பௌத்த சிங்கள ஆதிக்கம் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை மூன்று தசாப்தகாலத்திற்கு மேலாக இராணுவ அடக்கு முறைக்குள் கொண்டுவந்து பயங்கர ஆள் அழிப்புச்சட்டங்களான அவசரகாலச்சட்டம்,

பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியவற்றினுள் இருத்தி தமிழ் பேசும் மக்களை அடக்கி சர்வாதிகார ஆட்சி செய்தே வருகிறது. அதற்கு பல வெளிநாடுகள் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் ஆதரவு வழங்கி வருகின்றன.

இதற்கு சிங்கள ஆட்சியாளர்களால் கூறப்பட்ட காரணம் தமிழீழ விடுதலைப்புலிகள், விடுதலைப்புலிகளிடமிருந்து நாட்டையும் அரசையும் காப்பதற்கு இராணுவமயப்படுத்தல் தேவைப்பட்டது என்ற காரணம் காட்டப்பட்டது. யார் இந்த விடுதலைப்புலிகள். ஏன் இவர்கள் தோற்றம் பெற்றனர். என்னத்துக்காக கலவரம் செய்கின்றனர் அல்லது எதற்காக ஆயுதம் தூக்கினர், என்பதை ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை எவரும் ஆராய விரும்பியிருக்கவில்லை, அனாலும் ஒருதலைப்பட்சமாக சிங்களவனால் கூறப்பட்ட அந்த நியாயம் சர்வதேசத்தால் ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட்டும் இருந்தது. 2009 ம் ஆண்டு இலங்கையின் பிரிவினைப்போராட்டம் சர்வதேசத்தின் உதவியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விட்டதாக இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்து வெற்றிவிழாக்களும் கொண்டாடியது, இதை இலங்கை அரசு மட்டுமல்லாது சர்வதேச பார்வையாளர்களும் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். அப்படியானால் அந்தமண்ணில் அமைதி திரும்பியிருக்க வேண்டும் அங்குவாழும் மக்களுக்கு இனியும் இராணுவ நெருக்கடியில்லாத அவர்களுக்கான உரிமையை நிம்மதியை கொடுக்கவேண்டிய பொறுப்பு ஆட்சிசெய்யும் அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் உண்டு.

போராட்டத்தின்போது பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச்சட்டம் ஆகியவற்றால் போர்த்தியபடி கணக்கற்ற மனித உடல்களின்மீது பாதை அமைத்து இராணுவத்தை ஏவி வேட்டை நடத்திய சிங்கள அரசுத்தலைவர் ராஜபக்க்ஷ, யுத்தம் முடிவுக்கு வந்தபின் சர்வதேசத்திற்கு அளித்த வாக்குமூலத்தில் மனித உரிமைகளை மதித்து ஒரு கையில் துப்பாக்கியும். மறு கையில் மனித உரிமையை வைத்துக்கொண்டு தனது இராணுவத்தினர் போர் புரிந்ததாக பெருமையுடன் அடிக்கடி சொல்லுவதுண்டு. அப்படியானால் இலங்கை ஜனாதிபதி மனித உரிமைகள்பற்றி நன்கு தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார் என்றே கொள்ளமுடியும்.

போராட்டக்காலங்களில் மோதலில் ஈடுபட்டிருந்த இருபக்கங்களிலும் மனித உரிமை பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களினதும், நிர்ணயம் செய்யக்கூடிய ஐநா போன்ற அமைப்புக்களின் ஆவலுமாகும், போராட்டம் நடக்கும் காலங்களில் எதுவும் நடக்க சந்தற்பங்கள் நிறைய உண்டு, கலவரம் ஓய்வுக்கு வந்தபின்தான் நடைபெற்ற போராட்டம் அப்பாவி மக்களை எந்தவகைக்குள் இட்டுச்சென்றது. போராடிய இருதரப்பும் சர்வதேச நெறிமுறைகளை பின்பற்றி போரை நடத்தியிருந்தனரா என்பதையெல்லாம், போராட்டத்தில் பங்குபற்றியவர்களால் பாரபட்சமில்லாமல் தீர்மானிக்க முடியாது என்பதும் உலகம் அறியக்கூடிய உண்மை.

