ltteசமீபத்திய இரண்டு மூன்று ஆண்டுகளாக புலம்பெயர் நாடுகளின் தமிழருக்கான வெகுஜன ஊடகங்களிலும் சரி, சர்வதேசத்து பிறமொழி ஊடகங்களிலும் சரி, ஈழம் பற்றி வெளியாகும் செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள், காட்சிகள்,

அனேகமானவை ஈழத்தமிழர்தம் போராட்டத்தின் இன்றைய பின்னடைவை மையமாகக் கொண்டவைகளே, அரசியல் பொருளாதாரம், தொடங்கி கலை கலாச்சார, படைப்பிலக்கியங்கள் எவையாக இருந்தாலும், பல்வேறு விடயங்களைத்தொட்டு முத்தாய்ப்பாக மையப்படும் கருப்பொருள், ஈழத்தின் போராட்டத்தை தொடர்பு கொண்டதாகவே சுட்டி நிற்பதைக் காணலாம்.

ஈழத்தமிழினத்தின் முதல்முக்கிய மூலப் பேசுபொருள், தேவை விடுதலைப்போராட்ட அரசியலாக இருந்தபோதும், போராட்டத்தோடு நேரடித் தொடர்பில்லாத பல்வேறுபட்ட புறக்காரணிகளும் நிறையவே தன் நலன் சார்ந்து தமிழர் போராட்டத்தினுள் விரும்பியோ விரும்பாமலோ செல்வாக்கு செலுத்தும் விதமாக உள் நுழைந்து கொள்ளுகின்றதையும் காணலாம், இன்ன பல வேறுபட்ட புறக்காரணிகள் எட்டத்தே போராட்டத்தோடு எந்தத் தொடர்புமற்ற உதிரிகள் போல் தோன்றினாலும். அவை தமிழர் போராட்டத்தில் ஏதோ ஒருவகையில் தவிர்க்க முடியாமல் தன்னிச்சையாக குறுக்கீடு செய்து ஆதிக்கம் செலுத்தி ஊறு விளைவிக்கும் தன்மை கொண்டவையாகவே காணப்படுகின்றன.

உதாரணத்திற்கு அமெரிக்காவில் கோதுமை விளைச்சலில் சறுக்கல் ஏற்பட்டுவிட்டால்,. அந்தப்பிரச்சினை அமெரிக்காவுடன் முடிந்துவிடாமல், சில காலங்கடந்து வேறு ஒருநாட்டில், அல்லது எமது சொந்த நாட்டிலேயே உணவுத்தட்டுப்பாட்டையும், உள்ளூரில் மாவின் விலையேற்றத்தையும் ஏற்படுத்தி எதிர்த் தாக்கத்தை உண்டுபண்ணி, பொருளாதார ரீதியான நெருக்கடிக்குள் தள்ளிவிடுவதுபோல, ஈழ போராட்டத்திலும் பல்வேறு சக்திகளின் அசைவாக்கம் நல்லவைபோல் உள் நுழைந்து சங்கடங்களை உண்டுபண்ணிக்கொண்டிருப்பதை அனுபவரீதியாக காணுகின்றோம்.

இந்த நெறிமுறைக்கு உட்பட்டு புறக்காரணிகள் தவிர்ந்து தமிழர்களின் போராட்டம் மட்டுமல்ல, தமிழர்களின் சமூக அரசியலிலும் வெளியுலகத்தின் ஊடுருவலின்றி எதையும் முன்னெடுக்க முடியாத, அகப்புறச்சூழல்கள் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்திருப்பது அனுபவ ரீதியாக எவராலும் மறுக்க முடியாத யதார்த்தமாகும்.

ஈழப்போராட்டத்தில், உலகிலுள்ள எந்த நாடுகளையும் விட இந்தியாவின் அசைவாக்கமும் தலையீடுகளும் மிகப்பிரதான பங்குவகித்திருக்கிறது, இனி வருங்காலங்களிலும் இந்தியாவின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாகவே காணலாம். இந்தியா என்னும்போது நன்மையோ தீமையோ. ஒரு முகமான எதிர்வினையைத்தான் ஈழப்போராட்டம் இந்தியாவிடம் முகங்கொடுத்து சந்தித்ததாகக் கொள்ளமுடியாது. அரசியல் பொருளாதார இராணுவ ஆதிக்கசக்திகளுடன்,, மொழி உறவு கலாச்சாரம் பண்பாடு போன்ற இன்னும் ஒருவிதமான உளவியல் ஆக்கிரமிப்புச் சக்திகளுடனும் முகங்கொடுத்து போராட்டத்தை கொண்டு செலுத்த, வெவ்வேறுபட்ட இராசதந்திரம் பேண வேண்டிய இக்கட்டும் ஈழத்தமிழர்களுக்கு தொடர்ச்சியாக இருந்தே வந்திருக்கிறது.

பிரித்துக்கூறுவதாயின் இந்திய மத்திய அரசை ஆட்சிசெய்யும் அதிகாரத்திலுள்ள காங்கிரசு கட்சி அரசின் வெளியுறவுக்கொள்கை, மற்றும் பாஜக கட்சி ஆட்சி செய்யும்போது கடைப்பிடிக்கும் வெளியுறவுக்கொள்கை, தவிர தமிழ்நாடு எனப்படும் திராவிட கூத்தாடி அரசுகளின் சுயநலன் சார்ந்த குழப்பமான கொள்கை வகுப்பு, சினிமா நட்சத்திரங்களை ஏவிவிட்டு திசைதிருப்பிய உளவியல் குளப்படிகள் இப்படி பல நெருக்கடிகளை ஈழப்போராட்டம் வேண்டியோ வேண்டாமலோ சமாளிக்க வேண்டியிருந்தது.

2009 கடைசிக்கட்ட இன அழிப்பின்போது, தமிழர் விரோதப்போக்குக்கொண்ட மத்திய அரசின் போக்கை, மானசீகமாக கட்டுப்படுத்தக்கூடிய அசைவாக்கம் கொண்டுள்ள தமிழ்நாட்டு தமிழர்களின் உளப்பூர்வமான எழுச்சி நிறைந்த மக்கள் ஆதரவைக்கொண்டு, தென்னிந்தியத் திராவிடக்கட்சிகள் மத்திய அரசை கட்டுக்குள் கொண்டுவரக்கூடிய சாதகமான சூழல் நிறையவே தமிழ்நாட்டில் உண்டாகியிருந்தது. இருந்தும் திராவிடக்கட்சிகள் ஒன்றிடமிருந்து ஒன்றைக் காட்டிக்கொடுத்து அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டி அரசியலில் ஈடுபட்டனவே தவிர கடுகளவுகூட மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளவில்லை.

போட்டி சுயநலன் மட்டுமே காரணமாக முரண்பாட்டுக் கொள்கையுள்ள தேசியக்கட்சிகளுடன் பிறழ்வான கூட்டு, சுயமாக முடிவெடுக்க முடியாத சிறுபான்மையான அரசாங்க அமைப்பு, ஊழல், பதவிவெறி, போன்றவை காரணமாக திராவிடக்கட்சிகள் இன-மானம் கடந்து, மிகக்குறுகிய நோக்கத்துடன் தன்நலன் சார்ந்து பதவியை காப்பாற்றவேண்டுமென்ற ஒரே சுயநல நோக்கத்துடன் விசித்திரமான தந்திரங்களையே ஈழப்பாசமாக மேடையேற்றி மாறி மாறி ஈழப்போராட்டத்தில் குளிர் காய்ந்து வந்திருக்கின்றன.

மீறி உணர்ச்சி வசப்பட்ட தன்மானத்தமிழர்களின் உண்மையான உணர்வுள்ள சக்திகள் அனைத்தும் பரிதாபமாக தீக்குளித்து செத்தவை போக, மீதி அனைத்தும் அதிகாரத்தால் காட்டுமிராண்டித்தனமாக அடக்கப்பட்டுமிருந்தன. மற்றும் பல சோரம்போன அடிப்பொடிகள் அரசியலில் சில்லறை காசாகி தலையாட்டிப்பொம்மைகள் ஆக்கப்பட்டிருக்கின்றனர். இன்னும்பல சந்தற்பவாத அரசியல்வாதிகள் தம்மை பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு பச்சோந்தியாக மாறி. நேரம் ஒரு கிளையில் குடியிருந்து நிறம் மாற்றி மாற்றி காலம் தள்ளிக்கொடிருப்பதைக் காணலாம், ஆனால் மேலே குறிப்பிட்டவர்களில் அதிகாரத்திலிருக்கும் இந்தியப்பிரதமர் முதல் தமிழ்நாட்டு கடைசி அரசியல்வாதிவரை, எவருமே ஈழத்தமிழருக்காக தம்மை அர்ப்பணிப்பதாகவே காட்டிக்கொள்ள முனைகின்றனர், தவிர எவரும் தமது உண்மையான துரோக நிலைப்பாட்டை ஏதோ காரணத்துக்காக இழுத்து மூடி மறைப்பதையே காணலாம்.

