2012 செப், நடக்க இருக்கும் கிழக்கு மாகாணத்துக்கான, மாகாணசபை தேர்தலில் தமிழர் தேசியக்கூட்டமைப்பு போட்டியிட்டு வெற்றி பெறுகிறதோ இல்லையோ,
ஸ்ரீலங்காவின் பெளத்த பேரினவாத சிங்கள அரசாங்கத்துக்கு சர்வதேச அரங்கில் ஒரு ஆறுதல் கிடைக்க வழி ஏற்படுத்தி மீண்டுமொரு விரும்பத்தகாத வரலாற்று பிழைக்கு தேசியக்கூட்டமைப்பு பிள்ளையார் சுழி போட்டு தமிழ்ச்சமுதாயத்திற்கு மாபெரும் துரோகம் இழைத்திருக்கிறது.

இதன்மூலம் ஒட்டு மொத்த ஈழத்தமிழினத்தின் ஒப்பற்ற  தியாகங்களும், முப்பது வருட உயிர் ஆயுத போராட்ட வரலாற்றின் ஒப்பற்ற அர்த்தமும், ஈழ தேசிய அரசியல் நீரோட்டத்தின் அடிப்படை தத்துவமும்  திக்கற்று திசைமாறிப்போவதுடன், கொதிநிலையில் இருந்துகொண்டிருக்கும் படுகொலை நீதிவிசாரணை முன்னெடுப்பில் பெருத்த இடைவெளியை தோற்றுவித்து குறைந்தது ஒரு பத்துவருட பின்னடைவையாவது  தமிழ்ச்சமூகம் இந்த மாகாணசபை நாடகத்தால் சந்திக்க இருப்பது எவராலும் தவிர்க்க முடியாமல் போவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன. 

மக்களின் முற்று முழுதான நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த கூட்டமைப்பின் பிறழ்வு காரணமாகவும்,  கள சூழ்நிலை காரணமாகவும்  இப்போதைக்கு தாய்மண்ணில் இதற்கான எதிர்ப்போ, கிளர்ச்சியோ திடீரென  தோன்றப்போவதில்லை. அந்த அமைதி தமிழர் விரோதிகளான ஸ்ரீலங்கா, இந்தியா, தமிழர் தேசிய கூட்டமைப்பு போன்ற சக்திகளுக்கு ஒரு ஆறுதலை தரலாம்,  ஆனால் நாளடைவில் தாயகத்தில் தாக்கம் வேறுவிதமாக உணரப்படாமல் தடுக்கப்படவேண்டுமானால் புலம்பெயர் தமிழர்கள் அதற்கான எதிர்ப்பை உடனடியாக பதிவு சேய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். கடந்தகால வரலாறும் கள நிலையும் அதைத்தான் இடித்துரைக்கிறது.  இது விளையாட்டான தன்னிலையான வரலாற்று திருப்பமல்ல என்பதை புலம்பேயர் தேசியவாதிகள் உணரவேண்டும். அத்துடன் நின்றுவிடாமல் தாய் மண்ணில் சரியான பாதையை மக்களுக்கு புலப்படுத்த வல்ல நம்பிக்கையான மாற்று அரசியல் சக்தி உடனடியாக (அங்கீகரிக்கப்பட்டு) வெளிப்படுத்தப்படவேண்டும்.

இந்த மாகாணசபை தேர்தல் மூலம் ஐநா மன்றத்தில், ஸ்ரீலங்கா அரச தரப்பு எதிர்கொண்டிருந்த நெருக்கடியை தளர்த்துவதற்கான கொள்ளிடம் தேடப்பட்டிருக்கிறது.  ஐநா அரங்கின் நியாயப்படுத்தலுக்கான தற்காலிக பிணை எடுப்பை சம்பந்தரின் தமிழர் தேசியக்கூட்டமைப்பு முண்டுகொடுத்து உறுதி செய்திருக்கிறது.  இது வெட்கப்படவேண்டியதுடன் கண்டிக்கப்படவேண்டியதும் ஆகும். தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை ஈடுகட்ட தொலைநோக்கோடு காய் நகர்த்தவேண்டிய தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்காவின் விசமத்தனமான சதியில் சிக்கிக்கொண்டதோ,  அல்லாமல் தேர்ந்த திட்டத்துடன் களம் இறங்கியிருக்கிறதோ,  என்பதை கூட்டமைப்பு பகிரங்கமாக மக்கள் மன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும்.

"பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகிறது", என்று ஒரு பண்பட்ட பழமொழியுண்டு. அதே விளையாட்டைத்தான் இப்போ கிழக்கு மாகாண சபை தேர்தல் மூலம் தமிழர்களின் வாழ்வில் தொடங்கப்பட்டிருக்கிறது. விரால் இல்லாத குளத்தில் குறவை மீன் தலைவனாம். முன்பும் பல சமயங்களில் உள்ளுடன் அறியப்பட்ட சந்தற்பவாதி சம்பந்தர்,  சர்வதேசத்திற்கு தனது அரசியல் வீர விளையாட்டு விடுப்பு காட்டப்போகிறேன் என்று இந்திய, ஸ்ரீலங்கா சதி அரசியல் காய் நகர்த்தலுக்கு ஒத்தூதி புதிய அவதார வேடத்தை எடுத்திருக்கிறார். சம்பந்தரின் இந்த விளையாட்டுக்கு பின்னர், நிறைய தமிழ் மக்களின் வாழ்வாதாரமும் உரிமைகளும் பூனையின் விளையாட்டில் அகப்பட்ட  சுண்டெலியின் கணக்காக தமிழ்ச்சமூகம் எழுந்திருக்க முடியாமல் பலியாகியிருப்பது தேர்தலுக்கு பின்னர் புரியவரும்.

மனிதாபிமான சபை, மாகாணசபை என்பதேல்லாம் இலங்கை வரலாற்றை பொறுத்தவரை ஏட்டுச்சுரைக்காய் மட்டுமே. தமிழர்களுக்கான அரசியலில் வலுவான ஒரு தீர்வுத்திட்டம் வரையறுக்கப்படாதவரை,  அனைத்தும் உலகத்தை ஏமாற்றும் நாடகங்களாக காலம் கடத்தும் உத்தியே தவிர வேறெதுவுமில்லை என்பதை,  சம்பந்தர் போன்றோர் கடந்தகால படிப்பினைகளிலிருந்து நிச்சியம் புரிந்துகொள்ளாமலிருக்க முடியாது.

எத்தனை பேச்சுவார்த்தை மேசைகளை தமிழினம் வல்லமையுடன் இருந்தபோதும் கண்டு கழித்துவிட்டது. எதுக்கும் எடுபடாத சிங்கள ஏகாதிபத்தியம் மாகாணசபைகளில் அதிகாரத்தை அள்ளி கொடுக்கும், ஆட்சி அதிகாரத்தை தாரைவார்த்து கொடுக்கும் என்று எந்த ஆதார அடிப்படையில் சம்பந்தர் தரப்பு தேர்தலை சந்திக்கிறது? தேர்தலுக்குள் இறங்குவதற்கு முன் ஈழ தமிழினத்தின் அபிலாசைகள் அனைத்தையும் உறுதி செய்து பகிரங்கப்படுத்தியிருக்க வேண்டும்.  இங்கு ஒளிவு மறைவு ஒன்றிற்கும் இடமில்லை. வரையறையான தீர்மானம் ஒன்றை எட்டமுன் தேர்தலை சந்திக்கவேண்டிய அவசரம் ஒன்றும் இப்போது காணப்படவுமில்லை.

மாகாணசபை அதிகாரம் என்று பார்த்தால் கிராமச்சபை அதிகாரத்தை விடவும் கேவலமானது என்பதுதான் கடந்தகால வரதராஜ பெருமாள், பிள்ளையான் போன்றவர்களின் வழி வந்த வரலாறு.  எந்த அதிகாரத்தையும் சிங்கள பெளத்த பேரினவாதிகள் தமிழர்களுக்கான மாகாணசபைக்கு  வழங்கிவிடப்போவதில்லை. வேண்டுமானால் ஒப்புக்கு சப்பாணியாக அமரக்கூடிய பிள்ளையான் போன்றோரை வைத்து பொம்மலாட்டம் நடத்தலாமே தவிர தேசியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் வெகுஜன மக்கள் அரசியலை ஈடுகட்ட முடியாது.  பிள்ளையான் போன்றோரை சர்வதேசம் நிராகரித்துவிட்டதால் தமிழர்களின் செல்வாக்கை கொண்டுள்ள தேசியக்கூட்டமைப்பின் சம்பந்தர் பகடை காயாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அல்லது அவர் தானாக விழுந்திருக்கிறார்.

தேர்தலின்பின் ஒப்புக்கு மாகாணசபைக்கு என்று ஒரு கந்தோர் திறக்கப்படலாம், சில வாகனங்கள் சிங்கள சாரதிகளுடன் சேவையில் ஈடுபடலாம், சம்பந்தரின் கட்சி அதிகாரத்துக்கு வந்தால் மகிந்தரின் கட்சியோ,  முஸ்லீம் காங்கிரசோ,  பிள்ளையான் கட்சியோ எதிர்க்கட்சிக்கு வரப்போகிறது. அதிகாரம் இல்லாத கந்தோரில் இவர்கள் எதை விவாதிக்கப்போகிறார்கள். 2001  ஆண்டிலிருந்து பாராளுமன்றத்தில் அதிகாரபூர்வ எம்பி களாக இருந்தே பேச்சுவார்த்தை என்ற இலக்குக்கு வரமுடியாத தமிழர் தேசியக்கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையை பெற்று கிழிப்பதற்கு எதுவும் இல்லை. 

யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் முடிந்துவிட்டது.  பிள்ளையான் தலைமையிலான ஒட்டுக்கட்சி கிழக்கில் அதிகாரமில்லாத மாகாண சபையை நிருவகித்தது மக்களை ஆயுத முனையில் சீரழித்தது . வடக்கை எடுத்துக்கொண்டால் யாழ்ப்பாணத்தை ஒட்டுக்குழுவின் பிதா டக்கிளஸ் தேவானந்தா,  வைத்ததுதான் சட்டம் என்று அனைத்து சீர்கேடுகளும் அந்த மண்ணில் அரங்கேற்றப்பட்டுள்ளது. வன்னி பகுதி முழுவதும் புத்தர் சிலைகள் சிங்கள இராணுவ குடியிருப்புக்கள் பெருக்கெடுத்து வருகின்றன, இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களாக சம்பந்தன் குழுவினர் கொழும்பிலும் வெளிநாடுகளிலும் குடியிருந்து வருகின்றனர். ஒரு புத்தர்சிலையை அகற்றுவது தொடர்பாக, கிளிநொச்சி இராணுவ ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றுவது தொடர்பாக இவர்களால் ஒரு உறுதியான காத்திரமான போராட்டத்தை நடத்த முடியவில்லை. இப்போ மாகாண சபையை கைப்பற்றுவதன் மூலம் அல்லது மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதன்மூலம் சர்வதேசத்திற்கு வலிமையை எடுத்துக்காட்டப்போகிறோம் என்பது  கேலிக்கூத்து அல்லாமல் வேறு என்னவென்று எடுத்துக்கொள்ள முடியும்.

தற்காலிக தப்பித்தலுக்காக இலங்கை அரசாங்கம் தோண்டிவைத்திருக்கும் அரசியல் படுகுழியான கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதன்மூலம் அல்லது அத் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் தேசியக்கூட்டமைப்பு எதையும் சாதித்துவிட முடியாது. தமிழர் தேசியக்கூட்டமைப்பைப்பொறுத்த வரையில் அவர்களது தலைமைச்செயலகம் இந்தியா, இந்தியாவை திருப்திப்படுத்துவதற்கும் எம்பி பதவிகளை தக்க வைத்துக்கொள்ளுவதற்கும் சம்பந்தர் மாகாணசபைக்கு ஒத்துபோகவேண்டிய தேவை வந்திருக்கிறது.

2001 ம் ஆண்டு  தமிழர் தேசியக்கூட்டமைப்பு ஏன் எதற்காக பிறந்தது என்பதை சம்பந்தரும் சகபாடிகளும் சிந்தித்துப்பார்க்கவேண்டும்.  தமிழ்தேசியம், சுய நிர்ணய உரிமை, தன்னாட்சி பகிர்வு, இவைகளுக்காக பிறப்பிக்கப்பட்ட தமிழர் தேசிய கூட்டமைப்பு,  இன்று ஏதோ ஒன்றுக்குள் புதைந்து காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. அன்று வீரசிங்கம் ஆனந்தசங்கரியின்,  கொள்கை வேறுபாட்டால் உருவான தமிழர் தேசியக்கூட்டமைப்பு  அன்றைய தமிழர் விடுதலை கூட்டணியின் அதே சித்தாந்தத்தை பின்பற்றி தொடர நினைக்குமானால் வரலாறு மாற்றி எழுதப்படுவதற்கு நீண்ட காலம் எடுக்கப்போவதில்லை.

மக்களுக்கு உதவாத மாகாண சபை ஒன்று உருவாகுமானால் வேறு வினையே தேவையில்லை  தமிழர் தேசியக்கூட்டமைப்பு என்ற அரசியல் கட்சி, மெல்ல மெல்ல தமிழர் விடுதலை கூட்டணியாக மாறி உறக்கநிலையை அடைவதை எவராலும் தவிர்க்க முடியாமல் போகலாம்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா. என்பதை தேசிய கூட்டமைப்புக்கும் தலைவர் சம்பந்தன் ஐயாவுக்கும் வரலாறு நிச்சியம் புரிய வைக்கும்.

ஈழதேசம் இணையத்திற்காக,
கனகதரன்.


நன்றி ஈழதேசம்.