அப்படியென்றால் பக்கச்சார்பில்லாத நிர்ணயிக்கப்பட்ட மூன்றாவது தரப்பு ஒன்றுதான் நடந்துமுடிந்த போராட்டத்தை நுணுக்கமாக ஆராய்ந்து மனித உரிமைகள் பாதிக்கப்பட்டிருந்ததா. அப்பாவிகள் கொல்லப்பட்டிருந்தனரா துன்புறுத்தப்பட்டிருந்தனரா. என்பதை வெளிப்படையாக தெரியப்படுத்தவேண்டும். சிங்களத்தரப்பிலிருந்தும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் வரலாம். குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் சர்வதேச சட்டத்திற்குட்பட்டு தண்டிக்கப்படலாம், அதேபோல தமிழர் தரப்பிலிருந்தும் எழும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை மனச்சாட்சியுடன் விசாரித்து நீதி வழங்கவேண்டிய பொறுப்பு இலங்கை தேசத்தையும் தனது அமைப்புக்குள் உள்வாங்கி அங்கம் வகிக்கும் ஐநா சபைக்கு உண்டு. இந்த ஒரேயொரு நம்பிக்கைதான் அனாதரவாக நாடற்று திரிசங்கு நிலையில் திகைத்து நிற்கும் தமிழினத்தின் ஒரேயொரு நம்பிக்கையாகும்.

யுத்தம் முடிவுக்குவந்து மூன்றுவருடத்தை எட்டும் இன்றுவரை சர்வதேசத்தின் முக்கியமான அமைப்புக்களால் பாதிக்கப்பட்ட தமிழினத்துக்கு நியாயமான நீதி நகர்வு என்று எதையும் இனங்காட்ட முடியவில்லை. அரசுசார்பற்ற சர்வதேச தொண்டு அமைப்புக்களும் ஊடக அமைப்புக்களும் பல அதிர்ச்சியளிக்கக்கூடிய படுகொலை ககட்சிகளையும் மனித உரிமை மீறல்களையும் ஆதாரபூர்வமாக உலக கண்களின் முன் கொண்டுவந்திருக்கின்றன. அவற்றை ஆராய்ந்து அசைவாக்கம் கொடுக்கக்கூடிய வல்லமை அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சபை அமைப்புக்களையே சாரும். உலக அரங்கில் ஐநா சபை உருவான பின்னணியை பார்த்தாலே 2ம் உலக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலத்தை கண்ணுற்றபின் 1945ல் தோற்றம்பெற்றதுதான் ஐநா அமைப்பு. இன்று ஐநா அமைப்பு, தமிழ்நாட்டின் திமுக கட்சிபோலவும், அமெரிக்கா, காங்கிரஸுக்கட்சிபோலவும் செயற்படத்தொடங்கியிருக்கிறது, போதாக்குறைக்கு திடகாத்திரமில்லாத பான் கீ மூன் ஐநாவின் செயலாளராகவும், அவரது மகளை திருமணஞ்செய்த இந்திய விஜய் நம்பியார் பான் கீ மூனின் உதவியாளராகவும், ஐநாவை தங்கள் பதவிக்காகவும் சுயலாபத்துக்காகவும் பாதை மாற்றி விட்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழும்பியிருக்கிறது.

இன்று யுத்தம் முடிவுக்கு வந்துள்ள வளம் நிறைந்த வன்னியில் குறைந்த தொகையில் ஆண்களும் விதவைகளாக்கப்பட்ட பெருவாரியான பெண்களும் வாழ்வுக்கான ஆதாரம் எதுவும் இல்லாமல் நடைப்பிணமாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழுகின்ற மக்களில் ஒருவருக்கு மூன்று ஆயுதம் தாங்கிய இராணுவவீரரும் இந்தக்கணக்குக்குள் உட்படாமல் உதிரியாக பல ஆயிரக்கணக்கான பொலிஸாரும் குவிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் வன்னியில் எந்தக்காலத்திலும் இல்லாத அளவுக்கு கடத்தல்களும் கொலைகளும் கற்பழிப்புக்களும் வீடுபுகுந்து கொள்ளையடிக்கும் கூட்டமும் வரலாறு காணாத அளவுக்கு பெருகியிருக்கிறது. இவையெல்லாம் எதை சுட்டிக்காட்டுகின்றன. தமிழினம் கூண்டோடு இல்லாமல் அழிந்து போகவேண்டும் அல்லது சுய சிந்தனையற்றவர்களாக நடைப்பிணங்களாக செத்துத்தொலைந்துவிட வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரல் ஏதோ ஒரு சக்தியால் கச்சிதமாக ஈடேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தச்சதி ஈழத்தில் மட்டுமல்லாது தமிழன் எங்கு போராட்டக்குணத்துடன் அடங்க மறுக்கிறானோ அங்கெல்லாம் விஸ்தரிக்கப்பட்டுவிட்டது,