ஈழத்தமிழர்கள் போராட்டம் தொடங்கியதற்கான காரணம், தேவையற்ற விளையாட்டுத்தனமான பிரிவினைவாதம் அல்ல, அது இந்தியாவுக்கான அல்லது தமிழ்நாட்டுக்கான காவடி எடுப்புமல்ல. காலா காலமாக தனித்தன்மையுள்ள இலங்கைத் தீவுக்குள் சிங்களவனின் அடக்குமுறைக்கும் அராஜகத்திற்கும் ஆளாகிய தமிழினம் மிக மோசமான அபாயக்கட்டத்தில் வேறு வழியின்றி தற்காப்பு உபாயமாகவே ஆயுதப்போராட்டம் பிறப்பெடுத்ததைக் காணலாம். சுதந்திரத்திற்கான கிளர்ச்சிக் காரணிகளாக சிங்களவனின் தரப்படுத்தலும் அடக்குமுறையும் பாதுகாப்பின்மையும் காரணமாகவிருந்தது.

ஆனால் போராட்டத்தை கொண்டு செலுத்தி குறியை அடைவதற்கு முயற்சிக்கும் போதுதான் உலக வல்லாதிக்கங்களுடனும் சுயநலம் மிக்க அயல் அரசியல்ச்சக்திகளுடனும் உள்ளூர் துரோகக்கூட்டங்களுடனும் முட்டி மோதவேண்டிய பெரும் நெருக்கடி குறுக்கே நிற்பதை தமிழினத்தால் இனங்காண முடிந்தது. இது சிங்களவனுடன் போராடுவதை விடவும் பல மடங்கு சக்தி இழப்பையும், பல்வேறு விதமான இராசதந்திர சிக்கலையும், நுணுக்கமான மதிநுட்பத்தை பாவித்து கடக்கவேண்டிய பொறிநிலையையும் உணர்த்தியது, இந்தக்காரணிகள் வெளிப்படையாக பொது அரங்கத்தில் அறியப்படாவிட்டாலும் போராட்டத்தின்மீது அதிக சுமையை சுமத்தியிருந்தது என்பதே உண்மை.

ltte2009 மே வரை, முப்பது வருடங்களுக்கு மேலாக, ஒட்டுமொத்த இலங்கைத்தீவின் அசைவாக்கம் முழுவதையும் தமிழரின் போராட்டம் தன் கை வசத்திலேயே வைத்திருந்தது, அந்த நேரங்களில் காலாகாலம் இராணுவச்சமநிலை ஏற்ற இறக்கம் ஏற்பட்டிருந்தாலும் தமிழரின் தலைமையின் பண்பட்ட நெறியாள்கை கொண்ட தனித்தன்மை உலகளாவியரீதியில் வியக்க வைத்திருந்தது, ஆசிய வட்டகைவில் தமிழர்களின் ஆயுதக்கலாச்சார இராணுவ வளர்ச்சி உலக பெரும் வல்லாதிக்கங்களுக்கு கசப்பை ஏற்படுத்தியிருந்தாலும். தமிழர்களின் போராட்டத்திற்கான காரணம் நியாயமானதாகவே உணரப்பட்டதால், சமாதான பேச்சுவார்த்தை என்ற படிநிலைக்கு உலகம் இறங்கி வந்ததையும் காணலாம். ஆனால் அருகில் ஆறரைக்கோடி தமிழர்கள் வாழும் இந்தியாவின் போக்கு அப்படியிருக்கவில்லை. அதன் அடிநாதமான காரணம் தென்னிந்தியத் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை ' ஈழத்தமிழரின் தலைமையைப்போல' ஒரு உண்மையான தமிழன் ஆட்சி செய்யாததும் ஒரு காரணமாக இருக்கமுடியும்.

