நடப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஜெனீவா கூட்டத்தொடர் ஏற்கெனவே பலரும் எதிர்பார்த்ததுபோல சற்று வித்தியாசமாகவே காரசாரமாக நடந்து முடியும்.
 
 
ஆனால் தற்போதைக்கு கொலைக்குற்றவாளி ராஜபக்க்ஷவுக்கு பெரிய அளவில் ஒன்றும் பாதகத்தை ஏற்படுத்திவிடப்போவதில்லை என்பது மட்டும் தெரிகிறது.

உலக நாடுகளின் போக்கும், நோக்கமும், குற்றவாளியின் பலவீனத்தை பாவித்து முதற்கண் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான அரசியற் தீர்வுக்கு வழிகோலிவிடவேண்டும் என்பதில் முனைப்புக்காட்டுவதாக நடவடிக்கைகளின் போக்குக்கள் நாசுக்காக தெரிவிக்கின்றன.  இருந்தும் சர்வதேச மயப்படுத்தப்பட்ட  ராஜபக்க்ஷ மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு  இன்றைக்கு ஒருசில சக்திகளால் முண்டுகொடுத்து தப்பித்தாலும் குற்றச்சாட்டு நீர்த்துப்போகும் என நினைத்தால் அது அறிவீனம் என்பது மட்டும் புலனாகிறது.

ஜெனீவா நிலைவரங்கள் அப்படியிருக்க தமிழ்நாட்டிலிருந்து, தமிழர் தலைவர் என்று தன்னை தானே அழைத்துக்கொள்ளும் தமிழகத்து தாத்தா கருணாநிதியும். "அம்மா திமுக" தலைவி ஜெயலலிதாவும்.  இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பாக ஐக்கிய நாடு மனித உரிமைகள் கவுன்சில் கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும், என்று  .மன்மோஹனுக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர்.

இதற்கு பதிலளித்த இந்திய பிரதமர் மௌனம் மன்மோஹன் சிங், சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுடன் கலந்துரையாடி பொருத்தமான நடவடிக்கை எடுப்பதாக ஒப்புக்கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

சர்வதேச விசாரணை வளையத்துக்கு கொண்டுவரப்பட்டிருக்கும்,   21ம் நூற்றாண்டின்   மிகப்பெரிய உணர்வுபூர்வமான  மனித உரிமைப்பிரச்சினைபற்றி, ஒரு மானிலத்தின் முதல்வரும், முன்னாள் முதல்வரும் எழுதிய கடிதத்திற்கு சுயமாக பதிலளிக்க முடியாமல், மாறாட்ட நோயுள்ள உள்த்துறை மந்திரியை கேட்டு சொல்லுகிறேன், என்று நழுவும் பதிலை மண்மோஹன் தமிழகத்துக்கு சொல்லியனுப்பியிருக்கிறார். என்றைக்கும் இந்திய அரசியல்வாதிகள் சட்டத்திலிருக்கும் நியாயப்பாட்டை விட, சட்டத்திலிருக்கும் ஓட்டைகளையே பாவித்து நாட்டையும் மக்களையும், நீதி நியாயத்தையும் கொலை செய்து வருவது இதிலும் புரியப்பட்டிருக்கிறது.

"இந்திய வெளிவிவகார மந்திரி எஸ் எம் கிருஷ்ணா முன்பொருமுறை ஐநா சபையில் இந்தியா தொடர்பான கேள்வி ஒன்றின்போது மாறாட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் அறிக்கை ஒன்றை வாசித்து அதிர்ச்சி உண்டுபண்ணியவர் என்பதும், இன்னுமொருமுறை இந்திய பாராளுமன்றத்தில் தூக்க கலக்கத்தில் பிழையான பதிலை வழங்கியவர் என்பதும் பலர் மறந்திருக்க முடியாது.

ராஜபக்க்ஷவை காப்பாற்றுவதில் பகிரங்கமாக துணை நிற்கும் சீனா, ரஷ்யா தவிர. உற்ற நண்பனாக நட்பு பாராட்டிக்கொண்டு வெளியில் பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டி பசப்பு வித்தை காட்டிவரும் இந்தியா திரை மறைவில் மிக மோசமான காரியங்களை செய்துவருகிறது. நேற்றுவரை உள்ளடிவேலையில் ஈடுபட்டுவந்த இந்தியா. வியாழனன்று தனது நிலைப்பாடு பற்றிய விளக்கமொன்றை ஐநா அரங்கில் வெளிப்படுத்தியிருந்தது.

குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு’ எதிராக ஐ.நா. மனித உரிமைக் குழுவில் கொண்டு வரப்படும் தீர்மானங்களை ஆதரிக்க மாட்டோம் இலங்கையை கண்டிக்க இப்போது அவசியமில்லை.  ஒரு குறிப்பிட்ட நாட்டின் மனித உரிமை நிலை பற்றி விவாதம் நடத்த அவசியம் என்றால், வழக்கமாக நடக்கும் உலகம் முழுவதுமான ஆய்வின்போது அதைச் செய்யலாம். இப்போது அதற்கான அவசியம் இல்லை, என்று தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு எதிரான தீர்மானங்கள், மனித உரிமைக் குழுவின் ஆக்கப்பூர்வமான பேச்சுகளையும் அனைத்துத் தரப்புகளின் ஒத்துழைப்புடனான அணுகுமுறையையும் வலுவிழக்கச் செய்யும்’   அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தன்மை, உறுதியான பேச்சுகள், ஒத்துழைப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என்று வழமைபோல சட்டத்தின் ஓட்டையை சரியாகப்பாவித்து இந்தியா நியாயப்படுத்தியிருக்கிறது.

எனவே போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை இந்தியா ஆதரிக்காது என்றும் தனது சுயரூபத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. எல்எல்ஆர்சி எனப்படும் கற்றுக்கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையம் அளித்திருக்கும் பரிந்துரைகளை அமூல்படுத்துவதற்கு, அதுவரை தங்களுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று இலங்கை ஏற்கெனவே கோரியிருக்கிறது.

இந்தியாவின் அந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் சம்பந்தன் ஐயாவின் (தமிழர் தேசியக்) கூட்டமைப்பு ஐநா மன்ற கூட்டத்தொடரில் பங்குபற்றாமல் வெளிநடப்புச்செய்ததை சொல்லலாம்.

சம்பந்தன் ஐயாவின் கூட்டமைப்பு ஐநா அரங்குக்கு வந்திருந்தால் சபை அமர்பில் பேசுவதற்கு சில நிமிடங்களாவது வாங்கித்தருவதாக சில தமிழர் நலன் விரும்பும் தகுதியானவர்கள் உறுதியளித்ததாகவும் சொல்லப்படுகிறது.

சில நிமிடங்களில் ஈழ இனப்படுகொலை பற்றிய விளக்கம், மற்றும் இந்திய இலங்கை கூட்டுச்சதியால் மீறப்பட்ட மனித உரிமைகள் பற்றிய அனைத்து நிலைப்பாடுகளையும் ஒப்புவிக்க முடியாவிட்டாலும், தமிழர் தரப்பு சம்பவங்கள் பற்றி  சம்பந்தன் கூட்டமைப்பினால் தயாரிக்கப்பட்ட விவரமான அறிக்கையை அனைத்து நாட்டு தலைவர்க்ளுக்கும் வினியோகித்திருக்க முடியும்.

இச்சந்தற்பத்தில்  இலங்கையில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வழக்காளியின் நேரடி பிரசன்ம அங்கத்துவத்தை  கூட்டமைப்பினரின் பிரசன்மம்  உண்டுபண்ணி மிகப்பெரிய தாக்கத்தை ஐநாவில் ஏற்படுத்தியிருக்கமுடியும். மேற்கு நாடுகளுக்கு மேலதிக ஆதார சக்தியாகவும் விளங்கியிருக்க முடியும். ஆனால் அனைத்தும் இந்திய, இலங்கை, சம்பந்தன் கூட்டமைப்பு, ஆகிய துரோக சக்திகளால் கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் தொலைக்கப்பட்டிருக்கிறது.

இருந்தும் இன்னும் கால அவகாசம் இருக்கிறது. எது என்னவானாலும் பரந்துபட்டு அகதியாக வாழும் தமிழ்ச்சமூகம் கடைசி மூச்சுவரை இனப்படுகொலை குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுக்காமல் தூங்கப்போவதில்லை.. அத்துடன் கூட்டமைப்பின் தலைமையை தமிழர்கள் தூக்கியெறியும் நேரமும் இதுவே என்பதும் வெளிப்படையாக தெரிய வந்திருக்கிறது.

ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்.