சமீபகாலமாக ஈழத்தமிழர்கள் சார்ந்த செய்திகள் தமிழினத்துக்கு சாதகமாக எதுவுமில்லை என்கிற அளவிற்கு வெளிவருகின்றன, சிலதினங்களுக்கு முன் சிங்கள மக்களின் நலனையும் தனது குடும்ப நலனையும் மறக்காமல் ராஜபக்க்ஷ பகிரங்கமாக தனது முடிந்த முடிவாக கக்கியிருந்த கருத்து இவை. எமது நாட்டின் இராணுவம் மற்றும் அரச அதிகாரிகள் வெளிநாட்டவரினால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதை ஒருபோதும் நான் அனுமதிக்கமாட்டேன். எந்தவொரு விசாரணை நடவடிக்கைகளும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் உள்ளூரில் மட்டுமே இடம்பெற வேண்டும். அத்துடன் நாட்டையும் அதன் இறைமையையும் பாதுகாப்பதற்கு நான் கடமைப்பட்டிருக்கின்றேன். அதனை காட்டிக் கொடுப்பதற்கு நான் தயாரில்லை என்று தெரிவித்தார். இறைமை என்று சிங்கள அரசியல்வாதிகள் அடிக்கடி பிரயோகிக்கும் சொற்பதத்தின் அர்த்தம் என்னவென்பது இன்றுவரை எவரும் புரியாத புதிராகும். ராஜபக்க்ஷவினால் விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கைச்செய்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தையும் ஐநா அமைப்பையும் அடங்கிக்கிடவுங்கள் என்று மிரட்டுவதாகவே எடுத்துக்கொள்ள முடியும்.

இலங்கை அரசு 1955ம் ஆண்டு டிசம்பர் காலப்பகுதியில் ஐநா சபையின் சட்டதிட்டங்களுக்கமைய ஐநா சபையில் இணைந்துகொண்டது, அப்படியாயின் ஐநா சபையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக நடந்துகொள்ள வேண்டிய தார்மீகக்கடமை இலங்கைக்கு உண்டு. அதேபோல ஐநா சபையும் உலகில் நடைபெற்ற மிக கொடூரமான ஒரு இனப்படுகொலை பற்றி கண்மூடி மௌனியாக ஏனோதானோவென்று விட்டுவிட முடியாது. ஒரு சமூகம் தான் சார்ந்துள்ள உள்நாட்டு சட்டதிட்டங்களையும் மீறி தன்மீது திணித்து சுமத்தப்படும் பாரதூரமான உரிமை மீறல்களை (genoside) ஏதாவதொரு அமைப்பு ரீதியாக ஐநாவிடம் கொண்டுசென்று நியாயம் தேடுவது நம்பிக்கையான கடைசி முயற்சியாக இருக்கும், அதை புரிந்துகொள்ளக்கூடிய மனிதாபிமானி ஒருவரே அந்த அமைப்பை வழி நடத்துபவராகவும் இருக்கவேண்டும். ஆனால் சர்வாதிகாரியான ராஜபக்க்ஷ எதற்கு கட்டுப்படுபவராகவும் தெரியவில்லை ஐநாவின் செயலாளர் பான் கீ மூன் எதையும் கட்டுக்குள் கொண்டுவரக்கூடியவராகவும் தெரியவில்லை.

நானே நாட்டின் தலைவர், நானே முப்படைகளின் தளபதி, நானே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, நானே கொலைசெய்வேன், நானே புதைப்பேன், நானே வழக்குரைஞராகவும் இருப்பேன், நானே நீதிபதியாக தீர்ப்பும் வழங்குவேன், இதை எல்லோரும் ஏற்றுக்கொண்டாகவேண்டும். என்பதே இலங்கை ஜனாதிபதியின் கருத்தாகக்காணலாம், இலங்கையை பொறுத்தளவில் சர்வாதிகாரம் அதுதான் நியதியென்றால் அவரது ஆட்சிக்குட்பட்டு அவரது நவீனநாடு அதை ஏற்றுக்கொள்ளவும் கூடும். ஆனால் அவர் அறைகூவல் விடுத்து சவால் விட்டிருப்பது தமிழனுக்கு மட்டுமல்ல சர்வதேசத்திற்கும் என்பதை சர்வதேசம் என்றைக்கு உணர்ந்துகொள்ளப்போகிறது, இதையே முன்னுதாரணமாகக்கொண்டு உலக நாடுகள் எல்லாம் இவற்றை பின்பற்றப்போகின்றனவா, என்பதும் இங்கு கேள்வியாக்கப்பட்டிருக்கிறது, இந்த கேள்வி தொடரும்வரை உலகில் கலவரங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்குமா என்ற இன்னொரு கேள்வியும் ஐநா சபையை நோக்கி எழுகின்றது.