சுதந்திரமடைந்த இந்திய அரசியலுக்கு முன், ஒட்டுமொத்த இந்தியர்களும், இந்தியர்கள் என்ற ஒரே கோசத்தின்கீழ் சுதந்திரப்போராட்டம் முனைப்போடு நடைபெற்றது, அப்போ மொழிவாரியான சுலோகங்கள் தேவைப்பட்டிருக்கவுமில்லை உணரப்படவுமில்லை, இந்திய மக்களுக்கான சுதந்திரம் மட்டுமே தேவையாக இருந்த காலம் அது, சுதந்திரத்தின் பின் மொழி-இன வாரியான வளர்ச்சியை நோக்கி மக்கள் நகர்ந்தபோதுதான் மொழிவாரியாக மானிலங்கள் பிரிந்துகொள்வதினால், அதிக வளர்ச்சியடையமுடியும் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டனர், பிற்பாடு தமிழ்நாடு பிரிந்த காலத்தில்கூட தமிழர்கள் தம்மை தாமே ஆளவேண்டுமென்று அம்மக்கள் அதிக முனைப்புக்காட்டவில்லை, பிறப்பால் வேற்று மொழிவழி பிறந்தவராக இருந்தாலும் அன்று சுதந்திர போராட்டத்தின் பால் சமூகத்தில் நன்கு அறியப்பட்ட தமிழ் தெரிந்த அரசியல் அறிவுள்ள திராவிட தலைவர்களிடம் தம்மை வழிநடத்த தமிழர்கள் மறுப்புத்தெரிவிக்கவில்லை.

காரணம் அன்று தமிழர்கள் அதிகமானோர் அரசியலறிவு பெற்றிருக்காத பாமரராக இருந்ததாலும், அரசியலின் ஆழ நீழம் தெரியாததாலும், பிரித்தானிய எச்சத்தில் மிஞ்சியிருந்த நிர்வாக நடைமுறைக்கு ஆங்கிலப்புலமை தேவைப்பட்டதாலும், ஈவேரா பெரியார் ராஜகோபாலாச்சாரியார் போன்ற வேற்று மொழிக்காரர்கள் தமிழர்களை வழிநடத்த முன்வந்தபோது அவர்களது புலமை அவர்களுக்கு வழிவிட்டு தலைவர்களாக்கியது வரலாறு.

தொடர்ந்து வந்த முத்துவேல் தெட்சணாமூர்த்தி என்ற (கருணாநிதி), மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன். என்ற (எம்ஜீஆர்) அடுத்து வந்த கோமள வள்ளி என்ற இயற்பெயரைக்கொண்ட ஜெ.ஜெயலலிதா, இவர்கள் முறையே தெலுங்கு, மலயாளம், கன்னடம், ஆகியவற்றை தாய் மொழியாகக் கொண்டவர்கள், இதில் எம் ஜீ ஆர் அவர்களும் ஜெயலலிதாவும் தாம் வேற்று மொழிக்காரர் என்பதை தீர்க்கமாக மறுக்க முயற்சிக்காவிட்டாலும் கருணாநிதி நீண்டகாலமாக தன்னை யார் என இனங்காட்டிக் கொள்ளாமல் எந்தக்கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார். ஆனாலும் அவர் தெலுங்கை தாய் மொழியாகக்கொண்டவர் என்றே அதிகமானோர் நம்பியிருந்தபோதும், அவர் தமிழராக இருக்குமோ என்ற சந்தேகம் எல்லோரிடமும் இருந்ததுண்டு. அந்தச் சந்தேகத்தை தீர்க்கும் பொருட்டு சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பங்கெடுத்துக்கொண்டபோது, தமிழ்ப்பற்றாளரான நடிகர் ராஜேஸ், அவர்கள் தோழர் தியாகு, அவர்களின் முன்னிலையில் கருணாநிதி தெலுங்கர் தான் என்பதை ஆதார பூர்வமாக சந்தேகமற தெளிவு படுத்தியிருந்தார்.

பிறப்பால் தமிழரல்லாத தமிழை பேச்சு மொழியாக கொண்டவர் என்பதால்த்தான் தெலுங்கரான ஈவே ராமசாமி பெரியார் அவர்களால், தமிழ்நாட்டில் தமிழை முன்னிறுத்தி தமிழர் முன்னேற்றக்கழகம் என்று ஒரு கட்சியை ஆரம்பிக்க முடியாமல். பொதுவாக திராவிட முன்னேற்றக்கழகம், என்ற பெயரில் கட்சியை ஆரம்பிக்க முடிந்தது, திராவிட இன மக்களை பிரித்துப்பார்க்காத திராவிட நலன்பேணும் ஒருகட்சியாக அக்கட்சி தொடர்ந்து இருந்து வருகிறது, அண்மை காலங்களில் காவிரி, கிருஷ்ணா நீர்ப்பிரச்சினை தலைதூக்கி மக்கள் கொதிப்படைந்து கிளர்ந்தபோதும் கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, அதிக அசைவியக்கமில்லாமல் போக்குக்காட்டி மௌனம் சாதிப்பதைக்காணலாம், காரணம் தாம் தமிழர்கள் அல்லாதவர்கள் என்பதாலும் அவர்களது தாய் மொழித் தெலுங்கு கன்னட மக்கள் தம்மை தமிழர்களிடையே காட்டிக்கொடுத்து விடுவார்களோ என்றபயமும், தாம் தமிழர் இல்லை என்று தெரியவரும்போது தமிழ்நாடு தம்மை பிரித்துப்பார்க்க தொடங்கிவிடும், என்பதை அவர்கள் உள்ளூர நன்கு உணர்ந்தே இருக்கின்றனர், கருணாநிதி மக்கள் மத்தியில் பேசும்போது அடிக்கடி கூறும் வார்த்தை, ""நாம் திராவிடர்கள் என்பதை உணர்ந்து, அதை மறக்காமல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்""என்று உள் நோக்கத்துடன் திராவிடம் என்ற பதத்தை காப்பாற்ற மறப்பதில்லை.

