ல. பலமொழிப்பாரம்பரியத்தைக்கொண்ட 24 க்கு மேற்பட்ட வெவ்வேறு மொழிகலாச்சார பின்னணிகொண்ட மானிலங்களையும் இரண்டு யூனியன் பிரதேசங்களையும் தன்னகத்தேகொண்டு தொங்கிக்கொண்டிருக்கிறது, ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தான் பாக்கிஸ்தானும் தொங்கலிலிருந்து துண்டித்துக்கொண்டன.

இந்தியாவில் வடக்கு தெற்கு என்ற வேறுபாடும் பாகுபாடும் சாதிய சீரழிவுகளும் மகாத்மாகாந்தி காலத்திலிருந்து இன்றுவரை தொடர்கிறது.இந்தியக்கிராமங்கள் பல 1700, 1800 களிலிருந்த நிலையிலேயே இப்போதுமிருக்கின்றன உத்ரபிரதேசம் மத்தியபிரதேசம் பீகார் ஒரிசா போன்ற இடங்கள் வறுமையின் பிடியில் படிப்பு மற்றும் அரசியலறிவற்ற பாம்பாட்டிகளும் பழங்குடிகளும் இருப்பதால் ஆட்சியாளர்கள், ஏமாற்றி ஆட்சிசெய்கின்றனர் தமிழ்நாட்டிலும் வறுமை இருந்தாலும் இன்று பல இளைஞர்கள் போராட துணிந்துவிட்டனர். 90 வயதாகும் எழுந்திருக்க முடியாத முதியவரான கருணாநிதியுடன் அவரது திராவிடக்கட்சியின் கதையும் முடிவுக்கு வந்துவிடும், 2011 ஆண்டுக்கான சட்டசபை தேர்தலில் கருணாநிதி வெற்றிபெறுவதென்பது கேள்விக்குறியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது. இப்படிப்பட்ட நெருக்கடி நேரங்களிலெல்லாம் கருணாநிதி ஈழப்பிரச்சினையை கையிலெடுப்பதையே வாடிக்கையாகக்கொள்ளுவதுண்டு, இனி வருங்காலங்களில் அவரது தந்திரம் பலிப்பது சுலபமானதுமல்ல.

ஈழப்பிரச்சினையிலிருந்து இந்திய அரசியல்த்தலையீடு விலகிவிடவேண்டும் அல்லது சுமூகமாகத்தீர்க்கப்படவேண்டும். என்பது தமிழகத்து நியாயமான அரசியல்வாதிகளினதும் பொதுவான உலக அபிப்பிராயமும். தமிழகத்து அரசியல்க்கட்சிகள் அனைத்தும் தமது அரசியலை கொண்டுசெல்ல ஆதாரமாக பற்றிப்பிடித்திருப்பதும் ஈழத்தமிழர் பிரச்சினையே, எனவே இனி ஈழத்தமிழர்கள் மவுனம் சாதித்தாலும் தமிழ்நாட்டு அரசியலில் ஈழப்பிரச்சினை மறக்கப்படாத ஒன்றாகவே இருக்கும். அங்குள்ள போலி அரசியல்வாதிகள் போர் முடிவுக்கு வந்த குறுகிய காலங்களில் மக்களால் இனங்காணப்பட்டிருக்கின்றனர் இவர்களில் குறிப்பிடக்கூடியவர்கள் திருமாவளவன் தலைமையிலான விடுதலைச்சிறுத்தைகள், மற்றும் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளிமக்கள்கட்சி.

ஆனல் என்றும் மாறாக்கொள்கையுடன் உறுதியுடனிருக்கும் நாம் தமிழர் இயக்கம் சீமான், வைகோ, நெடுமாறன் போன்றோர்களுடன் வழக்குரைஞர் புகழேந்தி தலைமையிலான தமிழக மக்கள் உரிமைக்கழகம், ஆகிய அமைப்புக்களின் உறுதியான செயற்பாடுகளுடன் புலம்பெயர் ஈழத்துச்சமூகமும் ஒற்றுமையுடன் செயலாற்றினால் காலதாமதமானாலும் ஈழத்தின் ஐந்தாங்கட்ட போர் அல்லது அரசியல் தீர்வோடு ஈழத்தின் துயரம் முடிவுக்கு கொண்டுவரப்படலாம். எல்லாவற்றிற்கும் புலம்பெயர் தமிழினத்தின் ஒற்றுமை ஒன்றே மிகப்பெரும் சக்தியாகும்,

ஈழதேசம் இணையத்திற்காக,
கனகதரன்

நன்றி ஈழதேசம்