போர் முடிவுக்கு வந்தபின்னும் எவரும் வாய் திறந்துவிடக்கூடாது என்பதை குறியாகக்கொண்டு மாதா மாதம் இலங்கையில் அவசரகாலச்சட்டம் நீடிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. வாய் திறந்து பேசக்கூடிய சுதந்திரம் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களுக்கு மட்டும் கொஞ்சம் இருந்தாலும் அங்கும் ஊடுருவிவிட்ட சிங்களவனின் பிரித்தாளும் தந்திரம் தமிழ்மக்களை இரண்டுபட வைத்திருக்கிறது, போராட்டகாலங்களில் பதுங்கி வாழ்ந்தவர்களெல்லாம் சுயநலன் சார்ந்து இன்று புலம்பெயர் நாடுகளில் தாமே போராட்டத்தை தலையில் சுமந்து வெந்து விறுவிறுத்து நிற்பதுபோல ஒருவர்மீது ஒருவர் பாய்கின்றனர். அந்த ஒரு பாய்ச்சலே அவர்களின் அஸ்தமனத்தின் ஆரம்பம் என்பதை சில நாட்களில் அவர்களே உணர்ந்து முடங்கும்போது அவர்களாலேயே புரியப்படும். "விரால் இல்லாத குளத்தில் குறவை மீன் குதித்து நான்தான் தலைவன் என்று துள்ளி விளையாடியதாம்" அதே போல் நகைச்சுவையான சம்பவங்களும் நடக்கத்தான் செய்கின்றன. காலம் விரைவில் இதற்கெல்லாம் பதிலளிக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு நிறையவேயுண்டு.

ஒரு நாட்டின் ஜனாதிபதியென்று சொல்லிக்கொண்டு உலக அரங்கத்தில் படுகொலைகள் மூலம் அறிமுகமாகியுள்ள ஒருவர் தான் என்பதை மறந்து இலங்கை ஜனாதிபதி ராஜபக்க்ஷ சிறுபிள்ளைத்தனமாக புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் தெரியாது என்று சொல்லி மகிழ்ந்திருக்கிறார், ஸ்ரீலங்காவின் சிங்கள மக்களுக்கான தனது தொலைக்காட்சி உரையின் போதே ராஜபக்க்ஷ இவ்வாறு விஷமத்தனமாக கருத்து தெரிவித்து மகிழ்ந்திருக்கிறார். இவ்வாறு தமிழ் தெரியாதவர்களே தமக்கு எதிராக சர்வதேச நாடுகளில் பரப்புரை செய்வதாகவும் இவ்வாறு பரப்புரை செய்யும் பலருக்கு தமிழே பேசத் தெரியாதென்றும் மகிந்தர் தெரிவித்துள்ளார். உண்மை என்னவென்றால் ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு பல இடையூறுகள் காரணமாக கல்வியை தொடரமுடியாமல் இடையில் நிறுத்திவிடவேண்டிய சந்தர்ப்பங்கள் குறுக்கிட்டு பாழ்படுத்தியதுண்டு, ஆனால் புலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு கல்வியை தொடராமல் இடை நிறுத்தும் சந்தற்பங்கள் குறைவு. அத்துடன் 90 களுக்குப்பின் புலம்பெயர் அனைத்து நாடுகளிலும் தேசியத்தலைவரின் சீரிய சிந்தனையின் வெளிப்பாடாக தமிழாலயங்கள் மூலம் தமிழ்க்கல்வி சிறப்பாக தழைத்தோங்கியே இருக்கிறது, புலம்பெயர்தேசத்து குழந்தைகளின் தமிழ் உச்சரிப்பு திறன் ஈழத்துக்குழந்தைகளை விட துல்லியமானதென்றே காணமுடியும். இப்படியிருக்கும்போது மகிந்த தானோரு தமிழ் அறிந்த பண்டிதர்போல புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்களுக்கு தமிழ் தெரியாது என்று கூறி மகிழ்ந்திருக்கிறார். உலகத்தில் பலதேசங்களில் தமிழர்கள் வாழ்ந்தாலும் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களது காலத்தில்த்தான் தமிழனுக்கு பெருமை கிடைத்திருக்கிறது, முற்று முழுதாக தமிழை இணையத்தளம் வரைக்கும் கொண்டு சேர்த்த பெருமை தேசியத்தலைவர் அவர்களையே சாரும், சிங்களம் என்றொரு மொழியும் துட்டத்தனமான ஒரு இனமும் இருப்பதுகூட உலகம் இனங்கண்டுகொள்வதற்கு தமிழினமே காரணமாயிருந்தது.