நித்திரையாகக் கிடப்பவனை தட்டி எழுப்பமுடியும், நித்திரைபோல் பாசாங்கு செய்பவனை எழுப்புவதற்கு பல வழிகளை கைக்கொள்ள வேண்டியிருக்கும், அந்த நடைமுறைதான் இன்று தமிழ்நாட்டின் கட்சித்தலைவர்கள் செய்துகொண்டிருக்கும் அரசியலும் ஆட்சியும் என்பதைக்காணலாம். ஆனாலும் மக்கள் இப்போது சற்று விழிப்பு நிலையடைந்துவிட்டதை காணமுடிகிறது.

படிப்பறிவற்ற பாமர மக்கள் நிறைந்த இந்திய தேசத்தை, இந்த அரசியல்வாதிகளும் சினிமா நடிகர்களும் ஏமாற்றி தமது சுய லாபத்திற்கேற்றாற்போல் சாதகமாக பயன்படுத்த முயன்று கொண்டிருக்கின்றனர், இதன் அடுத்த படிநிலையாக தெலுங்கை தாய்மொழியாகக்கொண்ட சினிமா நடிகரான விஜயகாந்த் மக்களை தன்பக்கம் ஈர்ந்து தமிழக அரசியலில் கணிசமான வெற்றியையும் பெற்றிருக்கிறார், சிலவருடங்களுக்கு முன் சினிமாவில் மிக செல்வாக்குப் பெற்றிருந்த சிவாஜிராவ் என்ற கன்னடக்காரரான ரஜனிகாந்த், சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளுவதற்காக மக்கள்முன் தன்னை ஒரு வித்தியாசமானவராகக் காட்டி அரசியலில் இறங்க அடிகோலியிருந்தார், அந்த நேரம் ஜெயலலிதாவிடம் அடிபட்டு படுதோல்வியில் கிடந்த தந்திரசாலியான கருணாநிதி, ரஜனியை ஏமாற்றி ரஜனியின் செல்வாக்கை தன்வசப்படுத்தி தனது இருப்பை தக்கவைத்துக்கொண்டதை தமிழ்நாடு அறியும்.

எவை எப்படிப்போனாலும் நடப்பு பத்தாண்டுகளில் ஈழப்போராட்டத்தின் பாதிப்புக்காரணமாக தமிழ்நாட்டின் மக்களின் மனநிலையில் நிறையவே மாற்றம் கண்டுள்ளது, தலைவர் பிரபாகரன் அவர்களின் அப்பழுக்கற்ற நேர்மைத் தன்மையும், கற்பனை பண்ணிப்பாற்க முடியாத வீரமும் விவேகமும். மக்களை அவர் வழிநடத்திய விதமும், ஊழல் மோசடிகள் இல்லாத நிர்வாக நடைமுறைகளும், தமிழ்நாட்டின் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஈர்ப்புக்கொண்டிருப்பதை காணலாம், அதிகமான தமிழகத்தின் கிராமப்புற மக்களிடையே ஈழத்தலைமை போல ஒரு தலைமை தமக்கு கிடைக்காதா என்ற ஆதங்கம் உள்ளூர எழுந்திருப்பதையும் காணலாம், பலர் தலைவர் பிரபாகரன் அவர்களை தமது மானசீக தலைவராக வரித்துக்கொண்டதும் உண்மை, இவையெல்லாம் குளிர்சாதன அறையில் உட்கார்ந்து கொள்ளையடிக்கும் தெலுங்கு கன்னடத்தலமைகளுக்கு பெருத்த கலக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவு. புலிகள் பயங்கரவாதிகள் என்று மத்திய ஹிந்தி அரசுடன் இணைந்து பந்தம் பிடிக்க வேண்டிய அவசர தேவை அவர்களுக்கு உறக்கத்திலும் தேவைப்படுகிறது.

மூலத்தை நிர்மூலம் ஆக்கும் வகையில் தமிழ்-இன உணர்வை இந்த அரசியல் வந்தேறிகள் குழிதோண்டிப் புதைக்க முயலுவதும். மக்களை அடக்கு முறைக்குள்ளாக்குவதும் சாதாரணமாக்கப்பட்டிருக்கிறது, மக்களின் அறியாமையையும் வறுமையும் பயன்படுத்தி. இனாம் மூலமாக சோம்பேறிகளாக்கி இந்தக்கூட்டத்தின் மூளைச்சலவை திட்டமும் மக்களை முடிவெடுக்க முடியாமல் தடுமாற வைப்பதும் திட்டமிட்ட செயலாகக் காணலாம், அரசியலில் நல்ல அனுபவம் பெற்றவரான கருணாநிதியின் சந்தற்பவாத கவர்ச்சித்திட்டங்கள், சினிமா தொலைக்காட்சி போன்றவற்றிற்குள் மக்களை தள்ளிவிட்டு சிந்தனையை சிதைப்பதுமுண்டு, மக்களின் அறியாமையையும் வறுமையையும் கருணாநிதி போன்றவர்கள் மிகச்சரியாக பயன்படுத்தி வெற்றி பெற்று விடுகின்றனர்.

இவற்றிலிருந்து மக்களை விடுவிக்க ஆழமான பற்றுறுதி சமூக வளர்ச்சிக்கான தொலைநோக்கான திட்டங்கள் பலரிடமிருந்தாலும், அதிகாரபலம் பணம் உள் நோக்கங்கொண்ட கோரமான தந்தரம் அனைத்தும் கொண்ட அனுபவமிக்க அரசியல்வாதிகளை எளிதில் வென்றுவிடமுடியாத சிக்கலும் உண்டு, இவர்கள் தமது இருப்பை தொடர்வதற்காக தொடர்ந்து தம்மை ஈழப்போராட்டத்தின் நட்புச்சக்தியாக காட்டி, செய்துகொள்ளும் கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட்டு புனிதராகக்காட்டி மக்களை ஏமாற்றுவதையும் காணலாம், இதனால் ஈழப்போராட்டத்தின் புறநிலை மிகமோசமாக பலவீனப்பட்டுக் கொண்டிருப்பதை காணலாம்.

வரப்போகும் சட்டசபைத்தேர்தலை முன்னிட்டு அரசியல்வாதிகள் பலரும் சமீபத்தில் வெளியிட்ட சில செய்திகள் தலையை கிறுகிறுக்க வைக்கக்கூடியன இவர்களின் செயலுக்கும் வெளியிடும் செய்திகளுக்கும் எதிர்மறையான முரண்பாடு இருந்தாலும் வெட்கமில்லாமல் ஊடகங்களில் கூவித்தள்ளியிருக்கின்றனர், இதில் மிகவும் பெரிய நகைச்சுவை என்னவென்றால் நடக்கமுடியாதவற்றையும் செயற்படுத்த முடியாதவற்றையும் அடிப்படையில் தமது தவறுகளையும் மூடிமறைத்து கூவி தப்பிக்க முற்பட்டிருப்பதைக் காணலாம்; இதனால் சர்வதேச சக்திகள் நியாயமாக செய்ய விளையும் ஈழத்துக்கான அபிவிருத்திகள் கூட இந்த சுயநல அரசியல்வாதிகளின் சுயநலத்திற்கு பலியாகி பூச்சியத்தன்மையை தொடர்ந்து ஈழம் சந்திக்கும் கொடுமையை காணலாம்.

