Saturday, January 8, 2011

தொல் திருமாவளவனின் பரிணாம வீழ்ச்சி

ரோஷப்பட்டேனா நான் ?


இந்திய உளவுத்துறையும் இலங்கை அரசும் இணைந்து புலிகளின் அண்மைத் தாக்குதல் பற்றிய கட்டுக்கதைகள் பரப்புகின்றன. இந்தியாவில் நடக்கவிருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டு விட்டதாகவும் புலிகளின் அடுத்த இலக்கு இலங்கையின் பொருளாதார மையங்கள் தான் என்றும். இரு பகுதியும் ஒருமித்த குரலில் கூறுகின்றன.

இந்திய முன்னணிச் செய்திப் பத்திரிகை ரைம்ஸ் ஒப் இந்தியா ஒருபடி மேலே போய் இந்தியப் பிரதமர், காங்கிரஸ் கட்சித் தலைவி, அவருடைய சற்புத்திரர், உள்துறை அமைச்சர் ஆகியோரைத் தாக்கப் புலிகள் திட்டம் தீட்டியுள்ளனர் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

செத்தும் கொடுத்தான் சீதக் காதி என்பார்கள் புலிகளை சாக்காக வைத்து அரசியல் நடத்தும் திட்டம் இந்திய இலங்கை அரசுகளுக்கு இருப்பதை இதன் மூலம் காணலாம் சிந்தனை வறட்சியும் தடுமாற்றமும் இரு பகுதியிடமும் காணப்பட்டாலும் தமிழர்களை ஓரங்கட்ட வேண்டும் என்ற இலக்கு மாத்திரம் உறுதியாக இருக்கிறது.

சென்ற வருட டிசம்பர் 22ம் நாள் சென்னையில் தமிழக எழுத்தாளர்களையும் பத்திரிகையாளர்களையும் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி உண்மைக்குப் புறம்பான பல தகவல்களை வெளியிட்டார். எதிர்பாராத விதமாகச் சில பத்திரிகையாளர்கள் அவரை நிலைகுலைய வைத்த ஈழத் தமிழர் தொடர்பான கேள்விகளைக் கேட்டனர்.

ஈராக்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் மீது காலணித் தாக்குதல் நடத்திய தன்மானமுள்ள பத்திரிகையாளன் முண்டாதர் அல் ஜெய்தி போன்ற ஒருவரும் இந்தச் சந்திப்புக்கு வரவில்லை.

அதை விட ராகுலின் பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு வரும் ஊடகவியலாளர்களின் காலணிகள் களையப்படுவது வழமையாகி விட்டது. காலணி என்றால் அவருக்கு அலர்ஜி என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈழத்தமிழர்களுக்கு இவ்வளவு கொடுமை நடந்தும் இலங்கைக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி கண்டனக் குரல் எழுப்பவில்லை என்று ஒரு அப்பாவிப் பத்திரிகையாளர் கேட்டார். அத்தனைக்கும் ஊக்கமும் ஆக்கமும் அளித்தது இந்தியா தான் என்பதை மறந்து அவர் இந்தக் கேள்வி கேட்டார்.

பதிலளித்த ராகுல் தமிழ் நாட்டில் நடத்திய ஐந்து பொதுக்கூட்டங்களில் இலங்கை அரசை கண்டித்தேன் என்று கூறினார். உயர் மட்டத்தில் தமிழர்கள் மீதான தாக்குதல்களுக்கு உத்தரவிட்ட இந்திய அரசின் வருங்காலத் தலைவர் இந்தப் பதில் மூலம் யாரை ஏமாற்றப் பார்க்கிறாரோ தெரியவில்லை.

தமிழ் நாட்டுத் தலைவர்கள் கிணற்றுத் தவளைகள் போல் தமது மாநிலத்தின் கட்டுக்கோப்பிற்கு வரவிருக்கும் அல்லது ஏற்கனவே வந்துவிட்ட ஆபத்தை உணராமல் அரசியல் நடத்துகின்றனர். இன்று உனக்கு நாளை எனக்கு என்பது வரலாற்று உண்மை.