உள்நாட்டில் இதே மொழிக்கொள்கையின் தரப்படுத்தலில் ஆரம்பமானதுதான் விடுதலைப்புலிகள் இயக்கம் என்பதை மறந்து பழைய சிங்களத்தலைமைகள் செய்த அதே விஷமத்தனத்தை வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள்மீது ராஜபக்க்ஷ விதைத்து திருப்தியடைந்திருக்கிறார் லண்டனிலும் அமெரிக்காவிலும் தமிழினத்தால் விரட்டியடிக்கப்பட்ட இயலாமையின் வெளிப்பாடாக பல நாசகாரத்திட்டங்களை சில சோரம்போகும் தமிழர்கள் மூலமே ஈடேற்றிவிடலாம் என்பது ராஜபக்க்ஷவின் தந்திரமாக காணப்படுகிறது, அதற்காக வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடத்தில் ஊடுருவி பிரிவினையை தூண்டுவது, உள்ளூரில் தமிழ்க்கட்சிகளை மிரட்டி அடிபணிய வைப்பது போன்ற தன்னால் முடிந்த அளவு குறுகிய வேலைத்திட்டங்களிலேயே அவரது புத்தி ஓடிக்கொண்டிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இதுபற்றி கருத்துத்தெரிவித்த மாற்றுக் கொள்கைகளுக்கான அமைப்பின் தலைவரான பாக்கியசோதி சரவணமுத்து கடந்த 9ம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டின் அமர்வில் உரையாற்றும்போது மறைமுகமாக ராஜபக்க்ஷவின் கயமையின் வெளிப்பாட்டை சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் பிரச்சினைகளுக்கான தீர்வு ஒன்று தொடர்பில் மனித உரிமைகளை அறிக்கைப்படுத்தும் சர்வதேச பொறிமுறை ஒன்று இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களை மறந்து எதிர்காலம் நோக்கி செல்லலாம் என சிறீலங்கா அரசாங்கம் கூறுகின்ற போதும், முறையான புனர்நிர்மாண, புனர்வாழ்வளிப்பு இன்றி, கடந்த காலங்களை மறக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையில், இலங்கையில் தற்போது பல அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் அவை தன்னிச்சையாக சுயலாபத்துடன் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களாக உள்ளதெனவும் அவர் கூறியுள்ளார். இந்த அபிவிருத்தி செயற்பாடுகள் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாமல், தன்னிச்சையாக திணிக்கப்பட்டு வருவதாகவும் பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்க்ஷவை சுற்றி பலதரப்பட்ட போர்கால உரிமை மீறல் படுகொலை குற்றச்சாட்டுக்கள் குவிந்திருக்கும் இந்த வேளையில். அவருக்கு கை கொடுத்து உதவுவது, அவரது பதவியும் சில தமிழ் ஒற்றர்களும் என்பதுதான் உண்மை, அந்த இரண்டும் சில வருடங்களை தாக்கிப்பிடித்தாலும் தொடர்ந்து கைகொடுக்கும் என்று கொள்ளமுடியாது, தமிழர்தரப்பிலிருந்து பன்முகப்பட்ட குற்ற முறைப்பாடுகள் ஜனநாயக முறைமைக்குட்பட்டு சர்வதேச அரங்கில் குவியும்போது நிச்சியமாக நீதியின் ஒரு கதவு திறக்கவேண்டிய கட்டாயத்தில்தள்ளப்படும், ஐநா சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சார்புக்கொள்கையை மனதில்க்கொண்டு மூடி மறைக்க முற்பட்டாலும். சர்வதேச சட்ட அரங்கினுள் முறையீடுகள் வந்து வீழ்ந்துவிட்டால் அவை நீர்த்துப்போவதற்கு காரணங்களில்லை என்பதற்கு சான்றாக அவுஸ்த்ரேலிய பிரதமர் யூலியா கிலாட் போர் குற்றவாளி பாலித கோகன்ன பற்றிய தனது கருத்தில் குறிப்பிட்டவை , குறிப்பிட்ட இந்த வழக்குத் தொடர்பான முழுமையான விபரங்கள் எதுவும் தனிப்பட்ட ரீதியில் எனக்குத் தெரியாது. அதேநேரம் "அனைத்துலக குற்றவியல் நீதிமன்றினையும் அதனது முறையான சட்ட நடவடிக்கைகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம்". நடப்பிலுள்ள சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் தலைவர்கள் கருத்துக்களை வெளியிடாமல் இருப்பதுதான் நல்லது" என பிரதமர் யூலியா கூறுகிறார். எனவே ஜனநாயக மரபிற்குட்பட்டு சட்டம் தனது கடமையை செய்யும் என்பதுதான் அவுஸ்த்ரேலிய பிரதமரின் சாராம்ஷமாகக்காணலாம்.