இந்த அரசியல் வியாபாரிகளை பின்பற்றி சினிமா நடிகரான விஜய் கடைசியாக அசினுடன் சோடி போட்டு நடித்து வெளிவந்த தனது திரைப்படமான காவலன் படத்தை ஓட்டுவதற்கு கருணாநிதியின் வழியை பின்பற்றி மீனவர்கள்மீது பாசத்தை பொழிந்து நாகபட்டணத்தில் ஒரு ஆற்பாட்டக்கூட்டம் நடத்தினார். ஸ்ரீலங்கா இராணுவத்தால் இனி தமிழர்களின் மீது விழும் ஒவ்வொரு அடியும், என் மீது விழும் அடி என்றும், சிறீலங்காவை உலக வரைபடத்தில் இருந்து அகற்றுவோம் என்றும், இலங்கை இராணுவத்தினர் என்ன மனிதர்களா இல்லை அரக்கர்களா? நாம் புலிப்பால் குடித்த பரம்பரை, மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் உலக வரைபடத்தில் இலங்கை காணாமல் போய் விடும் நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட, என்று அசின் நடித்த காவலன் படத்துக்கு தடையில்லா சான்றிதழ் தந்தரமாகப்பெற்றிருக்கிறார், கனவிலும் நடக்கமுடியாத ஒரு நாடக காட்சி வசனத்தை பேசி சினிமாப்பாணியிலான கூத்தை அரசியலாக்கி மக்கள் முன் விஜய் அரங்கேற்றியபோது, மக்கள் ஆரவாரித்து உணர்ச்சி வசப்பட்டதுதான் பரிதாபகரமான தமிழ்நாட்டு அரசியல்.

weசென்ற ஆண்டு தமிழர்களின் எதிர்ப்பையும் நடிகர் சங்கத்தின் கட்டுப்பாட்டையும் தூக்கி கடாசிவிட்டு மலயாள தேசத்து சினிமா நடிகை அசின் சல்மான்கானுடன் ஸ்ரீலங்கா தலை நகரில் நடைபெற்ற IFFA,விருது விழாவுக்கு சென்று ராஜபக்க்ஷவின் மகன் நாமலுடனும் கூத்தடித்ததும் பின் ராஜபக்க்ஷவின் மனைவியுடனும் யாழ்ப்பாணம் சென்று கண்சிகிச்சை முகாம் நடத்துகிறேன் என்ற பேரில் பலருக்கு கண் தெரியாமல் போவதற்கு அசின் காரணமாயிருந்ததும், இதுபற்றி உலகளாவிய ரீதியில் தமிழ் சமூகத்தால் கண்டனங்கள் பல வந்திருந்தன. இவற்றை தொடர்ந்து நடிகர்சங்க செயலாளர் ராதாரவி அசினை மன்னிப்பு கேட்கும்படி கேட்டிருந்தார், ஆனால் நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் அசினுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை விரும்பவில்லை, சரத்குமாரின் பலவீனத்தை பயன்படுத்திய நடிகை அசின், நடிகர் சங்கத்திற்கு கட்டுப்படவுமில்லை. இந்த பின்னணி நன்கு தெரிந்த நிலையில் நடிகர் விஜய் தமிழ்ச்சமூகத்தின் மனநிலையை கணக்கிலெடுக்காமல் அசினை தனக்கு ஜோடியாக்கி காவலன் என்ற படத்தை நடித்திருந்தார். படம் வெளிவரும் சமயம் சுயநலவாதி கருணாநிதியின் குடும்பத்தால் காவலன் படத்துக்கு இடையூறு வந்தபோது விஜய் எடுத்த தற்காப்பு சுயநல ஆயுதம் நாங்கள் புலிப்பால் குடித்த பரம்பரை என்று ஈழப்போராட்டத்தை குடையாகப்பிடித்து போராட்டத்தை கொச்சைப்படுத்தி தப்பித்திருக்கிறார்.

இதே இழிவான செயல்ப்பாடுகளைத்தான் அரசியல் வியாபாரிகளான ராமதாசு, திருமாவளவன், ஆரம்பகாலத்தில் விஜயகாந்த் ஆகியோரும் தமிழ் தேசியத்தின் காப்பரணாக இருக்கவேண்டிய கருணாநிதியும், ஜெயலலிதாவும், செய்து குளிர்காய்ந்துகொண்டிருக்கின்றனர், தமிழ்நாட்டு மக்களிடையே புலிகள் இயக்கத்துக்கிருக்கும் ஆதரவை புரிந்துகொண்ட இந்தக்கூட்டம். அந்த மக்கள் கூட்டத்தை தமக்கு ஆதரவாக்கி, ஓட்டாக மாற்றுவதற்காக ஈழ ஆதரவின் மக்கள் அணிக்கு தாமே தலைமை தாங்குவதாக வேசம் போட்டு நாடகம் ஆடுவதாலேயே தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ்த் தேசியத்துக்கான சரியான ஒரு அணியைதெரிவுசெய்து பின்பற்றமுடியாத மயக்கநிலை தொடர்வதைக்காணலாம்.