ஈழத்தமிழர் வாழ்வை அழித்த இந்திய ஆளும் வர்க்கம் அடுத்த கட்ட நடவடிக்கையாகத் தமிழ்நாட்டில் கண் வைத்துள்ளது. தமிழ்நாட்டில் 6.5 கோடி மக்கள் உள்ளனர். சாதிகள் 500 வரையில் அவை உயர், இடை, கடை என்ற மூவிதமாக வகுக்கப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்டோர் என்ற ரகமும் உண்டு.

இந்தியாவில் சாதி தான் அரசியல். சாதியை முன்நிறுத்தி வாக்குக் கேட்பார்கள். சண்டை சச்சரவுகளும் சாதி அடிப்படையில் நடக்கும். முப்படை, காவல்துறை, நிர்வாக சேவைகளின் தலைமை அதிகாரிகள் உயர் சாதியினராவர்.

ஊசிக் கண் ஊடாக ஒட்டகம் நுளைவது போல் அடித்துத்தட்டுச் சாதியினர் சிலர் தமது அசாத்திய திறமை மூலம் உயர் பதவியில் அமர்ந்துள்ளனர். வேறு சிலர் உயர் சாதிக் குடும்பத்தினரின் ஆதரவும் சொந்தத் திறமையும் ஒன்றுபட்டதால் மேலுக்கு வந்துள்ளனர்.

தமிழ் நாட்டு வன்னியர்களின் எண்ணிக்கை 2.5 கோடி. தமிழ் நாட்டில் தான் மிகக் கூடுதலான எண்ணிக்கையில் வன்னியர்கள் உள்ளனர் ஒரு முறை கூட வன்னியர் ஒருவர் முதல்வராக வர முடியவில்லை. வன்னியர்களை மிகவும் நுட்பமாகக் காங்கிரஸ் கட்சியினர் பிரித்துள்ளனர்.

வன்னியர்களுக்குச் சொந்தமான வன்னியர் சங்கம் 1990ல் பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றப்பட்டது. கட்சியைச் சாதி அரசியலுக்குள் முடக்காமல் உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்குப் பயன்தரும் வகையில் பா.ம.க கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் மக்கள் தொலைக்காட்சியை நிறுவி அரும் பணி ஆற்றுகிறார்.

அவருடைய உலகெலாம் தூய தமிழ் பரப்பும் பணிக்காக உலகத் தமிழ்க் காவலர் என்ற விருதை மலேசிய வன்னியர் சங்கம் அவருக்கு வழங்கியுள்ளது. தொலைக்காட்சியைப் பயன்தரு மாற்று ஊடகமாக மாற்றிய தனிச்சிறப்பு அவருடையதாகும். கேளிக்கைச் சாதனத்தை அறிவுச் சாதனமாக மாற்றியவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள்.

இன்னொரு சாதிக்கட்சித் தலைவரான தொல் திருமாவளவன் குளிக்கச் சென்று சேற்றை உடலில் பூசியவர் போல் சாக்கடை அரசியல் நடத்துகிறார். கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழியின் வழியில் அவர் தனது சாதிக் கட்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் என்று பெயரிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிகரான கட்சி என்று விடுதலைச் சிறுத்தைகள் பற்றி எண்ணியவர்கள் ஏமாற்றுப்பட்டுள்ளனர். ஈழத் தமிழினத்தின் விடுதலைக்காகவும் பரந்து விரிந்த உலகத் தமிழினத்தின் எழுச்சிக்காகவும் உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் அரசியல் கட்சி அல்ல.

தொல் திருமாவளவன் சுயலாபத்திற்காக அரசியல் நடத்துபவர். ஒரு எம்பி பதவிக்காக அவர் அடிக்கும் பல்டிகள் பரிதாபகரமானவை. தன்னை வளர்க்க அவர் எடுக்கும் முயற்சிகள் அவரை இனம் காட்ட உதவுகின்றன. வீரம், மானம், நடத்தை, தெளிவு என்பனவற்ற சோதாப் பயலாகக் காட்சிதருகிறார்.

தனது சாதிக்குத் தன்னும் தொல் திருமாவளவன் விசுவாசமாக இருக்கிறாரா என்பது சந்தேகமே. சாதியின் பெயரால் அரசியல் நடத்தித் தன்னை உயர்த்துவதே அவர் அடிப்படை நோக்கம். இதற்காக ஒட்டுமொத்த தமிழினத்தைக் காட்டிக்கொடுக்கத் தயங்காத அற்ப மனிதனாக அவரை வர்ணிக்கலாம்.