கடைசியாக போர் முடிவுக்கு வந்தபின் சரணடைந்த பெண் போராளிகள் சிலரை இராணுவத்தினர் மண்வெட்டியால் தலையில் கொத்தியும் அடித்தும் கொடூரமாக கொன்றுள்ளனர். என்று ஆதாரத்துடன் இன்னொரு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. சில இடங்களில் இலங்கை இராணுவம் பாவித்த எரிகுண்டுகளால் பலரின் உடல்கள் எரிந்து கருகியுள்ளதையும் கிடைக்கப்பெற்றுள அப் புகைப்பட ஆதாரங்கள் சில காண்பிக்கின்றன என்றும் தெரிகிறது. குறித்த புகைப்படங்கள் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவான ஒரு இராணுவச் சிப்பாய் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது. என்றும் தெரிகிறது அவரது கையடக்கத் தொலைபேசியில் உள்ள சில புகைப்படங்களை தமிழர்களின் போராட்டத்திற்கு சார்பான இணையம் ஒன்று பெற்றுள்ளது. இது குறித்து ஜ.நாவின் சட்டத்துக்கு புறம்பான கொலைகளுக்கு பொறுப்பதிகாரியாகவுள்ள பிலிப் அல்ஸ்டனை அந்த இணையம் தொடர்புகொண்டு அப் புகைப்படங்களை அவர்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகளில் அவர்கள் முனைப்புடன் இருப்பதாகவும் தெரிகிறது.

ஐநா செயலாளர் பான் கீ மூன் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டிருந்த மூவர் கொண்ட நிபுணர் குழு தமது ஆய்வறிக்கையை ஐநா செயலரிடம் விரைவில் கையளிக்க இருக்கின்றனர், நிபுணர் குழுவினரை இலங்கைக்குள் நுழையவிடாமல் சர்வாதிகாரி ராஜபக்க்ஷ தடை போட்டிருந்தார் ஆனால் நிபுணர் குழுவினர் எதோ ஒரு கற்பனை திறனின் வடிவமாக ஒரு அறிக்கையை தயார்செய்திருக்கின்றனர், இப்போ அந்த அறிக்கை தமது பார்வைக்கு வைக்கப்பட்டபின்தான் அதுபற்றி விவாதிக்கமுடியும் என்று ராஜபக்க்ஷ கட்டளையிட்டிருப்பதாகவும் ஐநா அதற்கும் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது, ஐநா பெருமன்றத்தின் நடவடிக்கை பற்றி சிறியோனான எனக்கும் என்போன்றவர்களுக்கும் அதிகம் தெரியாது என்பதால் அதுபற்றி விமர்சிக்க முடியாது. ஆனால் எமது இனத்துக்கு ஏற்பட்ட படு மோசமான இந்த நிலைக்கு இவர்கள் பதிலளித்து குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை லண்டனில் நடந்த ஜனநாயக போரட்டமும் அடுத்து மூண்டு பற்றிப்பிடிக்கத்தயாராக இருந்த அமெரிக்க ஜனநாயகப்போராட்டமும் தொடரவேண்டும் என்பதே எல்லோரது அவாவாகவும் இருக்கும்.

ஈழதேசம் இணையத்திற்காக,
கனகதரன்,, ,