ஏதாவது ஒருவிதமாக ஒரு மக்கள் சக்தி திரண்டு அரசியல் ரீதியாக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க விளையும்போது சிவபூசையில் கரடி நுழைந்து நாசமாக்குவதுபோல், எப்படியாவது அதை அழிக்கும் முனைப்போடு அறிக்கைவிடுவதும், பிரித்து மக்கள் சக்தியை சிறு சிறு குழுக்களாக சிதைப்பதையுமே, இந்திய அரசியல்வாதிகள் காலங்காலமாக செய்து சிறுமைப் படுத்திக்கொண்டிருப்பதை காணலாம், இந்த நிலைகாரணமாகவே 2009 இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவால் நிதி உதவியும், உலகத்தால் தடை செய்யப்பட்ட ஆயுதங்களும் வழங்கி ஒரே மாதத்தில் 1,000,000 மக்களை கொன்று குவிக்க முடிந்தது, கொலை வெறி முடிந்தபின்னும் ஈழத்துக்கு எதிராக அரசியல் ரீதியான தலையீடுகளை செய்து உலக அளவில் ஐநா அரங்கத்திலும் இந்தியா ஸ்ரீலங்கவை காப்பாற்றி தமிழர்களை அவலத்தில் தள்ளியது, அதுபோக ஐநா சபையில் அதிகாரியாக பணியாற்றும் மலயாளியான விஜய் நம்பியார் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை நயவஞ்சகமாக கொல்ல இலங்கை இராணுவத்திற்கு உதவினார் என்று குற்றச்சாட்டும் உறுதியாகியிருக்கிறது.

இவை எல்லாவற்றிற்கும் எழுவாய் எனப்படும் மூலம், தமிழ்நாட்டு அரசியல் வியாபாரிகள் என்பதை பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கத்தேவையில்லை, புலி ஆதரவாளர்கள் என்று தம்மை காட்டிக்கொண்டு ஈழமக்களுக்கு ஆதரவான தமிழ்நாட்டு தமிழர்கள் முன் நாடகமாடி பின் பதவிக்காக ஈழத்துக்கு முழுமுதல் விரோதிகளான திராவிடக்கட்சிகளிடம் சரணடையும் ராமதாஸ், திருமாவளவன், போன்றவர்களும் புலம்பெயர் தேசங்களில் தமது சினிமாக்களை விற்கவேண்டும் என்பதற்காக சினிமாவில் இருந்துகொண்டு மக்களை ஏமாற்றும் சரத்குமார். சூர்யா, கமலகாசன். விஜய் போன்றவர்களுமே ஈழப்போராட்டத்தின் சிதைவுக்கு முக்கிய காரணமானவர்கள், இவர்கள் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் புரியாமல், தமது வளர்ச்சியை அல்லது தம்முடைய முட்டுக்கட்டைகளை தீர்ப்பதற்காக முழு ஈழ ஆதரவாளரென்று காட்டி தீமூட்டி குளிர்காயாமல், தமது சுய சக்திமூலம் தமது பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டாலே ஈழத்துக்கு விடுதலை கிடைத்துவிடும்.

கடைசி அலங்கோலமாக புலம்பெயர் ஈழ மக்களிடையேயும் இந்த அரசியல் வியாபாரிகள் ஊடுருவி புலம்பெயர் தமிழர்களையும் குழுநிலைகளாக பிரிப்பதற்கு அமைப்புக்களும் உருவகிக்கொண்டிருப்பதாக தெரியவருகிறது, இவை இந்திய புலனாய்வு பிரிவினரின் சதியோ அல்லது ஈழ/ இந்திய அரசியல்வாதிகளின் கூட்டு கபட திட்டமோ என்று புரியப்படவில்லை, தமிழ்நாட்டில் சரியான ஒன்றிணைக்கக்கூடிய பலமான ஒரே தலைமை ஒன்று உருவாகும்வரை, இந்தக்குளறுபடிகள் தொடரத்தான் செய்யும், இருந்தும் தேசியத்தலைவரின் தீர்க்கமான தொலை நோக்குத் திட்டம் எல்லாவற்றையும் ஈடு செய்யும் என்ற பரி பூரணமான நம்பிக்கை தமிழ்நாட்டு இன-மான-உணர்வு தமிழருக்கும் ஈழத்தமிழருக்கும் உண்டு.

ஈழதேசம் இணையத்திற்காக
கனகதரன்,,