சாதி என்ற குறுகிய வட்டத்திற்குள் நிற்காத தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் சாதி பற்றி ஒருபோதும் சிந்திக்காதவர். அவர் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர். அவர் இலட்சியங்களில் தமிழினத்தைப் பீடித்துள்ள சாதியத்தை ஒழித்துச் சமத்துவமான சமுதாயத்தின் தோற்றம் முதலிடம் வகிக்கிறது.

இது தொடர்பில் அவர் சொன்னதொரு முக்கிய கருத்தை இங்கு பதிவு செய்கிறோம். “நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழுங்கள். நாடு பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே. எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது.

தன்னை ஈழத்தமிழர்களின் நண்பனாகக் காட்டிய தொல் திருமாவளவன் சிறிது காலம் அவர்களால் பாச உறவாகப் பார்க்கப்பட்டது உண்மையே. தான் பிரபாகரனுக்கு நெருக்கமானவர் என்று காட்டுவதற்காக அவர் வன்னிக்கு வருகை தந்து ஒட்டி உறவாடினார். இதையும் ஈழத்தமிழர்கள் வரவேற்றனர்.

எளியேனின் கண்ணில் ஒரு காட்சி விரிகிறது. தேசியத் தலைவருடன் நெருக்க உறவைக் காண்பித்த தொல் திருமாவளவனுக்குச் சம்பிரதாய பூர்வமாக வாழை இலையில் உணவளிக்க பிரபாகரன் விரும்பினார். உபசரிப்பின் முக்கிய பகுதியாகச் செம்பும் தண்ணீரும் வழங்கிக் கை கால் அலம்பும்படி கேட்டுக் கொண்டார்.

பாசாங்கு செய்தாரோ என்னவோ தெரியவில்லை. திருமாவளவனின் கண்கள் பனித்தன. ‘தமிழ் நாட்டில் உணவு நேரம் நெருங்கியதும் உயர் சாதித் தலைவர்கள் ஏதோ சாக்குப் போக்குச் சொல்லி வெளியேற்றி விடுவார்கள். நீங்கள் என்ன வென்றால்” என்று சொல்லி நிறுத்தினார்.

ஈழத் தமிழர்களையும் தேசியத்தலைவர் பிரபாகரனையும் மூலதனமாக்கி அரசியல் நடாத்தும் திட்டம் தொல் திருமாவளனிடம் நெடுகாலம் இருக்கிறது. வேறு சதி நோக்கும் இருக்கலாம். புலம் பெயர் உறவுகள் இதை நன்கு உணர்ந்து தாம் நடத்தும் தேசிய நிகழ்வுகளுக்கு அவரை அழைக்காது விடுத்துள்ளனர்.

எனினும் தொடர்பு இன்னும் இருப்பது போல் தொல் திருமாவளவன் காட்டிக் கொண்டிருந்தார். தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் உரிய அனுமதியுடன் மருத்துவ சிகிச்சைக்காகத் தமிழகம் சென்றபோது திட்டமிட்டுத் திருப்பி அனுப்பப்பட்டார்.

அரசியல் குடிலன் கருணாநிதியும் அவருடைய சகா சிதம்பரமும் இந்த அநாகரியச் செயலைப் புரிந்தனர். நாடு திரும்பிய மூதாட்டியைத் தான் தமிழகம் கொண்டு வரப் போவதாக திருமாவளவன் மலிவான பத்திரிகை விளம்பரம் தேடுவதற்காகச் சூளுரைத்தார். ஆனால் செய்யவில்லை.

செட்டிக்குளம் தடுப்பு முகாமில் முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்ட ஈழத் தமிழர்களைப் பார்வையிட டி.ஆர்.பாலு தலைமையில் ஒரு குழுவை இந்திய நடுவண் அரசு அனுப்பியது நினைவிருக்கலாம். அந்தக் குழுவோடு ஒட்டிக் கொண்டு திருமாவளவனும் வந்து சேர்ந்தார்.

புகைப்படக் காரர்களுக்கு முகங்காட்டி மலிவான விளம்பரம் தேடுவதற்காக இந்தச் சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொண்டார். முகாமில் அடைக்கப்பட்டோருடன் பேசுவதற்கு அவர் மறுத்துவிட்டார். யாழ் நூலக மண்டபத்தில் நடந்த பொது மக்கள் சந்திப்பில் கலந்த போதும் மெனனமாக இருந்தார்.

டி.ஆர். பாலு குழுவினர் கொழும்பில் அதிபர் ராஜபக்சவைச் சந்தித்தபோது தொல் திருமாவளவனும் கூட இருந்தார். அது போதாதென்று தான் கொண்டு சென்ற பொன்னாடையை ராஜபக்சவுக்குப் போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தார். ஒரு இனப் படுகொலையைச் செய்த ஒருவருக்கு தொல் திருமாவளன் இந்திய அரசின் கட்டளைப்படி இவற்றைச் செய்தார்.

தமிழ் நாட்டின் உறுதிப்பாடும் இயல்பு நிலையும் நீடிக்க வாய்ப்பில்லை. இந்திய அரசை வழி நடத்தும் பின்னணிச் சக்தியான உளவுத்துறையினர் தமிழ் நாட்டின் அமைதியைக் குலைப்பதற்குத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இந்தக் கைங்காரியத்தை ஆந்திரா மானிலத்தில் நிறைவேற்றியுள்ளனர்.

சோவியத் ஒன்றியத்தின் உடைவிற்குப் பல காரணிகள் கூறப்பட்டாலும் உறுப்பு நாடுகள், மாநிலங்கள் மீதான நடுவண் அரசின் இறுக்கமான கட்டுப்பாடுகள் முக்கியமாகக் குறிப்பிடப்படுகின்றன. கேஜிபி உளவுப்படை மூலம் கட்டுப்பாடுகள் அமுலாக்கப்பட்டன.

இந்தியாவும் சோவியத் ஒன்றியத்தின் பாதையில் செல்வதை அவதானிக்க முடிகிறது. உறுப்பு நாடுகள், மாநிலங்கள் பலம் பெறுவதை மொஸ்கோ அரசு கேஜிபியின் சீர்குலைப்புத் திட்டங்கள் மூலம் தடுத்து வந்தது. நடுவண் ஆதிக்கத்தை நிலைபெறச் செய்வதற்காக அதைச் செய்தது, இந்தியாவிலும் அது நடக்கிறது.

தமிழ் நாட்டின் சாபக்கேடு அதன் சாதி அரசியல்தான். பெரியார் போன்ற திராவிடச் சிந்தனையாளர்கள் வளர்த்த முற்போக்குக் கருத்துக்கள் மறைந்து விட்டன. சாதி போன்ற குறுகிய சிந்தனை ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்திய உளவுத் துறைக்கு தொல் திருமாவளவன் போன்ற சுயநலவாதிகள் தேவைப்படுகின்றனர். ராஜிவ் காந்தியின் சிலைக்கு யாரோ செருப்பு மாலை போட்டதற்கு தொல் திருமாவளவன் அலறி அடித்துக்கொண்டு ‘அன்னை” சோனியா காந்திக்கு விசுவாசம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கை அவருடைய அடிமைப் புத்தியை எடுத்துக் காட்டுகிறது.

நக்குகிற நாய்க்கு செக்கு என்ன சிவலிங்கம் என்ன என்று சொல்வார்கள். தொல் திருமாவளவன் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றி அவதூறு பரப்பி வருகிறார். இது வியப்பான செய்தியல்ல. தொல் திருமாவளவன் எடுப்பார் கைப்பிள்ளை. அவருக்குத் தேவை அரசியல் பதவி மற்றும் விளம்பரம்.

தமிழ் நாட்டில் விரிசலை உண்டாக்கும் கருவியான தொல் திருமாவளவனுக்கு அங்கு நிறைய வேலை இருக்கிறது. தமிழீழத்தில் அவருடைய நிழல் படாமல் இருந்தால் போதும். ஒன்று மாத்திரம் நிச்சயம். அவரைப் போல் இன்னும் பலர் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள். விழிப்பாய் இருப்போம்.

நன்றி தமிழ் வின்

No comments: