உலகின் எந்த நாட்டிலும் நடமாடமுடியாதபடி சிங்கள இனவெறியன் ராஜபட்சேவை விரட்டி விரட்டி அடிக்கும் புலம்பெயர் தமிழ்ச் சொந்தங்களுக்கு நாம் தமிழர் கட்சி நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்தியா முதலான எல்லா நாடுகளிடமிருந்தும் ஆயுதம் வாங்கி, எங்கள் சொந்தங்கள் ஒருலட்சம் பேரைக் கொன்று குவித்தவன் அந்தக் கொலைவெறியன். இன்று அந்த இனவெறியனால் எந்த நாட்டுக்கும் போகமுடியாத நிலை.
லண்டனிலிருந்து அமெரிக்கா வரைஇ ராஜபட்சேவை ஒரு விரும்பத்தகாத விருந்தாளியாகக் கருதும் அளவுக்கு ஒன்றரை ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அந்த அளவுக்கு வலுவான போராட்டங்களை நடத்தி வரலாறு படைத்திருக்கும் எங்கள் புலம்பெயர் சொந்தங்கள் ஒவ்வொருவரையும் வரலாறு வாழ்த்தும்.
ராஜபட்சே என்கிற அந்த கொடுங்கோலன், சொந்த நாட்டின் மக்கள் மீதே விமானக் குண்டுவீச்சு நடத்தியவன் - பச்சைக் குழந்தைகளைக் கூட கொன்று குவித்தவன் - பல ஆயிரம் அப்பாவிகளைப் பட்டினி போட்டே சாகடித்தவன் - மிகக்கொடிய நச்சு ஆயுதங்களையும் ரசாயனக் குண்டுகளையும் ஈவிரக்கமில்லாமல் பயன்படுத்தியவன் - எங்கள் தமிழ்ச் சகோதரிகள் கதறக் கதறப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்டதற்கு முழுமுதல் காரணகர்த்தா. அந்தக் கொடுமையாளன் செல்கிற இடத்திலெல்லாம், தமிழ் மக்கள் விழிப்போடும் உறுதியோடும் நின்று போராடுவதைப் பார்க்கும் போது, எங்கள் இனம் எத்தகைய அழிவிலிருந்தும் மீண்டு எழும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் உடல் தகனம் செய்யப்பட்ட மறுநாள், கடும் குளிரையும் கொட்டுகிற பனியையும் பொருட்படுத்தாமல், தேசியத் தலைவர் அண்ணன் பிரபாகரன் படத்தை ஒரு கையிலும், தம்பி முத்துக்குமார் படத்தை மறுகையிலும் ஏந்தியபடி லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் ஒன்றேகால் லட்சம் இளைஞர்கள் திரண்டார்கள்.
ஈழப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் முன்னணியில் இருக்கும் கனடாவிலும், பிரான்ஸ் முதலான ஐரோப்பிய நாடுகளிலும், லட்சக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் திரண்டார்கள். எங்கள் தேசியத் தலைவர் பிராபகரன் என்கிற பதாகைகளை ஏந்தி வந்தார்கள். ஈழப்போராட்டம் அடுத்த தலைமுறையின் கைக்கு வந்துவிட்டது என்பது அப்போதே உறுதியாகிவிட்டது.
இப்போதும், லண்டனில், கொட்டுகிற பனியில் நனைந்தபடி ராஜபட்சேவை விரட்ட ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள், உலகெங்குமுள்ள தமிழ்ச் சொந்தங்களுக்கு தெளிவான பாதையைக் காட்டியிருக்கிறார்கள். ஒன்று சேர்ந்து உறுதியுடன் நின்றால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்ததோடு, 'ராஜபட்சே ஒரு நாட்டின் அதிபரல்ல, ஓர் இனத்தைப் படுகொலை செய்த கொலைவெறியன்' என்பதை சர்வதேச அளவில் நிலைநிறுத்தியும் உள்ளார்கள்.
ராஜபட்சேவை மட்டுமில்லாமல் இனப்படுகொலைக்குக் காரணமான ஒவ்வொருவரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அந்தக் கடமையை நிறைவேற்றாவிட்டால் வாகரையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட நமது சொந்தங்களுக்கு நியாயம் கிடைக்காது. அந்தக் கடமை முடியும்வரை, மெய்வருத்தம் பாரோம், கண் துஞ்சோம், அஞ்சோம் - என்று உறுதியேற்போம்.
No comments:
Post a Comment