புதுடில்லி: ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக
கொண்டுவரப்பட்ட அமெரிக்க தீர்மானத்தில், நடுநிலைத்தன்மையை உறுதி செய்ய
இந்தியா பாடுபட்டதாக, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எழுதிய கடிதத்தில்
பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான ஐ.நா., தீர்மானத்தை ஆதரித்து இந்தியா ஒட்டளித்த
நிலையில், அதிருப்தியில் இருக்கும் இலங்கையை சமாதானப்படுத்தும் வகையில்,
பிரதமர் மன்மோகன் சிங் அதிபர் ராஜபக்சேவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், ஐ.நா., தீர்மானத்தின் போது, இலங்கை குழுவினருடன் தொடர்ந்து
தொடர்பில் இருக்குமாறு இந்திய குழுவை தான் கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார்.
இதன்படி, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நடுநிலைத்தன்மையுடன் அமைய
இந்தியா முயற்சி மேற்கொண்டாகவும் பிரதமர் கூறியுள்ளார். எனினும், இலங்கை
தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு அளிப்பதே பிரச்னைக்கான தீர்வு
என்பதை குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் நேர்மையான,
மதிப்புமிக்க, சமமான மற்றும் சுயமரியாதையுடன் வாழ வழி செய்ய வேண்டும்
என்றும் ராஜபக்சேவை கேட்டுக்கொண்டார்.
இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரின் இறுதிகட்டத்தில்,
பெருமளவு மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறி, அந்நாட்டிற்கு எதிராக அமெரிக்க
தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தை ஆதரிக்கக்கூடாது என
ராஜபக்சே, பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக்கொண்டார். எனினும் இந்தியா
அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்தது. வெளிப்படையாக
அமெரிக்காவுக்கு ஆதரவான நிலையை எடுத்ததாக காட்டிக்கொண்டாலும், "ஐ.நா., குழு
இலங்கையின் அனுமதியின்றி, அத்துமீறி அங்கு நுழையாத வண்ணம் கடைசி நேரத்தில்
தீர்மானத்தின் சில பகுதிகளை இந்தியா திருத்தியது குறிப்பிடத்தக்கது".
எனினும், இவ்விஷயத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை
போக்கும்வகையில், பிரதமர் மன்மோகன் சிங், தற்போது இலங்கை அதிபருக்கு கடிதம்
எழுதி சமாதானப்படுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment